என் மலர்tooltip icon

    உலகம்

    • 25 வயது வித்தியாசம் உள்ள போதிலும் திருமணம் கலிபோர்னியாவில் அவரது பங்களாவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது
    • ரூபர்ட் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி

    அமெரிக்காவின் பிரபல 'நியூஸ் வேர்ல்ட் மீடியா' அதிபர் ரூபர்ட் முர்டோக் (வயது 92). தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளர். ரூபர்ட் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடி. அவருக்கு மகன், மகள்கள் என 6 பேர் உள்ளனர்.

    இவர் தனது பத்திரிகை  நிறுவனங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகன்களிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ஏற்கனவே 4 திருமணங்கள் செய்திருந்த முர்டோ, தன் நீண்ட நாள் காதலியான எலெனா ஜோகோவாவை (67) திருமணம் செய்ய உள்ளார்.

    ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தரான எலெனா ஜோகோவா ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

    25 வயது வித்தியாசம் உள்ள போதிலும் இவர்களது திருமணம் கலிபோர்னியாவில் அவரது பங்களாவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இதையொட்டி இணையதளத்தில் இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

    • இரு நாடுகளும், தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை வெளியிட்டுள்ளன
    • இரு நாடுகளின் அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

    ரஷிய-உக்ரைன் போர் பின்னணியில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.

    இரு நாடுகளும், ரஷியாவில் வாழும் தங்கள் நாட்டினருக்கு தனித்தனியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


    அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    அடுத்த 48 மணி நேரத்தில் ரஷியாவில் பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறலாம்.

    பலர் ஒன்று கூடும் இடங்கள், இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் ஆகியவற்றில் தாக்குதல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    எனவே, ரஷியாவில் வாழும் அமெரிக்க குடிமக்கள், பொதுவெளியில் நடமாடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.


    இதே போன்று இங்கிலாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உக்ரைன் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, 2 வருடங்கள் ஆன நிலையில், ரஷியாவில் ஆபத்து அதிகரித்துள்ளது.

    ரஷியாவில் மக்களுக்கு பாதுகாப்பு உறுதியாக இல்லை.

    எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ரஷியாவிற்கு செல்லும் இங்கிலாந்து நாட்டினருக்கு பயண காப்பீடு ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இரு நாடுகளின் இந்த அறிவிப்புகள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால், அமெரிக்காவும், இங்கிலாந்தும், தங்கள் எச்சரிக்கைக்கான காரணங்களை இதுவரை வெளியிடவில்லை.

    • 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, சில எலும்புகளை கண்டார்
    • டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது

    பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள க்ரூசி (Cruzy) பகுதிக்கு அடுத்துள்ளது மோன்டோலியர் (Montouliers) காட்டுப் பகுதி.

    இப்பகுதியை சேர்ந்த தொல்பொருள் ஆர்வலரான டேமியன் போஷெட்டோ (Damien Moschetti) இங்கு தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    கடந்த 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, அந்த மலைப்பகுதியில், புதைந்த நிலையில் சில எலும்புகள் தென்படுவதை கண்டார்.

    இதையடுத்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆய்வை தொடங்கினர்.

    ஆய்வுப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் தொடர்ந்தால், புதைபொருட்களுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால் அப்பகுதி முழுவதையும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

    இந்த ஆராய்ச்சியில் பெருமளவிற்கு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். மேலும், இந்த ஆய்வு ரகசியமாக நடத்தப்பட்டது.


    சுமார் 2 வருட காலம் பல முறை 10 நாட்கள் இடைவெளியில் நடத்தப்பட பல்வேறு ஆய்வில், டேமியனால் கண்டறியப்பட்ட புதைவடிவம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை டைனோசரின் எலும்பு கூட்டின் 70 சதவீத புதைவடிவம் என தெரிய வந்தது.

    அது சுமார் 7 கோடி (70 மில்லியன்) வருடங்களுக்கு முன் வாழ்ந்த "டைட்டனோசர்" (titanosaur) எனும் அரிய டைனோசர் உயிரினத்தின் புதைந்த எலும்புகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    "கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக க்ரூசி நகரின் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்களின் புதைபடிவங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்படுகின்றன. ஆனால், இம்முறை கிடைத்திருப்பது அந்த உயிரினத்தின் உடலில் இருந்த 70 சதவீத பெரும்பாலான பாகங்கள்" என க்ரூசி அருங்காட்சியகத்தின் நிறுவனர், பிரான்சிஸ் ஃபேஜ் (Francis Fage) தெரிவித்தார்.

    • சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

    அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 777 ஜெட்லைனர் ஜப்பானுக்குப் புறப்பட்டது.

    விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் திடீரென விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று கீழே விழுந்தது. இதில், விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் கார் பார்க்கிங்கிற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.

    இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.

    இந்த விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

    போயிங் 777 விமானத்தில், தரையிறங்கும் ஸ்ட்ரட்கள் ஒவ்வொன்றிலும் ஆறு சக்கரங்களைக் கொண்டுள்ளது. இதில், சக்கரம் காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனால், பயணிகள் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

    • இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது
    • உக்ரைனுக்கு ஆயுத உதவியை நாம் வழங்கினால் புதினை நிறுத்த முடியும் என்றார் பைடன்

    நாட்டின் பொருளாதார நிலை, அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும், ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம்.

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பைடன், "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" (State of the Union Address) எனப்படும் இந்த உரையை நிகழ்த்தினார்.

    தனது உரையில், முன்னாள் அமெரிக்க அதிபரும், தற்போதைய குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை, பெயர் குறிப்பிடாமல் கடுமையாக பைடன் விமர்சித்தார்.


    சுமார் 1 மணி நேரம் பைடன் நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்ததாவது:

    எனக்கு முன்பு அதிபராக இருந்தவர் மக்களுக்கான அடிப்படை கடமைகளையே ஆற்றவில்லை.

    தற்போது அவர் ரஷிய அதிபர் புதினிடம், "நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என கூறுகிறார்.

    ரஷிய அதிபரிடம் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறலாமா? இது ஆபத்தானது.

    புதின் உக்ரைனுடன் நிறுத்தி கொள்ள மாட்டார். நாம் உக்ரைனுக்கு தேவைப்படும் ஆயுத உதவி வழங்கினால் புதினை நிறுத்த முடியும்.

    நான் புதினுக்கு அஞ்ச மாட்டேன்.


    டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்.

    தற்போது அமெரிக்காவில், அமெரிக்காவை கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல நினைப்பவர்களுக்கும், எதிர்காலத்தில் நிலைநிறுத்த நினைப்பவர்களுக்கும் இடையேயான போட்டி நடைபெறுகிறது.

    எனது வாழ்வு எனக்கு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம், ஆகியவற்றுடன் இணைத்து கொள்ள கற்று தந்துள்ளது. அந்த இரண்டிற்காகவே நான் போராடுவேன்.

    இவ்வாறு பைடன் தெரிவித்தார்.

    • 'உலகின் சிறந்த 38 காபிகள்' பட்டியலில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடம் பெற்றது
    • தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பில்டர் காபி ஒரு பாரம்பரிய காபி

    'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் சமீபத்தில் உலகளாவிய 'காபி' தரம் மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தியது.

    புகழ்பெற்ற 'உலகின் சிறந்த 38 காபிகள்' பட்டியலில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடம் பெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற தென் இந்திய 'பில்டர் காபி' 2-வது இடத்தை பிடித்தது.

    'கியூபன் எஸ்பிரெசோ' என்பது கியூபாவில் தோன்றிய ஒரு வகை எஸ்பிரெசோ ஆகும். இது வறுத்த காபி கொட்டை,பழுப்பு சர்க்கரை பயன்படுத்தி இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட காபி. தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பில்டர் காபி ஒரு பாரம்பரிய காபி.

    தரவரிசையில் உலகின் முதல் 10 இடங்களை பிடித்த காபிகளின் பட்டியல் வருமாறு:-

    1. கியூபா எஸ்பிரெசோ (கியூபா)

    2. தென்னிந்திய காபி (இந்தியா)

    3. எஸ்பிரெசோ பிரெடோ (கிரீஸ்)

    4. பிரெடோ கப்புசினோ (கிரீஸ்)

    5. கப்புசினோ (இத்தாலி)

    6. துருக்கிய காபி (துருக்கி)

    7. ரிஸ்ட்ரெட்டோ (இத்தாலி)

    8.பிராப்பே (கிரீஸ்)

    9. ஈஸ்காபி (ஜெர்மனி)

    10. வியட்நாமிய ஐஸ் காபி (வியட்நாம்)

    • மார்ச் 8, பல நாடுகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
    • ஐ.நா. பொதுச்சபை மார்ச் 8 தேதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது

    1914 மார்ச் 8 அன்று முதல்முதலாக ஜெர்மனியில் சர்வதேச பெண்கள் தினம் என கொண்டாடப்பட்டது. அந்த சந்திப்பில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை பெற பல வருடங்களாக நடைபெற்ற போராட்டங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில், மார்ச் 8 எனும் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.


    1975ல் ஐக்கிய நாடுகளின் (UN) சபை, மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடியது.

    1977ல் ஐ.நா. பொதுச்சபை (UN General Assembly) தனது உறுப்பினர் நாடுகளுக்கு மார்ச் 8 தேதியை அதிகாரபூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது.

    2024 சர்வதேச மகளிர் தின கருப்பொருளாக, "பெண் இனத்தில் முதலீடு செய்யுங்கள் – வளர்ச்சியை துரிதப்படுத்துங்கள்" (Invest In Women: Accelerate Progress) என்றும் பிரச்சார கருப்பொருள் (campaign theme) "இணைப்பதை ஊக்குவியுங்கள்" (Inspire Inclusion) என்றும் ஐ.நா. அறிவித்தது.

    பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாமல் இருப்பதையும், தன்னிறைவு காண்பதில் உள்ள சிக்கல்களையும், சவால்களையும் களையும் விதமாக இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டது.

    அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்கேற்பதையும், முடிவுகளை எடுப்பதில் சமமான வாய்ப்பளிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், ஒரு வலுவான சமுதாய கட்டமைப்பை நாம் உருவாக்க முடியும்.

    சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் பெண்களின் சாதனைகள் இந்நாளில் பிரசாரம் செய்யப்படும்.


    சர்வதேச அளவில் அரசியலில் சிரிமாவோ பண்டாரநாயகே (இலங்கை), இந்திரா காந்தி (இந்தியா), பெனாசிர் பூட்டோ (பாகிஸ்தான்), ஷேக் ஹசினா (வங்காளம் தேசம்), மார்கரெட் தாட்சர் (இங்கிலாந்து) போன்ற பெரும் தலைவர்கள் பல போராட்டங்களை கடந்து வெற்றி பெற்றனர்.

    முதல்முதலாக ரசாயன துறையில் மேரி கியூரி, உலக புகழ் பெற்ற நோபல் பரிசு (Nobel Prize) வென்றதற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட பெண்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்.


    முழுக்க முழுக்க அறிவு சார்ந்த போட்டி என கருதப்படும் சதுரங்க (Chess) விளையாட்டில் நோனா கப்ரின்டாஷ்வில்லி எனும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதை தொடர்ந்து 41 பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர்.

    மருத்துவ துறையில் 1960ல் டாக்டர் நினா ப்ரான்வால்ட் முதல் முதலாக இருதய அறுவை சிகிச்சை செய்து புகழ் பெற்றார். அவரை தொடர்ந்து தற்போது வரை பல பெண்கள் மருத்துவ துறையின் பல பிரிவுகளிலும் வியத்தகு சாதனை புரிந்து வருகின்றனர்.

    ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நாளுக்கு நாள் பெண்கள் நிரூபித்து வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண்களின் ஆற்றலை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    • பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்தது ஸ்வீடன்
    • "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் கூறினார்

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவின் தலைமையில் 31 நாடுகள், ஒன்றிணைந்து அமைத்த ராணுவ கூட்டமைப்பு நேட்டோ (North Atlantic Treaty Organization) எனப்படும்.

    நேட்டோ உறுப்பினர் நாட்டை மற்றொரு நாடு தாக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முற்பட்டால், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒருங்கிணைந்து உறுப்பினர் நாட்டிற்கு ஆதரவாக நிற்கும். இதில் ஒரு நாடு உறுப்பினராக சேர விரும்பினால், அனைத்து நாடுகளும் அந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.

    பல தசாப்தங்களாக எந்த உலகப் போரிலும் பங்கேற்காமல் நடுநிலைமை வகித்த ஸ்வீடன், ரஷிய-உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்க-சார்பு நிலைக்கு மாறியது.

    2022ல் நடந்த ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ஸ்வீடன், (NATO) நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது.

    ஆனால், "தனக்கு எதிரான நாடு" எனக் கூறி ஸ்வீடனின் இணைப்பை ஹங்கேரி ஆதரிக்க மறுத்து வந்தது. மற்றொரு நேட்டோ உறுப்பினர் நாடான துருக்கி, "தனது நாட்டிற்கு எதிரான குர்து இன பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிக்கிறது" என குற்றம் சாட்டி ஸ்வீடனை இணைக்க சம்மதிக்கவில்லை.

    கடந்த ஜனவரி மாதம், தனது முடிவை மாற்றிக் கொண்ட துருக்கி, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவளித்தது.

    சில வாரங்களுக்கு முன், ஹங்கேரியும் தனது நிலையை மாற்றி கொண்டது.

    நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு சுவீடன் நாட்டிற்கு இருந்த அனைத்து தடைகளும் நீங்கிய நிலையில், நேற்று, அதிகாரபூர்வமாக ஸ்வீடனின் இணைப்பு அறிவிக்கப்பட்டது.


    நேட்டோ அமைப்பில் இணையும் 32-வது உறுப்பினர் நாடு ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்வீடனின் இணைப்பு குறித்து, "இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்" என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் (Jens Stoltenberg) கூறினார்.

    இது குறித்து பேசிய ஸ்வீடன் அதிபர் உல்ஃப் க்ரிஸ்டர்சன் (Ulf Kristersson), அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.


    • மங்கா காமிக்ஸ் வகைகள் பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன
    • ரத்தம் பெருமளவில் கசிந்து, மூளையில் நிறைந்து, திசுக்களுக்கு அழுத்தம் தருவதால் சப்டியூரல் ஹீமடோமா ஏற்படுகிறது

    "காமிக்ஸ்" (comics) எனப்படும் படக்கதை புத்தகங்களில் 19-வது நூற்றாண்டில் ஜப்பானில் உருவான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள் "மங்கா" (manga) எனப்படும்.

    மங்கா காமிக்ஸ் வகைகளில் நகைச்சுவை, குடும்ப உறவுகள், மர்மம், துப்பறிதல், அறிவியல் உள்ளிட்ட பல வகையான கதைகள் தற்போது வரை வெளிவந்திருக்கின்றன.

    மங்கா காமிக்ஸ் வகைகள், ஜப்பானிய மொழிகளில் இருந்து பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.


    பிரபலமான ஜப்பானிய மங்கா கதைகளில் "டிராகன் பால்" (Dragon Ball) எனும் படக்கதைகள் முன்னணியில் உள்ளன.

    அகிரா டொரியாமா (Akira Toriyama) என்பவர் எழுதி உருவாக்கிய "டிராகன் பால்" கதைகள், பல மங்கா எழுத்தாளர்களுக்கு படைப்பாற்றலில் ஆர்வம் தந்து, அவரைப் போலவே எழுத்தாளர்களாக உருவெடுக்க வழிவகுத்தது.

    இதுவரை, உலகெங்கும் 260 மில்லியனுக்கும் மேல் "டிராகன் பால்" கதைகள் விற்பனை ஆகி உள்ளன.

    1984ல் "டிராகன் பால்", தொலைக்காட்சி தொடர் வடிவில் உருவானது. இதை தொடர்ந்து பல "டிராகன் பால்", திரைப்படங்களும், வீடியோ விளையாட்டுகளும் உருவாகின.

    "சோன் கோகு" (Son Goku) எனும் சிறுவன், டிராகன்கள் உள்ள பல மந்திர பந்துகளை ஒவ்வொன்றாக சேகரித்து, பூமியை அழிக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து பூமியை காப்பாற்ற போராடுவதே இக்கதைகளின் மையக்கரு.

    இந்நிலையில், "சப்டியூரல் ஹீமடோமா" (subdural hematoma) எனும் மூளையில் உண்டாகும் ஒரு ஆபத்தான நிலையினால், மார்ச் 1 அன்று, தனது 68-வது வயதில் அகிரா டொரியாமா காலமானார்.

    குறுகிய நேரத்தில் மூளையில் ரத்தம் பெருமளவில் கசிந்து, மூளையில் நிறைந்து, மூளைத்திசுக்களுக்கு அழுத்தம் தரும் நிலையை சப்டியூரல் ஹீமடோமா என மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

    80களில் தங்களின் குழந்தைப் பருவ காலத்தில், டொரியாமாவின் மங்கா படக்கதைகளை விரும்பி படித்து, அவற்றை தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக கருதும் டொரியாமாவின் ரசிகர்களுக்கு அவரது மரணச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தர்ஷினியின் கணவர் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
    • ஒரே நேரத்தில் 6 பேர் அதுவும் 4 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் கனடா நாட்டை உலுக்கி உள்ளது.

    ஒட்டாவா:

    கனடா தலைநகர் ஒட்டாவா தென்மேற்கு பகுதியான பார்ஹேவன் பகுதியில் வசித்து வந்தவர் தர்ஷினி (வயது35). இலங்கையை சேர்ந்த இவர் தனது கணவர் மற்றும் 7 வயது மகன், 4 மற்றும் 2 வயதுடைய மகள்கள். 2 மாத கைக்குழந்தையுடன் கனடா சென்றார்.

    இந்த நிலையில் இவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது அங்கு தர்ஷினி மற்றும் 4 குழந்தைகள், ஒரு ஆண் ஆகிய 6 பேரும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


    தர்ஷினியின் கணவர் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயது மாணவர் டி.சொய்டா என்பவரை கைது செய்தனர். அவர் எதற்காக இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கனடா நாட்டை பொறுத்தவரை இது போன்ற கொலைகள் அரிதாக தான் நடக்கும். தற்போது ஒரே நேரத்தில் 6 பேர் அதுவும் 4 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் கனடா நாட்டை உலுக்கி உள்ளது.

    • இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நீடித்து வருகிறது.
    • உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷியாவிற்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே டிரோன்களுக்காக 200 மில்லியன் பவுண்டு ஒதுக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது, 125 மில்லியன் பவுண்டு கூடுதலாக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது.

    10 ஆயிரம் டிரோன்களில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஆயிரம் டிரோன்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன படைகள் கருங்கடலில் ரஷியாவின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன.

    கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் டிரான் மூலம் ரஷியாவின் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. இதுவரை மூன்று கப்பல்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடியால் உக்ரைனுக்கு உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது
    • சர்வதேச சட்டங்களை மீறி ஐரோப்பா வலிமை இழப்பதை விரும்பவில்லை என்றார் மேக்ரான்

    2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron), "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்திருந்தார்.

    மேக்ரானின் கருத்திற்கு பிரான்சிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக இருந்தது.

    இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசிற்கு (Czech Republic) சென்றிருந்த மேக்ரான், அந்நாட்டின் அதிபர் பீட்டர் பவெலை (Petr Pavel) சந்தித்தார்.

    இச்சந்திப்பிற்கு பிறகு மேக்ரான் தெரிவித்ததாவது:

    ரஷியாவை எதிர்க்கும் உக்ரைனை நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.

    ஆதரவு அளிக்கும் நாடுகள் கோழைகளாக கூடாது.

    நாம் கோழைகள் அல்ல என உறுதியாக உலகிற்கு தெரிவிக்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.

    இது நமது போர். நடப்பது நடக்கட்டும் என நாம் கண்டும் காணாமல் எவ்வாறு இருக்க முடியும்?


    அதனால்தான் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் துருப்புகளை இறக்க வேண்டிய அவசியம் வந்தால் கண்டிப்பாக அதை செய்வோம் என நான் முன்பு கூறினேன். அந்த நிலையில் நான் பின் வாங்க மாட்டேன்.

    நாம் ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இல்லை.

    உக்ரைனில் நிலைமை சீரடைவதையே நாம் விரும்புகிறோம்; மோசமடைவதை அல்ல.

    சர்வதேச சட்டங்கள் எதையும் மீறி அதனால் ஐரோப்பாவின் நிலைமை வலிமை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு மேக்ரான் தெரிவித்தார்.

    ×