என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? - மாணிக்கராஜா விளக்கம்
- அ.ம.மு.க.வை சேர்ந்த 3 மாவட்ட செயலாளர்களும் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
- தொண்டர்கள் விருப்பத்தை காது கொடுத்து கேட்க மறுத்துவிட்டார்.
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்தவர் மாணிக்கராஜா. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ஜமீன் பரம்பரையை சேர்ந்த இவர் தற்போது கயத்தாறு யூனியன் சேர்மனாக பதவி வகித்து வருகிறார்.
டி.டி.வி. தினகரனின் 25 ஆண்டுகால நண்பரான மாணிக்கராஜா, தென் மாவட்டங்களில் அ.ம.மு.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதோடு, டி.டி.வி. தினகரனின் வலதுகரமாகவும் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தின கரன் போட்டியிட்டபோது மாணிக்கராஜா கடுமையாக உழைத்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருடன் அ.ம.மு.க.வை சேர்ந்த 3 மாவட்ட செயலாளர்களும் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு தொண்டர்களும், நிர்வாகிகளும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அவர் எங்களது பேச்சை கேட்கவில்லை. அது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது நமக்கு ஆபத்து என பல முறை அவரிடம் எடுத்துக் கூறியும், அ.ம.மு.க. கட்சியை எதற்கு ஆரம்பித்தோம் என்பதை மறந்து இந்த முடிவை டி.டி.வி. தினகரன் எடுத்துள்ளார். தொண்டர்கள் விருப்பத்தை காது கொடுத்து கேட்க மறுத்துவிட்டார்.
இதனால் எனக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிக்க விரும்பமில்லை. எனவே நல்லாட்சி நடத்தும் முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். இதுவும் தாய் கழகம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.






