என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 80 சதவீத ஸ்டாஃப்கள் சூப்பர் மார்க்கெட் வேலைக்கு செல்லும் நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் சகஜ நிலை உருவாகி கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.

    இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகக்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்டாஃப்களின் சம்பளத்தை குறைத்ததுடன் 80 சதவீதம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது.

    இதனால் ஸ்டாஃப்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மருந்து கடைகள், மருத்துவமனைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவை மட்டுமே திறந்து இருக்கின்றன.

    இதனால் வேலை இழந்துள்ள ஸ்டாஃப்களுக்கு சூப்பர் மார்க்கெட்டில் ஜூலை 30-ந்தேதி வரை வேலைப்பார்க்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதுதொடர்பாக வூல்வொர்த்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சிஇஓ கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘உங்கள் நிறுவனத்திற்கு இதுபோன்ற நிலையில் அதிக அளவிலான ஆட்கள் வேலைக்கு தேவைப்படும். எங்களுடைய ஸ்டாஃப்கள் மற்றும் கலாசார குழு ஏற்கனவே இதுபோன்று தேவைப்படும் நிலையில் மற்ற அமைப்புகளுக்காக தற்காலிகமாக வேலை பார்த்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அரசு செப்டம்பர் 30-ந்தேதி வரை நாட்டின் எல்லையை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஊழல் விவகாரம் மற்றும் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் இந்த இரண்டு சம்பவங்களும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நற்பெயரை பாதித்து விட்டன என ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கென்று தனி இடம் உண்டு. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். அதேபோல் தலைசிறந்த பேட்ஸ்மேன்களையும் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் உடையவர்கள்.

    ஆனால், 2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது வீரர்கள் மைதானத்திற்கு வரும்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்குப்பிறகு வெளிநாடு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

    மற்றொரு மேட்ச்-பிக்சிங் மற்றும் ஊழல். பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலானோர் இதில் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

    இந்த இரண்டும்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜாகீர் அப்பாஸ் கூறுகையில் ‘‘தற்போது மேட்ச்-பிக்சிங் குறித்து முடிவு எடுக்க சரியான நேரம். இந்த ஊழல் விவகாரத்தை நாம் மிகவும் கடுமையாக கையாளவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெயர் கெட்டுவிட்டது. மேலும் நமது கிரிக்கெட்டின் நடவடிக்கையையும் பாதித்துள்ளது.

    இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக, உள்நாட்டில் நடக்கக்கூடிய போட்டிகள் அனைத்தையும் வெளிநாட்டில் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம்’’ என்றார்.
    தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வீரர்களுக்கு டென்னிஸ் உலகம் உதவ வேண்டும் என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
    கொரோன வைரஸ் தொற்று ஒரே நேரத்தில் உலகம் முழுவதையும் முடக்கி போட்டுள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறாமல் உள்ளது. ஆகவே, வீரர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள்.

    டென்னிஸ் போட்டியை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு தொடரிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். அதேவேளையில் மிகவும் பின்தங்கிய தரவரிசையில் இருக்கும் வீரர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்காது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் கஷ்டப்படுவார்கள்.

    ஆண்களுக்கான விளையாட்டுக்களை ஏடிபி டூர், பெண்களுக்கான போட்டிகளை டபிள்யூ.டி.ஏ,-யும் நடத்துகின்றன. மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அந்தந்த அமைப்பாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் வீரர்களுக்கு நிதி வழங்கி உதவ வேண்டும் என நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில் ‘‘நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வீரர்களுக்கு உதவி செய்யக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு முன்னணி வீரர் என்ற அந்தஸ்தை நான் பெற்றுள்ளேன். தனிப்பட்ட முறையில் டென்னிஸ் நடைபெறாவிட்டாலும் பல வருடங்கள் வாழக்கூடிய அளவிற்கு என்னிடம் போதுமான பணம் உள்ளது.

    வீரர்கள் தனிப்பட்ட முறையில் அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ, அதை வழங்க முடியும். வீரர்கள் எந்த தரவரிசையில் இருந்தாலும் பணம் கொடுங்கள் என்று கூறுவது கடினம். மாறுபட்ட கருத்துக்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டென்னிஸ் போட்டியை விரும்பும் எல்லோரையும் டென்னிசை காப்பாற்றுவதற்காக நிதி அளிக்க வேண்டும் என அழைக்கிறேன்.

    வீரர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒற்றுமையை இந்த நேரத்தில் காட்ட வேண்டும். அதேபோல் கீழ்மட்டத்தில் உள்ள வீரர்களை மறக்கவில்லை என்பதையும் காட்ட வேண்டும்’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அடிலெய்டு மைதானத்தை தேர்வு செய்வேன் என ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது கிரிக்கெட் போட்டி தொடங்கும் என்று யாராலும் சொல்ல முடியாத நிலைதான் தற்போது உள்ளது.

    கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் கிரிக்கெட் போர்டுகள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. சுமார் ஆறு மாதம் நடைபெறாவிடில் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்.

    இதனால் போட்டிகள் மீண்டும் தொடங்கிய பின்னர் தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் அனைத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளன. ஒருவேளை அக்டோபர் மாதத்திற்கு பிறகும் கொரோனா வைரஸ் பிரச்சனை முடியவில்லை என்றால் பூட்டிய மைதானத்திற்குள், அல்லது ஒரே மைதானத்தில் போட்டியை நடத்த திட்டமிடலாம்.

    இந்திய அணி டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியை நான்கு மைதானங்களில் நடத்த சாத்தியமில்லை. ஒரே மைதானத்தில் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அடிலெய்டு மைதானத்தை தேர்வு செய்வேன் என்று ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘அடிலெய்டு மைதானம் என்றால் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அடிலெய்டு மைதானம் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக சிறந்த ஆடுகளமாக விளங்கி வருகிறது.

    இது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிற்கும் ஒத்துழைக்கும். இப்படி ஒரு எண்ணம் எனது மனதில் இல்லை. இது ஒரு ஐடியா கூட கிடையாது. ஆஸ்திரேலியாவில் உள்ள எல்லா கிரிக்கடெ் ஆடுகளத்தில் எங்களது திறமைகளை வெளிப்படுத்த விரும்புகிறோம்’’ என்றார்.

    இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
    வங்காள தேசம் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் கொரோனா வைரஸ் தடுப்புக்கு நிதி திரட்ட பேட்டை ஏலம் விட இருக்கிறார்.
    வங்காள தேசம் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடரில் இரண்டு சதம், ஐந்து அரைசதங்களுடன் 606 ரன்கள் விளாசினார். அத்துடன் 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உலகக் கோப்பை தொடரில் 600 ரன்களுக்கு மேல் ரன்குவித்தும், 10-க்கு மேற்பட்ட விக்கெட்டுகளும் வீழ்த்திய ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. ஏழை மக்கள் உணவின்றி பரிதவித்து வரும் நிலையில், அரசுகள் பணமின்றி தள்ளாடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரபலங்கள், வீரர்கள், தொழிலதிபர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் நிதி திரட்டுவதற்காக உலக கோப்பையில் பயன்படுத்திய பேட்டை ஏலம் விட ஷாகிப் அல் ஹசன் முடிவு செய்துள்ளார். உலக கோப்பை முழுவதும் ஒரே பேட்டை பயன்படுத்தினேன் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே முஷ்பிகுர் ரஹிம் தனது பேட்டை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கோல்பாக் ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்து சென்று கிரிக்கெட் விளையாடி வரும் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பலாம் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் திணறி வருகிறது. அம்லா, பிலாண்டர், டி வில்லியர்ஸ், மோர்கல் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றதால் மீண்டும் தலைசிறந்த அணியை கட்டமைக்க திணறி வருகிறது.

    இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய சில வீரர்கள் கோல்பாக் என்ற ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்தில் உள்ள கவுன்ட்டி அணிக்கு விளையாட சென்று விட்டார்கள். இது தென்ஆப்பிரிக்கா அணிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    கோல்பாக் ஒப்பந்தத்தின்படி ஒரு வீரர் இங்கிலாந்து சென்று விளையாடினால் அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா தேசிய அணிக்காக விளையாட முடியாது.

    இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்ல இருக்கிறது. அப்போது ஒரு நாட்டைச் சேர்ந்த நபர் மற்றொரு நாட்டிற்கு சென்று வேலை செய்தால், அதன்பின் சொந்த நாட்டிலும் வேலை செய்யலாம் என்ற நிலை உருவாகும். இது கோல்பாக் ஒப்பந்தத்திற்கும் பொருந்தும்.

    இதனால் கோல்பாக் மூலம் இங்கிலாந்து சென்ற வீரர்கள் அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடலாம் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    ‘‘கோல்பாக் ஒப்பந்த வீரர்கள் சொந்த நாடு திரும்பியதுடன் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அதன்பிறகு தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’’ என்று ஸ்மித் தெரிவித்தார்.
    ஸ்விங் பந்துக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் சவாலானது என ரகானே தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. இவர் இந்திய மண்ணில் விளையாடுவதை விட வெளிநாட்டு மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். வேகப்பந்து வீச்சுக்களை எளிதாக எதிர்கொண்டு ரன்கள் சேர்க்கக் கூடியவர்.

    இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை எதிர்கொள்வது மிகவும் சவாலானது என்று ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை பற்றி பேச வேண்டுமென்றால் இங்கிலாந்து மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மிகவும் சவாலான பந்து வீச்சாளர். அங்குள்ள சூழ்நிலையை நன்றாக அறிந்தவர்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன்

    தற்போது நடைபெற்று வரும் சம்பவம் (கொரோனா வைரஸ்) மிகவும் கவலை அளிக்கக்கூடியது. ஆனால், நேர்மறையான பக்கத்தை பார்த்தோம் என்றால், குடும்பத்துடன் அதிகமான நேரத்தை செலவிட முடிகிறது. தற்போது என்னுடைய மகளுக்கு ஆறரை மாதம்தான் ஆகிறது. அவளுடைய வீட்டிலேயே இருப்பது அதிர்ஷ்டம்’’ என்றார்.
    கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் தடவ தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தில் பளபளப்பை ஏற்படுத்துவதற்காக வீரர்கள் எச்சிலை ( உமிழ்நீர்) தடவி நன்றாக தேய்ப்பார்கள். விக்கெட்டை வீழ்த்து வதற்கு இது உதவியாக இருக்கும்.

    தற்போது கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் தடவ தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை தள்ளி வைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.
    மும்பை:

    கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

    இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா இலங்கை இடையே ஜூன் மாதம் நடைபெற இருந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. ஐ.சி.சி.யில் முழுநேர உறுப்பினராக இருக்கும் அனைத்து தலைமை நிர்வாகக் குழுவினருடன் வீடியோ கான்பரன் சிங் மூலம் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் செயலாளர் ஜெய்ஷா காணொளியில் பங்கேற்பார். இந்த கூட்டத்தில் எதிர் காலத்தில் நடைபெற இருக்கும் போட்டிகள் குறித்து விவாதிக்கப்படும். இருநாடுகள் இடையேயான பல்வேறு தொடர்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகி வருவது குறித்து ஆலோசிக்கப்படும்.

    ஐ.சி.சி.யின் இந்த கூட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை தள்ளி வைப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். இந்த போட்டி தள்ளிவைக்கப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    இதேப்போல ஒருநாள் போட்டி சூப்பர் லீக் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இறுதிப்போட்டி 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் நடக்கிறது.

    9 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் ஆடும். இறுதிப்போட்டி 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா 360 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 9 டெஸ்டில் விளையாடி 7-ல் வெற்றி பெற்றது. இரண்டில் தோற்றது.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ,தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வங்காளதேசம் ஆகிய அணிகள் 2 முதல் 9-வது இடங்களில் உள்ளன.
    கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவ இந்திய பெண்கள் ஹாக்கி அணி ரூ.7 லட்சம் நிதி திரட்டியுள்ளது.
    பெங்களூரு:

    கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழை கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி திரட்டுவதற்காக இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆன்லைன் மூலம் உடல் தகுதி சவால் போட்டியை நடத்தி வருகிறது.

    இதன்படி வீராங்கனைகள் அளிக்கும் உடல் தகுதி சவாலை ஏற்று செயல்படும் ரசிகர்கள் நன்கொடை வழங்க வேண்டும். 18 நாட்கள் நடத்தப்படும் இந்த சவால் நிகழ்ச்சியில் முதல் 4 நாட்களில் மட்டும் ரூ.7 லட்சம் திரட்டப்பட்டு இருக்கிறது. இது குறித்து இந்திய பெண்கள் ஆக்கி அணியின் வீராங்கனை சுஷிலா சானு அளித்த பேட்டியில், ‘கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உதவுவதற்காக நாங்கள் உடல் தகுதி சவால் மூலம் நிதி திரட்டி வருவதற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

    தற்போது ஹாக்கி பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு இருப்பதால், முந்தைய காலங்களில் நாங்கள் விளையாடிய போட்டி மற்றும் எதிரணியினர் ஆடிய போட்டிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து ஆட்டத்தை ஆய்வு செய்து வருகிறோம்’ என்று தெரிவித்தார். 
    ஆஸ்திரேலியாவுக்கு பதிலாக இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்க வேண்டும் என கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ‘கொரோனா அச்சம் காரணமாக செப்டம்பர் 30-ந்தேதி வரை தங்கள் நாட்டில் வெளிநாட்டினர் நுழைய ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து இருக்கிறது. அக்டோபர் 18-ந்தேதி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் அது கடினம் என்றே தோன்றுகிறது. அதே சமயம் அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டால், அத்துடன் இந்தியாவில் கொரோனா தாக்கம் சீரடையும் பட்சத்தில் இவ்விரு உலக கோப்பை போட்டிகளையும் மாற்றிக் கொள்ளலாம்.

    அதாவது இந்த ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக போட்டி இந்தியாவிலும், அடுத்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட வேண்டும். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாக அதாவது செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவும் வாய்ப்பு உண்டு. இது உலக கோப்பை போட்டிக்கு வீரர்களுக்கு போதுமான பயிற்சியாக அமையும். இந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை டிசம்பர் மாதத்தில் நடத்திக் கொள்ளலாம்’. இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
    கொரோனா வைரஸ் நம்மை மேலும் இரக்கம் உள்ளவர்களாக்கியுள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. இந்த தொற்றில் இருந்து எப்போது மீள்வது என்பதே எல்லோருடைய கேள்விக்குறியும்.

    இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்துவருகிறார்கள். அதேபோல் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் கொரோனாவுக்கு எதிரான போரை முன்னின்று எதிர்கொண்டு வருகிறார்கள். இவர் இல்லை என்றால் கொரோனாவை தடுப்பது மிகவும் சிரமமே...

    விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கியுள்ளனர்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அவரது மனைவி ஆகியோர் அகாடமி அல்லாத அமைப்பு ஒன்று ஆன்லைன் மூலம் கிளாஸ் எடுத்து வருகிறது. இதில் விராட் கோலி கலந்து கோண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த இக்கட்டான நிலையிலும் ஒரு நேர்மறையான விஷயம் என்வென்றால், சமூகமாகிய நாம் மேலும் இரக்கம் உள்ளவர்களாகி உள்ளோம். கொரோனாவுக்கு எதிராக போரை முன்னின்று எதிர்கொண்டு வரும் டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார்கள் ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவித்து வருகிறோம். கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை முடிந்த பின்னரும் இது தொடரும் என்று நம்புகிறேன்.

    வாழ்க்கை கணிக்க முடியாதது. ஆகவே, உங்களுக்கு மகிழ்ச்சி தருவதை செய்யுங்கள். எல்லா நேரங்களிலும் ஒப்பிடுகையில் ஈடுபடாதீர்கள். இந்தக் கட்டத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என்பது குறித்து மக்கள் தேர்வு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு வாழ்க்கை மாறுபட்டதாக இருக்கப் போகிறது.

    இவ்வாறு விராட் கோலி கூறினார்.

    ‘‘இவை அனைத்திலும் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் உள்ளது. காரணம் இல்லாமல் ஏதும் நடக்காது. முன்னின்று செயல்படும் நபர்கள் இல்லையென்றால், நாம் எதையும் அணுக முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

    யாரையும் விட யாரும் பெரியவர்கள் அல்ல என்பது இந்த கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. ஒரு சமூகமாக நாம் தற்போது அதிக அளவில் இணைந்துள்ளோம்’’ அனுஷ்கா சர்மா தெரிவித்தார்.
    ×