என் மலர்
உலகம்
- ஆஸ்திரேலியாவை சேர்ந்த தீவு மாநிலம் டஸ்மேனியா
- இப்பகுதிக்கு "உலகின் முனை" எனும் மற்றொரு பெயரும் உள்ளது
சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள்.
வளங்களை குவித்து முன்னேற துடிப்பதால், பல்வேறு காரணங்களால் மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பது அரிதாகி வருகிறது. தூய்மையான காற்றுள்ள இடங்களை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தீவு மாநிலம், டஸ்மேனியா. இம்மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபகற்ப பகுதி, கேப் க்ரிம். இது "உலகின் முனை" (Edge of World) எனவும் அழைக்கப்படுகிறது.
அன்டார்டிகாவிலிருந்து எவ்விதத்திலும் அசுத்தமாகாத வேகமான காற்று, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இங்கு வந்து சேருகிறது. உலகின் பிற பகுதிகளிலிருந்து தொலைதூரம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அறவே செல்லாத இடமென்பதாலும், பனிமலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியின் மீது பயணித்து வரும் காற்று இங்கு வந்தடைவதாலும், இங்குள்ள காற்று உலகிலேயே தூய்மையானது என காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர். ஆன் ஸ்டேவர்ட் தெரிவித்துள்ளார்.
இதே போன்று உலகெங்கிலும் உள்ள பிற சுத்தமான காற்று உள்ள தளங்கள், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவு மாநிலமான ஹவாயில் உள்ள மௌனா லோவா, பசிபிக் கடற்பகுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் மற்றும் நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் பகுதியில் ஸ்பிட்ஸ்பர்கன் தீவில் உள்ள நை-அலெசுண்ட் ஆகியவையாகும்.
சுத்தமான காற்று உடலாரோக்கியத்திற்கு அவசியமானது என்பதால் இத்தீவிலிருந்து கொள்முதல் செய்த காற்று என் விளம்பரம் செய்து "டஸ்மேனிய காற்று" என பெயரிட்டு பாட்டில்களில் இக்காற்றினை அடைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
- 183 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது
- திருப்பணியில் அமெரிக்காவிலிருந்து 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்
இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிறகு 10 நாட்களுக்கு பிறகு பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே இந்த அமைப்பினால் 100 ஏக்கரில் உருவாக்கப்பட்ட கோவில் இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு மாநிலம் நியூ ஜெர்சி. இத்திருக்கோவில் இம்மாநிலத்தின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டு காலம் ஆனது.
இதன் கட்டுமான பணியில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
உலக பாரம்பரிய தளமாக ஐ.நா. கூட்டமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட தென்மேற்கு ஆசியாவில் உள்ள கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் திருக்கோவில், 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டது. நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அக்ஷர்தாம் திருக்கோவில், அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாகும்.
அமெரிக்காவில் உள்ள சுவாமிநாரயன் அக்ஷர்தாம் கோவில், பண்டைய இந்திய கலாச்சார முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன. இது பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் (elliptical dome) கொண்டுள்ளது.
சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன.
இக்கோவிலில், 'பிரம்ம குண்ட்' என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய படிக்கிணறு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட புனித நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக இத்திருக்கோயில் திறக்கப்படும். அக்ஷர்தாம் என்றால் இறைவனின் புனிதமான இருப்பிடம் என பொருள்படும்.
- ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
- 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார். இவரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் போட்டியிட வரிந்து கட்டி நிற்கின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர்.
மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
- இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 78-வது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது.
டெஹ்ரான்:
ஈரானின் நட்பு நாடாக இருந்த மாலத்தீவுகள் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தூதரக உறவை கொண்டிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாலத்தீவு கருதியது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.
இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் 78-வது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஈரான் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் மாலத்தீவுகள் வெளியுறவு மந்திரி அகமது கலீல் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தூதரக உறவை தொடங்குவதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் இரு நாடுகளின் நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- தனது பெயரை அவர்களது உடலில் பச்சை குத்தி விடுவது இவன் வழக்கம்
- பல வித சித்திரவதைகளை கையாண்டு தனது கூட்டத்திலிருந்து தப்பிப்பதை தடுப்பான்
அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசித்தவன் "சுகர் பேர்" (sugar bear) என அழைக்கப்பட்டு வந்த சோமோரி மோசஸ் (47).
2003 தொடக்கத்திலிருந்தே இவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி மயக்கி, பிறகு அவர்களை பல விதங்களில் அச்சுறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தான். தன்னை விட்டு அவர்கள் வெளியேறுவதை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டு வந்தான. அவர்களது உடலில் அவனது பெயரை பச்சை குத்தி விடுவான்.
ஒரு பெண் இவரை விட்டு தப்ப முயன்ற போது அவளை அடித்து காயங்களின் மேல் எலுமிச்சை சாற்றை ஊற்றினான். வேறொரு பெண்ணை மின் ஒயரால் அடித்து காயங்களில் உப்பை தடவினான். மற்றொரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி இத்தொழிலில் ஈடுபட வைத்தான்.
இந்நிலையில், 2017ல் லியாண்ட்ரா ஃபாஸ்டர் எனும் 32 வயது பெண்ணை அடித்து கொன்று விட்டான். பிறகு அவள் உடலை கத்தியாலும், அறத்தாலும் துண்டு துண்டுகளாக்கினான். சில பாகங்களை தனது வீட்டில் உள்ள ஃப்ரீசரில் மறைத்து வைத்த அவன், பல பாகங்களை எப்படியோ அழித்து விட்டான்.
லியாண்ட்ரா காணாமல் போனதாக வந்த புகாரை காவல்துறை விசாரித்து வந்தது. லியாண்ட்ராவை தேடி வந்த காவல்துறையினர் சோமோரியின் வீட்டை சோதனையிட்ட போது, "சோமோரி" என பச்சை குத்தப்பட்ட ஒரு உடல் பாகம் அவன் வீட்டில் சிக்கியது. இதனை தொடர்ந்த நடைபெற்ற தீவிர விசாரணையில் அவன் கைது செய்யப்பட்டான்.
குற்றத்தை ஒப்பு கொண்ட சோமோரி 15 வருட சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளான்.
- நெட் ஜீரோ திட்டப்படி 2030க்குள் வெளியேற்றங்களை பெருமளவு குறைக்க வேண்டும்
- தற்போதைய திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள் ஒத்துழைக்க மறுப்பார்கள் என்றார் சுனக்
உலகெங்கிலும் வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேறும் கரியமிலம் உட்பட பல நச்சு வாயுக்களினால் காற்றின் நச்சுத்தன்மை கூடி வருவதாகவும், இதனால் புவி வெப்பமடைவது அதிகரிப்பதுடன் வானிலையின் பருவகால நிகழ்வுகள் சீரற்று போவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கூறி வந்தனர்.
பல முன்னணி உலக நாடுகள் ஒன்றுபட்டு இதற்காக "நெட் ஜீரோ" எனும் திட்டத்தை உருவாக்கியது. இதன்படி நச்சு வாயுக்கள் வெளியேற்றத்தை சில வருடங்களில் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வருவதற்கு உலக நாடுகள் சம்மதித்தன.
இதன்படி புவி வெப்பத்தின் அளவு 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க தற்போதைய நச்சு வெளியேற்றங்களை 2030 ஆண்டிற்குள் 45 சதவீத அளவிற்கு குறைப்பதற்கும், 2050 ஆண்டிற்குள் 0 சதவீத அளவிற்கு கொண்டு வரவும் பாரிஸ் ஒப்பந்தம் எனும் ஒரு உடன்படிக்கை சில வருடங்களுக்கு முன் கையெழுத்தானது.
2030 வருடத்திற்கு இன்னும் ஏழே ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், வீடுகள், வாகனங்கள், தொழிற்சாலை மற்றும் எரிசக்தி துறை ஆகியவற்றின் நச்சுப்புகை வெளியேற்றங்களை கட்டுபடுத்த 2030க்கான இலக்குகளை தள்ளி போட்டிருப்பதாக அறிவித்தார். இலக்குகளை அடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என கூறிய சுனக், 2030ல் பிரிட்டன் கொண்டு வர வேண்டிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான தடையை 2035 ஆண்டிற்கு ஒத்தி வைத்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரிஷி சுனக்கின் இந்த முடிவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளமான "ட்ரூத் சோஷியல்" கணக்கில் பாராட்டியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
அமெரிக்கா தன் மீதும், உலக நாடுகளின் மீதும் தேவையற்று திணிக்கும் இந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை ரிஷி சுனக் தளர்த்தியுள்ளது நல்ல முடிவு. இலக்கில்லாமல் செயல்பட்டு வரும் வானிலை ஆர்வலர்களின் அறிவுறுத்தல்களை கேட்டு நாட்டை திவால் நிலைக்கு கொண்டு செல்லாமல் புத்திசாலித்தனமாக பிரிட்டனை ரிஷி காப்பாற்றியுள்ளார். ஆனால், செயல்படுத்த முடியாத விஷயங்களுக்காக, அமெரிக்கா பல லட்சம் கோடிகளை செலவிட்டு வானிலை மாற்றங்களை தடுப்பதாக கூறி விரையம் செய்து வருகிறது. இந்த புரட்டை முன்னரே அறிந்து கொண்டு தன் நாட்டை காத்த சுனக்கிற்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
- ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் ஏரி உள்ளது
- 13-அடி நீள முதலையின் வாயில் மனித உடல் பாகங்கள் தென்பட்டன
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி.
இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் களத்திற்கு சென்றனர். சம்பவ இடமான ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டது. அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் தெரிந்தது.
இதனையடுத்து ஷெரீப் உத்தரவின் பேரில் அந்த முதலை சுடப்பட்டது. அதிகாரிகள் அதன் வாயிலிருந்த மனித உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்திரமாக வெளியில் எடுத்தனர். இந்த நடவடிக்கைக்கு ஷெரீப் அலுவலகத்தினருடன் அம்மாநில மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர்.
விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது.
சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். "இவ்வளவு நீளமுள்ள ஒரு ராட்சச முதலை இங்குள்ள ஏரியில் இருக்கலாம் என நினைத்து கூட பார்த்ததில்லை" என இச்சம்பவம் குறித்து டெர்ரி வில்லியம்ஸ் எனும் அப்பகுதிவாசி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உக்ரைன் போர், தேசப்பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது
- மாணவர்கள் துப்பாக்கிகளை கையாளுவதற்கு நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்
கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது. இதில் ஒன்றாக ரஷியா, தன் நாட்டு பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷியாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இதில் ரஷியா ஈடுபட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் போர், தேசப்பற்று மற்றும் ராணுவ பற்று ஆகியவை பாடத்திட்டங்களில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. பயிற்சிகளுக்கு மாணவ மாணவியர் தாங்களாகவே வர மறுத்தாலும், அரசாங்கத்தால் வற்புறுத்தப்படுகிறார்கள்.
உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
மேலும், பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது.
இன்றைய குழந்தைகளை எதிர்கால ரஷிய போர் வீரர்களாக கட்டாயபடுத்தி மாற்ற முயல்வதற்கு சமூக வலைதளங்களில் பயனர்கள் அந்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- 2020ல் இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தபட்டவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார்
- அமெரிக்கா, கனடா இடையே பல உரையாடல்கள் நடைபெற்றன என்றார் கோஹென்
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டமைப்பு, ஃபை ஐஸ் (Five Eyes). உலகளாவிய தீவிரவாத, பயங்கரவாத மற்றும் நாசவேலைகள் குறித்து கண்காணிப்பின் மூலமாகவும் சமிக்ஞைகளை உள்ளடக்கியும் பெறப்படும் தகவல்கள், இந்த 5 நாடுகளுக்கிடையே பரிமாறி கொள்ளப்பட்டு அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
2020ல் இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் தீவிரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.
இந்நிலையில், ஹர்திப் கொலையில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதற்கான ஆதாரங்கள் ஃபை ஐஸ் அமைப்பின் மூலம் கனடாவிற்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையே பல உரையாடல்கள் நடைபெற்றதாகவும் கனடாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹென் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்த கொலை குற்றச்சாட்டு குறித்து கனடாவுடன் ஒத்துழைப்பதாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் தனது தரப்பிலிருந்து முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்தியா அடுத்து என்ன செய்ய போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.
- தாக்குதலில் சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
- தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பெலிட்வி:
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த லாரியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியது.
பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் லாரியில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க செய்து இந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர்,
இந்த தற்கொலை படை தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் 5 பேர் போலீஸ்காரர்கள் ஆவார்கள், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே 2 மர்ம மனிதர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே 2 மர்ம மனிதர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார், என்ன காரணத்துக்காக இந்த சம்பவம் நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.
- பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், "இந்த ஆண்டு இறுதி வரையில், நாங்கள் தான் ஜி20-க்கு தலைமையாக இருப்போம். ஜி20 பதவிக்காலம் இருக்கும் போதும், முடிந்த பிறகும், நாங்கள் கூட்டாளியாகவும், பங்களிப்பாளராகவும், கூட்டணி அமைப்பவராகவும் எங்களுக்கே உரிய பாணியில் செயல்படுவோம். இதன் மூலம் மற்றவர்களையும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள செய்வதில், நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம். எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கமளிக்கும் வகையில், பகிர்ந்து கொள்வோம்."
"இவை பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் இணைத்ததை நாங்கள் மேற்கோள் காட்ட விரும்புகிறோம். மேலும், இது தொடர்பான ஒத்துழைப்பு ஜி20-இல் மட்டுமின்றி அதை கடந்தும் தொடரும் என்றே நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.






