என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ரசிகர்கள் அல்லாமல் போட்டிகளை நடத்த முன்வர வேண்டும் என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை போட்டிகள் ரத்து செய்யப்பட்டள்ளன. நாட்டின் எல்லையை மூடியுள்ளதால் ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் வரை போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை.

    மற்ற நாடுகள் கொரோனா வைரசின் தாக்கம் சகஜ நிலையை எட்டும் காலத்தை எதிர்நோக்கி இருக்கின்றன. மருத்துவ வல்லூனர்கள், உலக சுகாதார மையம் இந்த தொற்று முற்றிலும் ஒழிய நீண்ட நாட்கள் ஆகும் எனத் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே சோயிப் அக்தர் மற்றும் சில வீரர்கள் குறைந்தது ஒருவருடம் ஆகும் என்கிறார்கள். இந்நிலையில் இப்படியே சென்றால் அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரமீஸ் ராஜா கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மனித வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் கிரிக்கெட ரசிகர்கள் தற்போது பசியால் கஷ்டப்படுகின்றனர். இதுபோன்று நீண்ட நாட்கள் நீடித்தால் கிரிக்கெட் போர்டுகள் தாக்குப்பிடிக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

    கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாமல் அவர்களால் தொடர்ந்து சம்பளத்தை பிடித்தம் செய்ய முடியாது. அப்படி செய்தால் பேரிழப்பை ஏற்படுத்தும்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்ற கிரிக்கெட் போர்டுகளிடம் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் எப்படி நடத்தலாம், குறைந்தபட்சம் ரசிகர்கள் அல்லாமல் போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பேச வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முதல் அடியை எடுத்து வைக்க முடியும்.

    ரமீஸ் ராஜா

    எந்த கிரிக்கெட் போர்டாக இருந்தாலும் அவர்கள் பணம் செழிப்பாக வைத்திருகிறார்கள், லாக் டவுன் நேரத்தில் சம்பளத்தை கொடுக்க முடியாது எனபது பெரிய விஷயம் அல்ல. மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவது குறித்து பேசுவது நமக்கு அவசியமானது. ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் என்றாலும், ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

    வங்காளதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுகள் பாதிப்பை சந்திக்கக் கூடிய சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
    டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டு அந்த நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.

    கடந்த மாதத்தில் இருந்து சுமார் ஆறு மாத காலத்திற்கு கிரிக்கெட் போட்டி நடக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திக்க இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைத்ததுடன் தற்காலிகமாக வேலையில் இருந்து தூக்கியுள்ளது.

    மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கியதுடன் ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் அவர்கள் நடத்த வேண்டிய போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளன.

    ஐசிசி டி20 உலக கோப்பையை நடத்திவிட வேண்டும் என நினைக்கிறது. அதேபோல் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்திவிட விரும்கிறது.

    ஒருபக்கம் அவர்கள் நாட்டிற்காக விளையாட இருக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாதம் விளையாடினால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதால் அவர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோருக்கும் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்.

    ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் மட்டுமே ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்க வாய்ப்புள்ளது. அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியை எப்படியும் அக்டோபர் மாதம் நடத்த முயற்சி செய்வார்கள். அதனால் டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போக வாய்ப்புள்ளது.

    ஐபிஎல் தொடர் நடைபெறாவிடில் வீரர்களுக்கும், ஸ்டாஃப்களுக்கும் சம்பளம் கிடைக்காது. பெண்கள் உலக கோப்பையும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஆனால், மூன்று தொடர்களையும் நடத்துவதற்கான வாய்ப்பை பார்க்க வேண்டும்.

    ஆஸ்திரேலியா 16 சர்வதேச அணிகளையும், அணிகளின் ஸ்டாஃப்களையும், ஒளிபரப்பு செய்பவர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக இருக்கப் போகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் யாருமில்லாமல் மூடிய மைதானத்திற்கு நடக்கும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

    2021-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு போட்டிகளை நடத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஐபிஎல் போட்டிக்கான வாய்ப்பை அக்டோபர் - நவம்பரில் ஏற்படுத்த முடியும். சில வெளிநாட்டு வீரர்கள் இந்தியா செல்ல முடியும். ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் இந்தியாவில்தான் உள்ளது. இதனால் ஒருங்கிணைக்க எளிதாக இருக்கும்.

    ஐசிசி மற்றும் உலக கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் கூட்டம் தேவை. ஆனால் இந்தியாவுக்கு ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த முடியும்’’ என்றார்.
    கரீபியன் பிரிமீயர் லீக் அணியான ஜமைக்கா தல்லாவாஸ் கிறிஸ் கெய்ல்-ஐ தக்க வைக்க விரும்பாததால் வேறு அணிக்கு மாற இருக்கிறார்.
    டி20 கிரிக்கெட் அணியின் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் கரீபியன் பிரிமீயர் லீக் டி20-யில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக முதல் நான்கு சீசனில் விளையாடினார். அதன்பின் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் அணிக்கு மாறினார். இரண்டு ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடினார்.

    கடந்த சீசனில் மீண்டும் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்கு திரும்பினர். தற்போது ஜமைக்கா அணி 2020 சீசனில் அவரை தக்க வைக்க விரும்பவில்லை. அவரை ரிலீஸ் செய்தது.

    இந்நிலையில் செயிட் லூசியா சவுக்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் செயிட் லூசியா சவுக்ஸ் அணியை வாங்கியுள்ளது. கெய்ல் ஏற்கனவே பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். இதனால் அந்த அணிக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கால்பந்து வீரர் கரேத் பேலே வேல்ஸ் மருத்துவமனைக்கு 4 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
    வேல்ஸ் நாட்டின் கால்பந்து வீரர் கரேத் பேலே (வயது 30), இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2013-ல் இருந்து விளையாடி வருகிறார். இவர் அங்கிருந்த நேரத்தில் தற்போது வரை ரியல் மாட்ரிட் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.

    இவர் வேல்ஸ் நாட்டில் உள்ள கார்டிஃப் நகரில் பிறந்தார். தற்போது வேல்ஸ் நாடும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பவில்லை. 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 624 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் கரேத் பேலே பிறந்த மருத்துவமனையான யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு 5 லட்சம் பவுண்டு (4 கோடியே 70 லட்சத்து 33 ஆயிரத்து 601 ரூபாய்) நிதியாக வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து கரேத் பேலே கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்றின்போது கடுமையாக போராடும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு எனது இதயத்தில் சிறப்பு இடம் உள்ளது.

    நான் அங்குதான் பிறந்தேன். எனது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்திற்கு அதிகமான ஆதரவு வழங்கியுள்ளது. நானும் எனது குடும்பமும் ஆதரவு தெரிவிக்க விரும்புகிறொம். சிறப்பான வேலை செய்யும் அவர்களுக்கு மிக்க நன்றி’’ என்றார்.
    ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் திரும்பியுள்ளதால் வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா.
    இந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளைாடும்போது டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தடை காரணமாக விளையாடாமல் இருந்தனர்.

    நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் கைப்பற்றியது.

    இந்நிலையில் வருகிற டிசம்பர்-ஜனவரியில் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் வார்னர், ஸ்மித் ஆகியோர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்க திரும்பியுள்ளனர். இதனால் வருகின்ற டெஸ்ட் தொடர் வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘நான் நியூசிலாந்து தொடரை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்கு காயம் ஏற்பட்டது. மிகவும் தவறான நேரத்தில் இந்தக் காயம் ஏற்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக காத்திருக்க முடியாது.

    ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித்துடன் களம் இறங்க இருக்கிறது. இதனால் வருகின்ற தொடர் வித்தியாசமானதாக இருக்கப் போகிறது’’ என்றார்.
    பாகிஸ்தான் வீரர்கள் 30, 40 ரன்கள் அடிக்கும்போது இந்திய வீரர்கள் 100 ரன்களும் அடிப்பதற்கு காரணம், அவர்கள் அவர்களுக்காகவே விளையாடுவதுதான் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல ஹக். இவர் ரமீஸ் ராஜாவுடன் ஆன்லைன் மூலம் உரையாடினார். அப்போது அவர் விளையாடிய காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் அடித்தாலும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாகவே விளையாடினோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, இந்தியாவின் பேட்டிங் எங்களை விட வலிமையாக பேப்பரில் இருக்கும். ஆனால், எங்களுடைய பேட்ஸ்மேன்கள் 30 அல்லது 40 ரன்கள் அடித்தால் கூட, அது அணிக்காக இருக்கும்.

    ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் 100 ரன்கள் அடித்தால் கூட, அது அவர்களுடைய சொந்த நலனுக்காக இருக்கும். இதுதான் இரண்டு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடு’’ என்றார்.
    உலகமே முடங்கி இருக்கும் நிலையில் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஆன்லைன் செஸ் போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே முடங்கி போய் கிடக்கிறது. இதனால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் இருக்கின்றன. இந்த இக்கட்டான நிலைமைக்கு மத்தியிலும் தடங்கல் இல்லாமல் நடைபெறும் போட்டியாக செஸ் (சதுரங்கம்) மட்டுமே விளங்கி வருகிறது. சமீபத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆன்லைன் மூலம் செஸ் விளையாடி கொரோனா பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டினார்கள்.

    இந்த நிலையில் சர்வதேச செஸ் சம்மேளனம் மற்றும் செஸ் டாட் காம் சார்பில் நேஷன்ஸ் கோப்பைக்கான ஆன்லைன் செஸ் போட்டி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் சீனா, ஐரோப்பா, இந்தியா, ரஷியா, அமெரிக்கா, மற்றும் உலகின் பிற பகுதிகள் என 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அனைத்து அணிகளிலும் முன்னணி வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரேபிட் (விரைவு) முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை லீக் சுற்றில் மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 4 பேர் இடம் பிடிப்பார்கள். இதில் வீராங்கனை ஒருவரும் அடங்குவார்.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் இடம் பெற்றுள்ளார். தற்போது ஜெர்மனியில் இருக்கும் அவர் அங்கிருந்தபடி இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உலக சாம்பியனான விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா) இந்திய அணிக்கும், முன்னாள் உலக சாம்பியனான கேரி காஸ்பரோவ் (ரஷியா) ஐரோப்பிய அணிக்கும் கேப்டனாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

    போட்டியின்போது வீரர்கள் வெளியில் இருக்கும் நபர்கள் யாரிடம் இருந்து ஆலோசனை எதுவும் பெறக்கூடாது. வீரர்கள் விளையாடும் அறை மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். அத்துடன் இந்த போட்டியை சர்வதேச நடுவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கவனிப்பார்கள். இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 கோடியே 37 லட்சம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாநில அணிக்கு என்னை தேர்வு செய்யாமல் முதல் முறையாக நிராகரித்தபோது வேதனை தாங்க முடியாமல் இரவு முழுவதும் கதறி அழுததாக விராட் கோலி கூறியுள்ளார்.
    ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே அடைப்பட்டு கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளம் மூலம் முன்னாள் வீரர்கள், ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுகிறார்.

    அந்த வகையில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது அவர் கூறியதாவது:-

    முதல் முறையாக மாநில அணிக்காக (டெல்லி அணி) என்னை தேர்வு செய்யாதபோது, அது இரவு நேரம் என்று நினைக்கிறேன். மனம் உடைந்து கண்ணீர் விட்டேன். அதிகாலை 3 மணி வரை சத்தம் போட்டு அழுதேன், கதறினேன். 
    நிச்சயம் தேர்வு செய்யப்படுவேன் என்று ஆவலுடன் காத்திருந்தேன். நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அந்த சமயத்தில் நான் உள்ளூர் ஆட்டங்களில் நன்றாக ரன் குவித்தேன். எல்லாமே எனக்கு சரியாக அமைந்திருந்தது. சிறப்பாக விளையாடி நல்ல நிலையை எட்டியும் நிராகரித்து விட்டனர்.

    என்ன காரணத்துக்காக என்னை சேர்க்கவில்லை என்று பயிற்சியாளரிடம் தொடர்ந்து 2 மணிநேரம் பேசினேன். எதுவும் தெரியாமல் புலம்பினேன். ஆனால் மீண்டும் விடா முயற்சியும், ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் இருக்கும்போது அது உங்களுக்குரியதை பெற்றுத்தரும். இதைத்தான் நீங்கள் (மாணவர்கள்) செய்ய வேண்டும்.

    எனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். நானும், அவரும் சந்தித்து பழகியதில் இருந்து பொறுமையை கடைபிடிப்பதை கற்றுக் கொண்டேன். முன்பு நான் அந்த அளவுக்கு பொறுமைசாலி கிடையாது.

    அவரது தனித்துவமும், இக்கட்டான சூழலில் அவரது அமைதியையும் பார்க்கும்போது அந்த தருணத்தில் எப்படி எதிர்த்து போராட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். கடினமான நேரங்களில் உங்களது பிடிவாத குணங்களை உதறிவிட்டு, தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடினால், இறுதியில் அதற்குரிய நல்ல வழிமுறையை கண்டறிவீர்கள்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    31 வயதான விராட் கோலி 2006-ம் ஆண்டு டெல்லி அணிக்காக முதல் முறையாக விளையாடினார். 2008-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய அணியின் கேப்டன் பதவியை அதிக காலம் இருந்திருந்தால் ஏராளமான சாதனைகளை படைத்திருப்பார் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் கவுதம் கம்பிர். இவர் கங்குலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதன்பின் டிராவிட், அனில் கும்ப்ளே, எம்எஸ் டோனி, விராட் கோலி ஆகியோரின் தலைமையில் விளையாடிள்ளார்.

    எம்எஸ் டோனி தலைமையில் இவர் விளையாடிய காலத்தில் இந்தியா டி20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பையை  வென்றது. இருந்தாலும் அனில் கும்ப்ளே இன்னும் நீண்ட காலம் கேப்டனாக நீடித்திருந்தால் ஏராளமான சாதனைகள் படைத்திருப்பார் என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘கங்குலி இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ஒரு கேப்டன் யார் என்றால் நான் நிச்சயம் அனில் கும்ப்ளே அதிக காலம் பதவியில் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அவருக்கு கீழ் நான் ஆறு டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடினேன். அவரால் நீண்ட காலத்திற்கு இந்திய அணியின் கேப்டனாக இருக்க முடியில்லை. அப்படி இருந்திருந்தால் ஏராளமான சாதனைகள் படைத்திருப்பார்.’’ என்றார்.

    அனில் கும்ப்ளே, கவுதம் கம்பிர்

    ராகுல் டிராவிட் 2007-ல் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தபோது, 17 வருடம் விளையாடிய நிலையில் அனில் கும்ப்ளே டெஸ்ட் அணி கேப்டனாக இருந்தார். அப்போது எம்எஸ் டோனி ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் எம்எஸ் டோனியிடம் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது.
    கொரோனாவில் மனித உயிர்க்கு ஆபத்து என்ற நிலையில் இந்தியாவில் தற்போதைக்கு கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என கங்குலி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் இந்தியாவில் நுழைந்தபோது மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. கிரிக்கெட் போட்டிகள் நடத்தினால் ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

    அந்த நிலையில்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்து ஐபிஎல் 2020 சீசனை ஏப்ரல் 15-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் 2020 சீசனை அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைத்துள்ளது பிசிசிஐ.

    தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று எப்போது கட்டுக்குள் வரும் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் மனித உயிர்க்கு ஆபத்து என்ற நிலையில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் சமூக யதார்த்தத்தில் வேறுபாடு உண்டு. விரைவில் இந்தியாவில் கிரிக்கெட்டை எதிர்பார்க்க முடியாது. ஏராளமான விஷயங்கள் உள்ளன. மிகவும் முக்கியமானது, மனித உயிர்க்கு ஆபத்தான நிலை உள்ளபோது, விளையாட்டு பற்றி நான் யோசிக்கவில்லை’’ என்றார்.
    பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் பார்சிலோனாவுக்கு திரும்ப விரும்பினால் 26 மில்லியன் பவுண்டு அளவிலான சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பார்சிலோனா அணியில் இருந்து பிஎஸ்ஜி அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். கால்பந்து வரலாற்றில் அதுவரை இல்லாத அளவிற்கு 198 மில்லியன் பவுண்டுக்கு பிஎஸ்ஜி அவரை வாங்கியது.

    பார்சிலோனா அணி நெய்மரை டிரான்ஸ்பரை தடுக்க எவ்வளவோ முயன்றது. ஆனால் நெய்மர் வெளியேறுவதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவரை விடுவித்தது.

    பிஎஸ்ஜி அவருக்கு போதுமான அளவிற்கு சம்பளம் கொடுத்தாலும் பார்சிலோனா அணியில் விளையாடிய அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப முடிவு செய்தார். நெய்மர் வருவதை மெஸ்சியும் வரவேற்றார்.

    ஆனால் பிஎஸ்ஜி நெய்மரை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் பார்சிலோனாவுக்கு செல்லும் முயற்சியில் உறுதியாக உள்ளார். ஆனால் பிஎஸ்ஜி சம்பளத்தை அதிகப்படுத்தி அவரை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறது.

    தற்போது வாரத்திற்கு ஆறு லட்சம் பவுண்டு சம்பளமாக கொடுக்கிறது. இதை மேலும் அதிகரித்து கொடுக்க தயாராக இருக்கிறது. 2020-2021 சீசனில் 12 மில்லியன் பவுண்டு ஸ்பான்சர்ஷிப்புடன் சேர்த்து 44 மில்லியன் டாலர் சம்பளம் நெய்மருக்கு கிடைக்கும்.

    பார்சிலோனா அவருக்கு 18 மில்லியன் பவுண்டுதான் சம்பளமாக கொடுக்க முடியும். இதனால் நெய்மர் பார்சிலோனாவுக்கு வர விரும்பினால் 26 மில்லியன் பவுண்டு சம்பளத்தை இழக்க நேரிடும். ஒருவேளை நெய்மர் பிஎஸ்ஜி அணியில் இருந்தால், மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இணையான சம்பளம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 80 சதவீத ஸ்டாஃப்கள் சூப்பர் மார்க்கெட் வேலைக்கு செல்லும் நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் சகஜ நிலை உருவாகி கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.

    இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகக்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்டாஃப்களின் சம்பளத்தை குறைத்ததுடன் 80 சதவீதம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது.

    இதனால் ஸ்டாஃப்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மருந்து கடைகள், மருத்துவமனைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவை மட்டுமே திறந்து இருக்கின்றன.

    இதனால் வேலை இழந்துள்ள ஸ்டாஃப்களுக்கு சூப்பர் மார்க்கெட்டில் ஜூலை 30-ந்தேதி வரை வேலைப்பார்க்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதுதொடர்பாக வூல்வொர்த்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சிஇஓ கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘உங்கள் நிறுவனத்திற்கு இதுபோன்ற நிலையில் அதிக அளவிலான ஆட்கள் வேலைக்கு தேவைப்படும். எங்களுடைய ஸ்டாஃப்கள் மற்றும் கலாசார குழு ஏற்கனவே இதுபோன்று தேவைப்படும் நிலையில் மற்ற அமைப்புகளுக்காக தற்காலிகமாக வேலை பார்த்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அரசு செப்டம்பர் 30-ந்தேதி வரை நாட்டின் எல்லையை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×