search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய கோப்பை 2020
    X
    ஆசிய கோப்பை 2020

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: பாகிஸ்தான்

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பெற்றிருக்கும் பாகிஸ்தான், இதுவரை தொடர் குறித்த இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கு முன் ஆசிய அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்தால் தொடர் பொதுவான இடத்தில் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

    மே மாதத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தால் அதன்பின் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். உலக கோப்பைக்கு முன் சற்று இடைவெளி கிடைத்தால் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடர் குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவரான எஹ்சான் மாணி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து இதுவரை ஆலோசனை நடத்தப்படவில்லை. எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. ஆசிய கிரிக்கெட் கமிட்டில் சூழ்நிலையை ஆராய்ந்து வருகிறது. அதனைத் பொறுத்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
    Next Story
    ×