என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பெற்றிருக்கும் பாகிஸ்தான், இதுவரை தொடர் குறித்த இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கு முன் ஆசிய அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்தால் தொடர் பொதுவான இடத்தில் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

    மே மாதத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தால் அதன்பின் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். உலக கோப்பைக்கு முன் சற்று இடைவெளி கிடைத்தால் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடர் குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவரான எஹ்சான் மாணி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து இதுவரை ஆலோசனை நடத்தப்படவில்லை. எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. ஆசிய கிரிக்கெட் கமிட்டில் சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறது. அதனைத் பொறுத்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-க்கு தள்ளி வைக்கப்பட்டதன் காரணமாக உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் 2022-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருந்ததால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    அடுத்த வருடம் ஜூலை மாதம் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது ஒலிம்பிக் போட்டி 8-ந்தேதி வரை நடைபெற இருப்பதால் உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் 2022-க்கு மாற்றப்பட்டுள்ளது.

    விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு போட்டிக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒருங்கிணைப்பார்கள் தெரிவித்துள்ளனர்.
    உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுகிறது.
    லண்டன்:

    கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல விளையாட்டுப் போட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலான சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கின்றன.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா வான ஒலிம்பிக் போட்டி இந்த வைரஸ் காரணமாக ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஐரோப்பிய கால்பந்து ஆட்டமும் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இரு நாடுகள் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் பாதியில் ரத்தானது. பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியும் ஏப்ரல் 15- ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ரத்தாகிறது. இதேபோல பல போட்டிகளும் பாதிக்கப்பட்டன.

    டென்னிஸ் போட்டிகளில் பிரசித்தி பெற்றது கிராண்ட் சிலாம் போட்டிகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்ன் நகரில் ஜனவரிபிப்ரவரி மாதம் நடத்தப் பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்ச் ஓபன் போட்டி செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதை ஜெர்மன் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் தெவித்தனர். லண்டன் போட்டி அமைப்பாளர்கள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நாளை அறிவிக்கிறார்கள்.

    முன்னதாக விம்பிள்டனை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ மாட்டோம் என்று போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர். தற்போது கொரோனாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதால் வேறு வழியில்லாமல் ரத்தாகிறது.
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு குறிப்பிடத்தகுந்த தொகையை விராட் கோலி, அனுஷ்கா சர்மா வழங்கியுள்ளனர்.
    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் பிரதமர் மற்றும் மராட்டிய முதல்-மந்திரி ஆகியோரது பொது நிவாரண நிதிக்கு குறிப்பிட்ட தொகையை தானும், அனுஷ்காவும் வழங்கியுள்ளதாக கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதால் தாங்கள் எவ்வளவு தொகை வழங்கினோம் என்ற விவரத்தை கோலி வெளியிடவில்லை.

    இதேபோல் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மாநிலங்களவை எம்.பி.க்கான தனது ஒரு மாத சம்பளத்தை (ரூ.1 லட்சம்) வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகர் தன் பங்குக்கு ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளார். இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) ஊழியர்கள் தங்கள் 3 நாள் சம்பளமான ரூ.76 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தான் விளையாடிய காலத்தில் சிறந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தான் விளையாடிய காலத்தில் சிறந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவரது கனவு அணியில் மேத்யூ ஹைடன், மைக்கேல் சிலாட்டர், ரிக்கிபாண்டிங், மார்க்வாக், ஆலன் பார்டர் (கேப்டன்), ஸ்டீவ் வாக், ஆடம் கில்கிறிஸ்ட், டிம் மே, கில்லெஸ்பி, மெக்ராத், புரூஸ் ரீட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ‘என்னுடன் விளையாடிய வீரர்களில் இருந்து தான் இந்த அணியை தேர்வு செய்துள்ளேன். அதனால் தான் ஆஸ்திரேலியாவின் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை’ என்று வார்னே விளக்கம் அளித்தார். ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக் மேட்ச் வின்னர் என்பதை விட பல போட்டிகளில் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய வீரராக திகழ்ந்தார்’ என்றும் வார்னே குறிப்பிட்டார்.
    கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.
    மும்பை:

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி கடும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம் எனவும், அதை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

    இதேபோல் மாநில அரசுகள், அந்தந்த மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். 

    பிரதமரின் நிவாரண நிதிக்கு 45 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், Feeding India மற்றும் Welfare Of Stray Dogs ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கியிருப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி குறித்து வாசிம் ஜாபர் ருசிகர தகவலை வெளியிட்டுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபரிடம் டோனி குறித்து உங்களது மறக்க முடியாத நினைவு சொல்ல முடியுமா? என்று ரசிகர் ஒருவர் டுவிட்டர் மூலம் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஜாபர் கூறுகையில், ‘அப்போது டோனி இந்திய அணிக்குள் நுழைந்து ஒன்றிரண்டு ஆண்டு ஆகியிருந்தது. ஒரு சமயம் டோனி என்னிடம், கிரிக்கெட் விளையாடி அதன் மூலம் ரூ.30 லட்சம் சம்பாதித்து விட்டால் போதும். ராஞ்சியில் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ்ந்து விடுவேன் என்று கூறினார். இந்த விஷயம் இன்னும் என் மனதில் உள்ளது’ என்றார்.

    2015-ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இந்திய விளையாட்டு வீரர்களிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீரராக டோனி அடையாளம் காணப்பட்டார். அப்போது பரிசு மற்றும் விளம்பரம் மூலம் அவர் 31 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.233 கோடி) வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி'ஜெனிரோவில் நடைபெற்றது.

    இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருந்ததால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் இதில் நேரடியாக பங்கேற்கலாம். இதுவரை 57 சதவீதம் பேர் தகுதி பெற்று இருந்தனர்.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அமைப்புக்குழு தலைவர் யோஷிரோ மோரி, டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்க் ஆகியோர் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    வெப்பம் குறைவாக உள்ள நேரத்தில்தான் மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளை நடத்த முடியும் என்று கவர்னர் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஜூலை மாதமே போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜூலை மாதம் 23-ந்தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் ஆகஸ்ட் 24-ந்தேதி முதல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
    டெஸ்ட் போட்டிக்கான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் உமேஷ் யாதவ், ஒயிட்பால் கிரிக்கெட்டில் இடம் கிடைக்காதது குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வருபவர் உமேஷ் யாதவ். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவருக்கு இடம் கிடைப்பதில்லை.

    இந்நிலையில் தேர்வாளர்களால் நான் ஒருநாள் போட்டிகளில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என உமேஷ் யாதவ் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘ஒருநாள் கி்ரிக்கெட்டில் ஒரு தொடர் முழுவதும் விளையாட வாய்ப்பு கிடைத்தால், நான் ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். தேர்வாளர்களால் நான் ஒருநாள் போட்டிகளில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என உணர்கிறேன்.

    ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்த பிறகு ஆறு மாதங்கள் வெளியில் இருந்தால், இது மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதுமே ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். 2015 உலக கோப்பையில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால், அதன்பின் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

    தொடர்ந்து அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது கஷ்டமாக இருக்கும். வெளியில் உட்கார்ந்து போட்டியை பார்க்கும்போது இந்த உணர்வை நான் சற்ற உணர்ந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அந்த சூழ்நிலையை புரிந்திருக்க வேண்டும். இதில் இருந்து சற்று சறுக்கினால், அது நல்லதல்ல என உணர்ந்திருந்தேன்.’’ என்றார்.
    இங்கிலிஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூல் சாம்பியனுக்கு தகுதியான அணி என மான்செஸ்டர் சிட்டி அணியின் இல்காய் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகில் உள்ள அனைத்து விளையாட்டு போட்டிகளும் இந்த மாதம் தொடக்கத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்குகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலிஷ் பிரிமீயர் லீக் போட்டிகள் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்பின் போட்டி நடக்குமா? என்பது குறித்து உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

    லிவர்பூல் 29 போட்டிகள் முடிவில் 82 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 27 போட்டிகள் முடிவில் 57 புள்ளிகள் பெற்றுள்ளன. மீதமுள்ள 9 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துவிடும். லிவர்பூல் கடைசியாக 1990-ல் சாம்பியன் பட்டம் வென்றது. 30 வருடங்கள் கழித்து மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல இருக்கிறது.

    ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டி தொடருமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை 2019-2020 சீசன் இத்துடன் முடிவடைந்தால் லிவர்பூல் சாம்பியன் பட்டத்தை பெற தகுதியான அணி என மான்செஸ்டர் சிட்டி அணியின் மிட்பீல்டர் இல்காய் குண்டோகன் தெரிவித்துள்ளார்.

    ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் இது சரியானது. ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் நியாயமாக இருக்க வேண்டும்’’ என மிட்பீல்டர் குண்டோகன் தெரிவித்துள்ளார்.
    ஒயிட் பால் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேர ஓவர்களை வீசுவதில் யார் சிறந்தவர்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பதில் அளித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்கள்.

    ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் இடம் ஒரு ரசிகர் ‘‘கடைசி ஓவரில் எதிரணி 8 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், நீங்கள் அந்த ஓவரை வீச பும்ராவை தேர்வு செய்வீர்களா?, அல்லது மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்வீர்களா?’’ என்று கேட்டார்.

    அதற்கு ஆரோன் பிஞ்ச் ‘‘இரண்டு பேரில் ஒருவரை!!!. இரண்டு பேரும் சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர்கள்’’ எனக்கூறி தப்பித்துக் கொண்டார்.
    இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பிர் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம். அதை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனடிப்படையில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

    ரெயில்வே ஊழியர்கள், ராணுவ வீரர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். நாட்டின் பெரும் தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கவுதம் கம்பிர் தன்னுடைய எம்.பி.யின் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்திற்கான நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘இந்த நேரம் நாட்டின் அனைத்து வளங்களையும் கொரோனாவிற்கு எதிரான போரில் செயல்படுத்த வேண்டும். நான் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்திற்கான நிதியில் இருந்து ஒருகோடி ரூபாயை ஒதுக்கியுள்ளேன். ஏற்கனவே என்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளேன். நாம் ஒன்றாக நிற்போம்...’’ எனத் தெரிவித்துள்ளார்.
    ×