என் மலர்tooltip icon

    உலகம்

    • கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம்.
    • ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.

    "குளிர்காலம் மற்றும் சளி, காய்ச்சல் காலம் துவங்க இருக்கும் நிலையில், அதிபர் அனைத்து அமெரிக்கர்களையும் தன்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பொது மக்கள் அவர்களது மருத்துவரை தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்," என்று மருத்துவர் கெவின் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

     

    நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் இம்மாத துவக்கத்தில், புதிய வகை கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்து இருக்கலாம், ஆனால் அமெரிக்காவில் இன்றும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலை உள்ளது.

    ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருவதாக மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக புதிய தடுப்பு மருந்து பலரின் உயிரை காக்கும் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்தது.

    • சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ. ஆகியவைதான் ஜெர்மனிக்கு பாகங்களை வழங்கி வருகிறது
    • பல்வேறு நாடுகள் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து கொள்ள முடிவு செய்திருக்கின்றன

    மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது.

    5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் (Huawei) மற்றும் இசட்.டி.ஈ. (ZTE) ஆகியவைதான் வழங்கி வருகிறது.

    தற்போது ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம், சீனாவின் தயாரிப்புகளால் தேசிய பாதுகாப்புக்கான ஆபத்துக்கள் வரக்கூடும் எனவும் அதனால் அதனை தடுக்கும் விதமாக 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ., ஆகியவற்றின் தயாரிப்புகளை முற்றிலும் தங்கள் நாட்டிலிருந்தே நீக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

    "டீ ரிஸ்கிங்" (de-risking) எனப்படும் அபாயங்களிலிருந்து விலகி இருத்தலுக்கான இந்த முடிவின்படி ஜெர்மனியின் மென்பொருள் மற்றும் இணைய கட்டமைப்பில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த தளங்களிலிருந்தும் அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை நீக்க வேண்டும் என ஜெர்மனி முடிவெடுத்திருக்கிறது. மேலும், இனியும் அவற்றை இறக்குமதி செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என உறுதியாக உள்ளது. அந்நாட்டிலேயே உள்ள சில முன்னணி அலைபேசி சேவை நிறுவனங்கள் இவற்றை எதிர்த்தாலும், அரசங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது. ஜெர்மனியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு தொழில்நுட்பங்களிலும் உயர் தொழில்நுட்பங்களிலும் சீனா எனும் ஒரே நாட்டை சார்ந்திருப்பதை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் படிப்படியாக குறைத்து கொள்ள முடிவு செய்திருப்பதை தொடர்ந்து ஜெர்மனியும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

    "ஜெர்மனி உண்மையிலேயே எங்கள் நாட்டு தயாரிப்புகளால் அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதை நிரூபிக்காமல் இத்தகைய முடிவை எடுத்தால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்" என இத்தகவல் வெளியானதும் சீனா காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    இந்தியாவில் கோவிட்-19 காலகட்டத்திலிருந்து உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் முடிவுகள், தற்போது சீனாவை சார்ந்திருப்பதை உலகம் குறைத்து கொள்ள முன்வரும் வேளையில், இந்திய பொருளாதாரத்திற்கு பலனளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கடன் உதவி செய்யும் உலக நிதி நிறுவன அமைப்புகள் நிபந்தனைகளை விதிக்கின்றன
    • மாதாந்திர மின் கட்டணத்தை கூட செலுத்த பணமின்றி மக்கள் தவிக்கின்றனர்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வறுமை குறியீடு 39.4 சதவீதத்தை தொட்டு அபாயகரமான அளவை எட்டியுள்ளது என்றும் இதனால் சுமார் 1 கோடியே 25 லட்சம் பேர் பாதிக்கப்பட போகின்றனர் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

    தற்போது காபந்து அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அந்நாடு எடுக்க வேண்டிய சில முக்கியமான கொள்கை முடிவுகள் குறித்து அந்நாட்டிற்கு கடன் உதவி செய்து வரும் உலக வங்கி, புதிய அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்க அறிக்கை தயாரித்து வருகிறது.

    அந்நாட்டிற்கு நிதி உதவி செய்ய பல நாடுகள் முன் வராத காரணத்தால், கடன் உதவி செய்யும் உலக வங்கி, தேசிய நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்கள் பல நிபந்தனைகளை அந்நாட்டிற்கு விதிக்கின்றன. விவசாயத்தையும், ரியல் எஸ்டேட் துறையையும் அந்நாடு வரி வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேவையற்ற செலவினங்களை குறைக்கவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. ஆனால், இதற்கு அங்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பாகிஸ்தான், மனித வளத்திலும் பொருளாதார நிலையிலும் பெரும் நலிவை சந்தித்து வருவதாக கூறும் உலக வங்கி அதனை சீர் செய்ய அதிரடியாக சில முடிவுகளை எடுக்க அந்நாட்டை வலியுறுத்துகிறது.

    கடும் விலைவாசி உயர்வாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் மாதாந்திர மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    "சந்திரயான்-3 சாதனை மூலம் இந்தியா நிலவுக்கே விண்கலன் அனுப்பி பெருமையடைகிறது. ஆனால் நாம் இந்தியாவை விட அனைத்திலும் பின் தங்கியுள்ளோம்" என அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவரே சமீபத்தில் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
    • நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.

    சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள் பயனர்களை அதிகம் ரசிக்க செய்யும்.

    அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது. நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.

    அவர்கள் ப்ரைடு ரைஸ் செய்வது, அதனுடன் முட்டைகளை சேர்த்து கிளறுவது என சமையலில் அசத்தும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் உள்ளிட்ட நாடுகளை கடந்த போது 3 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • சூடானில் இருந்து கடந்த 5-ந்தேதி அல்அசார் பல்கலைக்கழகத்திற்கு சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

    மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவை சேர்ந்தவர் மமதோ சபாயு பாரி. 25 வயதான இவருக்கு எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அவர் எகிப்துக்கு விமானத்தில் செல்ல பணம் இல்லாமல் தவித்தார். எனினும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக கடந்த மே மாதமே சைக்கிளில் எகிப்துக்கு பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கிருந்து மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் உள்ளிட்ட நாடுகளை கடந்த போது 3 முறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பின்னர் கல்வி பயில்வதற்காக சைக்கிளில் சென்றதை விளக்கியதை தொடர்ந்து போலீசார் அவரை விடுவித்துள்ளனர். பின்னர் அவரது கல்வி ஆர்வத்தை அறிந்து சிலர் உதவிகள் செய்துள்ளனர். மேலும் நிதி திரட்டி எகிப்துக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து சூடானில் இருந்து கடந்த 5-ந்தேதி அல்அசார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அவர் விரும்பிய படிப்பில் சேர அனுமதி கிடைத்ததோடு அதற்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

    • நிஜ்ஜார், கனடாவின் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லபப்ட்டார்
    • தீவிரவாதிக்கு கனடா ஏன் அடைக்கலம் கொடுத்தது என ரூபின் கேள்வி எழுப்பினார்

    இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடு கேட்டு பஞ்சாப் மாநிலத்தில் 1980களில் உருவான பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கம். இந்தியாவின் அடுத்தடுத்த ஆட்சிகளில் நசுக்கப்பட்டு விட்டாலும், இதன் ஆதரவாளர்கள் கனடா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) எனும் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

    சில தினங்களுக்கு முன் கனடா நாட்டதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலையில் இந்தியாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டினை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இதன் தொடர்ச்சியாக கனடாவிலுள்ள இந்தியாவின் தூதரை கனடா வெளியேற்ற, பதிலடியாக இந்தியா, கனடா நாட்டு தூதரை இங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

    இந்த பிரச்சனையில் தனது கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் கனடா, இந்தியாவிற்கு எதிராக தங்களோடு இணைய அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தது.

    இரு நாட்டு உறவிற்கும் சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ள இந்த சிக்கல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்ததாவது:

    கனடாவின் இந்த குற்றச்சாட்டு, இந்தியாவை விட கனடாவிற்குத்தான் அதிக அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய உறவா அல்லது அமெரிக்க உறவா என முடிவெடுக்க வேண்டிய கட்டம் வந்தால், அமெரிக்கா இந்தியாவுடன்தான் துணை நிற்கும். இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, ஒரு எறும்பு, யானையுடன் சண்டையிடுவது போலாகும். தனது குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரத்தை தர ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என கனடா விளக்க கடமைப்பட்டுள்ளது. பிளம்பராக வேலை செய்து வந்த கொல்லப்பட்ட நிஜ்ஜார் ஒன்றும் சுத்தமான மனிதரல்ல; அவரது கரங்கள் ரத்தக்கறை படிந்தவை.

    இவ்வாறு மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.

    • குழந்தை கை விரல்கள் சிலவற்றில் எலும்புகள் வெளியே தெரிந்தன
    • வீடு முழுவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் தெரிந்தது

    அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதி.

    இங்கு வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன் எனும் அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்தார். வேறு ஒரு தம்பதியினரும் அவர்களின் குழந்தையுடன் இவர்களுடன் வசித்து வந்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து வந்த பார்த்த போது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான். வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தது.

    அக்குழந்தை உடனடியாக இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக குழந்தை உயிர் பிழைத்து கொண்டது..

    காயங்களுக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரிய வந்தது. வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது அந்நாட்டு சட்டப்படி சம்பந்தபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளான்.

    தேசிய குழந்தைகள் நலனுக்கான துறையின் பொறுப்பில் அந்த வீட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் தற்போது அரசு பொறுப்பில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார்.
    • 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

    ஒட்டாவா:

    கனடா வான்கூவருக்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு போலீஸ் அதிகாரிகள் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 51 வயதான போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார்.

    இந்த சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு உள்ளனர். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இந்த பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • பாகிஸ்தான் வழக்கமான குற்றச்சாட்டை கூறி வருகிறது.
    • உலகின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் 78-வது அமர்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக்கக்கர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார்.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய பிரதிநிதி பெடல் கெஹ்லோட் பேசியதாவது:-

    பாகிஸ்தான் வழக்கமான குற்றச்சாட்டை கூறி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக முற்றிலும் பொய் பிரசாரத்தினை பாகிஸ்தான் செய்கிறது. அடிப்படை ஆதராமற்ற குற்றச்சாட்டுகளை தவறான முறையில் தெரிவித்து வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பான விவகாரங்கள் முற்றிலும் இந்தியாவுக்கு உட்பட்டது.

    எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இருக்கிறது.

    உலகின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும்.
    • புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் இ-மெயிலில் அனுப்பிய செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இங்கிலாந்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைபிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளோம். புகை பிடிப்பவர்களின் சதவீதத்தை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.
    • அங்கு அவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார்.

    ஒட்டாவா:

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார்.

    அதன்பின், அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது:

    நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.

    உக்ரைனுக்கு அடுத்த வருடமும் தொடர்ந்து கனடா அரசு பொருளாதார உதவிகளை வழங்கும். ஆனால் நாங்கள் விரும்புவது உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு ராணுவ உதவிகளோ அல்லது பொருளாதார உதவிகளோ தேவைப்படாத வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான்.

    நிரந்தரமான அமைதி என்பது ராணுவத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்றார்.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
    • ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார்.

    ஒட்டாவா:

    உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று வரவேற்றார்.

    இந்நிலையில், கனடா நாட்டு பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ரஷியாவின் ஆக்கிரமிப்பு நமது வெற்றியின் மூலம் முடிவுக்கு வர வேண்டும். உக்ரைனில் மீண்டும் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்த முயற்சி செய்யாத வகையில் ரஷியா நிரந்தரமாக தோற்கடிக்கப்பட வேண்டும்.

    கனடா அரசு வழங்கிய ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்காக கனடா அரசுக்கு நன்றி. கனடா அரசு எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என தெரிவித்தார்.

    ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×