என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனாவை தடுக்க நிதி வேண்டுமென்றால் எல்லையில் அத்துமீறும் செயலை நிறுத்திவிட்டு மருத்துவமனை கட்டுங்கள் என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஒழிப்பு பணிக்காக நிதி திரட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று சோயிப் அக்தர் உள்ளிட்ட சில முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு ஏற்கெனவே கிரிக்கெட் போட்டி நடத்திதான் நிதி திரட்ட வேண்டிய நிலையில் இந்தியா இல்லை என காட்டமாக தெரிவித்திருந்தார் கபில்தேவ்.

    இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கபில் தேவ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    அப்போது கபில்தேவ் கூறியதாவது:-

    உணர்ச்சிவசப்பட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும் என கூறலாம். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் முக்கியமில்லை. உங்களுக்கு நிதி வேண்டுமென்றால் எல்லையில் நடத்தும் அத்துமீறல்களை நிறுத்தங்கள். அந்தப் பணத்தை வைத்து மருத்துவமனை, பள்ளிகளை கட்டுங்கள். எங்களுக்கு நிதி தேவை என்றால் இங்கு ஏராளமான ஆன்மிக அமைப்புகள் இருக்கின்றன, அவர்கள் அரசுக்கு உதவுவார்கள்

    கொரோனா பாதிப்பை நான் வேறு மாதிரியாக பார்க்கிறேன். இப்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததுதான் பிரச்சனையா என தெரியவில்லை. நான் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பற்றி கவலைப்படுகிறேன். பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் இவர்கள் கல்வி என்னவாகும் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

    முதலில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். பின்பு, கிரிக்கெட்டோ கால்பந்தோ ஆகியவை தன்னாலே நடைபெறும்.

    இவ்வாறு கபில்தேவ் தெரிவித்தார்.
    இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இறுதி போட்டியில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என்கிறார்.
    இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து சமூகவலைத்தளம் மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதி ஆட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றேன். அதன் பிறகு மற்ற போட்டிகளில் 6-7 வெள்ளிப்பதக்கங்களை பெற்றேன். இதனால் மக்கள் என்னிடம் சிந்துவுக்கு இறுதிப்போட்டி என்றாலே பயம் வந்து விடுகிறது என்று பேசத் தொடங்கினர்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தேன். ஏற்கனவே உலக போட்டியில் 2 வெள்ளி, 2 வெண்கலம் கைப்பற்றி இருக்கிறேன். அதனால் இந்த முறை தோற்று விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன்.

    மக்கள் என்னை (வெள்ளிப்பதக்கத்தை மனதில் வைத்து) சில்வர் சிந்து என்று அழைப்பதை விரும்பவில்லை. அதனால் களத்தில் 100 சதவீதம் எனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. அதன்படியே சிறப்பாக விளையாடி உலக சாம்பியன் ஆகி, தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினேன்.

    இவ்வாறு சிந்து கூறினார்.
    உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் சந்தித்த தோல்வியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை என்று இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்தார்.
    இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் ஊரடங்கு அனுபவம் மற்றும் கிரிக்கெட் ஆட்டம் குறித்து டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    நானும், எனது குடும்பமும் பெங்களூருவில் பாதுகாப்பாக வசித்து வருகிறோம். பயிற்சியில் என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்து நேரத்தை கழிக்க முயற்சித்து வருகிறேன். தற்போது வீட்டில் நேரத்தை செலவிடுவது நன்றாகத்தான் இருக்கிறது.

    தொடர்ச்சியாக நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது இடைவெளி எப்போது கிடைக்கும் என்று நினைப்போம். ஆனால் தற்போது எங்களுக்கு பெரிய இடைவெளி கிடைத்து இருக்கிறது. இதுபோன்ற பெரிய இடைவெளியை நாங்கள் விரும்பவில்லை. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும். இவை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் என்பதை இந்த நேரம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. நீண்ட காலத்துக்கு பிறகு எனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினேன். எனவே இதனை மிகவும் சிறப்பான தருணமாக கருதுகிறேன்.

    எந்த போட்டியையாவது மாற்ற விருப்பமா? என்று கேட்டால் கடந்த ஆண்டு (2019) நடந்த உலக கோப்பை அரைஇறுதியைத்தான் சொல்வேன். அந்த தோல்வியில் இருந்து எங்கள் அணியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் இன்னும் மீளவில்லை என்று நான் நினைக்கிறேன்.

    அந்த கெட்ட கனவு இன்னும் சில நேரங்களில் எங்களை விரட்டத்தான் செய்கிறது. அந்த தோல்வி சீனியர் வீரர்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உலக கோப்பை போட்டி தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், அரைஇறுதியில் சந்தித்த தோல்வி மிகவும் கடினமானதாக இருந்தது. இன்னும் சில சமயங்களில் அந்த கெட்ட கனவுடன்தான் எழுந்திருக்கிறேன்.

    எந்தவொரு வீரருக்காக வாழ்க்கை முழுவதும் பேட் செய்ய விரும்புவீர்கள் என்று கேட்டால் விராட் கோலிக்காக என்றுதான் சொல்வேன். அவர் ஒரு சிறந்த வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். எங்களுக்கு இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. எனக்காக அவர் எதையும் கொடுப்பார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2015) சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் நான் அடித்த சதம் சிறப்பானது. அது என்னை பற்றி எனக்கு இருந்த பார்வையையே மாற்றியது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சரிவில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கு அந்த ஆட்டம் அதிக நம்பிக்கை அளித்தது. அந்த இன்னிங்சில் கிடைத்த நம்பிக்கை என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோவினால் பாதிக்கப்பட்ட ஏழை சிறுவர்களுக்கு உதவுவதற்காக, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் தான் பயன்படுத்திய பேட், ஹெல்மெட், ஜெர்சி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏலம் விட கேஎல் ராகுல் வழங்கி இருந்தார். இந்த பொருட்கள் மொத்தம் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 572-க்கு ஏலம் போனது. அதிகபட்சமாக அவரது பேட் ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 228-க்கு ஏலம் போய் இருக்கிறது.
    ஐ.பி.எல். கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பது தான் நமது கனவு என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை வேறு எந்த அணிக்கும் மாறாமல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்காக விளையாடி வருபவர், இந்திய கேப்டன் விராட் கோலி. மூன்று முறை இறுதிச்சுற்றுக்கு வந்துள்ள பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் ஏனோ அந்த அணிக்கு ஐ.பி.எல். மகுடம் எட்டாக்கனியாகவே இருக்கிறது. பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி 2016-ம் ஆண்டு சீசனில் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். தென்ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் 2011-ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார். அவரும், கோலியும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்டநேரம் கலந்துரையாடினர்.

    அப்போது விராட் கோலி அவரிடம், பெங்களூரு அணியுடனான 12 ஆண்டு கால பயணம் வியப்புக்குரியது. நம்ப முடியாத ஒன்று. நீங்கள் (டிவில்லியர்ஸ்) 9 ஆண்டுகள் எங்களுடன் இருக்கிறீர்கள். நாம் உள்பட மற்ற வீரர்கள் அனைவரின் லட்சியம் ஐ.பி.எல். கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பது தான். மூன்று முறை நெருங்கி வந்து தவற விட்டிருக்கிறோம். ஒருங்கிணைந்து அதை கைப்பற்றுவதுதான் நமது கனவு.

    ஐ.பி.எல். பயணத்தை நான் திரும்பி பார்ப்பது உண்டு. பெங்களூரு அணியை விட்டு வெளியேறும் சூழல் ஒரு போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. அவர்கள் (பெங்களூரு அணி நிர்வாகம்) என் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் வைத்திருக்கிறார்கள். ரசிகர்களின் ஆதரவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. எனவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடைசி வரை பெங்களூரு அணிக்காகவே விளையாடுவேன். ஒரு போதும் இந்த அணியை விட்டு விலகமாட்டேன். எந்த சூழ்நிலையிலும் வேறு அணிக்காக விளையாட வாய்ப்பில்லை என்றார்.

    இதே கருத்தை ஆமோதித்த டிவில்லியர்ஸ் கூறும்போது, ‘நானும் பெங்களூரு அணியை விட்டு ஒரு போதும் விலக விரும்புவதில்லை. ஆனால் தொடர்ந்து ரன்கள் குவித்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும் என்பதை அறிவேன். இந்த போட்டியின் மூலம் கிடைத்துள்ள நட்புறவு மறக்க முடியாது. இதேபோல் ரசிகர்கள் பட்டாளமும், அவர்களின் உற்சாக கரவொலியும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய விஷயங்களை இழக்க விரும்பவில்லை. பெங்களூரு அணியில் தொடர்ந்து நீடிப்பேன். அது எத்தனை ஆண்டுகள் என்பது தெரியாது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் நடக்கும் என்று நம்புகிறேன். என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்’ என்றார்.

    இருவரும் இணைந்து தாங்கள் விளையாடிய காலத்தில் சிறந்த இந்திய, தென்ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து ஆடும் லெவன் அணியை அறிவித்தனர். அந்த கனவு அணியில் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், காலிஸ், யுவராஜ்சிங், டோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ஸ்டெயின், ஜஸ்பிரித் பும்ரா, ரபடா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டனை விராட் கோலி தேர்வு செய்தார்.
    சச்சின் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று பிரெட்லீ தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலியை ஒப்பீடு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது விளையாடுவதை போன்று இன்னும் 7-8 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினால் சச்சின் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை அவரால் முறியடிக்க முடியும்.

    அதற்கு மூன்று விஷயங்களை கோலி கவனிக்க வேண்டி உள்ளது. ஒன்று திறமை. ஒரு பேட்ஸ்மேனாக கோலியிடம் நிறைய திறமை உண்டு. அதனால் இந்த விஷயத்தை நீக்கி விடலாம்.

    அடுத்து முழு உடல்தகுதியுடன் இருப்பது. இதுவும் கோலியிடம் இருக்கிறது. அடுத்து மனரீதியான பலம். அதாவது கடினமான தருணங்களையும், வெளிநாட்டில் கிரிக்கெட் ஆடும் போது குடும்பத்தினரைப் பிரிந்து இருப்பது போன்ற மனரீதியான சிரமங்களை சமாளிக்க வேண்டும்.

    திறமை, மனோபலம், உடல்தகுதி மூன்றும் ஒருங்கிணைந்து இருக்கும்போது தெண்டுல்கரின் சாதனையை அவர் கடந்து விடுவார் என்று நம்புகிறேன். தெண்டுல்கரை பற்றி மீண்டும் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தெண்டுல்கர் இங்கே கிரிக்கெட்டின் கடவுள். கடவுளை யாராவது மிஞ்ச முடியுமா? எனவே நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் தெண்டுல்கர் 100 சதங்களுடன் (ஒரு நாள் போட்டியில் 49, டெஸ்டில் 51 சதம்) முதலிடத்தில் உள்ளார். 31 வயதான விராட் கோலி இதுவரை 70 சதங்கள் (டெஸ்டில் 27, ஒரு நாள் போட்டியில் 43 சதம்) அடித்துள்ளார்.
    ஐ.பி.எல். போட்டி காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.3,700 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ,பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டு தோறும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது.

    13-வது ஐ.பி.எல் போட்டியை கடந்த மாதம் 29 ந் தேதி முதல் மே மாதம் 24-ந் தேதி வரை நடத்த திட்ட மிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15-ந் தேதிக்கு முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டால் அந்த காலகட்டத்தில் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலையே நிலவுகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.3,700 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    இதில் ஒளிபரப்பு உரிமை ரூ.3269 கோடியாகும். ஸ்பான் சர்ஷிப் மற்றும் விளம்பர வருவாய் போன்றவை அடங்கும். டைட்டில் ஸ்பான்சர் மூலம் ரூ 400 கோடியை இழக்கும். மேலும் வீரர்களின் ஹெல்மெட் விளம்பரம் செய்ய ரூ.1 கோடி, உடை முன் பக்கம் விளம்பரம் செய்ய ரூ.5 கோடி, தோள்பட்டையில் விளம்பரம் செய்ய ரூ.2.5 கோடியும் வருவாயாக கிடைக்கும். இவற்றையும் கிரிக்கெட் வாரியம் இழக்கும்.

    போட்டிகள் நடைபெறும் மாநில சங்கங்களுக்கு பார்வையாளர் கட்டணம் கிடைக்காது என்பதால் ரூ.250 கோடி வரை வருவாயை இழக்கும்.

    ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 5 முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றும், 3 முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

    2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் என கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது.

    இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் காடிச்சும், அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

    இந்நிலையில், ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் ஆர்சிபி வீரர்கள் விராட் கோலியும் டிவில்லியர்ஸும் உரையாடினார்கள். அப்போது விராட் கோலி கூறியதாவது:

    ஆர்சிபி அணியை விட்டு விலகுவது குறித்து என்னால் யோசிக்கக் கூட முடியாது. ஐபிஎல்-லில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன். ஐபிஎல்லில் விளையாடும் வரை உரிமையாளருக்காக விளையாட விரும்புகிறேன். அணியை விட்டு வெளியேறும் எந்த சூழ்நிலையும் இதுவரை இல்லை என தெரிவித்தார்.

    இதேபோல், டிவில்லியர்ஸ் கூறுகையில், நான் நிறைய ரன்கள் எடுக்க வேண்டும். எனக்கும் ஆர்சிபி அணியை விட்டு விலக விருப்பமில்லை. வருங்காலத்தில் இதன்மூலம் கிடைத்த உறவுகளையே எண்ணிப் பார்ப்போம். குறிப்பிட்ட ஆட்டத்தை அல்ல. சில அருமையான தருணங்களை எண்ணிக் கொள்வோம். அதை ஒருபோதும் இழக்கமுடியாது என்றார்.
    7 ஆண்டுகளாக வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் இறுதிச்சடங்கு செய்தார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். அவர் தற்போது கிழக்கு டெல்லி தொகுதி பா. ஜனதா எம்.பியாக இருக்கிறார்.

    காம்பீரின் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சரஸ்வதி பத்ரா (வயது 49) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்தவர். காம்பீரின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாக சரஸ்வதி வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 14-ந் தேதி டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காம்பீர் ஏற்றுக்கொண்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கடந்த 21-ந் தேதி இறந்தார்.

    இதையடுத்து ஒடிசாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு காம்பீர் தகவல் கொடுத்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக சரஸ்வதி உடலை ஒடிசாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அவரது குடும்பத்தினரும் டெல்லிக்குவர முடியவில்லை. இதனால் காம்பீரே இறுதிச்சடங்கு செய்யுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதை ஏற்று காம்பீர் தனது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணுக்கு அவரது வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்தார்.

    அவரது இந்த மனிதாபிமான செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி உள்ளனர். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானும் காம்பீரை பாராட்டியுள்ளார்.

    இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாளையொட்டி அவருடன் நடந்த ஒரு சம்பவத்தை பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் நேற்று நினைவு கூர்ந்தார்.
    லாகூர்:

    இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாளையொட்டி அவருடன் நடந்த ஒரு சம்பவத்தை பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் நேற்று நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:-

    1997-ம் ஆண்டு கனடாவில் நடந்த சஹாரா கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது புதிய யுக்தியின் ஒரு பகுதியாக சச்சின் தெண்டுல்கரை நான் வேண்டுமென்றே முதல்முறையாக சீண்டினேன். அதற்கு தெண்டுல்கர் என்னிடம் அமைதியாக வந்து, நான் உங்களிடம் ஒரு போதும் தவறாக நடந்ததில்லை. பிறகு ஏன் நீங்கள் என்னிடம் தேவையின்றி வம்பு செய்கிறீர்கள் என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதும் எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மேலும் அவர், ஒரு மனிதராகவும், வீரராகவும் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன் என்றும் கூறினார். அது எனது மனதை மேலும் உலுக்கியது. அதன் பிறகு நான் அவரை ஒரு போதும் வசைபாடியது இல்லை. அந்த ஆட்டம் முடிந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

    இவ்வாறு சக்லைன் முஷ்டாக் கூறினார்.

    அடுத்த 3 உலக கோப்பை போட்டிகளில் இரண்டிலாவது மகுடம் சூட வேண்டும் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்குடன் இன்ஸ்டாகிராமில் நடத்திய உரையாடலின் போது கூறியதாவது:-

    அடுத்து 3 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை, அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை, 2023-ம் ஆண்டில் இந்தியாவில் அரங்கேற உள்ள 50 ஓவர் உலக கோப்பை) நடைபெற இருக்கின்றன. இந்த 3 உலக கோப்பை போட்டிகளில் குறைந்தபட்சம் 2 உலக கோப்பை போட்டியிலாவது இந்திய அணி வெற்றி வாகை சூட வேண்டும். அது தான் எனது தனிப்பட்ட நோக்கமாகும்.

    2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்தில் விக்கெட்டு களை இழக்காமல் இருந்து இருந்தால், நாம் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். அந்த முதல் 10 ஓவர்கள் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்தது. நமது அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு தீர்வு காண சரியான வீரர்களை தேர்ந்தெடுப்பதும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு மிகவும் நெருக்கடியான விஷயமாகும்.

    வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். உங்களுக்கும் (ஹர்பஜன்சிங்), யுவராஜ்சிங்குக்கும், சவுரவ் கங்குலி எப்படி ஆதரவாக இருந்தார். அதனை பயன்படுத்தி கொண்டு நீங்கள் எப்படி செயல்பட்டீர்கள் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதேபோல் நாங்களும் செயல்பட வேண்டும். தற்போது யாருக்கெல்லாம் ஆதரவு அளிக்கப்படுகிறதோ? அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படும். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படாவிட்டால், அது உங்களுடைய நம்பிக்கையை பாதிக்க செய்யும். அது எனக்கும் நடந்து இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பது அவரவர் கையில் தான் உள்ளது. லோகேஷ் ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பேட்டிங்கை மறுமுனையில் இருந்து பார்க்க மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இளம் வீரரான சுப்மான் கில் திறமையான வீரர். அவர் இந்திய அணியின் எதிர்காலம். அவருக்கு வாய்ப்பு கிடைத்து, தொடர்ச்சியாக ரன்கள் சேர்த்தால் நல்ல நம்பிக்கை கிடைக்கும்.

    கிரிக்கெட் விளையாடாத சமயத்தில் டோனியை கண்டுபிடிப்பது கடினம். அவர் ரேடாரில் இருந்து மறைந்து விடுவார். யார், யாருக்கு அவரது எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ? அவர்கள் டோனி வசிக்கும் ராஞ்சிக்கு நேரில் சென்று கேட்டுக்கொள்ளுங்கள். உலக கோப்பை போட்டி தொடருக்கு பிறகு அவரை பற்றி எந்தவித செய்தியும் நான் கேள்விப்படவில்லை. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக ஜாம்பவான்களாக திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டும் ஒரு பேட்ஸ்மேனை கண்டு அஞ்சி நடுங்கியுள்ளனர்.
    இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட். இருவரும் நீண்ட காலமாக சிறந்த பந்து வீச்சு ஜோடியாக திகழ்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் புதுப்பந்தை இருவரும் பங்கிட்டு பந்து வீசினால் எதிரணி பேட்ஸ்மேன்கள் யாராக இருந்தாலும் எதிர்கொள்வது மிகமிக கடினம்.

    ஆனால் இந்த இருவருக்கும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் கிரேம் ஸ்மித் மரண பயத்தை காட்டியுள்ளார். 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சென்று விளையாடும்போது 700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அவருக்கு பந்து வீசுவது என்றாலே மரண பயம் என்றனர்.

    கிரோம் ஸ்மித் குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் ‘‘கிரேம் ஸ்மித்துதான் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை கண்டுபிடித்தேன். அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து அவருக்கு பந்து வீச ஆசைப்பட்டேன். அவரை டிரைவிங் ஷாட் அடிக்க நான் முயற்சி செய்திருந்தால், அது மாறுபட்டதாக இருந்திருக்கும். ஆனால் ஓவர் தி விக்கெட்டில் இருந்து பந்து வீசியது ஒர்க்அவுட் ஆகவில்லை. அது நம்பிக்கையற்றதாக போனது’’ என்றார்.

    ‘‘இதே பிரச்சனை முதன்முறையாக அவருக்கு எதிராக 2003-ல் விளையாடும்போது எனக்கும் இருந்தது. அந்த நேரத்தில் நான் பந்தை அவுட் ஸ்விங் மட்டுமே செய்வேன். அதாவது வலது கை பேட்ஸ்மேனுக்கு ஸ்டம்பில் இருந்து பந்தை வெளியே கொண்டு செல்வேன். அப்போது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு என்னால் அவுட் ஸ்விங் பந்து வீசத் தெரியாது.

    கிரேம் ஸ்மித்

    நான் அவருடைய வலிமைக்கு தீனியளித்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனது பந்துகளை லெக்-சைடு எளிதாக விளாசினார். 2003 தொடரில் இரண்டு இரட்டை சதம் அடித்தார். அவருக்கு பந்து வீசுவது எளிதான காரியம் அல்ல’’ என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.

    கிரேம் ஸ்மித் 117 போட்டிகளில் 27 சதங்களுடன் 9265 ரன்கள் குவித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 151 போட்டிகளில் 584 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 131 போட்டிகளில் 485 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
    ஜனவரி மாதத்தில் இருந்து வீரர்களுக்கான போட்டி கட்டணத்தை கொடுக்காமல் இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கடெ் போர்டு.
    கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் முதல் வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் கிரிக்கெட் போர்டுகள் நிதி நெருக்கடியில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே ஸ்டாஃப்களை தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கியுள்ளது. ஊதியத்தையும் குறைத்துள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு ஜனவரில் மாதத்தில் இருந்து வீரர்களுக்கு போட்டிக்கான கட்டணத்தை இதுவரை வழங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

    ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கி விட்டோம். மற்ற வீரர்களுக்கு போட்டிக்கான தொகை வழங்கவில்லை என்பதை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு ஒத்துக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி ஜானி கிரேவ் கூறுகையில் ‘‘ஒப்பந்த ஊழியர்கள் அவர்களுடைய சம்பளம் மற்றம் அலவன்ஸ் ஆகியவற்றை பெற்றுள்ளனர். சில வீரர்கள் பரிசுத் தொகை மற்றும் போட்டிக்கான கட்டணத்தை பெற்றுள்ளனர்.

    ஆனால் இன்னும் நாங்கள் போட்டிக்கான கட்டணத்தை கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கான பணத்தை கொடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். போட்டிக்கான கட்டணத்தை செலுத்துவதில் நாங்கள் இரண்டு மாதங்கள் பின்தங்கி இருக்கிறோம்’’ என்றார்.
    ×