என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் லீக்குக்காக ஆசிய கோப்பை போட்டி அட்டவணையை மாற்ற சம்மதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    உலகின் மிகப்பெரிய பணக்கார டி20 கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் தொற்றால் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போனால் அக்டோபர்-நவம்பரில் நடத்தப்படலாம் என்ற கணிப்பு உள்ளது.

    உலக கோப்பைக்கு முன் ஆசிய அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் தொடரை நடத்தும் உரிமம் பெற்றுள்ளது.

    கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு போட்டிக்கு தயாராகும் நிலை ஏற்பட்டால் ஐபிஎல் போட்டிக்காக ஆசிய கோப்பை போட்டி அட்டவணையை எக்காரணம் கொண்டும் மாற்ற விடமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சிஇஓ வாசிம் கான் கூறுகையில் ‘‘ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும். இதுதான் எங்களது நிலை. இதில் உறுதியாக இருக்கிறோம். ஒருவேளை கொரோனா தொற்றால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே அந்த தேதியில் நடத்தப்பட மாட்டாது. ஐபிஎல் போட்டிக்காக நாங்கள் ஆசிய கோப்பை தேதியை தள்ளி வைக்க சம்மதிக்கமாட்டோம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் - டிசம்பர் மாதத்திற்குச் செல்லலாம் என சிலர் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்த வரைக்கும் அதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு நாட்டின் உறுப்பினருக்காக ஆசிய கோப்பையை உங்கள் எண்ணம்போல் மாற்றினால் அது சரியல்ல. அதற்கு எங்களுடைய ஆதரவு இருக்காது’’ என்றார்.
    புவனேஷ்வர் குமார், ரஷித் கானுடன் சிறந்த பந்து வீச்சு குழுவை கொண்டுள்ள நாங்கள்தான் சிறந்த டெத் பவுலிங் அணி என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. 2016 சீசனை டேவிட் வார்னர் தலைமையிலான  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்றது. அந்த அணியில் புவனேஷ்வர் குமார், ரஷித் கான் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    புவனேஷ்வர் குமார் இரண்டு முறை அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்காக பர்பிள் தொப்பியை வென்றுள்ளார். தொடர்ந்து பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

    இந்நிலையில் எங்கள் அணிதான் டெத் பவுலிங்கில் சிறந்தது என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘நாங்கள் சிறந்த அணியை பெற்றுள்ளோம். எங்களது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். பந்து ஸ்விங் செய்து தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும், அநேகமாக தலைசிறந்த டெத் பவுலிங்கையும் கொண்ட அணியாக திகழ்கிறோம்’’ என்றார்.

    கடந்த சீசனில் 12 போட்டிகளில் டேவிட் வார்னர் 692 ரன்கள் குவித்தார். பேர்ஸ்டோவ் 10 போட்டிகளில் 445 ரன்கள் விளாசினார். இரண்டு பேரும் உலக கோப்பை தொடருக்கான முகாமுக்கு சென்றதால் இறுதிக்கட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை மட்டுமே சார்ந்திருப்பதால் தற்போதைய இந்திய அணியிடம் தன்னம்பிக்கை இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியை தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். 95 சதவீதம் போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிட்டால் ஐந்து சதவீதம் போட்டியை வெற்றிகரமாக கொண்டும் செல்லும் தன்னம்பிக்கை மற்ற வீரர்களிடம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தற்போதுள்ள இந்தியா விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு பேரை சார்ந்தே உள்ளது. சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அதிகப்படியான நம்பிக்கையில் இல்லை. ரோகித் சர்மாவும் விராட் கோலியும் ஆட்டமிழந்து விட்டால் 70 சதவீத போட்டி நம் கையில் இருந்து நழுவி விடுகிறது. இதற்கு தன்னம்பிக்கை இல்லாததுதான் காரணம்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மூன்று மாதங்கள் வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது போட்டி நடைபெறும் என்று தெரியாத நிலை உள்ளது. தற்போதைய நிலையில் ஐபிஎல் 2020 சீசன், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுமா? என்பதுதான் மில்லியன் கேள்வி.

    ஐபிஎல் போட்டி மார்ச் 29-ந்தேதியில் இருந்து மே 24-ந்தேதி வரை நடைபெற இருந்தது. தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அங்கு செப்டம்பர் மாதம் வரை நாட்டின் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போனால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால் ஐசிசி உலக கோப்பையை நடத்த ஆர்வமாக உள்ளது. இந்நிலையில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போகலாம். அதற்கு ஏற்ற வகையில் தயாராகி வருகிறோம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் அல்லது மூன்ற மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது நினைக்கிறேன். நம்மால் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியும். அது ரசிகர்கள் கூட்டத்துடன் அல்லது கூட்டம் இல்லாமலும் இருக்கலாம். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.

    ரசிகர்கள் யாருமின்றி நாங்கள் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினோம். முதல் நான்னு அல்லது ஐந்து ஓவர்கள் விசித்திரமாக இருந்தது. ஆதன்பிறகு நாங்கள் வழக்கமான எங்களது வேலையில் கவனம் செலுத்தினோம்’’ என்றார்.
    கொரோனா தாக்குதலின் தீவிரம் குறையாத காரணத்தால் இங்கிலாந்தில் ஜூலை 1-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. மே மாதத்திற்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என இங்கிலாந்து அரசு நினைத்தது. இதனால் மே 28-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டி ஏதும் நடக்காது என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.

    ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் சகஜ நிலைக்கு வர இன்னும் அதிக காலம் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஜூலை 1-ந்தேதி வரை கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடக்காது என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

    இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 ஆயிரத்து 738 பேர் உயிரிழந்துள்ளனர்.
    கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டர் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
    கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவரும், மாயாஜால பேட்டிங் மூலம் எண்ணற்ற சாதனைகளை தன்வசப்படுத்தியவருமான இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விட்டாலும், அவரது புகழ் இன்னும் சற்றும் குறையாமல் கோகினூர் வைரம் போல் ஜொலித்து கொண்டுதான் இருக்கிறது.

    சரித்திர நாயகன் சச்சின் தெண்டுல்கருக்கு 46 வயது முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) 47-வது வயது பிறக்கிறது. வழக்கமாக தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடும் தெண்டுல்கர், கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே இன்னல்களை சந்தித்து வருவதால் இந்த முறை தனது பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று தெரிவித்து விட்டார்.

    ஆனால் கிரிக்கெட் பிரபலங்கள் டுவிட்டர் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் எனக்கு பதிலாக டோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வேதனை அடைந்தேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதலாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் 2008-ம் ஆண்டில் நடந்தபோது, நான் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது இந்திய அணிக்காக ஆடிக்கொண்டிருந்த நான், தமிழகத்தின் முன்னணி வீரராக இருந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நம்பினேன். அவர்கள் என்னை கேப்டனாக நியமிப்பார்களா? இல்லையா? என்பது மட்டுமே எனக்குள் அப்போது எழுந்த கேள்வி.

    ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் முதல் வீரராக விக்கெட் கீப்பர் டோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (தற்போதைய இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.11.30 கோடி) ஏலம் எடுத்தனர். அச்சமயம் டோனி எனது பக்கத்தில்தான் (ஆஸ்திரேலியாவில்) உட்கார்ந்து இருந்தார். தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யப்போகிறது என்பதை என்னிடம் கூட அவர் சொல்லவில்லை.

    ஒரு வேளை அவருக்கு முன்கூட்டி தெரியாமல் இருந்திருக்கலாம். சென்னை அணி நிர்வாகம் எனக்கு பதிலாக டோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வேதனை அடைந்தேன். சில சீசன்களுக்கு பிறகு சென்னை அணிக்காக எடுப்பார்கள் என்று நினைத்தேன். 13 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அழைப்புக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.
    ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தால் நன்றாக இருக்காது என ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
    கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவரும், மாயாஜால பேட்டிங் மூலம் எண்ணற்ற சாதனைகளை தன்வசப்படுத்தியவருமான இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விட்டாலும், அவரது புகழ் இன்னும் சற்றும் குறையாமல் கோகினூர் வைரம் போல் ஜொலித்து கொண்டுதான் இருக்கிறது.

    சரித்திர நாயகன் சச்சின் தெண்டுல்கருக்கு 46 வயது முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) 47-வது வயது பிறக்கிறது. வழக்கமாக தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடும் தெண்டுல்கர், கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே இன்னல்களை சந்தித்து வருவதால் இந்த முறை தனது பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று தெரிவித்து விட்டார். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் முன்னின்று போராடும் டாக்டர்கள், நர்சு, போலீசார் ஆகியோரை பாராட்டும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    தனது பிறந்த நாளை முன்னிட்டு தெண்டுல்கர் நேற்று மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: கொரோனாவினால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

    பதில்: நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடவில்லை என்றால், அதை நமது நாட்டில் இருந்து விரட்ட முடியாது. கொரோனாவை தோற்கடிக்க ஒரு அணியாக நின்று போராட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் உள்பட அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கை கடைபிடிக்கிறோம். ஒருவருக்கொருவர் செய்யும் இந்த உதவி நன்றாக இருந்தால், நமது நாடும் நலமாக இருக்கும்.

    கேள்வி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற எவ்வளவு காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்: கிரிக்கெட் மீண்டும் எப்போது நடக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் சுகாதார அமைச்சகத்திடம் இருந்து முழுமையான ஒப்புதல் கிடைத்த பின்னர் நடக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஏனென்றால் அவர்களுக்குத்தான் அனைத்து விவரங்களும் தெரியும்.

    நாம் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக கருதி, கிரிக்கெட் விளையாடலாம் என்று நினைக்கிறோம். கிரிக்கெட் மட்டும் இல்லை, எந்த வேலையாக இருந்தாலும் சரி, இது உயிரை காப்பாற்றுவதற்கான போராட்டம். வாழ்க்கையை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்றுவதற்கு முயல வேண்டும் என்பதுதான் முக்கியம். மத்திய அரசிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்த உடன், விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்யமுடியும்.

    கேள்வி: தேவைப்பட்டால் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்தில் போட்டியை நடத்தினால் நன்றாக இருக்குமா?

    பதில்: ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் விளையாடுவது நன்றாக இருக்காது. பொதுவாக விளையாட்டு வீரர்கள் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்கும் சூழலில் விளையாடி பழக்கப்பட்டவர்கள். பவுண்டரியோ, சிக்சரோ அடிக்கும்போதும், விக்கெட் எடுக்கும்போதும் மைதானத்தில் கேட்கும் ரசிகர்களின் சத்தம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அது உணர்வுப்பூர்வமாக இருக்கும். ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் போட்டிகள் நடத்தும் சூழல் வரக்கூடாது. ஏனென்றால் வீரர்களின் உற்சாகம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

    கேள்வி: கடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு விளையாடாத மூத்த வீரர் டோனியின் எதிர்காலம் குறித்து எழும் செய்திகள் குறித்தும், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணிக்கு அவரால் திரும்ப முடியுமா? என்பது பற்றிய உங்கள் கருத்து என்ன?

    பதில்: இதுபற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

    கேள்வி: தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வம் இளம் வீரர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இத்தகைய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் டெஸ்ட் இன்னிங்சில் தனிநபர் அதிகபட்ச ரன் (400 ரன்கள் நாட்அவுட்) சாதனை முறியடிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா? அப்படி என்றால் அதனை செய்ய தகுதி படைத்த வீரர்கள் யார்?

    பதில்: நமது நாட்டில் உருவாகும் வீரர்களை முதலில் பார்க்க வேண்டும். சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்றால் முறியடிக்கலாம். இதுதொடர்பாக பிரையன் லாராவிடம் கேட்டபோது, நான் 400 ரன்கள் அடிப்பேன் என்பது எனக்கே தெரியாது என்று கூறியிருந்தார். அதாவது யாரும் திட்டமிட்டு சென்று ரன்களை குவிக்க முடியாது. நமது நாட்டில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் பெயரை அவர்கள் உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள். சாதனைகளை யாரும் சொல்லி முறியடிக்கமுடியாது. சாதனைகள் தனக்கு தானே தகர்க்கப்படுகிறது. நன்றாக விளையாடும் வீரர்கள் நமது அணியில் இப்போதும் இருக்கிறார்கள். எதிர்கால நட்சத்திரங்களாக பிரித்வி ஷா, சுப்மான் கில், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் உள்ளிட்ட திறமையான பல வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இந்திய அணியின் பெயரை மிளிரச் செய்வார்கள்.

    கேள்வி: தாங்கள் ஆடிய போது இருந்த இந்திய அணிக்கும், விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

    பதில்: வேறு அணியோடு விளையாடும் போதுதான் அணியை மதிப்பிட முடியும். நாம் மோதும் அணி எவ்வளவு பலமாக இருக்கிறார்கள்? என்பதையும் நாம் பார்க் கவேண்டும். வேறுபாடு இருக்கத்தான் செய்யும். விதிமுறைகளும் வேறுபட்டிருக்கிறது. விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டால், பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் மாறுபடும். முன்பு தவறான தீர்ப்பு அளிக்கப்பட்டால் பேட்ஸ்மேன்கள் முதலில் ஓய்வு அறையில் உட்கார வேண்டியது இருந்தது. இப்போது தவறான முடிவு என்றால், மூன்றாவது நடுவர் பேட்ஸ்மேனை காப்பாற்றிவிடுகிறார். இதேபோல் பவுலர்களும் அப்பீல் செய்து சரியான முடிவை பெற முடிகிறது.

    உதாரணமாக சிட்னியில் நடந்த போட்டியை (2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ) சொல்லலாம். அந்த போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். ரிக்கி பாண்டிங் அவுட் ஆனார். மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்திருந்தால் அந்த போட்டியை ஜெயிப்பதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். இதேபோல் ஆண்ட்ரூ சைமண்சும் அவுட்தான். ஆனால் 2 பேருக்கும் நடுவர் நாட்-அவுட் வழங்கினார். இது அப்போதைய சூழலாக இருந்தது. இப்போதைய காலக்கட்டத்தில் இதே நிலை இருந்தால் முடிவு (டி.ஆர்.எஸ். முறையை குறிப்பிட்டு) வேறு மாதிரி இருந்திருக்கும். இதுபோன்ற பல வித்தியாசங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நாம் பார்க்கவேண்டும். எந்த விதிமுறையால் பலன் கிடைத்தது, எந்த விதிமுறையால் பலன் கிடைக்கவில்லை என்பதை ஆராயவேண்டும்.

    கேள்வி: தற்போது சீனியர் வீரர்களிடம், இளம் வீரர்கள் காட்டும் மரியாதை குறைந்து விட்டதாக யுவராஜ்சிங் கூறியிருப்பது சரியா?

    பதில்: இதை யுவராஜ்சிங்தான் தெரிவிக்க வேண்டும். அவர் தெரிவித்த கருத்துக்கு, நான் எப்படி பதில் கூற முடியும். என்னை பொறுத்தவரையில் அவர் தெரிவித்தது ‘லூஸ் டாக்’. 1845-ம் ஆண்டு என்ன நடந்தது என்று கேட்டால் உங்களுக்கு தெரியுமா? நான் இல்லாத சமயத்தில் நடந்ததாக கூறப்படுவதை என்னால் எப்படி உறுதிப்படுத்த முடியும். நாம் இல்லாதபோது நடந்தது குறித்து கேட்டால் நமக்கு எப்படி தெரியும்?

    கேள்வி: ஊரடங்கு குறித்த உங்களது அனுபவம் என்ன? தற்போது வீட்டில் நேரத்தை எப்படி கழிக்கிறீர்கள்?

    பதில்: ஊரடங்கு காலக்கட்டத்தில் காலை நேரத்தில் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். செல்போன் மூலமாக அலுவலக மீட்டிங்குகளில் பங்கேற்கிறேன். மாலை நேரத்தில் சினிமா படம் பார்ப்பது, நாடகம் பார்ப்பது, குழந்தைகளோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது, என்னுடைய தாயோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது என்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறேன். காலை நேரத்தில் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவேன். இதனை மகிழ்ச்சியோடு செய்கிறேன்.

    இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் கூறினார்.

    தெண்டுல்கருக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகள்

    கேள்வி: சென்னை மைதானம் மற்றும் ரசிகர்கள் குறித்த உங்களது பார்வை?. சென்னையில் விளையாடிய காலக்கட்டத்தில் தமிழ் வார்த்தைகள் கற்று உள்ளர்களா?

    பதில்: சென்னை மைதானம் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானம். இந்தியாவிலேயே எனக்கு விருப்பமான மைதானம் அதுதான் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறேன். சென்னைவாசிகள் மிகவும் அன்பானவர்கள். எனக்கு அதிக ஆதரவு கொடுத்தவர்கள். சென்னைவாசிகளுக்கு மிகப்பெரிய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களோடு எனக்கு அளவிட முடியாத அனுபவம் உண்டு. சென்னை ரசிகர்களின் முன் பேட்டிங் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘தண்ணீர் கொடுப்பா’, ‘முன்னாடி’, ‘பின்னாடி’ என்ற கிரிக்கெட் போட்டியின் போது சொல்லப்படும் சில வார்த்தைகளை தமிழில் என்னால் சொல்லமுடியும்.
    ஜெர்மனியில் நம்பர் ஒன் லீக்கான பண்டேஸ்லிகாவை அடுத்த மாதம் நடத்த தயாராக இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் அனைத்து கால்பந்து லீக் போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பெல்ஜியம் நாட்டில் மட்டும் லீக் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. மற்ற நாடுகள் ஏதும் அறிவிக்கவில்லை. 

    ஐரோப்பியன் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு போட்டிகளை நடத்தி முடித்திட வேண்டும். இல்லையெனில் சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்தது.

    பெரும்பாலான நாடுகள் போட்டியை பற்றி நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெறும் பண்டேஸ்லிகா லீக்கின் அமைப்பாளர்கள் மே 9-ந்தேதி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அரசு அனுமதி அளித்தால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என்று பண்டேஸ்லிகா லீக்கின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    அனைத்து கிளப்புகளுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அரசு அனுமதித்தால் கொரோனா தாக்குதலுக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

    ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவில் அவதிப்படும் நிலையில் ஜெர்மனி மட்டும் அதிக அளவிலான பரிசோதனை போன்ற நடவடிக்கைகளால் ஓரளவிற்கு கட்டுக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜெர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 91 ஆயிரத்து 612 பேர் குணமடைந்துள்ளனர். 5354 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
    நெதர்லாந்து அரசு செப்டம்பர் 1-ந்தேதி வரை அனைத்து வகையான நிகழ்ச்சிகளையும் தடை செய்துள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்துள்ளது.
    பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. ஜூலை 4, 7 மற்றும் 9-ந்தேதிகளில் இந்த போட்டிகள் நடைபெற இருந்தது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெதர்லாந்து செப்டம்பர் 1-ந்தேதி வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதித்துள்ளது.

    இதனால் ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் ஒத்தி வைத்துள்ளது. ‘‘நெதர்லாந்துக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்படுகிறது என்பதை சொல்ல கவலையாக இருக்கிறது. தற்போதைய நிலையில் கிரிக்கெட்டை விட மனித உயிர்தான் முக்கியம்’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே நெதர்லாந்தில் நடைபெற இருந்த பார்முலா ஒன் கார் பந்தயமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் சேவாக், விவிஎஸ் லக்‌ஷ்மண், கங்குலி, யுவராஜ் போன்ற வீரர்கள் இல்லை என்று முகமது யூசுப் கூறியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகமது யூசுப். 45 வயதாகும் இவர் அந்த அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சதங்களுடன் 7530 ரன்களும், 288 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்களுடன் 9720 ரன்களும் அடித்துள்ளார்.

    முகமது யூசுப் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், கங்குலி, யுவராஜ் சிங், லக்‌ஷ்மண் ஆகியோருடன் விளையாடியுள்ளார். இந்நிலையில் சச்சின், டிராவிட் ஆகியோரின் தரத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மாவை ஒப்பிட இயலாது என்று என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் முகமது யூசுப் கூறுகையில் ‘‘கடந்த காலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால், மூன்று அல்லது நான்கு தரமான வீரர்கள் இருந்திருப்பார்கள். உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக் கொண்டால் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சேவாக், கங்குலி, லக்‌ஷ்மண், யுவராஜ் போன்றவர்கள் இருந்தார்கள். இந்த ஆறு பேட்ஸ்மேன்களும் ஒரு அணியில் விளையாடினார்கள்.

    தற்போதுள்ள இந்திய அணி அதுபோன்ற பேட்ஸ்மேன்கள் இல்லை. கிளாஸ் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட் உடன் தற்போதுள்ள விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களை ஒப்பிட முடியாது’’ என்றார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ரசிகர்கள் அல்லாமல் போட்டிகளை நடத்த முன்வர வேண்டும் என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை போட்டிகள் ரத்து செய்யப்பட்டள்ளன. நாட்டின் எல்லையை மூடியுள்ளதால் ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் வரை போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை.

    மற்ற நாடுகள் கொரோனா வைரசின் தாக்கம் சகஜ நிலையை எட்டும் காலத்தை எதிர்நோக்கி இருக்கின்றன. மருத்துவ வல்லூனர்கள், உலக சுகாதார மையம் இந்த தொற்று முற்றிலும் ஒழிய நீண்ட நாட்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே சோயிப் அக்தர் மற்றும் சில வீரர்கள் குறைந்தது ஒருவருடம் ஆகும் என்கிறார்கள். இந்நிலையில் இப்படியே சென்றால் அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரமீஸ் ராஜா கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மனித வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் கிரிக்கெட ரசிகர்கள் தற்போது பசியால் கஷ்டப்படுகின்றனர். இதுபோன்று நீண்ட நாட்கள் நீடித்தால் கிரிக்கெட் போர்டுகள் தாக்குப்பிடிக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

    கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாமல் அவர்களால் தொடர்ந்து சம்பளத்தை பிடித்தம் செய்ய முடியாது. அப்படி செய்தால் பேரிழப்பை ஏற்படுத்தும்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்ற கிரிக்கெட் போர்டுகளிடம் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் எப்படி நடத்தலாம், குறைந்தபட்சம் ரசிகர்கள் அல்லாமல் போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பேச வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முதல் அடியை எடுத்து வைக்க முடியும்.

    ரமீஸ் ராஜா

    எந்த கிரிக்கெட் போர்டாக இருந்தாலும் அவர்கள் பணம் செழிப்பாக வைத்திருகிறார்கள், லாக் டவுன் நேரத்தில் சம்பளத்தை கொடுக்க முடியாது எனபது பெரிய விஷயம் அல்ல. மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவது குறித்து பேசுவது நமக்கு அவசியமானது. ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் என்றாலும், ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

    வங்காளதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுகள் பாதிப்பை சந்திக்கக் கூடிய சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
    ×