என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.
- சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் விளாசினார்.
சவுத்தம்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியால் 19.2 ஓவர்களில் 151 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்னும் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். மேலும் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அவர் சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன் (4,4,6,6,6,4) எடுத்து முத்திரை பதித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஹெட் இடம் பிடித்துள்ளார்.
அந்த பட்டியல் பின்வருமாறு:-
ரிக்கி பாண்டிங் 30 ரன்கள் (நியூசிலாந்து) 2005
ஆரோன் பிஞ்ச் / கிளென் மேக்ஸ்வெல் 30 (பாகிஸ்தான்) 2014
டான் கிறிஸ்டியன் 30 (வங்கதேசம்) 2021
மிட்செல் மார்ஷ் 30 (ஸ்காட்லாந்து) 2024
டிராவிஸ் ஹெட் 30 (இங்கிலாந்து) 2024
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கார்டிப் நகரில் நாளை நடக்கிறது.
- பாகிஸ்தானில் விளையாடிய அதே அணிதான் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளது.
- அந்த தொடரில் இடம் பெற்ற வீரர்களில் சொரிபுல் மட்டும் விலகி உள்ளார்.
சென்னை:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை வங்கதேசம் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விளையாடிய அதே அணிதான் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக சொரிபுல் இஸ்லாம் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான வங்கதேசம் அணி விவரம்:-
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் 19-ந் தேதி தொடங்குகிறது.
- 2-வது டெஸ்ட் போட்டிக்கு கான்பூரில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் அணி இந்தியா வரவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் 27-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் கான்பூரில் நடக்கும் போட்டியை நடத்த விடாமல் போராட்டம் நடத்த உள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதற்கு திட்டமிட்டப்படி போட்டி எந்தவித எதிர்ப்பும் இன்றி நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிசிசிஐ திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் முன்பு அறிவித்தபடி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும்.
- பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.
செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.
மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.
இந்நிலையில் செஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடக்க ஆட்டத்தில் மொராக்கோவை எதிர்கொண்டது. இதில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய பெண்கள் அணி முதல் ஆட்டத்தில் 3.5-0.5 என்ற கணக்கில் ஜமைக்காவை தோற்கடித்தது.
- பும்ராவின் தலைப்பு இவை அனைத்தையும் விட முக்கியமானது என்று கம்பீர் கூறினார்.
- இதில் ரோகித் சர்மா மற்றும் டோனியின் பெயர்கள் இடம் பெறவில்லை.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ஷிகர் தவான் ஒரு வேடிக்கையான உரையாடலில் கலந்து கொண்டார்.
அதில் 'பாலிவுட் திரைப்பட தலைப்புகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பொருத்தமானவர் யார் என கூற வேண்டும்.
அந்த வகையில் கோலிக்காக, கம்பீர் "ஷாஹென்ஷா" (பேரரசர்) என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தார். யுவராஜ் சிங்கை "பாட்ஷா" என்று அழைத்தார் மற்றும் நகைச்சுவையாக தன்னை "கோபமான இளைஞன்" என்று குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கர் "தபாங்" என்று அழைக்கப்பட்டார். அதே நேரத்தில் பும்ரா "கிலாடி" என்ற பட்டத்தை பெற்றார். பும்ராவின் தலைப்பு "இவை அனைத்தையும் விட முக்கியமானது" என்று வலியுறுத்தினார்.
துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்காக ராகுல் டிராவிட்டை "மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்" என்று பெயரிட்டார். டைகர் சவுரவ் கங்குலி, கப்பார் ஷிகர் தவானை தேர்வு செய்தார்.
ஆச்சரியம் என்னவென்றால், இந்த பிரிவின் போது ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனியின் பெயர்கள் காணாமல் போனது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்த பட்டியலில் ஷிகர் தவானிடமும் கேட்கப்பட்டது. அதற்கு தவான் அளித்த பதில் பின்வருமாறு:-
பாட்ஷா: கிங் கோலி
கோபமான இளைஞன்: சிராஜ்
தபாங்: ஹர்திக் பாண்ட்யா
ஷாஹென்ஷா: பும்ரா
கிலாடி: சுப்மன் கில்
மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் (Mr. Perfectionist): சச்சின் டெண்டுல்கர்
கப்பர்: சூர்யகுமார் யாதவ்
என தவான் கூறினார்.
- ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 9-ந் தேதி தொடங்க இருந்தது.
- நொய்டாவில் பெய்து வரும் மழை காரணமாக போட்டி தொடங்க முடியாமல் உள்ளது.
நொய்டா:
நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் 9-ந் தேதி தொடங்க இருந்தது. முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது.
2-வது நாள் ஆட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்றைய 3-வது நாளில் மழை பெய்ததால் 3-வது நாள் ஆட்டமும் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை காரணமாக 4-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
- இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம்.
சவுத்தம்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நவ. 22-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த டேவிட் வார்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். அவரது ஓய்வுக்கு பிறகு ஸ்டீவன் சுமித் அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.
ஆனால் சுமித்தால் ஒரு தொடக்க ஆட்டக்காரராக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் நடுவரிசைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், 'ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் தீர்க்கமான எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து நாங்கள் சிட்னியில் ஆலோசித்தோம். அதில் எங்களது பந்துவீச்சின் ஆழம் குறித்து பேசி இருந்தோம்.
சுமித்தை பின்வரிசைக்கு மாற்றினால், மற்ற வீரர்களில் யாராவது ஒருவர் மேல் வரிசையில் விளையாட வைக்க வேண்டும். அதேநேரத்தில் சுமித் விளையாடி வந்த பேட்டிங்கில் 4-வது வரிசையில் தற்போது கேமரூன் கிரீன் நன்றாக ஆடுகிறார். எனவே இந்த விஷயத்தில் இப்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
நாங்கள் எங்களது டாப்-6 முன்னணி பேட்ஸ்மேன்கள் (சுமித், கவாஜா, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன்) மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் நியூசிலாந்தை தொடரை சிறப்பாக முடித்தார்கள். அதனால் அவர்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்றார்.
- இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
- நாளை முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
சென்னை:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகிறார்கள். அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் பட்டேல் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வீரர்கள் தனித்தனியாக இன்று இரவுக்குள் சென்னை வந்தடைவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி டாக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.
- அர்ஜென்டினா 18 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது.
- கொலம்பியா 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா) 2-வது இடத்தில் உள்ளது.
பரான்கியா:
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.
தற்போது தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 18 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். 7-வது இடத்தை பெறும் அணி பிளே-ஆப் சுற்றில் மோதும். எஞ்சிய 3 அணிகள் வெளியேறும்.
இந்த நிலையில் பரான்கியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் கொலம்பியா, 'நம்பர் ஒன்' அணியும், உலக சாம்பியனுமான அர்ஜென்டினாவை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களம் புகுந்த கொலம்பியா 25-வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் யர்சென் மோஸ்கியரா தலையால் முட்டி கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நிகோ கோன்சலேஸ் பதில் கோல் திருப்பினார்.
60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கொலம்பியா கேப்டன் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கோலாக்கினார். முடிவில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இதன் மூலம் இரு மாதத்துக்கு முன்பு கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி காயம் காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. பராகுவே அணியில் வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் டியாகோ கோம்ஸ் அடித்தார். தொடர்ந்து தடுமாறி வரும் பிரேசில் அணி முதல் பாதியில் இலக்கை நோக்கி துல்லியமாக ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. பிற்பாதியில் வினிசியஸ் அடித்த சில ஷாட்டுகள் தடுக்கப்பட்டு விட்டது. கடந்த 5 ஆட்டங்களில் பிரேசிலுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும். அத்துடன் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பராகுவேயிடம் பிரேசில் தோற்பது இதுவே முதல் முறையாகும். அடுத்த ஆட்டத்தில் சிலியை சந்திக்கிறது.
இதே போல் பொலிவியா 2-1 என்ற கோல் கணக்கில் சிலியையும், ஈகுவடார் 1-0 என்ற கோல் கணக்கில் பெருவையும் தோற்கடித்தது. வெனிசுலா- உருகுவே இடையிலான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
இந்த பிரிவில் ஒவ்வொரு அணியும் இதுவரை தலா 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அர்ஜென்டினா 18 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது. கொலம்பியா 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா) 2-வது இடத்திலும், உருகுவே (15 புள்ளி) 3-வது இடத்திலும், ஈகுவடார் (11 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளன. பிரேசில் 10 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வி) 5-வது இடத்தில் இருக்கிறது.
- இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது.
- முதல் ரவுண்டில் குகேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
புடாபெஸ்ட்:
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்றுள்ளன. மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை சேர்க்கும் அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும்.
போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இந்திய ஆண்கள் அணி முதல் ரவுண்டில் மொராக்கோவை எதிர்கொண்டது. இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். அவர் 30-வது காய் நகர்த்தலில் மொராக் கோவின் டிசிர் முகமதுவை தோற்கடித்தார். அர்ஜூன் எரிகாசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். முதல் ரவுண்டில் குகேசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
பெண்கள் பிரிவில் இந்தியா முதல் சுற்றில் ஜமைக்காவை சந்தித்தது. இதில் இந்தியாவின் வைஷாலி, ஜமைக்காவின் கிளார்க் அடானியையும், தானியா சச்தேவ், வாட்சன் கேப்ரியாலையும் சாய்த்தனர்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 179 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சவுத்தாம்ப்டன்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன் எடுத்தார்.
மேத்யூ ஷாட் 41 ரன்னில் ஆட்டமிழ்ந்தார். ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். லிவிங்ஸ்டோன் மட்டும் 37 ரன்கள் எடுத்தார். பிலிப் சால்ட் 20 ரன் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் சீன் அபாட் 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- சக நாட்டு கிருஷ்ணபிரியா கூடாரவல்லி, தருண் கோனா ஜோடியை 21-9, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், ஜப்பான் வீராங்கனையிடமும், தன்யா ஹேமந்த் இந்தோனேசியா வீராங்கனையிடமும் தோல்வி அடைந்தனர்.






