என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மஸ்கட்டில் நடைபெற்ற ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுகல் வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
    சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் மார்கஸ் பிரைட்டாசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

    37 வயதான தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் 2010-ம் ஆண்டு எகிப்து ஓபனை வென்ற பிறகு சொந்தமாக்கிய முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.

    முதல் செட்டை 6-11 என இழந்த சரத் கமல் 2-வது செட்டில் 3-7 என பின்தங்கியிருந்தார். பின்னர் 9 புள்ளிகளில் 8-ஐ பெற்று 11-8 என கைப்பற்றினார். அதன்பின் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 29-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்க அந்நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தது.

    அதேபோல், ஏப்ரல் 5-ம் தேதி இரு அணிகளும் பங்கேற்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் நடைபெற இருந்தது.  ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.

    ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வருகிற 24-ந்தேதி தொடங்க இருந்து உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் கோப்பை ஒருநாள் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
    கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான எஞ்சிய 2 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
    கொல்கத்தா:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. இரு அணிகளும் தர்மசாலாவில் மோத இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    எஞ்சிய 2 ஆட்டங்கள் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான எஞ்சிய 2 போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.

    ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த முதலில் திட்டமிட்டனர். பின்னர் தொடரை ரத்து செய்வதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    தென்ஆப்பிரிக்க வீரர்கள் லக்னோவில் உள்ள ஓட்டல் அறையில் முடங்கி கிடந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக அவர்கள் எங்கும் செல்லவில்லை. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணி லக்னோவில் இருந்து இன்று கொல்கத்தா சென்று அங்கிருந்து துபாய் வழியாக தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர்.

    கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,500 பேர் வரை பலியாகி உள்ளனர். 1.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரசால் உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் உள்ளன.

    பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதிவரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து குறைந்த அளவிலான ஆட்டங்கள் நடைபெறுமா? என்பது பின்னர் தெரியவரும்.

    இந்தியாவில் கொரோனாவுக்கு 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

    இந்த நிலையில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மக்கள் கடைபிடிக்க தவறுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த டெஸ்ட் வீரரான அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

    கொரோனா முன் எச்சரிக்கையை சென்னை மக்கள் தவிர்க்கிறார்கள். மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கூறப்பட்டதை சென்னை மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

    சென்னையில் நிலவும் கடுமையான வெப்ப நிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என்று மக்கள் நினைத்து இருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என நம்பிக்கை கொண்டு இருக்கலாம்.

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.
    உங்களது குடும்பத்தினருடன் நேரத்தை உற்சாகமாக செலவிடுங்கள். இத்தகைய வாய்ப்பு எப்போதும் கிடைக்காது என்று அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி கூறி உள்ளார்.
    ஸின்ஹூகா:

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் 32 வயதான லயோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் மெஸ்சி, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஒவ்வொருவருக்கும் இது சிக்கலான காலக்கட்டம். கொரோனா பரவலால் நாம் கவலை அடைந்துள்ளோம். உடல் ஆரோக்கியமே எப்போதும் முதலில் முக்கியம். சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம்தான் நாம் கொரோனாவை எதிர்த்து போராட முடியும். நாம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருங்கள்.

    உங்களது குடும்பத்தினருடன் நேரத்தை உற்சாகமாக செலவிட அற்புதமான வாய்ப்பு இது. இத்தகைய வாய்ப்பு எப்போதும் கிடைக்காது. தற்போதைய மோசமான சூழல் விரைவில் மாறும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரத்து செய்யப்பட்டாலும் பரவாயில்லை என நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் ஏப்ரல் 15-ந்தேதி வரை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்பின்பும் நிலைமை கட்டுக்குள் வராவிடில் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இதுகுறித்து கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக தியாகம் பண்ணக்கூடியது அல்ல மனித உயிர். இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் நிலைமை கட்டுக்குள் வராவிடில் போட்டியை நடத்தக்கூடாது.

    ஒரு மனித உயிரைக்கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. ஐபிஎல் ரத்து செய்யப்பட்டு இறுதியில் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என்றால் அது மதிப்பிற்குரியதாகும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. வருந்துவதை விட பாதுகாப்பு சிறந்தது’’ என்றார்.
    ரஞ்சி டிராபி கோப்பையை முதன்முறையாக வென்ற சந்தோசத்தில் சவுராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
    ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் மோதின. இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கு முன் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. முதன்முறையாக உனத்கட் தலைமையில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற கையோடு உனத்கட் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அவருக்கு புஜாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி 113 ரன்கள் விளாச லாகூர் குவாலண்டர்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இன்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான மொயீன் அலி மற்றும் ஜீஷன் அஸ்ரப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மொயீன் அலி 1 ரன்னிலும், அஷ்ரஃப் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 29 பந்தில் 42 ரன்களும், ரவி போபரா 33 ரன்களும் அடித்தனர். குஷ்தில் ஷா ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 70 ரன்கள் விளாச முல்தான் சுல்தான்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது.

    பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  இலக்குடன் லாகூர் குவாலண்டர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பஹர் ஜமான் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஹர் ஜமான் 35 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஆனால் கிறிஸ் லின் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் 12 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 113 ரன்கள் அடிக்க 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கராச்சி குவாலண்டர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியை தகவல் ஏதுமின்றி ரத்து செய்ததால் கங்குலி மீது மம்தா பானர்ஜி அதிருப்தியில் உள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. முதல் போட்டி 12-ந்தேதி இமாச்சால பிரதேசத்தில் நடக்க இருந்தது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    2-வது போட்டி லக்னோவிலும், 3-வது போட்டி கொல்கத்தாவிலும் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக 2-வது மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி ரத்து செய்தது.

    இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டி எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி மீது மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘கவுரவ் கங்குலியுடன் எல்லா விஷயங்களும் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். அப்படி ஏதும் செய்யவில்லை. கொல்கத்தாவில் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொல்கத்தா போலீஸ் தலைமையிடமாவது தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

    மாநில தலைமை செயலாளர் அல்லது உள்துறை செயலாளர் அல்லது போலீஸ் கமிஷனர் ஆகியோரில் ஒருவரிடமாவது ஏன் சொல்லியிருக்கக் கூடாது?. ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதன்பிறகு எங்களுக்கு தெரிவித்தால் என்ன அர்த்தம். நாங்கள் உங்களிடம் போட்டியை ரத்து செய்ய கேட்கவில்லை. இந்த சூழ்நிலையில் நீங்கள்  என்ன செய்து இருப்பீர்கள்?’’ என்றார்.
    2018-19 டெஸ்ட் தொடரின்போது பும்ரா பந்தை எப்படி எதிர்கொள்வது குறித்து யோசித்து யோசித்து தூக்கத்தை இழந்தேன் என்று ஆரோன் பிஞ்ச் நினைவு கூர்ந்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பிஞ்ச். ஒயிட் பாலில் சிறப்பாக விளையாடும் இவரால், ரெட் பந்தில் (டெஸ்ட் போட்டி) சிறப்பாக விளையாட முடியவில்லை.

    2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் அரைசதத்துடன்  டெஸ்டில் அறிமுகம் ஆனார். அதன்பின் 2018-19-ல் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடியது. இந்த தொடரை இந்தியா 2-1 என வென்றது.

    மூன்று டெஸ்டில் ஆரோன் பிஞ்ச் 97 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பிறகு இவரால் டெஸ்ட் போட்டியில் இடம் பெற முடியாமல் போனது. இந்தத் தொடரின்போது பும்ரா பந்தை எப்படி சந்திப்பது என யோசித்து யோசித்து தூக்கத்தை இழந்துள்ளேன் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘இந்தத் தொடரில் நான் ரன்கள் அடிக்க திணறினேன். தொடக்க வீரராக களம் இறங்கிய நான், ரன்கள் அடிக்க தொடர்ச்சியாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் இரவு நேரத்தில் எழுந்து, நாளை காலை பும்ரா பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்று நினைப்பேன். அவர் என்னை அவுட்டாக்கியது வேடிக்கையாக இருக்கும். அதேபோல் புவனேஷ்வர் குமார் என்னை அடிக்கடி அவுட்டாக்கியதும் இரவு எழுந்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வந்த தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
    பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    போட்டி இறுதி கட்டத்தை எட்டுவிட்டதால் நாட்களை குறைத்து தொடரை முடித்துவிட திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள இதற்கிடையில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் தொடரை இடையிலேயே முடித்துக் கொண்ட சொந்த நாடு திரும்பி வருகிறார்கள்.

    இந்நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் சொந்த நாடு திரும்பியுள்ளார். இவருக்கு முன் 13 வீரர்கள் சொந்த நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னால் இதை நம்ப முடியவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக நான் பாகிஸ்தானில் இருந்து சொந்த நாடு திரும்ப வேண்டியதுள்ளது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ரசிகர்கள் அளித்த ஆதரவுக்காக நன்றி சொல்ல முடியாது.

    நீங்கள் அற்புதமான ஆதரவை கொடுத்தீர்கள். ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் பாகிஸ்தான் திரும்புவேன் என்று நம்புகிறேன். ஆரோக்கியமாக இருங்கள்.. உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள்’’ என்றாார்.
    மோர்தசா இடத்தை நிரப்புவது கடினம் என்று வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மோர்தசா. கடந்த வாரம் இவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிம் இக்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மோர்தசா இடத்தை நிரப்புவது கடினம் என்று தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘மோர்தசா உடன் நெருங்கிய தொடர் இருந்ததால் நான் அதிர்ஷ்டசாலி. அவரை அருகில் இருந்து பார்த்த நான், இணைந்து ஏராளமான போட்டிகளில் விளையாடிள்ளோம்.

    மோர்தசா எப்படி சிந்திப்பார். முடிந்த வரை அவரிடம் இருந்து அதை எப்படி பெற்றுக் கொள்வது என்பது குறித்து எனக்குத் தெரியும். ஆனால், அவரது இடத்தை நிரப்புவது மிகக்கடினம். அவரிடம் இருந்து நேர்மையான கருத்துக்களை எடுத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் திணறினால், ஆலோசனை கேட்கும் முதல் நபர் அவராகத்தான் இருப்பார்’’ என்றார்.
    ×