என் மலர்
உலகம்
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ளது
- மின்சார கிரிட்-களை நாசமாக்கிய குற்றத்திற்காக "கைது வாரண்ட்" பிறப்பிக்கப்பட்டுள்ளது
கடந்த 2022 பிப்ரவரி மாதம் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு போரிட்டு வருகிறது.
இப்பின்னணியில், பல்வேறு போர் குற்றங்கள் புரிந்ததாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் (Hague) நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) வழக்கு நடைபெற்றது.
இந்நிலையில், ரஷிய நீண்ட தூர ராணுவ விமான சேவையின் தலைவரான செர்ஜி கொபிலாஷ் (Sergei Kobylash) மற்றும் கருங்கடல் படை (Black Sea Fleet) ஆணையர் விக்டர் சொகோலோவ் (Viktor Sokolov) ஆகிய இருவரும் 2022 அக்டோபர் தொடங்கி 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில், உக்ரைன் நாட்டின் மின்சார கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் பல மின்சார உற்பத்தி கிரிட்-களை முற்றிலும் நாசமாக்கிய குற்றத்திற்காக ஐசிசி (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
மின் கட்டமைப்பை நேரில் கண்டறிய நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் கரிம் கான் (Karim Khan) உக்ரைனுக்கு சென்று ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) ரஷியா உறுப்பினர் இல்லை.
எனவே, குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் விசாரணைக்காக சர்வதேச நீதிமன்றத்தின் வசம் ரஷியா ஒப்படைக்காது என தெரிகிறது.

இந்த தீர்ப்பை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) வரவேற்றுள்ளார்.
கடந்த வருடம், ஐசிசி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) மற்றும் வேறொரு அதிகாரி ஆகியோர், உக்ரைனிலிருந்து அந்நாட்டு சிறுவர்களை ரஷியாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தி "வாரண்ட்" பிறப்பித்தது.
ஆனால், இதனை புறக்கணித்த ரஷியா, பதிலடியாக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், அரசு வழக்கறிஞருக்கும் "வாரண்ட்" பிறப்பித்தது.
நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் குறித்து விசாரிக்கும் ஐ.நா.வின் அங்கமான சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) வேறு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.
- போட்டி, டிரம்ப் மற்றும் பைடன் இருவருக்கும்தான் என்பது உறுதியாகி விட்டது
- "பிறர் தன்னை கவனிக்க வேண்டும்" என டிரம்ப் ஏங்குகிறார் என பைடன் தரப்பு தெரிவித்தது
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.
குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி கொண்ட டிரம்பிற்கு போட்டி வேட்பாளராக களம் இறங்கிய அக்கட்சியை சேர்ந்த தென் கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே, நேற்று, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து அதிபர் பதவி போட்டி, டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவருக்கும் இடையே மட்டும்தான் என்பது உறுதியாகி விட்டது.
இந்நிலையில் டிரம்ப், அதிபர் ஜோ பைடனை நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
"நமது நாட்டு நலனுக்காகவும், அமெரிக்கா எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சனைகளுக்காகவும் நானும் பைடனும் விவாதிக்க வேண்டியது அவசியம். எனவே, அவரை நான் விவாதிக்க அழைக்கிறேன். எந்த இடத்திலும், எந்நேரமும் விவாதிக்கலாம்" என டிரம்ப் தனது பிரத்யேக வலைதளமான "டிரூத் சோஷியல்" (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"பிறர் தன்னை கவனிக்க வேண்டும் என ஏங்குகிறார் டிரம்ப். அதிபர் பிரசாரத்தில் ஒரு நிலையில் விவாதங்கள் நிச்சயம் நடைபெறும். ஆனால், பைடனை பார்த்தே ஆக வேண்டும் என டிரம்ப் விரும்பினால் அவர் அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை; எப்போதும் சந்திக்கலாம்" என பைடனின் பிரசார குழுவின் ஆணையர் மைக்கேல் டைலர் (Michael Tyler) தெரிவித்தார்.

2020ல், அப்போதைய தேர்தல் காலகட்டத்தில் பைடன் மற்றும் டிரம்ப், இருவரும், 2 முறை விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வருகிறார் டொனால்ட் டிரம்ப்
- புளோரிடாவில் டிரம்ப் மற்றும் மஸ்க் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் பதிவான வழக்குகளுக்காக பெரும் தொகை செலவிட்டு வரும் டிரம்ப், பிரசாரங்களுக்கான நிதி கட்டமைப்பில் பைடனை விட பின் தங்கி உள்ளார்.
தனது பிரசாரத்திற்கு பெரும் நிதி தேவைப்படுவதால், டிரம்ப் குடியரசு கட்சியை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களை சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீசுவரரான எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் புளோரிடா மாநில மியாமியில் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.
டிரம்ப்பை, மஸ்க் ஆதரிக்கும் பட்சத்தில் ஜோ பைடனின் வெற்றி வாய்ப்புகள் குறையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வரவிருக்கும் அதிபர் தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களில், எவருக்கும் தான் நிதியுதவி அளிக்க போவதில்லை என எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் திட்டவட்டமாக அறிவித்தார்.
மஸ்கின் இந்த அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் என கூறும் அரசியல் விமர்சகர்கள், நேரடியாக வேட்பாளருக்கு நிதியுதவி செய்ய மஸ்க் மறுத்தாலும், அரசியல் கட்சிகளின் கமிட்டிகளுக்கு அவரது நிறுவனங்கள் அளிக்க கூடிய நன்கொடைகள் மூலம் நிதியளிக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் $192 பில்லியன் நிகர மதிப்பு உள்ள எலான் மஸ்க், ஜோ பைடனின் குடியேற்ற மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பான கொள்கைகளை விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.
- ஆசிரியரின் செயலை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான இருக்கைகள் கூட இருக்காது. இதுபோன்ற பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தங்களால் முடிந்தவரை செலவு செய்வார்கள். ஆனால் மலேசியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் வகுப்பறையில் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அலங்கரித்து உள்ளார்.
கமல் டார்வின் என்ற அந்த ஆசிரியர், தான் கடினமாக சம்பாதித்ததன் மூலம் கிடைத்த போனஸ் பணத்தில் இந்த செயல்களை செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆசிரியரின் செயலை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார்.
- தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
ரெயில் பயணத்தை சிறுவர்கள் விரும்புவார்கள். ஆனால் ரெயிலிலேயே 2 வருடங்களாக வாழ்க்கையை கழிக்கும் ஒரு சிறுவனை பற்றிய தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
ஜெர்மனியில் உள்ள லாஸ் ஸ்டோலி என்பவர் தனது 15 வயதில் இருந்தே ரெயிலில் வாழ ஆசை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லாஸ் ஸ்டோலி அதனை பொருட்படுத்தாமல் தினமும் ரெயிலிலேயே தனது வாழ்க்கை பயணத்தை கழிக்க தொடங்கினார். தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார். இதற்காக அதிக செலவு செய்கிறார்.
ஆனால் ஜெர்மன் ரெயில்வே வழங்கும் வருடாந்திர ரெயில் அட்டையை பெற்றுள்ள லாஸ் ஸ்டோலி ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும், முதல் வகுப்பில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.8.5 லட்சம் செலவு செய்கிறார். அதே நேரம் அவர் தான் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
- ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது.
- துபாயில் உள்ள பிரபல சிட்டி மாலில் சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது.
ஓட்டல்கள் ஆனாலும், வீடு ஆனாலும் பருப்பு குழம்பு தயாரிக்கும் போது அதில் காய்கறிகள் சேர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தயாராகும் சிறப்பு பருப்பு குழம்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் வித்தியாசமான உணவுகளை தயார் செய்வதில் பெயர் பெற்றவர். இவர் துபாயில் நடத்தி வரும் உணவகத்தில் சிறப்பு உணவாக 'தால் கஷ்கான்' என்ற பெயரில் விசேஷமாக பருப்பு குழம்பை தயாரித்து வழங்குகிறார். இந்த பருப்பு குழம்பு ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த பருப்பு கரைசலில் 24 காரட் தங்க பவுடர் கலக்கப்படுவது தான். இதனை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து பரிமாறப்படுகிறது. இந்த சிறப்பு உணவின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,300 ஆகும்.
துபாயில் உள்ள பிரபல சிட்டி மாலில் இந்த சிறப்பு உணவு பரிமாறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 84 லட்சம் பார்வைகளை குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், தங்கம் உடலால் உறிஞ்சப்படுவதில்லை எனவும், மற்றொரு நபர் தங்கத்தின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன? எனவும் பதிவிட்டுள்ளனர். இது முட்டாள் தனத்தின் உயரம் என ஒரு பயனரும், நம் உடலுக்கு தங்கம் தேவையில்லை, ஒரு சொட்டு தண்ணீர் இந்த தங்கத்தை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளார். இது போன்று பல பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளின் சரக்கு கப்பல்கள் குறிவைக்கப்படும்- ஹவுதி
- அமெரிக்கா- இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதிக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளில் சரக்கு கப்பல்களை செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஈரான் ஆதரவுடன் ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சரக்கு கப்பலை நோக்கி அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் கூட்டாக பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் லைபீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பார்படோஸ் கொடியுடன் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கப்பலை அங்கேயே விட்டுவிட்டு பணியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் சம்பவம், அதேவேளையில் சர்வதேச கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பொறுப்பற்ற முறையிலான தாக்குதல் என ஏமனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ஐந்து ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதோடு சேர்த்து இரண்டு ஏவுகணைகள் சரக்கு கப்பல்களை தாக்கியுள்ளன. மூன்றில் ஒரு ஏவகணையை அமெரிக்க கப்பல் தாக்கி அழித்துள்ளது.
- உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா சார்பில் போரில் ஈடுபட்ட இந்தியர் உயிரிழந்தார். இதனை ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷியா - உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர், ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் ஆவார். ஆனால், அவர் எதற்காக ரஷியா சென்றார், அங்கு அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
"இந்தியர் ஸ்ரீ முகமது அஸ்ஃபான் என்பவர் உயிரிழந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் ரஷிய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று ரஷியாவுக்கான இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவர் அஸ்ஃபான் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அஸ்ஃபான் உயிரிழந்த தகவல் அவர்களுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஒவைசி மூலமாக தெரிந்து கொண்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஒவைசி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்த விவகாரம் தொடர்பாக ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்காமல் போரில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஒவைசி எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், ரஷியாவில் சிக்கி தவிக்கும் 20 இந்தியர்கள் உதவி கோரியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. துபாயை சேர்ந்த ஃபைசல் கான் என்பவரே இந்தியர்களை அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
- டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே அதிபர் வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது.
- இந்நிலையில், நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.
குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே அதிபர் வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், நேற்று 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 12 மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். மேலும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார். ஆனால் வேட்பாளர் தேர்தலில் நான் தோற்றிருந்தாலும், அதிபர் வேட்பாளர் போட்டியில் நான் நீடிப்பேன் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்கும் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிபர் தேர்தலில் போட்டி கடுமையாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகித்த நிக்கி ஹேலி, கடந்த 2011 முதல் 2017-ஆம் ஆண்டு வரை தெற்கு கரோலினா ஆளுநராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது
- தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நாம் முன்னேற முடியாது என்றார் தலைமை நீதிபதி
பாகிஸ்தானில், 1971லிருந்து 1973 வரை அதிபராகவும், 1973லிருந்து 1977 வரை பிரதமராகவும் இருந்தவர் சுல்ஃபிகர் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto).
1977ல் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை பதவியில் இருந்து ராணுவ புரட்சி மூலம் தூக்கி எறிந்து பதவிக்கு வந்தார் ஜெனரல் ஜியா-உல் ஹக் (General Zia-ul-Haq).
1979ல் ஜியாவின் ஆட்சியின் போது, அகமது ரெசா கசூரி (Ahmed Reza Kasuri) என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சுல்ஃபிகர் அலி பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது.
ராவல்பிண்டியில் சுல்ஃபிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என வழக்கு தொடரப்பட்டு பல வருடங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், "சுல்பிகர் அலி பூட்டோவின் வழக்கு நியாயமான முறையில் நடக்கவில்லை" என தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா (Qazi Faez Isa) தலைமையிலான 9-நபர் பெஞ்ச் அளித்துள்ள இந்த தீர்ப்பில், "லாகூர் உயர் நீதிமன்றமும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் முறையான விசாரணை பெற ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள மனித உரிமையை பூட்டோவிற்கு வழங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நமது முந்தைய தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நம்மை திருத்தி கொண்டு நாம் முன்னேற முடியாது" என கூறியுள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள சுல்ஃபிகர் அலி பூட்டோவின் பேரனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan People's Party) தலைவருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி (Bilawal Bhutto-Zardari), "3 தலைமுறைகளாக இந்த தீர்ப்பிற்காக காத்திருந்தோம்" என கூறினார்.
- சீனாவின் ராணுவ பட்ஜெட் இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
- கிழக்கு லடாக் (eastern Ladakh) பகுதி சச்சரவு 4 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது
வல்லரசு நாடுகளில் ஒன்றான இந்தியாவின் அண்டை நாடான சீனா, பொருளாதார சூழல் நலிவடைந்துள்ள நிலையிலும் வருடாந்திர ராணுவ பட்ஜெட்டை 7.2% அதிகரித்துள்ளது.
தற்போது அமெரிக்காவிற்கு அடுத்து மிக பெரிய தொகையை ராணுவத்திற்கு செலவிடும் நாடாக சீனா உள்ளது.
இதனால், சீனாவின் ராணுவ பட்ஜெட் தொகை $230 பில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த தொகை இந்தியாவின் ராணுவ பட்ஜெட் தொகையை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ராணுவ தரைப்படையில் 20 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
தைவானை தனது நாடாக கூறி வரும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது. இப்பின்னணியில், ராணுவ பட்ஜெட்டில் இந்த ஒதுக்கீடு பார்க்கப்படுகிறது.
இந்திய கடல் (Indian Ocean) பகுதியில் ராணுவ மற்றும் அணு ஆயுத கட்டமைப்பை அதிகரிக்கும் நோக்கில் சீனா எடுத்திருக்கும் இந்த முடிவை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கிழக்கு லடாக் (eastern Ladakh) பகுதியில் ஏற்பட்ட சச்சரவு தொடங்கி 4 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.6.2 லட்சம் கோடி தொகையில் 28 சதவீதம் மட்டுமே ராணுவத்தை நவீனப்படுத்த செலவிடப்பட உள்ளது. மீதமுள்ள தொகையில் பெரும்பகுதி ஊதியம் மற்றும் பென்சன் தொகைக்காகவே செலவிடப்படுகிறது.
கொரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்தில் சீன பொருளாதாரம் பிற நாடுகளை போல் வளர்ச்சி அடையாமல் மந்தமடைய தொடங்கியது. அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் அந்நாட்டில் இள வயது ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், தம்பதியர் குழந்தை பெற்று கொள்வதற்கு தயங்கி வருகின்றனர்.
இந்த நெருக்கடிக்கு இடையிலும் சீனா ராணுவ பலத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளை கை விடவில்லை.
- விவசாயிகளின் பண்ணை பொருட்கள் எரிப்பால் புகை மூட்டம் குறையாமல் இருக்கிறது
- PM 2.5 தாக்கத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என NESDC வலியுறுத்தியது
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மக்கள் தொகை சுமார் 72 மில்லியன். இவர்களில் 1 கோடிக்கும் (10 மில்லியன்) அதிகமான மக்கள், காற்று மாசு தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சில் (National Economic and Social Development Council) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
பண்ணை பொருட்களில் தேவையற்றவைகளை எரிக்கும் அந்நாட்டு விவசாயிகளின் பரவலான பழக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ ஆகியவற்றால் புகைமூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
2024 ஆண்டு தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் மாசுபாடு தொடர்பான நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.

நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் இதய கோளாறு போன்ற மாசுபாடு தொடர்பான நோய்களால் நாள்பட்ட கணக்கில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2023ல் முதல் 9 வாரங்களில் 1.3 மில்லியன் என இருந்தது.
தற்போது (2024 தொடக்கத்தில்) இந்த எண்ணிக்கை 1.6 மில்லியன் எனும் அளவிற்கு அதிகரித்துள்ளது.
சுவாச மண்டலத்தை பாதிக்க கூடிய 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைந்த அளவிலான சிறிய, அபாயகரமான துகள்கள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் நுழைந்து விடுகின்றன. தொடர்ந்து, இத்துகள்கள் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுத்தி இருமல் மற்றும் மார்பு இறுக்கத்தை ஏற்படுத்த கூடியவை. இது மட்டுமின்றி இவை இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பாதிப்பை மேலும் அதிகப்படுத்தலாம்.
இத்தகைய துகள்களை "PM 2.5" என சுகாதார நிபுணர்கள் அழைக்கின்றனர்.
பொது சுகாதாரத்தில் "PM 2.5" ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர்க்க தாய்லாந்து அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என NESDC கூறியது.
தாய்லாந்தில், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை கரும்பு தோட்டம் மற்றும் நெல் விளைநிலங்கள் ஆகியவற்றில் வைக்கோல் போன்றவற்றை விவசாயிகள் எரிப்பது தொடர்கதையாகி வருவதால் காற்று மாசுபாடு அந்நாட்டில் பெரும் பிரச்சனையாகி வருகிறது.






