என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • தமிழ்நாடு திரும்ப முடியாமல் வாரணாசி ரெயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர்.
    • தமிழ்நாடு வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    வாரணாசி:

    வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா அணி சார்பாக தமிழகத்திலிருந்து ஆறு வீரர்கள் மற்றும் அணி மேலாளர் கலந்து கொண்டுள்ளனர். போட்டி முடிந்த பிறகு தமிழகம் திரும்புவதற்காக கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரெயிலில் ஏற முடியவில்லை.

    இதனால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் வாரணாசி ரெயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர். கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தால் தமிழ்நாடு வர முடியாத சூழலில் உள்ள தங்களை மாநில அரசு அழைத்துவர உதவுமாறு அணியின் கேப்டன் சச்சின் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில் வாரணாசியில் தவிக்கும் தமிழ்நாடு வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டர்.

    அதன்படி காசியில் சிக்கியுள்ள மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரணசியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்து அங்கிருந்து சென்னைக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களின் அத்தியாவசிய செலவுக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 15 ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

    • படையப்பா படத்தில் வரும் மாஸ் வசனமான 'என் வழி தனி வழி' என்ற வசனத்தை தோனி தமிழில் கூறினார்.
    • சஞ்சு சாம்சனும் பாட்ஷா படத்தில் வரும் 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' என்ற வசனத்தை பேசி அசத்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    இதேபோல சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது.

    அதில் குறிப்பாக இருவரும் நடிகர் ரஜினிகாந்தின் பிரபல வசனங்களை பேசி மாஸ் காட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் வரும் மாஸ் வசனமான என் வழி தனி வழி என்ற வசனத்தை தோனி தமிழில் கூறினார். இதற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து சஞ்சு சாம்சனும் பாட்ஷா படத்தில் வரும் நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என்ற வசனத்தை பேசி அசத்தினார். இருவரும் தமிழில் பேசிய வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

    • எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்.
    • இந்தியர்களின் மனநிலையே இன்னும் கொஞ்சம் கேட்பதுதானே.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    தோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுங்கள் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டர். அப்போது தோனியின் ஓய்வு குறித்து சஞ்சு சாம்சன், இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எப்போதெல்லாம் தோனி, ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறவேண்டும் என மக்கள் சொல்கிறார்களோ, அப்போதெல்லாம், 'இன்னும் கொஞ்சம் விளையாடுங்க பாய்' (Thoda Aur) என்றுதான் கேட்கத்தோன்றும். இந்தியர்களின் மனநிலையே இன்னும் கொஞ்சம் கேட்பதுதானே.

    என்று சஞ்சு சாம்சன் கூறினார்.

    • பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
    • 1996-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடக்கும் மிகப்பெரிய போட்டி இது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரின் தொடங்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதினர். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் தொடங்கியது. மைதானத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இரவில் கூட்டம் கொஞ்சம் அதிகரித்தது.

    இந்நிலையில் 29 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெற்ற நிலையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் வரவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிண்டலடித்துள்ளார்.

    இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது எக்ஸ் தள பதிவில், 'பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு நடக்கும் மிகப்பெரிய போட்டி இது. ஆனால் இன்று(நேற்று) போட்டி நடப்பதை உள்ளூர் ரசிகர்களிடம் சொல்ல மறந்து விட்டீர்களா? ரசிகர்கள் கூட்டம் எங்கே?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • வில் யங், டாம் லாதம் ஆகியோருக்கு இது தான் முதலாவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாகும்.
    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வில் யங், டாம் லாதம் ஆகியோரையும் சேர்த்து இதுவரை 5 நியூசிலாந்து வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் சதம் விளாசிய டாம் லாதம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்களான டாம் லாதம், வில் யங் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் வில் யங், டாம் லாதம் ஆகியோரையும் சேர்த்து இதுவரை 5 நியூசிலாந்து வீரர்கள் சதம் அடித்துள்ளனர். ஏற்கனவே கிறிஸ் கெய்ன்ஸ், நாதன் ஆஸ்டில், கேன் வில்லியம்சன் ஆகியோர் சதம் அடித்து இருக்கிறார்கள்.

    வில் யங், டாம் லாதம் ஆகியோருக்கு இது தான் முதலாவது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாகும். சாம்பியன்ஸ் கோப்பையில் தங்களது அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர்கள் இவர்கள் தான். மொத்தத்தில் அறிமுக ஆட்டத்தின் சதம் 10 ஆக உயர்ந்துள்ளது.

    சாம்பியன்ஸ் கோப்பையில் ஒரே இன்னிங்சில் இரு வீரர்கள் சதம் காண்பது இது 5-வது நிகழ்வாகும்.

    • துபாய் ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழல் முக்கிய பங்கு வகிக்கலாம்.
    • கோலி இன்னும் 37 ரன் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த நிலையில் தொடரின் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, வங்காளதேசத்தை (ஏ பிரிவு) துபாயில் இன்று (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி போட்டியை வெற்றியோடு தொடங்கும் முனைப்புடன் தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன் களம் காணும் இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கேப்டன் ரோகித் சர்மா கூட அந்த தொடரில் ஒரு சதம் அடித்தார். ஆனால் விராட் கோலியின் தடுமாற்றம் தான் தொடருகிறது. அவர் மீண்டும் ரன் குவிக்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் மிடில் வரிசை வலுவடையும். கோலி இன்னும் 37 ரன் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டும் 3-வது வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

    பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியது பலவீனமே. இருப்பினும் முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, சுழலில் ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி மிரட்ட காத்திருக்கிறார்கள். துபாய் ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழல் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒரு அணி மொத்தமே 3 லீக்கில் தான் விளையாட வேண்டும். ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகி விடும். அதனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு ஆடுவார்கள் என்று நம்பலாம்.

    வங்காளதேச அணியை பொறுத்தவரை சமீப காலத்தில் அவர்களின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. வெஸ்ட் இண்டீஸ் (0-3) மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை (1-2) அடுத்தடுத்து இழந்தது. விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசிய சர்ச்சையில் சிக்கிய ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவர் அணியில் இடம் பெறவில்லை. இதே போல் ரன் எடுக்க தடுமாறும் அனுபவ வீரர் லிட்டான் தாசும் கழற்றி விடப்பட்டுள்ளார். இருப்பினும் தங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனிநபராக ஆட்டத்தில் வெற்றி தேடித்தரக்கூடிய திறமை இருப்பதாக கேப்டன் ஷன்டோ நம்பிக்கையோடு சொல்லியுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், 'ஒருநாள் போட்டி வடிவத்துக்கு எங்கள் அணி மிகவும் சரியான கலவையில் இருக்கிறது. இந்த தொடரில் எங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறோம். எல்லா அணிகளும் கோப்பையை வெல்வதற்குரிய திறன் படைத்தவை. ஆனால் நாங்கள் எதிரணி குறித்து அதிகமாக சிந்திக்கமாட்டோம். வியூகத்தை களத்தில் சரியாக செயல்படுத்தினால் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்' என்று நேற்று நிருபர்களிடம் குறிப்பிட்டார்.

    மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிஜூர் ரகுமான், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய நஹித் ராணா உள்ளிட்டோர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் வீழ்த்தியது போல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முயற்சிப்பார்கள். அதனால் ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 41 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32-ல் இந்தியாவும், 8-ல் வங்காளதேசமும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா அல்லது வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ்.

    வங்காளதேசம்: தன்சித் ஹசன், சவுமியா சர்கார், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடாய், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹூசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையரில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-போர்ச்சுகலின் நுனோ போர்கஸ் ஜோடி, இத்தாலியின் அண்ட்ரியா வவசோரி-சைமன் போலேலி ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 7-6 (7-2), 7-6 (7-4) என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரஸ்சை சேர்ந்தவருமான அரினா சபலென்கா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கிளாரா டாசன் 6-3, 6-2 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா துபாய் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது.
    • நெட் பயிற்சியில் 2 பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசினர்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது. இந்த அணி பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை. அதற்குப் பதிலாக நெட் பயிற்சியில் ஈடுபட்டது.

    நெட் பயிற்சியின்போது இரண்டு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெட்டில் பந்து வீசியுள்ளனர். இருவரும் அபாரமான வேகப்பந்து வீச்சால் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டியுள்ளனர்.

    குறிப்பாக அவைஸ் அகமது யார்க்கர் பந்து மூலம் தனது காலை உடைக்க முயற்சி செய்தார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவைஸ் அகமதிடம் ரோகித் சர்மா கூறுகையில், "நீங்கள் (அவைஸ் அகமது) டாப்-கிளாஸ் பவுலர். உங்களுடைய இன்ஸ்விங் யார்க்கர்களால் என்னுடைய காலை உடைக்க முயற்சி செய்தீர்கள். வெல் டன்! நீங்கள் இங்கே வந்து எங்களுக்கு உதவியதற்காக நன்றி" என தெரிவித்துள்ளார்.

    மேலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:

    அவைஸ் அகமது மற்றும் அவருடன் வந்த வாசிம் அக்ரம் ஆகிய இரண்டு பேரும் உண்மையிலேயே நல்ல பந்து வீச்சாளர்கள்.

    இருவரும் சிறப்பாக பந்து வீசியதாக எங்கள் பேட்ஸ்மேன்கள் சொன்னதைக் கேட்டேன். அவர்களுடன் பேசுவதற்கு எங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தது. அவர்கள் துபாயில் வசித்து வருகிறார்கள்.

    அவர்களைப் பற்றி எங்களுக்கு அதிகமாக தெரியாது. அவர்களை நாங்கள் முதன்முறையாக பார்த்தோம். இருவரும் உண்மையிலேயே தரமான பந்து வீச்சாளர்கள் என தெரிவித்தார்.

    "ஷாஹீன் ஷா பந்து வீசுவதைப் போன்று நான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு பந்து வீசினேன். அவர்கள் என்னை பாராட்டினார்கள்" என அவைஸ் அகமது குறிப்பிட்டார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லூகா நார்டி உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 4-6, 6-3 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா 6-4, 6-2 என ஹங்கேரி வீரர் பேபியன் மரோஜானை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் அல்காரசுடன், ஜிரி லெஹெகா மோதுகிறார்.

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

    தொடக்க வீராங்கனை கிரண் நவ்கிரே அதிரடியாக ஆடி 27 பந்தில் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார். ஷ்வேதா ஷெராவத் 37 ரன்னும், சினெல் ஹென்ரி 33 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் அவுட்டானார். ஷபாலி வர்மா 26 ரன்னில் வெளியேறினார்.

    அனபெல் சதர்லேண்ட்-மரிஜானே காப் ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    இறுதியில், டெல்லி அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. சதர்லேண்ட் 41 ரன்னும், மரிஜானே 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 320 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 260 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    கராச்சி:

    8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.

    கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    வில் யங்-டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. பிலிப்ஸ் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அப்ரார் அகமது 1 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவூத் ஷகில் 6 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய முகமது ரிஸ்வான் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பகர் சமான் 22 ரன்னில் வெளியேறினார்.

    விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சல்மான் ஆகா அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் அசாம்-சல்மான் ஆகா ஜோடி 58 ரன்கள் சேர்த்தது.

    கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர், வில்லியம் ரூர்கி தலா 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×