என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீராங்கனை பிவி சிந்து முன்னேறியுள்ளார்.
    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள இந்திய வீராங்கனையான பிவி சிந்து, தொடக்க சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை கைப்பற்றினார். ஆனாலும் சிறப்பாக ஆடிய பிவி சிந்து 2வது, 3வது சுற்றுக்களை கைப்பற்றி அசத்தினார். இறுதியில், பிவி சிந்து 14-21, 21-15, 21-11 என்ற கணக்கில் அயா ஒஹோரியை வெற்றி கொண்டார்.
    2019ம் ஆண்டில் சிறந்த வீரர்களுக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
    துபாய்: 

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சிறப்பு  விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கான விருதுகள்  பட்டியலை வெளியிட்டுள்ளது. 

    அதில் 2019ம் ஆண்டில் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடியதாகவும், மனப்பாங்கை பாராட்டியும் இந்திய அணியின் கேப்டன் விராட்  கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

    உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகப்படுத்த வேண்டும் என சைகை செய்ததற்காக இந்த  விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு தடைக்கு பிறகு களம் திரும்பிய ஸ்மித்தை ரசிகர்கள் அவமதித்தபோது  கோலி இவ்வாறு செய்கை செய்தார்.  

    ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான அணி

    மேலும் 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி தேர்வாகியுள்ளார். 

    அதேபோல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டின் ஒருநாள் போட்டி அணியில் கோலி, சமி, ரோகித், குல்தீப் ஆகிய இந்திய வீரர்கள்  இடம்பெற்றுள்ளனர். 

    உலகின் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருதுக்கு இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
    இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரித் பும்ராவின் பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்து வீச்சுகளை கண்டு வியப்படைந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
    மும்பை: 

    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி  மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 256 ரன்களை  ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.  

    இதையடுத்து, களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் இந்தியாவின்  பந்து வீச்சை சிதறடித்தனர். இருவருமே சிறப்பாக விளையாடி சதமடித்தனர். இறுதியில் 39 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை  எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

    இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்து வீச்சுகளை கண்டு வியந்தேன் என  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.  

    டேவிட் வார்னர்

    ‘ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயைப் போன்று பவுண்டரி லைனில் இருந்து ஓடிவந்து 150கி.மீ  வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒருவரை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. பும்ராவிடம் அதீத திறமை உள்ளது. பும்ராவின்  யார்க்கரும், பவுன்சரும் என்னை வியக்க வைத்தது. நீங்கள் ஒரு யார்க்கர் அல்லது ஒரு பவுன்சரை சந்திக்கப் போகிறீர்கள் என்பது  உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை எப்படி விளையாடப் போகிறீர்கள், என்பதுதான் தனித்துவமானது’  என டேவிட் வார்னர்  கூறியுள்ளார். 

    இரு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 17-ந்தேதி நடக்க உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.
    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று விஷயங்களிலுமே ஆஸ்திரேலியா அணி முழுமையாக எங்களை தோற்கடித்து விட்டது. ஆஸ்திரேலியா அணி தற்போது வலுவாக உள்ளது. அப்படிப்பட்ட அணிக்கு எதிராக நன்றாக விளையாடாவிட்டால் நமக்கு தான் பாதிப்பு ஏற்படும். 

    நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட பகுதியில் ரன்கள் எடுக்க தவறிவிட்டோம் அது தான் பின்னடைவுக்கு வித்திட்டது. ராகுலுக்கு வழிவிடும் வகையில் 4-வது வரிசையில் பேட்டிங் செய்தேன். அடுத்த ஆட்டத்தில் எனது இடத்தை மாற்றுவது குறித்து யோசிப்போம்.’ என்றார்.
    குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த சானியா மிர்சா, கலாஷ்னிகோவா ஜோடியை தோற்கடித்து வெற்றியுடன் மறுபிரவேசம் செய்துள்ளார்.
    ஹோபர்ட்:

    மொத்தம் ரூ.1.94 கோடி பரிசுத்தொகையான ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

    அவர், உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து நேற்று இரட்டையர் முதலாவது சுற்றில் ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோவை (ஜப்பான்) எதிர் கொண்டார். இரண்டு டபுள் பால்ட், தங்களது சர்வீசை தவற விட்டது என்று தடுமாற்றத்துடன் முதல் செட்டை பறிகொடுத்த சானியா ஜோடி அடுத்த செட்டை டைபிரேக்கர் வரை போராடி வசப்படுத்தியது. தொடர்ந்து சூப்பர் டைபிரேக்கரில் அருமையான ஷாட்டுகள் மூலம் எதிராளியை மடக்கினர்.

    1 மணி 41 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் சானியா-கிச்செனோக் கூட்டணி 2-6, 7-6 (7-3), 10-3 என்ற செட் கணக்கில் கலாஷ்னிகோவா ஜோடியை தோற்கடித்தது. சானியா இணை அடுத்து கால்இறுதியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியுடன் மோத உள்ளது.

    வெற்றிக்கு பிறகு 33 வயதான சானியா மிர்சா தனது மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில், “இன்றைய தினம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றாகும். நீண்ட காலத்திற்கு பிறகு களம் இறங்கியுள்ளேன். அதுவும் எனது முதல் ஆட்டத்தின் போது எனது பெற்றோர், குழந்தை உடன் இருந்த நிலையில் கிடைத்த வெற்றி பரவசமூட்டுகிறது. நீங்கள் (ரசிகர்கள்) என் மீது வைத்துள்ள அன்புக்கும், அளிக்கும் வரவேற்புக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
    வங்காளதேசம் பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம் காட்டி வந்தது. ஆனால், பாகிஸ்தானில்தான் தொடர் நடக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. இரு நாட்டு கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    இறுதியில் பாகிஸ்தான் செல்ல வங்காளதேசம் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பிப்ரவரி 7-ந்தேதியும், 2-வது டெஸ்ட் ஏப்ரல் ஐந்தாம் தேதியும் தொடங்குகிறது. ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடக்கிறது.

    பாதுகாப்பு காரணத்திற்கான வங்காளதேசம் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இடைவெளிவிட்டு விளையாடுகிறது.
    மும்பை வான்கடே ஒருநாள் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத நிலையில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வான்கடேயில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 255 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்களால் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.

    இதனால் ஆஸ்திரேலியா 39 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 255 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. ஆரோன் பிஞ்ச் 110 ரன்னுடனும், டேவிட் வார்னர் 128 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
    வான்கடே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் அடித்த ஆரோன் பிஞ்ச் - டேவிட் வார்னர் சாதனைப் படைத்துள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 255 ரன்னில் சுருண்டது. பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினர்.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி எளிதாக 100 ரன்களை தாண்டியது. ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து 100 ரன்களை தாண்டுவது இது 9-வது முறையாகும்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி அதிக முறை 100 ரன்களை தாண்டியதில் ஆரோன் பிஞ்ச் - வார்னர் ஜோடி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

    கில்கிறிஸ்ட் - ஹெய்டன் ஜோடி 16 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. கில்கிறிஸ்ட் - மார்க்வாக் ஜோடி 8 சதங்களுடன் 3-வது இடத்திலும், 7 சதங்களுடன் டேவிட் பூன் - மார்ஷ் ஜோடி 4-வது இடத்திலும் உள்ளது.
    பேட் கம்மின்ஸின் பவுன்சர் ரிஷப் பண்டின் ஹெல்மெட்டை தாக்கியதால் மூளையதிர்ச்சி காரணமாக விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 44-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுன்சராக வீசினார். ரிஷப் பண்ட் அதை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார்.

    பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ரிஷப் பண்ட் அதிர்ச்சிக்குள்ளானார். இந்திய அணி டாக்டர் அவரை பரிசோதித்ததில் மூளையதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரியவந்தது.

    இதனால் ரிஷப் பண்ட் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வருகிறார். டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு - மும்பை இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு - மும்பை இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் 7-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், கேப்டனுமான ஆதித்யா டரே 157 ரன்கள் விளாசினார். முலானி 87 ரன்களும், அட்டார்டே 58 ரன்களும் அடிக்க மும்பை 488 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

    தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டும், ஆர் அஸ்வின் 3 விக்கெட்டும், டி நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் விளையாடியது. அபிநவ் முகுந்த் 58 ரன்களும், சூர்யபிரகாஷ் 41 ரன்களும், காந்தி 60 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆர் அஸ்வின் 79 ரன்களும், சாய் கிஷோர் 42 ரன்களும் அடிக்க தமிழ்நாடு 324 ரன்னில் சுருண்டது. மும்பை அணி சார்பில் முலானி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    164 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் தமிழ்நாடு பாலோ-ஆன் ஆனது. பின்னர் தமிழ்நாடு 2-வது இன்னிங்சை தொடங்கியது. 1 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவடைந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

    முதல் இன்னிங்சில் மும்பை முன்னிலைப் பெற்றதால் அந்த அணிக்கு 3 புள்ளிகளும், தமிழ்நாடுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 255 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து தவான் உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். தவான் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் அதிரடியாக உயரவில்லை. ஓவர் செல்ல செல்ல அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

    இந்தியா பவர்பிளே-யான முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. தவான் 66 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 27.1 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கேஎல் ராகுல் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய தவான் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 28.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்த வந்த விராட் கோலி 16 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். 30 ரன்னுக்குள் இந்தியா முக்கியமான நான்கு விக்கெட்டுக்களை இழந்தது மிகப்பெரிய பாதகமாக அமைந்தது. 6-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அப்போது இந்தியா 32.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஜோடி அணியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.

    ஸ்டார்க் பந்தில் க்ளீன் போல்டாகிய ஷர்துல் தாகூர்

    ஆனால் அணியின் ஸ்கோர் 213 ரன்னாக இருக்கும்போது ஜடேஜா ஆட்டமிழந்தார். 25 ரன்னில் ஜடேஜா ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் ரிஷப் பண்ட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 17 ரன்களும், முகமது ஷமி 10 ரன்களும் அடிக்க இந்தியா 49.1 ஓவரில் 255 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்சன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கி விளையாடி வருகிறது.
    வங்காளதேச கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட மோர்தசா, யார் வற்புறுத்தினாலும் ஓய்வு பெறமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
    வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மோர்தசா. வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவரை, வங்காளதேச அணி வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது.

    இதனால் அணியில் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நான் நினைக்கும்போதுதான் ஓய்வு பெறுவேன். யார் வற்புறுத்தினாலும் அந்த முடிவுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    மோர்தசா எதிர்காலம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘மோர்தசா எங்களிடம் போன் செய்து, வீரர்களுக்கான தேசிய ஒப்பந்தத்தில் இருக்க விருப்பம் இல்லை என்றார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினார்.

    அவருக்கு நாங்கள் பிரியாவிடை கொடுக்க விரும்பினோம். தற்போது அதில் அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கிறது. அவர் தொடர்ந்து விளையாட விரும்புகிறார். அதற்கு அர்த்தம் உள்ளூர் கிரிக்கெட்டாக கூட இருக்கலாம். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின்போது, டாக்காவில் உங்களுக்கு பிரியாவிடை போட்டி நடத்த விரும்புகிறோம் என்று கூறினேன். ஆனால், தற்போது அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள அவரிடம் பேச வேண்டியுள்ளது’’ என்றார்.

    மோர்தசா தனது எதிர்காலம் குறித்து கூறுகையில் ‘‘நான் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவு எடுப்பது என்னுடைய சொந்த விஷயமாகும். நான் தேசிய அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று எப்போது கூறினேன். என்னுடைய தேசிய ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. தற்போது நான் அதில் இல்லை.

    கிரிக்கெட் போர்டு என்னை கேப்டனாக வைத்திருக்குமா?. அணியில் சேர்க்குமா? என்பது குறித்து நான் சிந்திக்கவில்லை. தேர்வுக்குழு என்ன நினைக்கிறதோ அதை செய்யட்டும். கிரிக்கெட் போர்டு என்னை கேப்டன் பதவியில் இருந்து விலகச் சொன்றால், உடனடியாக அதை செய்வேன்.

    என்னுடைய பிரியாவிடை போட்டி குறித்து நான் சிந்திக்க நேரம் இருக்கிறது. அதற்கான அவசியம் இருப்பதாக நினைக்கவில்லை. சில வீரர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள்.

    அது தேசிய அணியாக இருக்கலாம். அல்லது மற்ற இடங்களில் விளையாடும் போட்டியாக இருக்கலாம். வீரர்கள் தேசிய அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என நினைப்பதில்லை. நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அது டாக்கா லீக்காக இருக்கலாம். தற்போது தற்போது மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருக்கிறேன். நான் எங்கே விளையாட விரும்புகிறேன் என்ற முடிவை எடுக்க முழு சுதந்திரம் உள்ளது. யார் வற்புறுத்தினாலும் நான் ஓய்வு பெறமாட்டேன்’’ என்றார்.
    ×