என் மலர்
விளையாட்டு
- கோரிக்கையை பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களாக டாஸ் கூட போடப்படாமல் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கனமழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலைமை மாறி, தற்போது மழையால் மைதானத்தில் தேங்கிய நீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை.
கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், போட்டி நடைபெற இருந்த முதல் மூன்று நாட்களாக மைதானத்தில் மழைநீர் தேங்கி இருப்பது, ஈரப்பதம் காயாமல் இருப்பது போன்ற காரணங்களால் போட்டி துவங்கப்படவே இல்லை.

மைதானத்தில் போதுமான வசதி இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இங்கு வரவே கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை லக்னோ அல்லது டேராடூனில் நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை பிசிசிஐ மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிசிசிஐ சார்பில் பெங்களூரு மற்றும் கான்பூர் போன்ற மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.
"எங்களது முதல் தேர்வு லக்னோ மைதானம் தான். அது கிடைக்காத பட்சத்தில் டேராடூனில் விளையாட நினைத்திருந்தோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை பிசிசிஐ நிராகரித்து விட்டது. இரு இடங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் நொய்டா மைதானம் மட்டும் தான்," என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களை விட மிகப்பெரியது.
- கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.
உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சக்திவாய்ந்த அணியாகவும் இந்தியா விளங்குகிறது.
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசி தொடர்களில் இருந்து அதிகளவு வருவாய் ஈட்டப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஐசிசி அறிக்கையின் படி 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இருந்து பிசிசிஐ-க்கு ரூ. 11 ஆயிரத்து 637 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையின்படி, இதுவரை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களை விட கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகப்பெரியது என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரின் போட்டிகள் ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரமசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் பூனே என நாட்டின் பத்து நகரங்களில் நடைபெற்றன.
- டோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' என சிஎஸ்கே அணி பதிவிட்டுள்ளது.
- இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.
அதே சமயம், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், டோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' எனப் பதிவிட்டுள்ளனர்.
இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் டோனி ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும் மறு தரப்பினர் சிஎஸ்கே ஜெர்ஸி மாறப்போகிறது அதனால் தான் இப்படி பதிவிட்டுள்ளார்கள் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை இதுகுறித்து எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் வரவுள்ளார் என்று கூறப்படும் நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் டோனியின் ஓய்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்றே கூறப்படுகிறது.
- விராட் கோலியை நான் பெரிதும் மதிக்கிறேன்.
- ஒரு பந்துவீச்சாளராக இருக்கும் போது விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக பார்க்கப்படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையை பெற்று வருகின்றனர்.
அதேபோன்று தற்போது இருவருமே 35 வயதை கடந்த நிலையில் இன்றளவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புவதாக கூறி தற்போது இந்திய அணியில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலியை விட ரோகித் சர்மாவின் பேட்டிங் டைமிங் சிறந்ததாக இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலியை நான் பெரிதும் மதிக்கிறேன். ஏனென்றால் அவர் மிகப்பெரிய பேட்ஸ்மேன். ஆனால் ஒரு பந்துவீச்சாளராக இருக்கும் போது விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார். ஏனெனில் உலகில் எந்த ஒரு பேட்ஸ்மேனை விட ரோகித் சர்மாவிடம் நல்ல டெக்னிக் இருக்கிறது. விராட் கோலி தன்னுடைய உடற்தகுதியை வைத்து ரன்களை குவிக்கிறார்.
அதாவது ஒரு ரன் எடுத்தால் மீண்டும் மற்றொரு ரன் ஓட அவர் எப்பொழுதுமே தயாராக இருப்பார். ஆனால் ரோகித் அப்படி கிடையாது ஒரு ரன் அடித்து விட்டால் அதற்கு அடுத்து பந்துவீச்சாளரை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவிப்பார். என்னை பொறுத்தவரை விராட் கோலியை விட டைமிங் செய்வதில் ரோகித் சர்மா சிறந்தவர்.
என சோஹைல் கான் கூறினார்.
- 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
- இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும்.
புடாபெஸ்ட்
செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் தமிழக அரசு சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றன.
மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.
'ஸ்விஸ்' முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.
கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்திய அணியில் டி.ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீராங்கனையாக தானியா சச்தேவ் இருக்கிறார்.
ஆண்கள் பிரிவில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, ஹரிகிருஷ்ணா ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். போட்டித்தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் இவர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.
உலகின் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் தனிப்பட்ட முறையில் எல்லா பட்டங்களையும் வென்று விட்டார். ஆனால் அணியாக செஸ் ஒலிம்பியாட் எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த ஏக்கத்தை தணிக்க இந்த முறை அவர் கடுமையாக முயற்சிப்பார்.
- தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது.
- வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று மொத்தம் 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்தது. பாராஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இது தான்.
ஒலிம்பிக்கை முடித்துக் கொண்டு நேற்று தாயகம் திரும்பிய எஞ்சிய இந்திய அணியினருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வழங்கினார்.
தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.50 லட்சம், வெண்கலம் பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் வீதம் வழங்கி பாராட்டினார்.
அவர்கள் மத்தியில் மந்திரி மன்சுக் மாண்டவியா பேசுகையில், 'பாராஒலிம்பிக்கிலும், பாரா விளையாட்டிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. 2016-ம் ஆண்டு பாராஒலிம்பிக்கில் 4 பதக்கம் கைப்பற்றிய இந்தியா 2021-ம் ஆண்டில் 19 பதக்கமும், இப்போது 29 பதக்கமும் வென்று இருக்கிறது. எங்களது பாரா வீரர், வீராங்கனைகளுக்கு எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் நாங்கள் தொடர்ந்து செய்து கொடுப்போம். 2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் பாரா ஒலிம்பிக்கில் நிச்சயம் இதை விட அதிக பதக்கங்கள் வெல்ல முடியும்.
நீங்கள் தேசத்துக்காக வெற்றியை கொண்டு வந்துள்ளீர்கள். சவாலான உங்களது வாழ்க்கையில் சவால்களை வெற்றிகரமாக கடந்திருப்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். விளையாடுவதை நீங்கள் இப்போது நிறுத்தி விடக்கூடாது. நாம் 2028-ம்ஆண்டு பாராஒலிம்பிக் மற்றும் அதன் பிறகு நடக்கும் 2032-ம்ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பணியை இப்போதே தொடங்க வேண்டும். அப்போது தான் நிறைய பதக்கங்களை வெல்ல முடியும். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பு கிட்டும் போது, நமது மிகச்சிறந்த செயல்பாடு வெளிப்பட வேண்டும் என்பதே இலக்கு' என்றார்.
- லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
- அரை இறுதி 16-ந் தேதியும், இறுதிப் போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.
ஹுலுன்புயர்:
8-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன் பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி 16-ந் தேதியும், இறுதிப் போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் வீழ்த்தியது.இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இன்று மலேசியா வுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்திலும் வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா முதல் ஆட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. அந்த அணி இந்தியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான்-ஜப்பான், கொரியா-சீனா அணிகள் மோதுகின்றன.
- 2-வது நாளில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
- மைதானத்தில் தேங்கும் தண்ணீரை துரிதமாக அகற்றுவதற்கு நவீன வசதி வாய்ப்புகள் இங்கு இல்லை.
நொய்டா:
நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் நேற்றுமுன்தினம் தொடங்க இருந்தது. முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. 2-வது நாளான நேற்றைய தினம் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மைதானத்தில் தேங்கும் தண்ணீரை துரிதமாக அகற்றுவதற்கு நவீன வசதி வாய்ப்புகள் இங்கு இல்லை. இதனால் மைதானத்தை சீக்கிரமாக காய வைக்க முடியவில்லை. அங்காங்கே காணப்பட்ட ஈரப்பதத்தை மின்விசிறியால் உலர்த்த ஊழியர்கள் முயற்சித்தனர். சில இடங்களில் புற்களை பெயர்த்து எடுத்து, அதற்கு பதிலாக பயிற்சி பகுதியில் இருந்து புற்களை கொண்டு வந்து வைத்தனர். ஆனாலும் மோசமான அவுட்பீல்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்ய முடியவில்லை.
இன்றைய 3-வது நாள் போட்டியாவது நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் மழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
- தொடர்ந்து 3-வது முறையாக சாகர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அவரது தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி 9-வது சீசனில் முதல்முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
சென்னை:
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் ரதீ செயல்படுவார் என்று அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து 3-வது முறையாக அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது தலைமையில் தமிழ் தலைவாஸ் அணி 9-வது சீசனில் முதல்முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் கடந்த முறை 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
சாகர் ரதீ கூறுகையில், 'தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்த ஆண்டுக்கான அணியில் சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மிகச்சிறந்த நிலையை எட்டுவதே எங்களது இலக்கு. ஒவ்வொரு புள்ளி மற்றும் தடுப்பாட்டத்துக்காக நாங்கள் கடினமாக உழைப்போம்' என்றார்.
அணியின் தலைமை பயிற்சியாளராக உதயகுமாரும், வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதனும் செயல்பட உள்ளனர்.
- விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் அப்படியே ஆஸ்திரேலியர்களை போன்று இருக்கிறது.
- சவால்களை எதிர்கொண்டு எதிரணியை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பது என அனைத்தும் ஆஸ்திரேலிய வீரர்களை நினைவூட்டுகிறது.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் நவ.22-ந் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் அளித்த ஒரு பேட்டியில், 'விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் அப்படியே ஆஸ்திரேலியர்களை போன்று இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவர் போட்டிக்கு தயாராகும் விதம், சவால்களை எதிர்கொண்டு எதிரணியை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்பது என அனைத்தும் ஆஸ்திரேலிய வீரர்களை நினைவூட்டுகிறது. அவர் இந்திய அணியில் இருக்கும் ஆஸ்திரேலியர் என்று நினைக்கிறேன்.
இந்த தொடரில் நான் விராட் கோலிக்கு எதிராக வரிந்துகட்டுவதில் கவனம் செலுத்தப் போவதில்லை. களம் இறங்கி முடிந்த வரை அதிக ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். நானும் விராட் கோலியும் அவ்வப்போது குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்வோம். கோலி ஒரு நல்ல மனிதர் மற்றும் அற்புதமான வீரர். அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பாக இருக்கும்' என்றார்.
- இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
- ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னைக்கு நாளை வருகை தர உள்ளனர்.
அனந்தபுர்:
இந்திய முன்னணி வீரர்கள் 4 அணியாக பிரிக்கப்பட்டு சிவப்பு நிற பந்தில் நடக்கும் முதல்தர கிரிக்கெட்டான துலீப் கோப்பை போட்டியில் விளையாடுகிறார்கள். இதன் 2-வது கட்ட ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபுரில் நாளை தொடங்குகிறது. முதலாவது லீக்கில் ஆடிய ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோர் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால், துலீப் கோப்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னைக்கு நாளை வருகை தர உள்ளனர்.
சுப்மன் கில் இந்திய ஏ அணியின் கேப்டனாக இருந்தார். அவர் தேசிய அணிக்கு திரும்புவதால் மயங்க் அகர்வால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கில், ராகுல், ஜூரெல், குல்தீப், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக இந்திய ஏ அணிக்கு பிரதாம் சிங், அக்ஷய் வாட்கர், ஷாய்க் ரஷீத், ஷம்ஸ் முலானி, அகிப் கான் தேர்வாகியுள்ளனர்.
அதே சமயம் 16 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் இருவர் மட்டும் துலீப் கோப்பை அணியிலும் தொடர்ந்து நீடிக்கிறார்கள். அதாவது அவர்கள் 2-வது சுற்றில் ஆட உள்ளனர். இதன் மூலம் அவர்கள் இருவரும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் களம் காணும் இந்திய அணியில் இடம் பெறமாட்டார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
இந்திய 'பி' அணியில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் இடத்துக்கு சுயாஷ் பிரபுதேசாய், 'அதிரடி மன்னன்' ரிங்கு சிங் அழைக்கப்பட்டுள்ளனர். டி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக நிஷாந்த் சிந்துவும், ஏற்கனவே காயத்தால் விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக வித்வாத் கவிரப்பாவும் சேர்க்கப்பட்டு உள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய 'சி' அணியில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.
- 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
- நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை.
நேற்று நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம், ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் 2-ம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த மைதானத்தில் பெண்களுக்கு கழிவறை கூட இல்லை என போட்டியை காணச் சென்றவர்களும் புகார் கூறியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






