என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
    • கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

    பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி செய்த துரோகங்களை பட்டியலிட்டு கேள்விகளை எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே...

    தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?

    #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?

    பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

    தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

    "#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?

    பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?

    இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?

    ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?

    கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?

    ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?

    தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!
    • மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!

    மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் தி.மு.க. அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.ம.மு.க.வை சேர்ந்த 3 மாவட்ட செயலாளர்களும் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
    • தொண்டர்கள் விருப்பத்தை காது கொடுத்து கேட்க மறுத்துவிட்டார்.

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்தவர் மாணிக்கராஜா. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ஜமீன் பரம்பரையை சேர்ந்த இவர் தற்போது கயத்தாறு யூனியன் சேர்மனாக பதவி வகித்து வருகிறார்.

    டி.டி.வி. தினகரனின் 25 ஆண்டுகால நண்பரான மாணிக்கராஜா, தென் மாவட்டங்களில் அ.ம.மு.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதோடு, டி.டி.வி. தினகரனின் வலதுகரமாகவும் செயல்பட்டு வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தின கரன் போட்டியிட்டபோது மாணிக்கராஜா கடுமையாக உழைத்தார்.

    இந்நிலையில் அவர் இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருடன் அ.ம.மு.க.வை சேர்ந்த 3 மாவட்ட செயலாளர்களும் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அவர் எங்களது பேச்சை கேட்கவில்லை. அது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது நமக்கு ஆபத்து என பல முறை அவரிடம் எடுத்துக் கூறியும், அ.ம.மு.க. கட்சியை எதற்கு ஆரம்பித்தோம் என்பதை மறந்து இந்த முடிவை டி.டி.வி. தினகரன் எடுத்துள்ளார். தொண்டர்கள் விருப்பத்தை காது கொடுத்து கேட்க மறுத்துவிட்டார்.

    இதனால் எனக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிக்க விரும்பமில்லை. எனவே நல்லாட்சி நடத்தும் முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். இதுவும் தாய் கழகம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • S.V.S.P. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்
    • S.V.S.P.மாணிக்கராஜா உள்ளிட்ட அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.

    துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா தி.மு.க.வில் இணைந்தார்.

    மாணிக்கராஜா உள்ளிட்ட அ.ம.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்நிலையில் மாணிக்கராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    அ.ம.மு.க. எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதை மறந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தருகிறார் என்று கூறினார்.

    • தங்கம் விலை இன்று உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்து.
    • வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து 'ஜெட்' வேகத்தில் எகிறி வந்து, நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டிப்பிடித்து இருந்தது. தொடர்ந்து விலை ஏற்றம் கண்ட நிலையில், நேற்று விலை சற்று குறைந்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.215-ம், சவரனுக்கு ரூ.1,720-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது.

    கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்திருந்தது. நேற்று விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்து. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.360-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

    21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320

    20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

    19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600

    18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-1-2026- ஒரு கிராம் ரூ.340

    21-1-2026- ஒரு கிராம் ரூ.345

    20-1-2026- ஒரு கிராம் ரூ.340

    19-1-2026- ஒரு கிராம் ரூ.318

    18-1-2026- ஒரு கிராம் ரூ.310

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P. மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கட்சிக்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மத்திய மந்திரி பியூஸ் கோயல் மேற்கொண்டு வருகிறார்.
    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.

    தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள், பிரசாரங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியை மத்திய மந்திரி பியூஸ் கோயல் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த 21-ந் தேதி இரவே சென்னை வந்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

    அந்த வகையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று முன்தினம் பியூஸ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் இருந்தே அ.தி.மு.க. - பா.ஜ.க. பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது. அதைத்தொடர்ந்து பியூஸ் கோயல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர், புதிய நீதிக்கட்சித் நிறுவனர் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசியதோடு, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பும் விடுத்துள்ளார். அதன்படி, கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கேரள மாநில நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 1.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைகிறார்.

    அங்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவரை வரவேற்கிறார்கள். பின்னர், பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கைகளை உயர்த்தி தங்கள் ஒற்றுமையை பறைசாற்ற உள்ளனர்.

    பிற்பகல் 3.10 மணிக்கு பொதுக்கூட்ட மேடை ஏறும் பிரதமர் மோடி தனது உரையை முடித்துவிட்டு, மாலை 4.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக செங்கல்பட்டு மாவட்டமே 5 அடுக்கு பாதுகாப்புடன் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.
    • ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதே இப்போதைக்கு ஒரே தீர்வு.

    ஆண்டின் முதல் பேரவை கூட்டத்தை ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கர்நாடக சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்த செய்தியை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலில் தமிழ்நாடு, பின்னர் கேரளா, இப்போது கர்நாடகா என ஆளுநர்கள் வெளிநடப்பு தொடர்கிறது.

    மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க மறுக்கும் ஆளுநர்கள், கட்சி முகவர்கள் போல நடந்துகொண்டு, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.

    நான் முன்பு கூறியது போல், முதல் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதே இப்போதைக்கு ஒரே தீர்வு.

    இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் திமுக கலந்தாலோசித்து, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த வழக்கொழிந்த மற்றும் பொருத்தமற்ற நடைமுறையை ஒழிக்க அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
    • மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில்

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மீண்டும் 'பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அதில்,  

    "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

    தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.

    தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.

    நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம். " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதை குறிக்கும் வகையில் பதிவு.
    • ஏற்கனவே விஜயுடன் சந்திப்பு, ஆதரவுக் கருத்து என சர்ச்சை கிளப்பியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

    இந்நிலையில், தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படடு விட்டதை குறிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில்,"

    தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது.

    இப்போது அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஓட்டத்திற்கு தயாராி விட்டன" என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே விஜயுடன் சந்திப்பு, ஆதரவுக் கருத்து என சர்ச்சை கிளப்பியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று டெல்லியை நோக்கி முழக்கமிடச் செய்கிறது.
    • உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    தீ பரவட்டும், வீரவணக்கம்.. வெற்றி முழக்கம்..!- திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தீ பரவட்டும்!

    வீரவணக்கம்… வெற்றி முழக்கம்!

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மடல்.

    'செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை' என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, இந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திடப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது.

    அப்போது, 14 வயது பள்ளி மாணவனாக இருந்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், தன் கையில் தமிழ்க்கொடி ஏந்தி, 'ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே' என்று முரசு கொட்டி, தன் வயதையொத்த மாணவர்களுடன் தேரோடும் திருவாரூர் வீதிகளில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து ஊர்வலமாகச் சென்றார்.

    தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட எண்ணற்ற தமிழறிஞர்களும் ஊட்டிய அந்த உணர்வு இன்று வரை நம் உள்ளத்தில் தீயாகக் கனன்று கொண்டிருக்கிறது. அன்று பள்ளி மாணவராக முத்தமிழறிஞர் கலைஞர் உயர்த்திப் பிடித்த தமிழ்க்கொடியின் நோக்கம் என்னவோ, அதுதான் இன்று நம் கைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இருவண்ணக் கொடியாக உயர்ந்து நிற்கிறது. 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று டெல்லியை நோக்கி முழக்கமிடச் செய்கிறது.

    மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிக்காக உயிரையே மாய்த்துக் கொண்ட தீரமிக்க தொண்டர்களின் கோட்டம் இது. இப்போதும் அதிகார மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, இந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.

    தமிழ்மொழியின் மீது இந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து போட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம்.

    தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதிலிருந்து உதிர்ந்த இலை - தழை - சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டெல்லிக்கு ஓடி பா.ஜ.க.வின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன.

    ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் தி.மு.க.வினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம். துணிந்து நிற்போம். இனம் - மொழி - நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம்.

    பாசிசப் படையை எதிர்க்கும் சமூகநீதி - ஜனநாயகப் படையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. அதற்கான முரசு கொட்டும் நிகழ்ச்சியாக, ஜனவரி 20-ஆம் நாள் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளன.

    கழகத்தின் இளைஞர்களும் மகளிரும் இந்தத் தேர்தல் களத்தில் அணிவகுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளன. ஜனநாயகப் போர்க்களத்தின் முன்கள வீரர்களாக நியமிக்கப்பட்டள்ள பாக முகவர்கள், வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்கள் ஆகியோருக்கான பயிற்சிக் களமும் மண்டல வாரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல், அனைத்து இலக்குகளிலும் மாநிலத்தை முன்னேற்றி வருகிற திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தொகுதிகள் தோறும் முழங்குகின்ற பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

    2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறுகிற பல்வேறு நலத்திட்டங்களைக் கழக அரசு செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மகளிர் நலன் காக்கும் முன்னோடித் திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். இவற்றை மக்களிடம் வீடு வீடாகப் பரப்புரை செய்யும் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பிலான மகளிர் குழுவினரின் பயணம் ஒவ்வொரு பாகத்திலும் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெறவுள்ளது.

    'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' எனத் தொகுதிகள் தோறும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் பிப்ரவரி 28 வரை நடைபெறவுள்ளன. அத்துடன், ஜனவரி 26 அன்று டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் மாநாடு எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 7-ஆம் நாள் விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் கழக இளைஞர்கள் அணிவகுக்க ஆயத்தமாகிவிட்டனர். மகளிர் படையையும், இளைஞர் பட்டாளத்தையும் உற்சாகப்படுத்தி உத்வேகமளித்திடும் வகையில் உங்களில் ஒருவனான நான் அந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறேன்.

    வீடு வீடாகப் பரப்புரை, தொகுதிகள் தோறும் பொதுக்கூட்ட முழக்கங்கள், களத்தில் நிற்கும் கழகத்தினருக்குப் பயிற்சிக் கூட்டங்கள் என பிப்ரவரி மாதம் முழுவதும் தேர்தல் களத்திற்கான முன்னோட்டப் பயணத்தைக் கழகம் மேற்கொள்ளும் நிலையில், அதன் முத்தாய்ப்பாகத் தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 8 அன்று, பத்து இலட்சம் உடன்பிறப்புகள் கூடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. இப்படியொரு கொள்கைப் பட்டாளம் இந்தியாவில் எந்த இயக்கத்திலும் கிடையாது என்பதை உரக்கச் சொல்லிடும் வகையில், உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    ஜனநாயகப் போர்க்கள வீரர்களான உடன்பிறப்புகளுக்கு ஓய்வில்லை. உங்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உங்களில் ஒருவனான எனக்கு ஓய்வுமில்லை - உறக்கமுமில்லை.

    நம் உடன்பிறப்புகள் தேர்தலுக்கான கட்சி அரசியல் வேலைகளை மட்டும் செய்யவில்லை. ஒவ்வொரு குடிமக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையைப் பாதுகாக்கும் பணியையும் களத்தில் நின்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அடிக்கடி சொன்னதுபோல, நாம் எதிர்கொள்கின்ற 2026 தேர்தல் களம் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம். அந்தக் களத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் சமூகநீதி - மதநல்லிணக்கம் - மாநில உரிமைகளை இலட்சியமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது. தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதி செய்யும் களம்.

    போர்க்களம் காணும் படை வீரர்கள் தங்களின் நாட்டைக் காத்திட உறுதியேற்பது வழக்கம். ஜனநாயகக் களம் காணும் கழகத்தின் இலட்சிய வீரர்களான உடன்பிறப்புகள், ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன - மொழி எதிரிகளான பா.ஜ.க.வையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்.

    உங்களில் ஒருவனான நான், தமிழ்மொழி காத்திடும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளாம் தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.

    வீரவணக்கத்துடன் தொடங்கும் கழக உடன்பிறப்புகளின் அணிவகுப்பும் களப்பணியும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெறும் வரை ஓய்வின்றிச் செல்லட்டும். தொய்வின்றித் தொடரட்டும். மகத்தான வெற்றியுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும்! கழகத்தின் வெற்றி முழக்கம் எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×