என் மலர்
உலகம்
- தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி அமீர் பரூக் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
எனினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதாவது அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் மற்ற வழக்குகளிலும் விடுதலை செய்யப்படும்வரை அவர்கள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். எனவே இது அவர்களுக்கு ஒரு தற்காலிகமான நிவாரணம் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம்.
- எதிர்க்கட்சி தலைவர்களின் மனைவிகள் இந்தியாவுக்கு செல்லும்போது சேலை வாங்கி, வங்காளதேசத்தில் விற்பனை செய்தார்கள்.
வங்காள தேசத்தில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் (boycott of Indian products) என்ற எதிர்ப்பு பிரசாரம் தற்போது கிளம்பி வருகிறது. சமூக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் (influencers) மட்டும் எதிர்க்கட்சியின் சில தலைவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அவாமி லீக் கட்சியின் தலைவரும், வங்காளதேச பிரதமருமான ஷேக் ஹசீனா இதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:-
இந்திய தயாரிப்பு பொருட்களை எதிர்க்க வேண்டும் என சொல்பவர்களுக்கு என்னுடைய ஒரே கேள்வி, எவ்வளவு இந்திய சேலைகள் உங்களுடைய மனைவிகள் வைத்துள்ளார்கள். அந்த சேலைகளை ஏன் உங்கள் மனைவியிடம் இருந்து வாங்கி இன்னும் தீ வைத்து எரிக்காமல் உள்ளீர்கள் என்பதுதான்.
கரம் மசாலா, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் அனைத்து வாசனை திரவியங்கள் இந்தியாவில் இருந்து வருகிறது. இவைகள் அனைத்தும் வங்காளதேசம் தேசிவாத கட்சி தலைவர்களின் வீட்டின் சமையலறையில் பார்க்கக்கூடாது.
வங்காளதேசம் தேசியவாத கட்சி ஆட்சியில் இருந்தபோது மந்திரிகள் மட்டும் அவர்கள் மனைவியர் இந்தியாவிற்கு சென்றபோது அங்கிருந்து சேலைகளை வாங்கி வங்காள தேசத்தில் விற்பனை செய்தார்கள்.
இவ்வாறு ஷேக் ஹசீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தின் பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவதற்கு துணை செய்ததாகவும், ஷேக் ஹசீனா பிரதமராவதை இந்தியா விரும்புவதாகவும் வங்காளதேச எதிர்க்கட்சி குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் என்பதை ஊக்குவிக்கும் தொடர்பாக வங்காளதேசம் தேசிவாத கட்சி தலைவர் ருகுல் கபீர் ரிஸ்வி காஷ்மீர் சால்வே-ஐ சாலையில் தூக்கி எறிந்த நிலையில் ஷேக் ஹசீனா இவ்வாறு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
- லெபனான், ஏமன், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.
- இஸ்ரேல் ராணுவம் ஹவுதி, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி குழுவும் இஸ்ரேல் நோக்கு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் இருந்தும் ஈரான் ஆதரவு பெற்ற குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.
இதனால் இஸ்ரேல் அருகில் உள்ள லெபனான், சிரியா, ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் குழுக்களை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் தூதரகம் பலத்த சேதம் அடைந்துள்ளது. தாக்குதலின்போது தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் முகமது ரீசா ஜஹேதி என்பவர் ஆவார். இவர் லெபனானில் குவாத்தை படையை வழிநடத்திச் சென்ற முக்கிய தளபதி ஆவார். 2016 வரை சிரியாவில் பணயாற்றியுள்ளார்.
இவருடன் துணை தளபதி முகமது ஹதி ஹஜ்ரியாஹிமி-யும் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் 5 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தளபதி உடன் ஹிஸ்மில்லா உறுப்பினர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். தூதரக பாதுகாப்பில் இருந்த இரண்டு போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
தூதரகத்தின் முக்கிய கட்டிடம் தாக்கப்படவில்லை எனவும், அதில் ஈரான் தூதர அதிகாரிகளின் வீடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தூதர் ஹொசைன் அக்பாரி உறுதியளித்துள்ளார்.
ஈரான் இதற்கு எப்படியும் பதிலடி கொடிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் தூதரகம் மீதான இந்த தாக்குதல் மத்திய கிழக்கு தரைக்கடை பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி மற்ற நாடுகள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் சிரியாவுக்கான ஈரான் ஆலோசகர் கொல்லப்பட்டார் அதேபோல் ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஈரான் ஆலோசர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் ஈரான் எல்லையில் உள்ள சிரியா மாகாணத்தில் உள்ள நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ஆலோசகர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது
ஈரானிலிருந்து தெற்கு இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நோக்கி ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரான் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் அரிதாகவே ஒப்புக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- =பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நாளை பிற்பகல் வீடு திரும்புவார் என மருத்துவர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டி பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," இன்று பிரதமர் நெதன்யாகுவிற்கு வெற்றிகரமாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டாகவும், பின்னர், நெதன்யாகு சுயநினைவுடன் இருப்பதாகவும், குடும்பத்துடன் உரையாடி வருவதாகவும், அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது.
- தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலனுக்காக சுமார் ரூ. 8.22 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கை அரசு
பாலஸ்தீன தூதரிடம் இதற்கான காசோலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கினார்.
- 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.
- தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது
சீனா:
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது.
கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.
11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.
ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது.
தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது
இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
- இஸ்தான்புல், அங்காரா மேயர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சி முன்னணி.
- நம்முடைய நாட்டில் புதிய அரசியல் சூழ்நிலைக்கான கதவு திறந்து விட்டது- எதிர்க்கட்சி தலைவர்.
துருக்கியில் நேற்று மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சுமார் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் முக்கியமான மேயர் பதவியாக கருதப்படும் இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் எர்டோகன் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.
இஸ்தான்புல்லில் குடியரசு மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய மேயர் எக்ரேம் இமாமோக்லு முன்னிலை பெற்றுள்ளார். மான்சுர் யவாஸ் அங்காராவில் மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
மொத்தம் உள்ள 81 மாகாணங்களில் 36-ல் குடியரசு மக்கள் கட்சி (சி.ஹெச்.பி.) முன்னிலை வகிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சிகளிடம் இழந்த நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை மீட்டெடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்க முயன்றார் எர்டோகன். ஆனால், எர்டோகனுக்கு மீண்டும் தோல்வி கிடைத்துள்ளது.

70 வயதான எர்டோகன் கடந்த 1994-ல் இஸ்தான்புல் மேயர் பதவியில் வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரது அரசியல் வாழ்க்கை அதிபர் வரை உயர்ந்துள்ளது.
"துருக்கியில் ஒரு புதிய அரசியலை ஏற்படுத்த வாக்காளர்கள் முடிவு செய்தனர். இன்று (நேற்று) வாக்காளர்கள் துருக்கியின் 22 வருட பிம்பத்தை மாற்ற முடிவு செய்துவிட்டார்கள். நம்முடைய நாட்டில் புதிய அரசியல் சூழ்நிலைக்கான கதவு திறந்து விட்டது" என சிஹெச்பி தலைவர் ஓஸ்குர் ஓசேல் தெரிவித்துள்ளார்.
- காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துகிறது ஹவுதி.
- ஹவுதி தாக்குதலை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து முறியடித்து வருகின்றன.
செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல்களை குறிவைத்து தாக்குகிறது.
இதனை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செங்கடலில் ஹவுதி கிளர்ச்சி குழு தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒரு டிரோன் செங்கடலில் பறந்து சென்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்றொரு டிரோன் தாக்குதலுக்கு புறப்பட தயாராக இருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கா, "எங்களுடைய படைகளை பாதுகாக்கவும், கடற்பயணம் சுதந்திரமாக மேற்கொள்ளவும், சர்வதேச கடற்பகுதி பாதுகாப்பானது என்பதை உருவாக்கவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அதிகபட்ச பாதுகாப்பிற்காகவும் தேவையான நடவடிக்கை" எனத் தெரிவித்துள்ளது.
ஏமனின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருக்கின்றன. மேலும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகின்றன.
- விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பாகங்களாக வெட்டி எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள படப்ஸ்கோ ஆற்றில் இருந்த இரும்பு பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில், அந்த பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு வந்த எட்டு தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
இந்தநிலையில், இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தின் கழிவுகளை பணியாளர்கள் முதல்முறையாக வெளியேற்றி உள்ளனர். இதில் 200 டன் மதிக்கத்தக்க பாலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆற்றில் சரிந்து விழுந்த பாலத்தை அதிநவீன உபகரணங்கள் கொண்டு சிறுசிறு பாகங்களாக வெட்டி எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாலத்தை முழுமையாக மீட்க முயற்சிக்கும் போது, அதில் சிக்கி உயிரிழந்த அனைவரின் உடல்களையும் மீட்க வாய்ப்புகள் அதிகம் ஆகும். பாலம் சரிந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
"பாலம் சரிந்து விழுந்ததில் இருந்து முதலத் முறையாக அதன் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேற்பரப்பை வெட்டி எடுக்கும் பணிகள் முழுமை பெற்றன. இதில் மீட்கப்பட்ட பாகத்தின் எடை 200 டன்கள் வரை இருக்கும்," என்று அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளர் கிம்பர்லி ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
- செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என பாகிஸ்தான் முடிவுசெய்தது.
- அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கான தடை அங்கு அமலுக்கு வருகிறது.
இஸ்லாமாபாத்:
விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அவரது தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது.
இதற்கிடையே, முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசுகையில், நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன். நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம். வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும். பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்துள்ளது.
ஆனாலும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது.
- இலங்கை பிரதமரின் சீன பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கொழும்பு:
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, 6 நாட்கள் அரசு முறை பயணமாக சீனாவுக்கு கடந்த 25-ந்தேதி சென்றார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இலங்கையின், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தினேஷ் குணவர்த்தனேவின் சீன பயணம் நேற்று நிறைவு பெற்றது.
இந்த நிலையில் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு, அம்பாந்தோட்டை துறை முகங்களை அபிவிருத்தி செய்வதில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தவும், பிற கடனாளிகளுடன் நட்புறவான தொடர்பை பேணவும், சர்வதேச நாணய நிதியத்தில் சாதகமான பங்கை வகிக்கவும், நிதி நிவாரணத்தில் இலங்கைக்கு உதவவும், அதன் நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது.
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதற்கும், இதை பெல்ட் அண்ட் ரோடு' கட்டுமானத்தின் முதன்மைத் திட்டங்களாக மாற்றுவதற்கும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன என்று தெரிவித்தது.
மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா உறுதியளித்து உள்ளது. இலங்கை துறைமுகங்களுக்கு சீன உளவுக் கப்பல்கள் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இலங்கை பிரதமரின் சீன பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
டெல்அவில்:
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.
டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.
டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.






