என் மலர்
விளையாட்டு
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் சேர்த்துள்ளது.
மவுண்ட் மவுக்கானு:
வங்காளதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம்லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், வில்யங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லாதம் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். வில்யங் 52 ரன்னில் பெலிவியன் திரும்பினார்.
3-வது வீரராக களம் இறங்கிய கான்வாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 4-வது டெஸ்ட்டில் விளையாடும் அவருக்கு இது 2-வது சதமாகும். 122 ரன்கள் எடுத்திருந்தபோது கான்வாய் ஆட்டம் இழந்தார். அவர் 227 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.
முன்னாள் கேப்டன் ரோஸ் டைலர் 31 ரன்னில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது. வங்காளதேசம் தரப்பில் இஸ்லாம் 2 விக்கெட்டும் ஹோசைன், மொமினுல் ஹக் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தமிழ் தலைவாஸ் அணி டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெல்லி அணியை வீழ்த்துவது மிகவும் சவாலானது.
பெங்களூர்:
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சுடன் 40-40 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்தது. 2-வது ஆட்டத்தில் 30-38 என்ற கணக்கில் பெங்களூர் அணியிடம் தோற்றது. 3-வது போட்டியில் மும்பையுடன் 30-30 என்ற கணக்கில் டை செய்தது.
தமிழ் தலைவாஸ் அணி 4-வது ஆட்டத்தில் நேற்று புனேரி பல்தானை எதிர்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் 36-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. தமிழ் தலைவாஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
அஜீத்பவார் 11 புள்ளியும், மஞ்சித் 8 புள்ளியும் பெற்று வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தமிழ் தலைவாஸ் அணி 5-வது ஆட்டத்தில் தபாங் டெல்லியை இன்று எதிர்கொள்கிறது. இரவு 9.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
தமிழ் தலைவாஸ் அணி டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். டெல்லி அணியை வீழ்த்துவது மிகவும் சவாலானது. ஏனென்றால் அந்த அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை.
டெல்லி அணி 4 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, ஒரு டையுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி, 2 டை, ஒரு தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 44-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்தது. பாட்னா பெற்ற 3-வது வெற்றியாகும்.
அந்த அணி 16 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. பெங்கால் வாரியர்ஸ் 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 11 புள்ளியுடன் 8-வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் மும்பை- உ.பி. யோதா (இரவு 7.30), பெங்களூர்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.
சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணியில் தேர்வு பெற்றுள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் 2021-ம் ஆண்டில் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்களும், ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து சார்பில் தலா ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணியில் தேர்வு பெற்றுள்ளார். அஸ்வின் 9 டெஸ்டில் 54 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
இதேபோல மற்றொரு சுழற்பந்து வீரரான அக்ஷர் படேலும், இடம் பிடித்துள்ளார். அவர் 5 டெஸ்டில் 27 விக்கெட் எடுத்துள்ளார்.
ஒயிட் பால் போட்டிக்கு (ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஆண்டு 11 டெஸ்டில் 906 ரன் (21 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.
விக்கெட் கீப்பரான ரிஷப்பண்டும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் சிட்னி டெஸ்டில் 89 ரன்னும், பிரிஸ்பேனில் 97 ரன்னும், சென்னை டெஸ்டில் 91 ரன்னும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள இந்த டெஸ்ட் கனவு அணிக்கு இலங்கையை சேர்ந்த கருணா ரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டின் டெஸ்ட் போட்டி அடிப்படையில் தேர்வு செய்துள்ள 11 வீரர்கள் வருமாறு:-
ரோகித் சர்மா, கருணா ரத்னே (கேப்டன், இலங்கை) லபுசேன் (ஆஸ்திரேலியா), ஜோரூட் (இங்கிலாந்து), பவாத் ஆலம் (பாகிஸ்தான்) ரிஷப்பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜேமிசன் (நியூசிலாந்து), அக்ஷர் படேல், ஹசன் அலி (பாகிஸ்தான்), சகின்ஷா அப்ரிடி (பாகிஸ்தான்).
பெங்களூரில் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்காலை வீழ்த்தி பாட்னா அணி அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனுடன் மோதியது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் முதல் பாதியில் 18-11 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட புனே அணியினர் 17-18 என நெருக்கடி தந்தனர். ஆனாலும் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 36 - 26 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி, முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6ம் இடத்தைப் பிடித்துள்ளது.
முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 9 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளனர்.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இப்போட்டிகள் முடிந்ததும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ருதுராஜ் ஐபிஎல்2021 சீசனில் 635 ரன்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியை வென்றார். இதேபோல் விஜய் ஹசாரே டிராபி தொடரின் 5 போட்டிகளில் 4 சதம் உள்பட 603 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் பகுதியின்போது வெங்கடேஷ் அய்யர் அபாரமாக விளையாடினார். விஜய் ஹசாரே டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக 379 ரன்கள் விளாசினார். மேலும் 6 போட்டிகளில் 9 விக்கெட் எடுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 9 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சாஹல், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
செஞ்சூரியனில் வெற்றியை ருசித்த இந்த அணி வீரர்களுக்கு, மெதுவாக பந்து வீசியதற்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் கே.எல். ராகுல் சதம் விளாசி அசத்தினர். மேலும், செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பெற்றுள்ளது.
இந்திய அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், சற்று வருத்தம் அடையும் வகையில் மெதுவாக பந்து வீசியதன் காரணமாக ஐ.சி.சி. வீரர்களுக்கு 20 சதவீதம் அவர்கள் சம்பளத்தில் (செஞ்சூரியன் போட்டி சம்பளம்) பிடித்தம் செய்யும் வகையில் அபராதம் விதித்துள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் 1 ஓவர் குறைவாக வீசப்பட்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான நடுவர்கள் அளவிலான குற்றச்சாட்டில், விராட் கோலி மெதுவாக பந்து வீசியதை ஒத்துக்கொள்ள, அதற்கு மேல் இதுகுறித்து விசாரிக்க தேவையில்லை என்பதுடன் இந்த விவகாரம் முடிக்கப்பட்டது.
துபாயில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மழைக்காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. சதிஷா ராஜபக்சே (14), ரவீன் டி சில்வா (15), யாசிரு ரோட்ரிகோ (19), மதீஷா பத்திரானா (14) ஆகியோர் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் விக்கி ஆஸ்ட்வாய் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 32 ஓவரில் 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 21.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவான்ஷி ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஷெய்க் ரஷீத் 31 ரன்களும் அடிக்க இந்திய வீரர்கள் கோப்பையை வென்றனர்.
2021-ம் ஆண்டின் பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சிறந்த வீராங்கனை விருக்கான கடைசி நான்கு பேர் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்துள்ளார்.
இவருடன் இங்கிலாந்தின் டேமி பியுமோன்ட், தென்ஆப்பிரிக்காவின் லிஜேல் லீ, அயர்லாந்தின் கோபி லீவிஸ் ஆகியோர் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த டி20 வீராங்கனைக்கான பட்டியலிலும் ஸ்மிரிதி இடம் பிடித்துள்ளார்.
25 வயதான ஸ்மிரிதி மந்தனா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 22 போட்டிகளில் விளையாடி 855 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 38.86 ஆகும். ஒரு சதம், ஐந்து அரைசதம் அடித்துள்ளார்.
ஜனவரி 23-ந்தேதி விருதுகள் அறிவிக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருந்த போதிலும், பாதுகாப்பான முறையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
டெல்டா உருமாற்றம் வைரஸ் தொற்று அச்சுறுத்திய போதிலும், முறையான பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. கடந்த ஜனவரியில் இருந்து இன்று வரை 58 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இதில் 8 முறை இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இலங்கை வீரர் கருணாரத்னே 244 ரன்கள் அடித்தது அதிகபட்ச ஸ்கோராகும். ஜோ ரூட் இலங்கைக்கு எதிராக 228, இந்தியாவுக்கு எதிராக 218 என இரண்டு முறை இரட்டை சதங்கள் விளாசியுள்ளார்.
மேலும், இலங்கைக்கு எதிராக 186, இந்தியாவுக்கு எதிராக 180 நாட்அவுட், இந்தியாவுக்கு எதிராக 109 ரன்கள் விளாசியுள்ளார்.
கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோதும் அடுத்த 2 வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு (வயது 49), கடந்த திங்கட்கிழமை இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சவுரவ் கங்குலி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த போதும் சவுரவ் கங்குலி அடுத்த 2 வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. அதன்பின்னர் அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்.
ஆஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
மெல்போர்ன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
இந்த நிலையில் ஆஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட்டுக்கு பரிசோனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை. அவர் அடுத்த 7 நாட்கள் மெல்போர்னில் தன்னை தனிமைப்படுத்தி கொள்வார்.
ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிராவிஸ் ஹெட் விரைவில் குணமடைந்து 5-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
4-வது டெஸ்டில் டிராவிஸ் ஹெட் விலகலை அடுத்து ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், நிக் மேடிசன், ஜோஷ் இங்கீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த டிரஸ்சிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது என கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.
அந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. வெளிநாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இந்த ஆண்டு அசத்தல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 5-வது டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 328 ரன் இலக்கை எடுத்து இந்திய சரித்திர படைத்தது.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டும் சிறப்பாக அமைந்தது என்று லோகேஷ் ராகுல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணிக்கு இதுஒரு சூப்பர் ஸ்பெஷல் ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு நாம் பெற்றுள்ள சாதனைகள் உண்மையிலேயே சிறப்பானவை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதற்கு நிறைய கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் தேவைப்பட்டது. சில ஆண்டுகளாக நாங்கள் ஒரு அணியாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். சிறந்த டிரஸ்சிங் அறையும், சிறந்த சூழ்நிலையும், சிறந்த செயல் திறனுக்கு பங்களித்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த நேரத்தில் டிரஸ்சிங் அறை சூழல் ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு சிறந்த டெஸ்ட் வெற்றி தொடரின் முதல் ஆட்டத்தில் அணியின் முழு செயல்திறனை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வெற்றியை ஒருநாள் கொண்டாடிவிட்டு மீண்டும் பயிற்சிக்கு திரும்புவோம். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கவனம் செலுத்த தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந் தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்குகிறது.






