என் மலர்tooltip icon

    விளையாட்டு

    எனது மனைவி எதை விரும்புகிறாரோ, அதையெல்லாம் செய்ய விட்டுவிடுவேன் என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    எம்எஸ் டோனி சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது திருமணம் குறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘அனைத்து ஆண்களும் திருமணத்திற்கு முன் சிங்கங்களை போன்றவர்கள். திருமணத்தின் உண்மையான சாராம்சமே, நீங்கள் 55 வயதை கடக்கும்போதுதான்...

    எம்எஸ் டோனி அவரது மனைவி சாக்‌ஷி

    எனது மனைவி என்ன செய்ய விரும்பினாலும் அதை நான் அனுமதிப்பேன். ஏனென்றால், எனது மனைவி சந்தோசமாக இருந்தால்தான், அப்புறம் நான் சந்தோசமாக இருக்க முடியும்’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன கிறிஸ் கெய்ல், கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலந்து கொள்ள இயலாது. சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன் என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு, இளைஞர்களுடன் இணைந்து நான் விளையாட விரும்பியது. ஆனால், நான் இந்த வருடம் முழுவதும் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.

    பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாடமாட்டேன். மீண்டும் எப்போது கிரிக்கெட்டுக்கு திரும்புவேன் என்பதை உறுதியாக கூற முடியாது. வங்காளதேச லீக்கில் என்னை தேர்வு செய்துள்ளனர். வீரர்கள் வரைவு பட்டியலில் என்னுடைய பெயர் எப்படி சேர்ந்த என்று எனக்குத் தெரியாது’’ என்றார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி டி20 லீக்கில் 0விளையாடிய பின்னர் சொந்த நாடு திரும்பினார். அப்போது ஒன்றிரண்டு போட்டிகளில் நான் விளையாடாமல் போனால், அணிக்கு சுமை என்று நினைக்கிறார்கள் என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம் பிடித்திருந்தார்.

    தவான் சையத் முஷ்டாக் அலி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடினார். மகாராஷ்டிரா அணிக்கெதிரான போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வங்காளதேச அணிக்கெதிரான தொடரில் இடம் பிடித்திருந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியதாக எழுந்த புகாருக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    ஹேமில்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் 20 ஓவர் தொடரை இங்கிலாந்து அணி 3&2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை இனவெறி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆர்ச்சர் பேட்டிங் செய்து விட்டு பெவிலியன் திரும்பிய போது இனவெறி சர்ச்சையை சந்தித்துள்ளார். வெஸ்ட்இண்டீசை பூர்வீகமாக கொண்ட அவருக்கு எதிராக ரசிகர் ஒருவர் ஆர்ச்சரின் நிறம் குறித்து கேலி செய்துள்ளார்.

    இனவெறி விவகாரத்தால் ஆர்ச்சரிடம், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆர்ச்சர் மீதான இனவெறி சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. பலவிதமான கலாச்சாரத்தை பின்பற்றும் மக்கள் நியூசிலாந்தில் வாழ்கிறார்கள். எங்கள் மண்ணில் நடந்த இனவெறி பிரச்சினைக்காக ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஒயிட் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஆர்ச்சர் மீதான இனவெறி தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய ரசிகரை கண்டுபிடிக்க போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். மைதானத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அந்த ரசிகரை கண்டுபிடித்து விடுவோம். அவரை இனிமேல் மைதானத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்.

    ஹேமில்டனில் வருகிற 29-ந் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆசிய லெவன் - உலக லெவன் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எம்எஸ் டோனி களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) மார்ச் 18 மற்றும் 21-ந் தேதிகளில் டாக்காவில் நடக்கிறது.

    இந்த போட்டியை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான ஆசிய லெவன் அணிக்காக விளையாட இந்திய வீரர்கள் டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர்குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இதனால் ஆசிய லெவன் அணிக்காக டோனி களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    பிரீமியர் பேட்மிண்டன் தொடருக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ரூ.77 லட்சத்திற்கு ஏலம் போனார்.
    புதுடெல்லி:

    மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான 5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 20-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை சென்னை, பெங்களூரு, ஐதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ், அவாதே வாரியர்ஸ் (லக்னோ), ஐதராபாத் ஹன்டர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், புனே 7 ஏசஸ் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு மோதலும் இரண்டு ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என்று 5 ஆட்டங்கள் கொண்டது.

    இந்த போட்டியையொட்டி வீரர், வீராங்கனைகளின் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. ஏலத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் ரூ.2 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் ரூ.77 லட்சத்திற்கு மேல் யார் மீதும் முதலீடு செய்ய முடியாது. ஒவ்வொரு அணியிலும் 9 முதல் 11 பேர் வரை இடம் பெறலாம்.

    154 பேர் இடம் பெற்ற ஏலப்பட்டியலில் இருந்து அதிகபட்சமாக உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து ரூ.77 லட்சத்திற்கு விலை போனார். அவரை ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங்கும் (சீனதைபே) இதே தொகைக்கு விலை போனார். அவரை நடப்பு சாம்பியன் பெங்களூரு ராப்டர்ஸ் அணி தட்டிச் சென்றது. உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான சாய் பிரனீத்தை ரூ.32 லட்சத்திற்கு பெங்களூரு அணி தக்க வைத்தது.

    இதே போல் ஆண்கள் இரட்டையர் பிரிவு வீரர்கள் சுமீத் ரெட்டி (ரூ.11 லட்சம், சென்னை அணி), சிராக் ஷெட்டி (ரூ.15½ லட்சம், புனே அணி) முந்தைய சீசனில் விளையாடிய அணிகளில் தொடருகிறார்கள். இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ இரட்டையர் பிரிவு வீரரான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டியின் அடிப்படை விலை ரூ.25 லட்சம் ஆகும். அவரை இழுக்க கடும் போட்டி நிலவிய நிலையில் ரூ.62 லட்சத்திற்கு சென்னை அணி சொந்தமாக்கியது. உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் பீவென் ஜாங், அவாதே வாரியர்ஸ் அணிக்கு ரூ.39 லட்சத்திற்கு ஒதுக்கப்பட்டார்.

    காமன்வெல்த் விளையாட்டு முன்னாள் சாம்பியனான இந்தியாவின் காஷ்யப் ரூ.43 லட்சத்திற்கும் (மும்பை), இந்தியாவின் லக்‌ஷயா சென் ரூ.36 லட்சத்திற்கும் (சென்னை), இந்தோனேஷியாவின் டாமி சுகியர்டோ ரூ.41 லட்சத்திற்கும்(சென்னை அணி), ஹாங்காங்கின் லீ செக் யூ ரூ.50 லட்சத்திற்கும் (நார்த் ஈஸ்டர்ன்), கொரியாவின் கோ சங் ஹூன் ரூ.55 லட்சத்திற்கும் (அவாதே வாரியர்ஸ்), இந்தியாவின் சவுரப் வர்மா ரூ.41 லட்சத்திற்கும் (ஐதராபாத்) ஏலம் போனார்கள். இதே போல் தேசிய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளர் கோபிசந்தின் மகளான காயத்ரி ரூ.2 லட்சத்திற்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார்.

    இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த சீசனில் பி.பி.எல். தொடரில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 1-0 என வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
    பனாஜி:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கோவா மாநிலத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில்  ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ கேசில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
    இதனால் முதல் பாதியின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோவா அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதால், தேர்வாளர்களை மாற்றுக என கங்குலியிடம் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
    வங்காளதேச அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். ஆனால், அவர் மூன்று போட்டிகளிலும் களம் இறக்கப்படவில்லை. வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

    15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர்கள் மற்றும விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அவர் மூன்று போட்டிகளில் தண்ணீர் பாட்டில்தான் சுமந்து சென்றார்.

    அதன்பின் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை சோதிக்கிறார்களா? அல்லது அவருடைய இதயத்தையா?’’ என பதிவிட்டுள்ளார்.

    இதற்கு ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அவர்கள் சஞ்சு சாம்சனின் இதயத்தை சோதிக்கிறார்கள் என்று யூகிக்கிறேன். தேர்வுக்குழு மாற்றப்பட்டு வலுவான நபர்கள் அங்கே இருக்க வேண்டும். கங்குலி தேவையானவைகளை செய்வார் என்று நம்புகிறேன்’’ என்று பதில் அளித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசனில் எம்எஸ் டோனி எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப்பின், ராணுவத்தில் பணிபுரிய இருப்பதால் சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்தார். அவரது ஓய்வுக் காலம் முடிந்த பின்னரும் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்.

    இதனால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் அவர் விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அணி நிர்வாகம் மற்றும் முக்கிய வீரர்களிடம் இதுகுறித்து கேட்டால், அது எம்எஸ் டோனியின் முடிவு. அவரது ஓய்வு முடிவை அவர்தான் எடுப்பார் என்று தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அவர் 2020 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை சார்ந்துதான் அணிக்கு திரும்பும் முடிவு எடுக்கப்படும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    எம்எஸ் டோனி குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் விளையாடும்போது, அவர் 2020 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும். விக்கெட் கீப்பராக மற்ற வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள். டோனியின் ஃபார்முக்கு சவாலாக யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    ஐபிஎல் மிகப்பெரிய தொடர், ஏனென்றால் ஏறக்குறைய உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தபிறகு நடக்கும் கடைசி தொடராகும்’’ என்றார்.
    பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மைக்கேல் கிளின்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்த அணி தற்போது மைக்கேல் கிளின்கரை தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மெக்டொனால்டு ஆஸ்திரேலியா அணியின் துணைப் பயிற்சியாளராக சென்றுள்ளதால், கிளின்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கிளின்கர் 206 டி20 போட்டிகளில் விளையாடி 5960 ரன்கள் அடித்துள்ளார். பிக் பாஷ் லீக்கில் அதிக ரன்கள் அடித்துள்ள அவர், கடந்த சீசனோடு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் ஆண்களுக்கான ரீ-கர்வ் பிரிவில் இந்திய வீரர் அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றார்.
    ஹாங்காக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை நடைபெற்று வருகிறது. நேற்று கலப்பு இரட்டையர் ரீ-கர்வ் பிரிவில் அட்டானு தாஸ் - தீபிகா குமாரி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

    இன்று ஆண்கள் ஒற்றையருக்கான ரீ-கர்வ்  போட்டி நடைபெற்றது. இதில் அட்டானு தாஸ் கொரியாவைச் சேர்ந்த ஜின் ஹயேக்-ஐ 6-5 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
    நான்கு ரன்களில் யாசிர் ஷா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தது உத்வேகத்தை கொடுத்துள்ளது என்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆஷஸ் தொடரில்  774 ரன்கள் குவித்த ஸ்டீவ் ஸ்மித் யாசிர் பந்தில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

    இந்த அவுட் மூலம் யாசிர் ஷா ஸ்மித்தை 6 டெஸ்ட் போட்டிகளில் 7 முறை வீழ்த்தியுள்ளார். ஸ்மித் வெளியேறும் போது ஏழு விரல்களை நீட்டி, ஸ்மித்தை ஏழு முறை வீழ்த்தியிருக்கிறேன் என்று வெளிப்படுத்தினார்.

    யாசிர் ஷாவின் இந்த சைகை எனக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘இந்த போட்டியில் அவுட்டானது, அடுத்த போட்டியில் யாசிர் ஷா பந்தில் ஆட்டமிழக்கக் கூடாது என்ற உத்வேகத்தை கொடுத்தள்ளது. ஆகவே, அவருக்கு எதிராக கொஞ்சம் கூடுதலாக கவனமான முறையில் விளையாடுவேன்.

    இந்த போட்டியில் நான்கு ரன்னிலேயே ஆட்டமிழந்துள்ளேன். பெரும்பாலான நேரத்தில் நான் 2-வது இன்னிங்சில் தேவையில்லாத ஷாட் மூலம் அவுட்டாகியுள்ளேன். ஆகவே, இதுபற்றி நான் பெரிய அளவில் கவலைப்படவில்லை’’ என்றார்.
    ×