என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவாவில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    கோவா:

    6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    லூசியன் கோயன் தலைமையிலான சென்னை அணி லீக் சுற்று முடிவில் 4-வது இடம் பிடித்தது. 2 ஆட்டங்கள் கொண்ட அரையிறுதி சுற்றில் சென்னை அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    ராய் கிருஷ்ணா தலைமையிலான கொல்கத்தா அணி லீக் ஆட்டம் முடிவில் 2-வது இடம் பிடித்ததுடன், அரையிறுதி சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை வெளியேற்றி இறுதிப்போட்டியை எட்டியது.

    2015, 2017-18-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற சென்னை அணி இந்த சீசனில் லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் 0-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டது. ஆனால் அடுத்த லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது. சென்னை அணியில் வல்ஸ்கிஸ் (14 கோல்கள்), கிரிவெல்லாரோ (7 கோல்கள்), சாங்தே (7 கோல்கள்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் தூண்களாக திகழ்கிறார்கள்.

    2014 மற்றும் 2016-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணியில் அதிக கோல் அடித்த ராய் கிருஷ்ணா (15 கோல்கள்), டேவிட் வில்லியம்ஸ் (7 கோல்கள்), எடு கார்சியா (5 கோல்கள்), ஜாவியர் ஹெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். சென்னை, கொல்கத்தா அணிகள் இறுதிப்போட்டியில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை இரு அணிகளும் தங்களது இறுதிப்போட்டியில் தோல்வி கண்டது கிடையாது. 3-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இறுதிப்போட்டி ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஓவன் கோய்லே அளித்த பேட்டியில், ‘கொல்கத்தா அணி மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது. அந்த அணி மிகவும் திறமையான வீரர்களை கொண்டதாகும். நாங்கள் எப்பொழுதும் போல் எங்கள் பாணியிலேயே விளையாடுவோம். ஏனெனில் அதனை வைத்து தான் நாங்கள் நிறைய வெற்றிகளை பெற்றுள்ளோம். எங்களுக்கு நெருக்கடி இருப்பது உண்மை தான். அதேசமயத்தில் நாங்கள் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.

    கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஆன்டானியோ லோபெஸ் ஹபாஸ் கூறுகையில், ‘இறுதிப்போட்டியில் நாங்கள் உற்சாகமாக அனுபவித்து விளையாடி கோப்பையை வெல்ல முயற்சிப்போம். சில வீரர்களுக்கு இறுதிப்போட்டியில் விளையாட அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எனவே இறுதிப்போட்டியில் வாகை சூட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுவோம்’ என்றார்.

    கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை உள்ள போட்டிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால, இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் தேதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை உள்ள போட்டிகள் ரத்து செய்யப்படும் அல்லது தள்ளி வைக்கப்படும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஏப்ரல் 12ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மார்ச் 24ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

    இதேபோல் சுவிஸ் ஓபன், ஆர்லியன் மாஸ்டர்ஸ், மலேசிய ஓபன், சிங்கப்பூர் ஓபன் ஆகிய போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

    தற்போது நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டி நாளையுடன் (மார்ச் 15) முடிவடைகிறது. அதற்கு அடுத்த நாளில் இருந்து இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.
    ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணி வீரர் பெர்குசன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் தனிமை படுத்ததுப்பட்டு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அணியுடன் இணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய லூக்கி பெர்குசன் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதா? என்று பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை நான்கு நாட்களுக்கு முன் முடிவடையும் வகையில் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
    பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதன்முறையாக வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடி வருகிறார்கள்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் போட்டியை முடித்துவிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விரும்புகிறது.

    இதற்கிடையில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களை அந்தந்த நாடுகள் உடனடியாக திரும்பும்படி வலியுறுத்தியுள்ளது. இன்று முதல் கடைசி லீக் ஆட்டங்கள் வரை மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் போட்டியை நான்கு நாட்களுக்கு முன் முடிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. லீக் ஆட்டங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் என அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட், மார்ச் 18-ந்தேதி இறுதி போட்டியும், 17-ந்தேதி இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும் என அறிவித்துள்ளது.

    முன்னதாக பிளே-ஆஃப் சுற்றில் குவாலிபையர், எலிமினேட்டர் சுற்றுகள் நடைபெறும் வகையில் இருந்தது. தற்போது அது அரையிறுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
    கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை ரத்து செய்துள்ளது பிசிசிஐ.
    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நேற்று இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருந்தது. மழையால் போட்டி கைவிடப்பட்டது.

    2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி கொல்கத்தாவில் 18-ந்தேதியும் நடைபெற இருந்தது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டியை ரசிகர்கள் யாரும் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் மாநில அரசுகள் பொதுமக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளை பாதுகாப்பு காரணத்திற்காக ரத்து செய்து வருகிறது.

    இன்று லக்னோ வந்த இந்திய வீரர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். டெல்லி அரசு ஐபிஎல் போட்டிக்கு அனுமதி அளிக்காது என்று கூறியிருந்தது. இதனால் ஐபிஎல் போட்டியை ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நெருக்கடி அதிகமாவதை உணர்ந்த பிசிசிஐ இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான எஞ்சிய இரண்டு போட்டிகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்திற்குள் விளையாடிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது நியூசிலாந்து.
    நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ரசிர்களுக்கு அனுமதி இன்றி பூட்டிய மைதானத்திற்குள் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.

    இன்று சிட்னியில் முதல் ஆட்டம் நடைபெற்றது. ரசிகர்கள் யாரும் இன்றி கேலரிகள் வெறிச்சோடி கிடந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் (67), ஆரோன் பிஞ்ச் (60), லபுஸ்சேன் (56) ஆகியோரின் அரைசதங்களால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்டும் பெர்குசன், சான்ட்னெர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 259 ரன்கள்  அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் (40), விக்கெட் கீப்பர் டாம் லாதம் (38) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 41 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த நியூசிலாந்து 187 ரன்னில் சுருண்டது.

    இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும் ஹசில்வுட் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    27 ரன்கள் அடித்ததுடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 2-வது போட்டி சிட்னியில் 15-ந்தேதியில் 3-வது மற்றும் கடைசி போட்டி ஹோபர்ட்டில் 20-ந்தேதியும் நடக்கிறது.
    இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணியை உடனடியாக சொந்த நாடு திரும்புமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுத்தியுள்ளது.
    இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையில் கொரோனா வைரஸின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தள்ளி வைக்கப்படுகிறது என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக சொந்த நாடு திரும்ப வீரர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

    ஆகவே, இன்றைய ஆட்டத்தை உடினடியாக ரத்து செய்துவிட்டு சொந்த நாடு திரும்ப இருக்கின்றனர் இங்கிலாந்து வீரர்கள். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த 9-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 425 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வசவாதா சிறப்பாக விளையாடி 106 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் சுமார் இரண்டரை நாட்கள் பேட்டிங் செய்தன.

    அதன்பின் பெங்கால் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் பெங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்திருந்தது. மஜும்தார் 58 ரன்களுடனும், நந்தி 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பெங்கால் அணி 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மஜும்தார்- நந்தி ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. பொட்டி டிரா என்பது உறுதியானதால் இன்னும் 71 ரன்கள் அடித்து முன்னிலை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் விளையாடினர். அதேவேளையில் எப்படியாவது 425 ரன்னுக்குள் சுருட்டிவிட வேண்டும் என சவுராஷ்டிரா அணி களம் இறங்கியது.

    ஒருபக்கம் நந்தி நிலைத்து நின்று நம்பிக்கையுடன் பந்துகளை எதிர்கொண்டார். ஆனால் மறுமுனையில் மஜும்தார் 63 ரன்கள் எடுத்த நிலையில் உனத்கட் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அத்துடன் பெங்கால் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரத்தொடங்கியது. ஆகாஷ் தீப் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். முகேஷ் குமார் 5 ரன்னிலும், பொரேல் 1 ரன்னிலும் அவுட்டாக சவுராஷ்டிரா 381 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நந்தி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் சவுராஷ்டிரா 44 ரன்கள் முன்னிலைப் பெற்றது. போட்டி டிரா ஆவது உறுதியானதால் சவுராஷ்டிரா அணி வெற்றி உறுதியானது. 44 ரன்கள் முன்னிலையுடன் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 34 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள ஒத்துக்கொண்டனர். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    இதனால் முதன் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன் மூன்று முறை சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதன்பின் தற்போது முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது.
    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைபிடிக்க தொடங்கியுள்ளன.

    முதற்கட்டமாக டெல்லி அரசு திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை மூடியது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்க இயலாது என்று தெரிவித்தது.

    இதற்கிடையில் மத்திய அரசு ஏப்ரல 15-ந்தேதி வரை விசாக்களுக்கு தடைவிதித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்நிலையில் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி இதை டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளது.
    இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அந்த அணியின் அனைத்து வீரர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
    சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அனைத்து வகை விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் ‘செரி ஏ’. இந்த லீக்கின் முன்னணி அணியான திகழ்வது யுவென்டஸ். இந்த அணிக்காக விளையாடி வந்த டேனிலே ருகானிக்கு கொரோனா நோய் இருப்பது தெரியவந்தது.

    இதனால் யுவென்டஸ் அணி 121 வீரர்களையும் தனிமைப்படுத்த முடிவு செய்தது. வீரர்கள் மற்றும் அவர்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த அணி கேட்டுக்கொண்டுள்ளது.

    போர்ச்சுக்கலை சேர்ந்த தலைசிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கொரோனா பிரச்சினைக்கு இடையில் ரொனால்டோ, அவரது தயாரின் உடல்நலக்குறைவால் போர்ச்சுக்கல் மடேய்ரா சென்றுள்ளார். அவரது தயாராக்கு செய்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

    அதேபோன்று ரொனால்டாவுக்கும் வைரஸ் இல்லையாம். ஆனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதை போர்ச்சுக்கல் அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார். ‘செரி ஏ’ லீக்கில் விளையாடும் சம்ப்டோரியா அணியின் மனோலோ கேப்பியாடினியும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    ஏப்ரல் 3-ந்தேதி வரை அனைத்து வகை போட்டிகளும் இத்தாலியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்திய ஜோடியான அஷ்வினி - சிக்கி தோல்வியை சந்தித்தனர்.
    இங்கிலாந்தில் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இரட்டை பிரிவில் இந்தியாவின் அஷ்வினி - சிக்கி ஜோடி ஜப்பானைச் சேர்ந்த மிசாகி மட்சுடோமோ - அகாயா டகாஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய ஜோடி 13-21, 14-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய ஜோடி ஜப்பான் ஜோடிக்கு எதிராக தொடர்ச்சியாக 8-வது முறை தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா வைரஸ் பீதியில் டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என அம்மாநில துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. நீச்சல் குளம், திரையரங்குகள் உள்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூட உத்தரவிட்ட டெல்லி அரசு, தற்போது ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை.

    மத்திய அரசு சார்பில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டியிருந்தால், ரசிகர்களை அனுமதிக்காமல் போட்டியை நடத்தலாம் என அறிவித்திருந்தது.

    29-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சொந்த மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மார்ச் 30-ந்தேதி சந்திக்க இருந்தது.
    ×