என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்
    • இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் வினேஷ் போகத் குற்றம் சாட்டினார்

    பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் மல்யுத்தத்தில் [50 கிலோ எடைப்பிரிவில்] இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்று பெருமையைப் பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக உள்ளதாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே மல்யுத்தத்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்து அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் மறுக்கத்தை மறுத்த நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்று அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

    செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் வினேஷிடம் மேல்யுமறையீடு செய்யலாம் என்று கூறியதாகவும், அதற்கு இந்த விவகாரத்தை மேற்கொண்டு அவர் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் சங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மெத்தனமாகச் செய்யப்பட்டதாகவும் வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.
    • ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும்

    செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான செஸ் ஒலிம்பியாட் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த செப்டம்பர் 10 தொடங்கி வரும் 23-ந்தேதி வரை நடக்கிறது. ஓபன் பிரிவில் 197 அணிகளும் 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும் 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் நார்வே நாட்டை சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] கொலம்பிய நாடு வீரரை எதிர் கொள்ள இருந்தார். இந்த வருட ஒலிம்பியாடில் கார்ல்சனின் முதல் போட்டியான இதில் கலந்து கொள்ளாமலேயே அவர் தோற்கும் நிலைக்கு சென்ற சம்பவம் பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது. அதாவது, நேற்றய போட்டிக்கு கார்ல்சன் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அதிக டிராபிக் இருந்ததால் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து போட்டி நடக்கும் இடத்துக்கு வர தாமதம் ஆகும் என்பதால் சைக்கிளில் வர கார்ல்சன் முடிவெடுத்துள்ளார். போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் போட்டி வளாகத்துக்கு உள்ளே வரை வந்து சேர்ந்த கார்ல்சன் அங்கிருந்து ஆட்டக் களத்துக்கு செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.

    இதனால் எல்லாம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அங்கு படம் பிடித்துக்கொண்டிருந்த மரியா எமிலியானோவா என்ற புகைப்பட கலைஞர் கார்ல்சனுக்கு அந்த வளாகத்தில் இருந்து ஆட்டம் நடக்கும் களத்துக்கு செல்வதற்கான குறுக்கு வழியை காண்பித்து வழிகாட்டியுள்ளார்.

    இதனால் களத்துக்கு  10 நிமிடம் மட்டுமே தாமதமாக களத்துக்கு சென்று சேர்ந்த கார்ல்சன் தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார். ஆட்ட விதிகளின் படி போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும். இதற்கிடையே இந்த போட்டியில் கார்ல்சன் 40 நகர்வுகளுடன் கொலம்பிய வீரரை தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
    • வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய வாள்வீச்சு சம்மேளனம் சார்பில் முதலாவது எப்.ஐ.இ. பாயில் பிரிவு பெண்களுக்கான சர்வதேச சேட்லைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்தப்போட்டி இன்றும், நாளையும் 2 நாட்கள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

    பெண்களுக்கான பாயில் பிரிவு வாள்வீச்சு போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 58 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த சர்வதேச போட்டி இந்தியாவில் வாள்வீச்சு போட்டியின் முன்னேற்றத்திற்கு முக்கிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

    சர்வதேச சேட்லைட் பாயில் பிரிவு வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் பெயர் விவரம்:-

    விபுஷா, ஜாய்ஸ் அஷிதா, சுவர்ணபிரபா, திவ்ய தர்ஷினி (4 பேரும் சென்னை) ஜெனிஷா (கன்னியாகுமரி), கனக லட்சுமி (சேலம்).

    இந்திய அணிக்கு 6 தமிழக வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், கன்வீனர் வி.கருணா மூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடினாலும் கூட, அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்.
    • சில பெரிய வீரர்கள் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும்போது நீங்கள் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சுமார் ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. வருகிற 19-ந்தேதி இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் ஜூரெல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    வங்கதேச அணிக்கெதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல் இடம் பிடித்துள்ளார். இவர் சர்பராஸ் கானுக்கு பதிலாக களம் இறக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறுகையில் "உண்மையிலேயே, சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடினாலும் கூட, அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். சில பெரிய வீரர்கள் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பும்போது நீங்கள் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.

    ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியதால் ஜூரெல் அணியில் இருந்து வெளியேறுவதை பார்க்க முடியும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களை நீங்கள் மனதில் வைத்து பார்க்கும், கே.எல். ராகுல் அங்கே இருப்பார். ஆஸ்திரேலியாவில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடியுள்ளார்" என்றார்.

    சர்பராஸ் கான் இந்திய அணிக்காக ஐந்து இன்னிங்சில் போட்டிங் செய்து 200 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 50 ஆகும். ஸ்டிரைக் ரேட் 79.36 வைத்துள்ளார்.

    • நான் விராட் கோலியை ஒன்று அல்லது இரண்டு முறை வீழ்த்தியிருப்பேன்.
    • அவரும் என்னுடைய பந்தில் ரன்கள் அடித்திருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின்போது ஸ்லெட்ஜிங்கிற்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய வீரர்கள், தங்கள் நாட்டிற்கு விளையாட வரும் வீரர்களுடன் கடுமையான வகையில் வார்த்தைப்போரில் ஈடுபடுவது உண்டு.

    இந்திய அணி அவர்களுக்கு ஈடுகொடுத்து பதிலடி கொடுப்பார்கள். இதனால் இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். விராட் கோலி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் களத்தில் நேருக்கு நேர் மோதும்போது அனல் பறக்கும்.

    இந்த நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி உடனான சண்டையை ரசிப்பேன் என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டார்க் கூறுகையில் "விராட் கோலியுடனான சண்டையை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் எதிராக ஏராளமான கிரிக்கெட்டுகள் விளையாடியுள்ளோம். நான் எப்போதும் நல்ல வார்த்தைப்போர் ஈடுபடுவது உண்டு. நான் உண்மையிலேயே அவரை ஒன்று அல்லது இருமுறை வீழ்த்தியிருப்பேன். எனக்கு எதிராக அவரும் ரன்கள் அடித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமம் இல்லை. ஆகவே, இது சிறந்த போட்டியாக இருக்கும். இருவரும் ரசிக்கிறோம்" என்றார்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா மண்ணில் வென்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முறை எப்படியாவது தொடரை கைப்பற்ற வேண்டும் என ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 193 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து விளையாடிய இங்கிலாந்து 19 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

    கார்டிப்:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னும், டிராவிஸ் ஹெட் 31 ரன்னும், மேத்யூ ஷாட் 28 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிலிப் சால்ட் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய லிவிங்ஸ்டோன் அரை சதமடித்தார். அவர் 47 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தேல் 44 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில் இங்கிலாந்து 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 1-1 என சமனிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷாட் 5 விக்கெட்டும், சீன் அபாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.
    • சாப்லே 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.

    பிரஸ்சல்ஸ்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடக்கிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார். அவர் 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.

    கென்ய வீரர் முதலிடமும், மொராக்கோ வீரர் இரண்டாம் இடமும் பிடித்தனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் சாப்லே 8 நிமிடம் 14.18 வினாடிகளில் தூரத்தைக் கடந்து 11வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    கார்டிப்:

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 52 ரன்களை சேர்த்தது. ஷாட் 28 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.

    அடுத்து இறங்கிய ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • 100 கோடி பாலோயர்ஸ்களை கொண்ட முதல் நபர் என்ற பெருமை பெற்றார்.
    • கால்பந்து அரங்கில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்

    லிஸ்பன்:

    பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டொ (39), போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அவர் சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

    எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் கணக்கு வைத்துள்ள ரொனால்டோ, அண்மையில், UR. Cristiano எனும் யூடியூப் சேனலை தொடங்கினார். இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து வினாடிக்கு வினாடி சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள் அவரை 5 கோடி பேர் பாலோ செய்கின்றனர்.

    இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் சேர்ந்து 100 கோடி பாலோயர்ஸ் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

    யூடியூபில் 5 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் சுமார் 64 கோடி பேரும், பேஸ்புக்கில் 17 கோடி பேரும், எக்ஸ் தளத்தில் சுமார் 11.3 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

    இதைக் கொண்டாடும் விதமாக போர்ச்சுக்கல் கால்பந்து அணி புதிய போஸ்டரை வெளியிட்டது. ரசிகர்கள் இதனை உற்சாகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

    • இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.

    ஐதராபாத்:

    துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா சி அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயத்தால் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ரஜத் படிதார் சாய் சுதர்சனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். படிதார் 40 ரன்னும், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    கடைசி கட்டத்தில் அணியில் இணைந்த இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் அரை சதமடித்து 78 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட்க்கு 357 ரன்களை எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. கெய்க்வாட், மனவ் சுதார் இருவரும் அரை சதம் கடந்தனர். கெய்க்வாட் 58 ரன்னும், மனவ் சுதார்82 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 222 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியா அணி வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி 19-ந் தேதி தொடங்குகிறது.
    • டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்னை வந்துள்ளது.

    இந்தியா- வங்கதேசம் அணிகள் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மோத உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி சென்னைக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் விமான பயனத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக ராதிகா சரத்குமாரின் எக்ஸ் தள பதிவில், "இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில்தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்ஃபிக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உயரம் தாண்டுதலில் மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    • அவருக்கு விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (டி.63 பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றார். இதனையடுத்து இன்று மாரியப்பன் சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மாற்றுத்திறன் தடகள வீரர் தம்பி, பாரீஸ் #Paralympics2024-ன் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார்.

    தாயகம் திரும்பியுள்ள அவரை இன்று நேரில் சந்தித்துப் பாராட்டினோம். நினைவுப்பரிசினை வழங்கி அவரின் சாதனையைப் போற்றினோம்.

     

    தம்பி மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்திட நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அவருக்கு என்றும் துணை நிற்கும். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்.

    இவ்வாறு உதயநிதி கூறினார்.

    மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் (2016-ம் ஆண்டு) தங்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளியும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×