என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
    கான்பெரா:

    ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

    இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, கால் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. 

    இந்நிலையில், ஸ்லோவேனியா-செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா ஜோடி  இன்று சந்தித்தது. ஆக்ரோஷமாக விளையாடிய சானியா ஜோடி, எதிரணியை பந்தாடி 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் வென்றது. இதன் மூலம் சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

    குழந்தை பெற்ற பிறகு களம் இறங்கியுள்ள சானியா மிர்சா, அவர் விளையாடும் முதல் தொடரிலேயே கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.
    ராஜ்கோட்:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எல்லா துறையிலும் வீழ்த்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 ரன்னும், லோகேஷ் ராகுல் 47 ரன்னும் எடுத்தனர். ரோகித் சர்மா 10 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 16 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (128 ரன்கள்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (110 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்து சரியாமல் நின்றனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களாலும், சுழற்பந்து வீச்சாளர்களாலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சரியாக அமையவில்லை. பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சும் எதிரணிக்கு அச்சுறுத்தும் வகையில் அமையாமல் போனது பெருத்த ஏமாற்றம் அளித்தது. எனவே இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. 4-வது வீரராக களம் இறங்கியது எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று அதிருப்தி தெரிவித்து இருந்த விராட்கோலி மீண்டும் தனது வழக்கமான 3-வது வரிசையில் களம் இறங்குவார்.

    கடந்த ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய பந்து இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியதுடன் அந்த பந்தில் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமும் இழந்தார். பந்து தாக்கியதில் தலைக்குள் ஏதோ அதிர்வு இருப்பதாக உணர்ந்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கீப்பிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனித்தார். ரிஷப் பண்ட் நல்ல நிலையை எட்டாததால் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்டத்திலும் லோகேஷ் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடைசி ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்டுக்கு பதிலாக கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முந்தைய தோல்வியை மறந்து பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் முனைப்பு காட்டும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு எதிரான தொடரை வெல்ல ஆஸ்ரேலிய அணி வியூகம் வகுத்து அதிரடியாக செயல்படும். எனவே இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

    பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    அணி வீரர்கள்

    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி அல்லது நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.
    சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது ஒடிசா.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    சென்னையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். சென்னை அணியின் வால்கிஸ் 57வது நிமிடத்திலும், கிரிவெல்லாரோ 59வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், சென்னையின் எப்.சி. அணி 2-0 என்ற கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம், சென்னை அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 15 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.

    நார்த் ஈஸ்ட் அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 4ல் தோல்வி அடைந்து 11 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆட, முதல் நாள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.
    போர்ட் எலிசபேத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

    செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 107 ரன் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து 189 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற சமநிலை இருக்கிறது.
     
    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் இன்று போர்ட் எலிசபெத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிராலி, சிப்லி ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில்
    சிப்லி 36 ரன்னில் அவுட்டானார்.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிராலி 44 ரன்னில் வெளியேறினார்.  அடுத்து இறங்கிய ஜோ டென்லி 25 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஆலி போப் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்,

    முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது, ஸ்டோக்ஸ் 38 ரன்னும், போப் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 2 விக்கெட், நுர்ஜே, மகாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனையான சயாகா டகாஹாஷியாவை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிவி சிந்து முதல் செட்டை கைப்பற்றினார். ஆனாலும் அதிரடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை சயாகா 2வது, 3வது சுற்றுக்களை கைப்பற்றி அசத்தினார். இறுதியில், பிவி சிந்து 21-16, 16-21, 19-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 போட்டியின் கடைசி கட்டத்தில் அயர்லாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் ஆடினர். கெவின் ஓ பிரையன் 48 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த பால் ஸ்டிர்லிங், 47 பந்தில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 95 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய வீரர்கள்நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் காட்ரெல், பியர்ரி, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் மட்டும் அரை சதமடித்தார். அவர் 29 பந்தில் 53 ரன் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.
     
    இறுதி ஓவரில் வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் விக்கெட் வீழ்ந்தது. 2வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் பிராவோ. 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் பிராவோ. 4வது பந்தில் ரன் எதுவும் இல்லை. 5வது பந்தில் பிராவோ கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பால் ஸ்டிர்லிங் தேர்வு செய்யப்பட்டார்.

    அயர்லாந்து சார்பில் ஜோஷ்வா லிட்டில் 3 விக்கெட்டும்,  கிரெய்க் யங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, டி20 தொடரில் அயர்லாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது.

    ராஜ்கோட்:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளைய போட்டியிலும் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

    மும்பை போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மிகவும் கவலையளிக்கும் வகையில் மோசமாக இருந்தது.

    கேப்டன் வீராட்கோலி 4-வது வரிசையில் பின்தங்கி களம் இறங்கியது எந்தவித பலனையும் தரவில்லை. பேட்டிங் வரிசையில் செய்த மாற்றம் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் கோலி எப்போதும் விளையாடும் 3-வது வரிசையிலேயே ஆடுவார் என்று தெரிகிறது.

    ரோகித் சர்மாவும், தவானும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். ராகுல் 4-வது வீரராக களம் இறங்கலாம். ரி‌ஷப் பண்ட் ஆட மாட்டார் என்பதால் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார். முதல் ஆட்டத்திலும் அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார்.

    முதல் போட்டியில் பேட்டிங் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்யப்படும். ரி‌ஷப் பண்ட் இடத்தில் கேதர் ஜாதவ் அல்லது மனிஷ் பாண்டேதேர்வு செய்யப்படுவர். இதேபோல ஜடேஜா நீக்கப்பட்டால் ஷிவம் துபேக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முன்னனி பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். ரோகித் சர்மா, கோலி , ஷிரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும்.

    தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை கூட பந்துவீச்சாளர்கள் கைப்பற்ற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே. ஆரோன் பிஞ்ச், வார்னர் அதிரடியாக ஆடி இந்திய பந்துவீச்சை சிதறடித்து விட்டனர்.

    3 வேகப்பந்து வீரர்களும் (முகமது ‌ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர்) ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரர் தேவைப்பட்டால் சாஹல் இடம் பெறலாம்.

    ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. முதல் போட்டியைப் போலவே நாளைய ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    கேப்டன் ஆரோன் பிஞ்ச், வார்னர் மும்பையில் சதம் அடித்து முத்திரை பதித்தனர். இதே போல முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித், லபுஷ்சேன், அலெக்ஸ் கேரி, டர்னர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கும்மின்ஸ், ரிச்சர்ட்சன் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். இதேப்போல சுழற்பந்தில் ஆடம் ‌ ஜம்பா, ஆஸ்டன் அகர் நேர்த்தியாக வீசக் கூடியவர்கள்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 139-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 138 ஆட்டத்தில் இந்தியா 50-ல், ஆஸ்திரேலியா 78-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டி முடிவு இல்லை.

    மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா; வீராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ், ஜடேஜா, ஷிவம் துபே , குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், முகமது ‌ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, மனிஷ் பாண்டே.

    ஆஸ்திரேலியா; ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித், மார்ன்ஸ் லபுஷ்சேன், ஹேண்ட்ஸ் ஹோம், அலெக்ஸ் கேரி, ஆஸ்டன் டர்னர், ஸ்டார்க், கும்மின்ஸ், ஹாசல்வுட், கானே ரிச்சர்ட்சன், ஆஸ்டன் அகர், ஆடம் ஜம்பா, ஆர்சி ஷார்ட்.

    பிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முன்னாள் கேப்டன் டோனியின் பெயர் இடம்பெறவில்லை.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான (சீனியர் பிரிவு) வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் முன்னாள்  கேப்டன் மகேந்திர சிங் டோனி பெயர் இடம்பெறவில்லை. 

    கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொண்டனர். அதாவது இவர்கள் இருவரும் ஏ பிளஸ் பட்டியலில் நீடிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் பெறுவார்கள். 

    இந்திய அணி வீரர்கள்

    இதேபோல் ஏ கிரேடில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரகானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பன்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். 

    ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பெறும் பி கிரேடு பட்டியலில், விர்திமான் சகா, உமேஷ் யாதவ், உஸ்வேந்திர சாகல், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால் ஆகிய 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

    சி கிரேடு பட்டியலில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாகர், மணீஷ் பாண்டே, ஹனுமா  விகாரி, ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவார்கள். 

    கடந்த ஆண்டு வரை ஏ கிரேடு பட்டியலில் இருந்தார் டோனி. உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு டோனி விளையாடவில்லை. தற்போது அவரது ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால், அவரது எதிர்காலம் குறித்து புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. 
    இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பை போட்டியின்போது, இந்திய அணியை உற்சாகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 87 வயது கிரிக்கெட் ரசிகை மரணமடைந்தார்.
    புதுடெல்லி:

    உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற்றது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அந்த தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை தன்வசமாக்கியது. 

    அந்த தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதிய போட்டியின் போது சாருலதா படேல் எனும் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியை கண்டு களித்து இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். மைதானத்தில் இருந்த கேமராக்கள் மூதாட்டியின் பக்கமும் திரும்பியது.

    அவர் வயதை மறந்து இந்திய அணியின் ஒவ்வொரு சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் கையில் வைத்திருந்த இசைக்கருவியைக் கொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொண்டிருந்தார்.

    மேலும் அவர் இந்தியாவின் தேசிய கொடியினை ஆடைக்கு மேலே அணிந்திருந்தார். சாருலதா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, இந்திய வீரர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார்.

    சாருலதா படேல்

    போட்டி முடிந்தவுடன், அவரை சந்தித்து இந்திய வீரர்களான விராட் கோலி, டோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் ஆசி பெற்றனர். விராட் கோலிக்கு வாழ்த்துக் கூறி, சாருலதா முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், சாருலதா படேல் (87) மரணம் அடைந்ததாக அவரது கிரிக்கெட்.டாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘13/01/2020 அன்று மாலை 5.30 மணிக்கு எங்கள் பாட்டி இயற்கை எய்தினார். அவர் ஒரு இனிமையான, அசாதாரணமான பெண்மணி. கடந்த ஆண்டு அவரை சிறப்பு மிக்கவராக உணரவைத்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவிற்கும் மிக்க நன்றி. உங்களைச் சந்தித்தது அவரது வாழ்க்கையின் சிறந்த நாள் ஆகும். அவரது ஆன்மாவை சிவபெருமான் ஆசீர்வதிப்பாராக’ என கிரிக்கெட்.டாடி பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

    ‘இந்திய அணியின் மேன்மையான ரசிகை சாருலதா படேல் ஜி எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருப்பார், மேலும் விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும். அவரது ஆன்மா அமைதியில் நிலைத்திருக்கட்டும்’ என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
    கான்பெரா:

    ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

    இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று நேற்று முன்தினம் நடைபெற்றது.  உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து விளையாடிய சானியா மிர்சா (வயது 33),  ஒக்சனா கலாஷ்னிகோவா (ஜார்ஜியா)- மியூ கட்டோ (ஜப்பான்) ஜோடியை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

    இதையடுத்து கால் இறுதி போட்டியில்,  அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை சானியா ஜோடி நேற்று எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-2, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. 

    அரையிறுதி போட்டியில், ஸ்லோவேனியா-செக் குடியரசு ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி பவுஸ்கோவாவை சானியா மிர்சா ஜோடி சந்திக்க உள்ளது. 

    முதல் சுற்றின் வெற்றிக்கு பிறகு, சானியா மிர்சா தனது மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 
    தெலுங்கானாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது ஒடிசா.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் ஐதராபாத் அணி வீரர் மார்ல்சிலினோ பெரைரா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒடிசா அணியின் அரிடேன் சண்டானா 15வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    அதன்பின் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. நான்காவது நிமிடத்தில் ஒடிசாவின் அரிடேன் சண்டானா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இதனால் ஒடிசா அணி முதல் பாதி முடிவில் 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ஒடிசா அணி 2-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதன்மூலம், ஒடிசா அணி தான் ஆடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 21 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

    ஐதராபாத் அணி தான் ஆடிய 13 ஆட்டங்களில் 10ல் தோல்வி அடைந்து 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    மூளை அதிர்ச்சி காரணமாக ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இதில், முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. 
    அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 44-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுன்சராக வீசினார். ரிஷப் பண்ட் அதை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார்.
     
    பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதனால் ரிஷப் பண்ட் அதிர்ச்சிக்குள்ளானார். இந்திய அணி டாக்டர் அவரை பரிசோதித்ததில் மூளை அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரியவந்தது.

    இதனால் ரிஷப் பண்ட் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார். டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மூளை அதிர்ச்சி காரணமாக பாதிப்பு அடைந்துள்ள ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது.
    ×