search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைப்பந்து"

    • 'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
    • 'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும்.

    சென்னை:

    பிரைம் வாலிபால் (கைப்பந்து) 'லீக்' போட்டி 2022-ம் ஆண்டு ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 7 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    கடந்த ஆண்டு பெங்களூர், ஐதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் அகமதாபாத் டிபென்டர்ஸ் அணி கோப்பையை வென்றது.

    3-வது ரூபே பிரைம் வாலிபால் லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 15-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூர் டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ், மும்பை மீட்டி யார்ஸ், புதிதாக இணைந்து உள்ள டெல்லி டூபான்ஸ் ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன.

    'லீக்' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 5' சுற்றுக்கு முன்னேறும்.

    'சூப்பர் 5' சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு ஆட்டத்தில் விளையாடும். இதன் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் மாலை 6.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் நடக்கிறது. 15-ந்தேதி நடைபெறும் தொடக்க போட்டிகளில் சென்னை பிளிட்ஸ்-அகமதாபாத் டிபன்டர்ஸ் (மாலை 6.30 மணி), பெங்களூர்-கொல்கத்தா (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.

    சோனிஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
    • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

    நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

    இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

    நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

    • இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன.
    • முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 18-25, 25-22, 23-25, 25-23, 15-11 என்ற கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அரியானா 25-22, 25-17, 25-18 என்ற நேர்செட் கணக்கில் உத்தரபிரதேசத்தை தோற்கடித்தது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன. அரியானாவை வீழ்த்தி தமிழக அணி தங்கப் பதக்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா அணியும் வலுவாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்புடன் இருக்கும்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    அரைஇறுதி ஆட்டங்களில் மேற்குவங்காளம் 25-11, 30-28, 25-19 என்ற கணக்கில் குஜராத்தையும், ராஜஸ்தான் 13-25, 25-20, 25-20 என்ற கணக்கில் தமிழகத்தையும் தோற்கடித்தன.

    • உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
    • உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     உடுமலை:

    உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. ரேணுகாதேவி பிறந்தநாளை முன்னிட்டு தன்னம்பிக்கை வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி அவர் நினைவாக மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி உதவியுடன் 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை இரவு பகல் போட்டிகளாக நடக்கிறது. இதில் எஸ்டிஏடி. எக்ஸ்எல்என்சி கல்லூரி, ஜேபிஆர். கல்லூரி ,பாரதியார் கல்லூரி, பனிமலர் கல்லூரி, பி .ஆர் .கே .கல்லூரி, போஸ்டல் டிபார்ட்மென்ட் ஆகிய மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன.

    இரண்டாம் நாள் போட்டியில் சென்னை ஜே .பி .ஆர் .கல்லூரி, பாரதியார் கல்லூரி ஆகியவை கலந்து கொண்டு விளையாடின. இதில் அதிக புள்ளிகளை பெற்று ஜே. பி .ஆர் .கல்லூரி வெற்றி பெற்றது. இதில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜேபிஆர். கல்லூரி மாணவி ஆதர்யராய்க்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் உடுமலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்எஸ். செல்வராஜ் ,உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
    • போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

    முதல் நாளில் ஆண்களு க்கான போட்டியும், 2-வது நாளில் பெண்களுக்கான போட்டியும் நடைபெறுகிறது.

    அதேப்போல் ஆண்களுக்கான கால்பந்து போட்டி 20-ந் தேதியும், பெண்களுக்கான கால்பந்து போட்டி 26-ந் தேதியும் நடக்கிறது. ஆண்களுக்கான கபடி போட்டி 26-ந்தேதியும், பெண்களுக்கான கபாடி போட்டி 27-ந் தேதியும் நடக்கிறது.

    போட்டிகள் காலை 8 மணி முதல் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் 15 வயது முதல் 24 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

    ஆண்கள், பெண்க ளுக்கான கபடி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். கால்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    கைப்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டிகளில் கலந்து கொள்வதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார் நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனபெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு

    அரவேணு,

    கோத்தகிரி ரூட் பள்ளியில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சார்பில் ஆங்கில பள்ளிகளுக்கான தேசிய மகளிர் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, மராட்டியம், உ.பி, மேற்குவங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சார்ந்த அணிகள் பங்கேற்றன.

    ஆண்களுக்கான கைப்பந்து இறுதிப் போட்டியில் ஏற்கனவே பஞ்சாப், பீகார் அணிகள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் பெண்கள் கைப்பந்து இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதலாவதாக 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி மராட்டிய அணியை வீழ்த்தியது

    17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி 25-23, 25 -13 என்ற புள்ளிக் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.

    19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தமிழ்நாடு, மேற்கு வங்காள அணிகள் பங்கு பெற்றன. இதில் தமிழ்நாடு அணி 25 -18 25க்கு 17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய வாலிபால் வீராங்கனை பவுலினபிரிஷா, மேற்குவங்காள கவுன்சில் மேற்பார்வையாளர் சைலேஷ்பாண்டே, ஜூட்ஷ் பள்ளி நிர்வாகிகள் தன்ராஜன், சாம்ஜத், சரோ ஆகியோர் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது.
    • சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

    சேலம்:

    சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி அமைப்பு ஆகியவை சார்பில் மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதியில் ஆண்கள் பிரிவில் ஏ.வி.எஸ். கல்லூரி அணி முதல் இடத்தை வென்றது. வி.வி.சி. அணி 2-வது இடமும், சாய்டிரைலர்ஸ் அணி 3-வது இடமும், ஓமலூர் கொங்குபட்டி அணி 4-வது இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி வென்றது. சக்தி கைலாஷ் கல்லூரி அணி 2-வது இடத்தையும், ஆத்தூர் பாரதியார் பள்ளி அணி 3-வது இடத்தையும், சென்னை மினிஸ்போர்ட்ஸ் அணி 4-வது இடத்தையும் பெற்றன.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா கலந்து கொண்டு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.

    • மதுரையில் கைதிகளுடன், போலீசார் கைப்பந்து விளையாடினர்.
    • கைதிகள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கைப்பந்து விளையாடும் கைதிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.

    • அணுமின் நிலையத்தில் வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • போட்டியில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வட மாநில புலம்பெயர் தொழி லாளர்கள் ஆயிரக்கணக்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    அண்மையில் திருப்பூரில் வாட்ஸ் அப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து வட மாநில தொழிலாளர்களுக்கு பாது காப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதனையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், புலம்பெயர் தொழி லாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்தும் அச்சம் தவிர்த்தும் அறிவுரை வழங்கினார்

    இந்நிலையில் கூடங்குளத்தில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பும், அச்ச உணர்வை தவிர்க்கும் விதமாக கைப்பந்து போட்டி நடத்தினர்.

    இதில் காவல்துறை அணியும், வடமாநில தொழிலாளர்கள் அணியும் விளையாடின. இதில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அணிகளுக்கு டி.எஸ்.பி.யோகேஷ்குமார் பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு குறித்து பேசிய கூடன்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ எந்த நேரமும் தொடர்பு கொள்ள தொடர்பு செல்போன் எண் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம், இரண்டாம் நிலை காவலர் பாலகிருஷ்ணன்,போலீஸ் ஏட்டு முத்துபாண்டி, குற்ற புலனாய்வுப் பிரிவு லிங்கசேகர், உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது
    • இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    சேலம்:

    இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாசல பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    தமிழ்நாடு அணி சார்பில் சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி பாரதியார் கலை அறிவியல் கல்லூரி மாணவி கார்த்திகா, ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்திஷா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதனை தொடர்ந்து அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் சாதனை படைத்த 2 வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று அழகாபுரத்தில் நடந்தது. இதில், சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சேலத்தை சேர்ந்த 2 வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவர் ராஜாராம், கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், கல்லூரியின் நிறுவனர் டாக்டர் இ.எம். அப்துல்லா பிறந்த நாளை முன்னிட்டும் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மாணவ-மாணவிகளும் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு துறைகளிலும் இணைத்துக் கொண்டு முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவ-மாணவிகள் தனக்கென்று தனித்துவம் வாய்ந்த விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

    செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் முகம்மது நபி கலந்து கொண்டார். கைப்பந்துப் போட்டிகளில் 18 அணிகளை சேர்ந்த வீரர்களும், கிரிக்கெட் போட்டிகளில் 17 அணிகளை சேர்ந்த வீரர்களும், மாவட்ட அளவிலான பெண்கள் பிரிவு கைப்பந்து போட்டிகளில் 7 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

    கைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை செயின்ட்ஜோசப் பொறியியல் கல்லூரியும், பெண்கள் பிரிவில் ராமநா தபுரம் வேலுமனோகரன் கலைக்கல்லூரியும் கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் போட்டியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி கோப்பையை வென்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு சிறப்பு விருந்தினர் ரியாஸ் முகம்மது நபி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 2-வது இடமும், ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 3-வது இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

    இதற்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற சேலம் மாவட்ட அணியில் இடம்பிடித்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு வழங்கினார்.

    இதில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், இணை செயலாளர்கள் சீனிவாசன், வடிவேல், வேங்கையன், நிர்வாகி நந்தன், தொழில் அதிபர் விஜயராஜ், பயிற்சியாளர் அருள் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×