என் மலர்
விளையாட்டு
- இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 84 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- மாரியப்பன் நாடு திரும்பினார்.
சென்னை:
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது. இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 84 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று 18-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (டி.63 பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் மாரியப்பன் இன்று நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் (2016-ம் ஆண்டு) தங்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளியும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்னால்டு, சல்வெஸ்டர் ஸ்டாலோனால் ஈர்க்கப்பட்டு பாடிபில்டராக மாறியுள்ளார்.
- ஒருநாளைக்கு ஏழு முறை சாப்பிடுவார், அதில் இரண்டரை கிலோ இறைச்சி அடங்கும் என கூறப்படுகிறது.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக். 36 வயதான இவர் சிறந்த பாடிபில்டர் ஆவார். தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்டார்.
ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார். ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கோமா நிலைக்கு செல்லப்பட்டார். நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது.
இது தொடர்பாக அவரது மனைவி அன்னா கூறுகையில் "அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், மார்பில் கையை வைத்து நன்றாக அழுத்தி முதலுவதி செய்தேன், ஆம்புலன்ஸ் வரும்வரை அவ்வாறு செய்தேன். இலியா உடல்நலம் பெற வேண்டும் என எல்லா நேரத்திலும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அவருடன் எல்லா நாட்களும் செலவழித்தேன். இரண்டு நாட்களுக்கு அவருடைய இதயம் மீண்டும் துடிக்க தொடங்கியது. ஆனால், அவருடைய மூளை செயலிழந்ததாக டாக்டர்கள் பயங்கரமான செய்தியை என்னிடம் தெரிவித்தனர்" என்றார்.

மேலும், "இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பலர் எனக்கு உதவியும் ஆதரவையும் வழங்க தயாராக உள்ளனர் என்று கூறியது, நான் இந்த உலகத்தில் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது" என்றார்.
ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர் தினந்தோறும் 16,500 கலோரிகள் என்ற அளவிற்கு ஒருநாளைக்கு ஏழு முறை சாப்பிடுவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 2.5 கிலோ இறைச்சி மற்றும் 108 சுஷி (ஜப்பான் உணவு வகை) சாப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
6 அடி ஒரு இன்ச் உயர்ம் கொண்ட இவர் 154 கொடை கொண்டவராக இருந்தார். இவரது மார்பளவு 61 இன்ச் ஆகும்.
இவர் பள்ளிக்கூடம் படிக்கும்போது 70 கிலோ எடை இருந்தாகவும், புஷ்-அப் அவரால் எடுக்க முடியாது எனவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. பின்னர் அர்னால்டு, சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு பாடிபில்டராக ஆவதற்கு கடுயைமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
- வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம்.
- கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது.
வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அதன் மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி வரலாறு படைத்தது.
இந்த நிலையில் வங்காள தேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது சவாலானது. பாகிஸ்தானில் வங்காள தேசம் நன்றாக விளையாடியது. ஆனால் வங்காள தேசத்தை வீழ்த்து வதற்கு இந்தியாவுக்கு அதிக சிரமம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
இந்த தொடருக்கு வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யலாம். இது வங்காளதேசத்துக்கு எதிராக உதவும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்கு உதவும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்.
கே.எல். ராகுல் ஒரு சிறந்த கீப்பர். அவர் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரை இனி பகுதி நேர விக்கெட் கீப்பர் என்று அழைப்பது நியாயம் என்று நான் நினைக்கவில்லை. இந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா- நியூசிலாந்து இடையிலான போட்டி ஐந்து நாட்களும் விளையாடாமல் கைவிடப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து போட்டி இதேபோன்று நான்கு முறை விளையாடாமல் கைவிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்திய மைதானங்களை அவர்களுடைய சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடத்த இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் முடிவு செய்தன.
அதன்படி இந்தியாவின் டெல்லி அருகில் உள்ள கிரேட் நொய்டாவில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 9-ந்தேதி போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக கிரேட் நொய்டா மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
மழை நீர் வெளியேறுவதற்கு வழியில்லாததால் முதல் நாள், இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. எப்படியாவது போட்டியை நடத்திவிட வேண்டும் என்ற முனைவில் மின் விசிறி கொண்டெல்லாம் ஆடுகளத்தை சூடுபடுத்தினர்.
இருந்தபோதிலும் ஆடுகளம் மற்றும் அவுட் பீல்டு மோசமாக இருந்ததாலும், தொடரந்து மழை பெய்ததாலும் 3-வது மற்றும் நாளாவது ஆட்டங்கள் ரத்து செய்ப்பட்ட நிலையில், இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐந்து நாட்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.
போர் போன்ற அசாதாரண சூழ்நிலை அல்லது பெருந்தொற்று போன்ற இக்கட்டான நிலையில்தான் ஐந்து நாட்கள் ஆட்டமும் கைவிடப்படும் நிலை ஏற்படும். ஆனால் மழையால் ஒரு டெஸ்ட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.
மேலும். இதுபோன்று ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படும் 8-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டிகள் விவரம்:-
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மான்செஸ்டரில் 1890-ல் கைவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மான்செஸ்டரில் 1938-ல் கைவிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து போட்டி மெல்போர்னில் 1970-ல் கைவிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்து- பாகிஸ்தான் இடையிலான போட்டி டுனெடினில் 1989-ல் கைவிடப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து இடையிலான போட்டி கயானாவில் 1990-ல் கைவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான போட்டி பைசாலாபாத்தில் 1998-ல் கைவிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்து- இந்தியா இடையிலான போட்டி டுனெடினில் 1998-ல் கைவிடப்பட்டுள்ளது.
- டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது.
- அவர் உடல் பருமன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் மொயின் கான். இவருடைய மகன் அசாம் கான். இவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அதிரடி வீரர். ஆனால் உடற்தகுதி என்று எடுத்துக் கொண்டால், குண்டாக காணப்படுவார். இந்த உடலை வைத்துக் கொண்டு எப்படி கீப்பிங் செய்வார் என்று ரசிகர்கள் ஏளனம் செய்வார்கள். அதற்கு ஏற்றபடி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின்போது விக்கெட் கீப்பராக சோபிக்கவில்லை. பேட்டிங்கில் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய மகன் அசாம் கானை மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர் ரமீஸ் ராஜா. மற்றும் அணியில் இருந்து நீக்கியவர் என மொயின் கான் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மொயின் கான் கூறியதாவது:-
2022 (2021) உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணிக்கு அசாம் கான் தேர்வு பெற்றார். ஆனால் ரமீஸ் ராஜா அவரை நீக்கினார். அந்த நேரத்தில் தலைமை தேர்வாளர் தவறு செய்திருந்தால், அவர் நீக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு தைரியம் இல்லை. இதன்முடிவு அவர்கள் ஒரு இளம் வீரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். அதேபோல் இந்த உலகக் கோப்பையிலும் அவர் எப்படி விளையாடினார் என்பதை பார்த்து இருப்பீர்கள்.
நான் இந்த உலகக் கோப்பை போட்டிகள், அதற்கு முன் நடைபெற்ற பயிற்சி போட்டிகள் அனைத்து போட்டிகளையும் பார்த்தேன். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அசாம் நம்பர் ஒன் தேர்வாக இருப்பது போல் தோன்றியது. ஒரு போட்டிக்குப்பின் திடீரென ஒட்டுமொத்த வியூகமும் மாற்றப்பட்டது. ஒரேயொரு பந்தை சந்தித்து ஆட்டமிழந்த பின், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் மீது மட்டும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் சொல்லமாட்டேன். அசாம் கான் மீதும் தவறு உள்ளது. அவர் தனுக்குத்தானே உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை பெற வேண்டியது அவசியம். மற்ற வீரர்களை போன்று உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது அவர் தனது பிட்னஸில் முன்னேற்றம் கண்டு வருவதை நான் உணர்கிறேன்.
- 2018-ம் ஆண்டிற்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
- தற்போது ரெட் பாலில் பயிற்சி பெற்று வருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பையை வென்றது. இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. அவர் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமி்க்கப்பட்டுள்ளார்.
ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இந்த நிலையில் அவர் ரெட் பந்தில் இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அப்படி திரும்பினாலும் அதிர்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை. ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் தொடரில் கூட விளையாடலாம்.
டெஸ்ட் அணிக்கு அவர் தயாரானால் ரோகித் சர்மா மற்றும் கம்பீருக்கு அதைவிட சிறந்தது ஏதும் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
ஹர்திக் பாண்ட்யா டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இன்னும் விளையாடாமல் உள்ளார். அவர் துலீக் டிராபியிலும் இடம் பெறவில்லை.
30 வயதாகும் ஹர்திக் பாண்ட்யா 2016-ம் ஆண்டு ஒருநாள் மற்றம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2017-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கிய டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 532 ரன்கள் அடித்துள்ளார். 17 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
- இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.
ஹுலுன்புயர்:
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதவேண்டும்.
லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், 3வது ஆட்டத்தில் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நேற்று கொரியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன், அரையிறுதிக்கும் முன்னேறியது இந்திய அணி.
- முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 19-ம் தேதி தொடங்குகிறது.
- சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் 58 ரன்கள் அடித்தால் விராட் கோலி புதிய உலக சாதனை படைப்பார்.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26,942 ரன்கள் குவித்துள்ளார். இந்தத் தொடரில் கோலி 58 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைப்பார்.
இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
- பிரதமரிடம் கையெழுத்து பெற்ற வீரர்கள் அவருக்கு பரிசுகளும் வழங்கினர்.
புதுடெல்லி:
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பாரீசில் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,400-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடம் பிடித்தது.
இதையடுத்து, பதக்கம் வென்ற இந்திய அணியினருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா அதிக அளவு பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்கமாக இருந்தது. அந்த எண்ணிக்கையை இந்த முறை முந்திய இந்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

இதற்கிடையே, பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்கு பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினர் சென்றனர். அவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமரிடம் கையெழுத்து பெற்ற வீரர்கள் அவருக்கு பரிசுகளும் வழங்கினர்.
- இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
- நாளை முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
சென்னை:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்ஷர் பட்டேல் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பும்ரா, கே.எல்.ராகுல் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் இன்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர்கள் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
வங்கதேச அணியினர் வரும் 15-ம் தேதி டாக்காவில் இருந்து சென்னை வருகிறார்கள்.
- ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி ஏமாற்றம் அளித்தது.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- மலேசியா ஜோடியுடன்மோதியது.
இதில் இந்திய ஜோடி 11-21, 20-22 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் கோபிசந்த்-ஜாலி ஜோடி தோல்வி அடைந்தது.
- ஜடேஜாவிபதிவில் ரசிகர்கள் தளபதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவில், "ஹலோ மை சென்னை ஃபேமிலி எல்லாரும் எப்படி இருக்கீங்க" என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் ரசிகர்கள் தளபதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.






