என் மலர்
விளையாட்டு
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா முதல் செட்டை 7-6 (7-4) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் அனிசிமோவா முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, சபலென்காவுடன் மோதுகிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை7-6 (7-2) என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட பிரிட்டன் ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 325 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லண்டன்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 85 ரன்னும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 58 ரன்னும், மார்க்ரம் 49 ரன்னும், பிரேவிஸ் 42 ரன்னும் விளாசினர்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டும், அடில் ரஷீத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அரைசதமடித்தனர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
தென் ஆப்பிரிக்கா சார்பில் நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியது
- துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கிடையே, புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில், பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது சச்சின் தெண்டுல்கருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது அதன்படி சச்சினும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது .
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நமப்ர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார்.
லஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்து அதிரடியாக ஆடினார்.
இதனால் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது.
- சூப்பர் 4 சுற்றில் மலேசியாவை இந்திய அணி 4-1 என வீழ்த்தியது.
பாட்னா:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.
லீக் சுற்று முடிவில் இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றை எட்டியது.
நேற்று நடந்த போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இன்று நடந்த போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், ஷிலானந்த் லக்ரா மற்றும் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது.
- வரும் 9-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி 28-ம் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் டி20 போட்டி முறையில் நடக்கிறது.
இந்நிலையில், ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு குல்தீப் யாதவ் விளையாடுவது முக்கியம் என முன்னாள் வீரர் மதன்லால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதன்லால் கூறியதாவது:
திறமையான அணியாக இருப்பதால் இந்தியா ஒரு வலுவான அணியாக உள்ளது. இருப்பினும் கணிக்க முடியாத டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைப் பொறுத்து இந்தியா கோப்பையை வெல்வது அமையும்.
ஆப்கானிஸ்தான் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அனைத்தும் வலுவான போட்டியாளர்கள்.
குல்தீப் யாதவ் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். அவரது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைலை டி20 கிரிக்கெட்டில் எதிரணிகள் அடித்து நொறுக்குவது கடினமாக இருக்கும். அவரது தேர்வு பற்றிய இறுதி முடிவு ஆடுகளம் மற்றும் கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும்.
துபாயில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும். இந்திய அணி தன்னுடைய திறன் காரணமாக கோப்பையை வெல்வதற்கு வலுவான அணியாக இருக்கிறது என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
- அந்த அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, மேற்கு மண்டல அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அனுபவ வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட், சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி 87 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 206 பந்துகளில் ஒரு சிக்சர், 25 பவுண்டரி உள்பட 184 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சமீபத்தில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி அபார வெற்றி பெற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம்-குரேஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்பரி ஜோடி 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
- அமித் மிஸ்ரா 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
- இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா (42), அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார்.
அமித் மிஸ்ரா கடந்த 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இவர் கடைசியாக 2017-ல் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விளையாடினார். ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார்.
அமித் மிஸ்ரா ஓய்வு குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விளையாட்டு எனது முதல் காதல், எனது ஆசான், எனது மிகப்பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்தது. பிசிசிஐ, அரியானா கிரிக்கெட் அமைப்பு, எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் எனக்கு வலிமை அளித்த ரசிகர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
எனது உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் உறுதியாக என் பக்கம் நின்றதற்கு எனது குடும்பத்தினற்கும் நன்றி. கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது என பதிவிட்டுள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் இத்தாலியின் சின்னர் கனடாவின் பெலிக்ஸ் ஆகரை சந்திக்கிறார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ஒசாகா அமெரிக்காவின் அனிசிமோவாவை சந்திக்கிறார்.
- ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
- ஷிகர் தவானிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
1xBet என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியை சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ததாக ஷிகர் தவான் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை விசாரணை நடத்திய குறிப்பிடத்தக்கது.






