search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவா?.. கனடாவா?.. முன்னாள் பென்டகன் அதிகாரி பதில்
    X

    இந்தியாவா?.. கனடாவா?.. முன்னாள் பென்டகன் அதிகாரி பதில்

    • நிஜ்ஜார், கனடாவின் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லபப்ட்டார்
    • தீவிரவாதிக்கு கனடா ஏன் அடைக்கலம் கொடுத்தது என ரூபின் கேள்வி எழுப்பினார்

    இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடு கேட்டு பஞ்சாப் மாநிலத்தில் 1980களில் உருவான பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கம். இந்தியாவின் அடுத்தடுத்த ஆட்சிகளில் நசுக்கப்பட்டு விட்டாலும், இதன் ஆதரவாளர்கள் கனடா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) எனும் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.

    சில தினங்களுக்கு முன் கனடா நாட்டதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலையில் இந்தியாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டினை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இதன் தொடர்ச்சியாக கனடாவிலுள்ள இந்தியாவின் தூதரை கனடா வெளியேற்ற, பதிலடியாக இந்தியா, கனடா நாட்டு தூதரை இங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

    இந்த பிரச்சனையில் தனது கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் கனடா, இந்தியாவிற்கு எதிராக தங்களோடு இணைய அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தது.

    இரு நாட்டு உறவிற்கும் சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ள இந்த சிக்கல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்ததாவது:

    கனடாவின் இந்த குற்றச்சாட்டு, இந்தியாவை விட கனடாவிற்குத்தான் அதிக அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய உறவா அல்லது அமெரிக்க உறவா என முடிவெடுக்க வேண்டிய கட்டம் வந்தால், அமெரிக்கா இந்தியாவுடன்தான் துணை நிற்கும். இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, ஒரு எறும்பு, யானையுடன் சண்டையிடுவது போலாகும். தனது குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரத்தை தர ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என கனடா விளக்க கடமைப்பட்டுள்ளது. பிளம்பராக வேலை செய்து வந்த கொல்லப்பட்ட நிஜ்ஜார் ஒன்றும் சுத்தமான மனிதரல்ல; அவரது கரங்கள் ரத்தக்கறை படிந்தவை.

    இவ்வாறு மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.

    Next Story
    ×