என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
    பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    போட்டி இறுதி கட்டத்தை எட்டுவிட்டதால் நாட்களை குறைத்து தொடரை முடித்துவிட திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள இதற்கிடையில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் தொடரை இடையிலேயே முடித்துக் கொண்ட சொந்த நாடு திரும்பி வருகிறார்கள்.

    இந்நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் சொந்த நாடு திரும்பியுள்ளார். இவருக்கு முன் 13 வீரர்கள் சொந்த நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னால் இதை நம்ப முடியவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக நான் பாகிஸ்தானில் இருந்து சொந்த நாடு திரும்ப வேண்டியதுள்ளது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ரசிகர்கள் அளித்த ஆதரவுக்காக நன்றி சொல்ல முடியாது.

    நீங்கள் அற்புதமான ஆதரவை கொடுத்தீர்கள். ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் பாகிஸ்தான் திரும்புவேன் என்று நம்புகிறேன். ஆரோக்கியமாக இருங்கள்.. உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள்’’ என்றாார்.
    மோர்தசா இடத்தை நிரப்புவது கடினம் என்று வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மோர்தசா. கடந்த வாரம் இவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிம் இக்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மோர்தசா இடத்தை நிரப்புவது கடினம் என்று தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘மோர்தசா உடன் நெருங்கிய தொடர் இருந்ததால் நான் அதிர்ஷ்டசாலி. அவரை அருகில் இருந்து பார்த்த நான், இணைந்து ஏராளமான போட்டிகளில் விளையாடிள்ளோம்.

    மோர்தசா எப்படி சிந்திப்பார். முடிந்த வரை அவரிடம் இருந்து அதை எப்படி பெற்றுக் கொள்வது என்பது குறித்து எனக்குத் தெரியும். ஆனால், அவரது இடத்தை நிரப்புவது மிகக்கடினம். அவரிடம் இருந்து நேர்மையான கருத்துக்களை எடுத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் திணறினால், ஆலோசனை கேட்கும் முதல் நபர் அவராகத்தான் இருப்பார்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நேர்முக வர்ணனையாளர் பட்டியலில் இருந்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நீக்கப்பட்டுள்ளார்.
    வர்ணனை செய்வதில் வல்லவரான மஞ்ச்ரேக்கர் சமீப காலமாக சர்ச்சையை அளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதன் காரணமாக அவரை கிரிக்கெட் வாரியம் நீக்கி உள்ளது. ஐ.பி.எல். போட்டி நடைபெற்றால் அதிலும் அவர் வர்ணனையாளராக இருக்கமாட்டார்.
    எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஐ.சி.எப். அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 17-25, 29-27, 25-23, 13-25, 15-12 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தியது.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 25-14, 25-20, 25-17 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்-ஐ.சி.எப். (மாலை 4.30 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-இந்தியன் வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி நகரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய நியூசிலாந்து வீரர் லூக்கி பெர்குசனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்கள் இன்றி இந்தப் போட்டி நடந்தது. வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்ளவில்லை.

    இந்தப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அவர் சிட்னியில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். 24 மணி நேரம் அவரை கண்காணித்து பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இந்த பரிசோதனை முடிவில் பெர்குசனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது.
    இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? இல்லையா? என்பதில் ஒரு முடிவுக்கு வர 3 வாரங்கள் காத்திருப்பது என்று அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பையில் தொடங்க இருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதற்கு தடை, வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருவதற்குரிய ‘விசா’ வழங்குவது ஏப்ரல் 15-ந்தேதி வரை நிறுத்தம் போன்ற காரணங்களால் ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா, ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் பட்டேல், அணிகளின் உரிமையாளர்களான ஆகாஷ் அம்பானி (மும்பை இந்தியன்ஸ்), ஷாருக்கான் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), நெஸ் வாடியா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), பார்த் ஜின்டால் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஐ.பி.எல். ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து 7 விதமான அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. இதில் போட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதும் அடங்கும். அணிகளை இரண்டு பிரிவாக பிரித்து லீக் சுற்றில் மோதி அதில் டாப்-4 அணிகளை பிளே-ஆப் சுற்றில் விளையாட வைப்பது அல்லது வாரஇறுதி நாட்களில் இரட்டை ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அல்லது 60 ஆட்டங்களையும் ரசிகர்கள் இன்றி நடத்துவது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

    ஆனால் வெளிநாட்டுக்கு போட்டியை மாற்றுவது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஜூன் மாதம் சர்வதேச போட்டிகள் வந்து விடும் என்பதால் ஐ.பி.எல். போட்டியை நடத்த வேண்டும் என்றால் மே 31-ந்தேதிக்குள் முடித்தாக வேண்டிய நெருக்கடியில் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. இப்போதைக்கு ஓரிரு வாரங்கள் காத்திருந்து நிலைமையை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். நிர்வாகிகள் கூட்டத்துக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியேறும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான்.


    கூட்டத்தில் கலந்து கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது. 2-3 வாரங்கள் கழித்து நாட்டில் கொரோனா பாதிப்பு நிலைமையை ஆய்வு செய்து அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வோம். அதற்குள் கொரோனா பாதிப்பு குறைந்து விடும் என்று நம்புகிறோம்.

    இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்திய கிரிக்கெட் வாரியமோ அல்லது ஐ.பி.எல். நிர்வாகமோ அல்லது அதிகாரபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்தினரோ யாரும் வருவாய் இழப்பு குறித்து துளி கூட சிந்திக்கவில்லை. இத்தகைய சூழலில் ஆதாயம் அடைய விரும்பவில்லை. பாதுகாப்பு அம்சங்கள் குறித்தே அதிகமாக விவாதித்தோம். மக்களின் உயிர், பாதுகாப்பு தான் முதலில் முக்கியம் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். அது தான் எங்களது பிரதான நோக்கம். வருமானம் எல்லாம் 2-வது பட்சம் தான். அரசாங்கம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதை முழுமையாக பின்பற்றுவோம். இந்த மாதம் இறுதிவரை எந்த முடிவும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். எனவே பொறுத்திருந்து தான் நிலைமையை பார்க்க வேண்டும்.

    இந்த முறை வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு வருவார்களா? என்று கேட்கிறீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது. ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை இருக்கிறது. அதன் பிறகு பார்க்கலாம். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் சிறப்பாக இருக்கும். நடக்காமல் போனாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    இவ்வாறு நெஸ் வாடியா கூறினார்.
    கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாகவும், பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள் என விராட்கோலி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவைவும் விட்டு வைக்கவில்லை. இதன் கொடூர முகம் இந்தியாவிலும் தலைகாட்ட தொடங்கி விட்டது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல்வேறு நாடுகளிலும் நடைபெற இருந்த சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வருகிற 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந் தேதி வரை இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் அறிவித்தது. அத்துடன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் ஒருநாள் போட்டி தொடரும் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தனது டுவிட்டர் பதிவில், ‘அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள். வந்த பிறகு குணப்படுத்துவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவு செய்து எல்லோரும் கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
    கோவா:

    6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் 2 முறை சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் சேவியர் ஹெர்னாண்டர்ஸ் சிறப்பாக ஆடி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

    இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் 48-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் எடு கார்சியா ஒரு கோல் அடித்தார். இதனால் கொல்கத்தா 2-0 என முன்னிலை வகித்தது.

    ஆனால் சென்னை அணியின் வல்ஸ்கிஸ் 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என சென்னை அணி பின்தங்கியது. கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணியின் சேவியர் ஹெர்னாண்டஸ் 93வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 3-1 என்ற கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் ரசிகர்களின்றி ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 84-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன.
     
    இதனால் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை டெல்லி அரசு மூடியது. தொடர்ந்து டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க இயலாது என தெரிவித்தது.

    இதற்கிடையே, மார்ச் 29-ம் ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கால்பந்து லீக் போட்டிகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக, அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், பல்வேறு மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய கால்பந்து லீக் போட்டிகள் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் மற்றும் ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    117 நாடுகளில் உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் பரவி 5,400 பேர் வரை பலியாகி உள்ளனர். 1½ லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதால் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு அரசும் கேட்டுக்கொண்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச அளவில் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இதற்கிடையே பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஏப்ரல் 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த போட்டி வருகிற 29-ந் தேதி தொடங்க இருந்தது.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் மற்றும் ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) வீரர்களின் பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டிக்காக டோனி தலைமையில் சி.எஸ்.கே. வீரர்கள் கடந்த 2-ந்தேதி முதல் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். வீரர்களின் பயிற்சி 19-ந்தேதி முடிய இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இன்று முதல் இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

    இதற்கிடையே ஜப்பானில் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்வது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) ஆலோசனை செய்கிறது.

    உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்வது அல்லது தள்ளி வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) தலைவர் தாமஸ் பேஜ் தெரிவித்தார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மற்ற 2 ஆட்டங்களை ரசிகர்கள் இல்லாமல் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக எஞ்சிய 2 ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து, இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து ஆகியவையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ பார்முலா-1 கார்பந்தயம், இந்தியன் ஓபன் பேட்மின்டன் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 31-ந்தேதி வரை எந்த ஒரு செஸ் போட்டியும் நடைபெறாது என்று அகில இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. வருகிற 19-ந்தேதி இந்த தொடர் தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி உடனடியாக நாடு திரும்புகிறது.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கோவாவில் இன்று நடக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
    கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    துபாய்:

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. 

    கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து பேட்மிண்டன் போட்டித் தொடர்களையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் தேதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், ஆஸ்ரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையும் ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல் முதல் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அடுத்த 2 போட்டிகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

    கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நியூசிலாந்து அரசு புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், நாடு திரும்ப வேண்டும். அத்துடன், அவர்கள் 14 நாட்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதன் காரணமாக கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    இதேபோல் இந்த மாத இறுதியில் இரு அணிகளும் நியூசிலாந்தில் விளையாட உள்ள டி20 போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறாது. இந்த போட்டிகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
    ×