என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி அணி இதுவரை 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியும் மோதின.

    இதில் சென்னையின் எப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது. சென்னை சார்பில் 
    சென்னை வீரர் லுகாஸ் ஜிகிவிக்ஸ் 31-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். 

    சென்னை அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி, 3 டிரா என மொத்தம் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    மற்றொரு போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.மற்றும் கோவா எப்.சி. அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 
    மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவற விட்டதாக குற்றச்சாட்டுகிறார் பஞ்சாப் வீராங்கனை மலிகா ஹண்டா
    ஜலந்தர்:

    பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார்.  கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நாடு தழுவிய முழு அடைப்பும் மலிகா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அந்த சதுரங்க வீராங்கனைக்கு தற்போதைய தேவை அரசு வேலையும் வெகுமதியும்தான்.   ஆனால் பஞ்சாப் அரசு தன்னை ஏமாற்றி விட்டதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எனக்கு ரொக்க வெகுமதியை அறிவித்திருந்தார், அதற்கான அழைப்புக் கடிதமும் என்னிடம் உள்ளது, ஆனால் கொரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.  நான் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பர்கத் சிங்கை டிசம்பர் 31 அன்று சந்தித்தேன். காது கேளாதோர் விளையாட்டுகளுக்கான கொள்கை இல்லாததால், மாநில அரசால் வேலை மற்றும் ரொக்கப் பரிசு வழங்க முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டது .

    இவ்வாறு மலிகா ஹண்டா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
    விராட் கோலி பங்கேற்கும் 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறவுள்ளது.
    கேப் டவுன்:

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது தன்னை யாரும் தொடர்புகொண்டு பேசவில்லை என விராட் கோலி கூறினார். ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கோலியிடம் கேப்டனாக நீடிக்க வலியுறுத்தினோம் என கூறி வருகின்றனர். இவர்களுடைய கருத்து குறித்து கோலி இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 

    இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக ஜனவரி 11-ம் தேதிக்கு முன் விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்தித்து பதிலளிப்பார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    விராட் கோலி தன்னை சுற்றி நடக்கும் சர்ச்சைகளுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். அவர் ஜனவரி 11-ம் தேதி கேப் டவுனில் நடைபெற இருக்கும் தனது 100-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறார். போட்டிக்கு முன்னதாக நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் கோலி பதிலளிப்பார்.

    இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் மெஸ்சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலக கால்பந்து புகழ் மெஸ்சி, இந்த சீசனில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியில் நெய்மர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    பி.எஸ்.ஜி. அணி நாளை இரவு பிரெஞ்ச் கோப்பைக்கான போட்டியில் விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் மெஸ்சி உள்பட நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.எஸ்.ஜி. அறிவித்துள்ளது.

    மெஸ்சியடன் ஜுயன் பெர்னாட், செர்ஜியோ ரிகோ, நாதன் பிட்டுமாஜாலா ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ஜோகன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் உள்ளார். இருந்தாலும் கடந்த 2019-ல் ஆண்டில் இருந்து சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

    தற்போது தென்ஆப்பிரிக்காவில் இந்திய டெஸ்ட் அணி சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சாளர்கள் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவினர்.

    விராட் கோலி, புஜாரா, ரகானே போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். விராட் கோலி சிறப்பான வகையில் ரன் கணக்கை தொடங்கினார். ஆனால் வழக்கும்போல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார்.

    விராட் கோலி

    இந்த நிலையில் 2-வது டெஸ்ட் நாளை ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குறிது. விராட் கோலிக்கு இந்த மைதானம் மிகவும் ராசியானது. இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார். இதனால் சதத்திற்கான வறட்சியை இந்த போட்டியுடன் முடிவுக்கு  கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

    மேலும், இந்த மைதானத்தில் விராட் கோலி 310 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து வீரர் ஜான் ரெய்டு 316 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி இன்னும் 7 ரன்கள் அடித்தால், ஜோகன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    ரிக்கி பாண்டிங் 263 ரன்களும், ராகுல் டிராவிட் 262 ரன்களும், டேமின்மார்ட்டின் 255 ரன்களும் அடித்துள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேசம் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது.
    மவுண்ட்மாங்கானு:

    நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட்மாங்கானுவில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் நேர ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து இருந்தது.

    கன்வாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். புத்தாண்டில் செஞ்சுரி அடித்து சாதித்தார். அவர் 122 ரன்னும், வில்யங் 52 ரன்னும் எடுத்தனர். ஹென்றி நிக்கோலஸ் 37 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.

    நியூசிலாந்து அணி 108.1 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிக்கோலஸ் 75 ரன்கள் எடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தார்.

    வங்காளதேசம் அணி தரப்பில் ஷோரிப்புல் இஸ்லாம், ஹசன்மிராஸ் தலா 3 விக்கெட்டும், மொமினுல்ஹக் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் ஷாத்மன் இஸ்லாம் 22 ரன்னில், வாக்னர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    2-வது விக்கெட்டான ஹசன்- நஜிமுல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அபாரமாக விளையாடி அரை சதத்தை தொட்டனர். 55 ஓவர்வீசி முடிக்கப்பட்ட பிறகு வங்காளதேசம் 1 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து இருந்தது.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 70 ரன்னிலும் மொமினுல் ஹக் 8 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
    இலங்கை அணி பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் (2022) விளையாடும் போட்டி விவரங்களை பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) வெளியிட்டுள்ளது.

    இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. 2-வது டெஸ்ட் நாளை முதல் 7-ந் தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 11 முதல் 15 வரை கேப்டவுனிலும் நடக்கிறது.

    அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் 19, 21 (பாரல்) மற்றும் 23 (கேப்டவுன்) ஆகிய தேதிகளில் விளையாடுகிறது.

    அதைத் தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 12-ந் தேதிகளில் அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும், 20 ஓவர் போட்டிகள் 15, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கட்டாக், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் நடக்கிறது.

    இலங்கை அணி பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் பிப்ரவரி 25 முதல் மார்ச் 1-ந் தேதி வரை பெங்களூரிலும், 2-வது டெஸ்ட் மார்ச் 5 முதல் 9- ந் தேதி வரை மொகாலியிலும் நடக்கிறது.

    20 ஓவர் போட்டிகள் மொகாலி, தர்மசாலா, லக்னோ ஆகிய நகரங்களில் முறையே மார்ச் 13, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    ஏப்ரல், மே மாதங்களில் சர்வதேச போட்டிகள் கிடையாது. ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதால் இந்திய அணி சர்வதேச போட்டியில் ஆடவில்லை.

    ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்து ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜூன் 9-ந் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து ஜூன் 12, 14, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பெங்களூர், நாக்பூர், ராஜ்கோட், டெல்லி ஆகிய நகரங்களில் 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது.

    ஜூன் கடைசி வாரத்தில் இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. கடந்த சுற்றுப் பயணத்தின்போது ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் ஜூலை 1 முதல் 5-ந் தேதி வரை மான்செஸ்டரில் நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜூலை 7, 9 மற்றும் 10 (சவுத்தம்டன், பிர்மிங்காம், நாட்டிங்காம்) ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் (லண்டன், மான்செஸ்டர்) நடக்கிறது.

    பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பையில் விளையாடுகிறது. இதற்கான தேதி விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. அதற்கு பிறகு வங்காளதேசத்துக்கு செல்கிறது. இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. 

    நாங்கள் இப்போது திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தோம். ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 2021-ம் ஆண்டில் என்னை அதிகமாக காயப்படுத்தியது இந்த தோல்வி தான். இதே உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை நாங்கள் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தோம். 

    இது ஒரு அற்புதமான சாதனை. ஏனெனில் இதற்கு முன்பு எந்த ஒரு உலக கோப்பை போட்டிகளிலும் இந்திய அணியை நாங்கள் வென்றதில்லை. முதல் முறையாக கிட்டிய இந்த வெற்றி தான் 2021-ம் ஆண்டில் எங்களது சிறந்த தருணமாகும். இப்போது நாங்கள் திறமையான இளம் வீரர்களை உருவாக்கி வருவது மிகவும் திருப்தி அளிக்கிறது. பேட்டிங்கில் தனிப்பட்ட சாதனைகள் அணியின் வெற்றிக்கு உதவினால் அது தான் எனக்கு மகிழ்ச்சியை தரும்.

    இவ்வாறு பாபர் அசாம் கூறினார்.
    இந்திய தடகளத்தின் வளரும் நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்ட தரண்ஜீத் கவுர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி இருப்பது தடகள சங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
    புதுடெல்லி:

    ஜூனியர் பிரிவில் இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனையாக வலம் வந்த டெல்லியைச் சேர்ந்த 20 வயதான தரண்ஜீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முறையே 11.54 வினாடி மற்றும் 23.57 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். 

    தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பிலும் ஆதிக்கம் செலுத்தினார். இந்த நிலையில் போட்டியின் போது அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த கட்ட சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணமானால் 4 ஆண்டுகள் வரை தடையை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்திய தடகளத்தின் வளரும் நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்ட தரண்ஜீத் கவுர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி இருப்பது தடகள சங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்தியாவுக்கு அந்த ராசி இந்த முறையும் கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
    ஜோகன்னஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்து முத்திரை பதித்தது. செஞ்சூரியனில் வெற்றியை ருசித்த முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றது.

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் ஸ்டேடியத்தில் நாளை (திங்கட்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவும் முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக்கூடிய ஆடுகளம் தான். இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    கடந்த 30 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாடி வரும் இந்தியாவுக்கு அங்கு ராசியான ஒரு மைதானம் எது என்றால் ஜோகன்னஸ்பர்க் தான். இங்கு இந்திய அணி ஒரு போதும் தோற்றது கிடையாது. சொல்லப்போனால் இந்த மைதானத்தில் தோல்வியே காணாத ஒரே அணி இந்தியா தான். இங்கு இதுவரை 5 டெஸ்டுகளில் ஆடியுள்ள இந்தியா அதில் 2-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது.

    முதலாவது வெற்றி 2006-ம் ஆண்டு கிடைத்தது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவை இந்திய பவுலர்கள் 84 ரன்னில் சுருட்டி மிரட்டினர். இது தான் தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்தியாவின் முதல் வெற்றியாகவும் அமைந்தது. மொத்தம் 8 விக்கெட்டுகள் அள்ளிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

    2-வது வெற்றி 2018-ம் ஆண்டு விராட் கோலியின் தலைமையில் கிடைத்தது. இந்த டெஸ்டில் இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், புஜாரா, விராட் கோலி ஆகியோர் இங்கு சதம் அடித்துள்ளனர்.

    தென்ஆப்பிரிக்க அணி இந்த மைதானத்தில் 42 டெஸ்டுகளில் விளையாடி 18-ல் வெற்றியும், 13-ல் தோல்வியும், 11-ல் டிராவும் சந்தித்துள்ளது. இங்கு கடைசியாக நடந்த 20 டெஸ்டுகளில் 19-ல் முடிவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த டெஸ்டில் இந்தியா வாகை சூடினால் முதல்முறையாக தென்ஆப்பிரிக்காவில் தொடரை வென்று வரலாறு படைத்து விடும். மேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் (9-வது வெற்றி) என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார். போட்டியில் களம் இறங்க மிகுந்த ஆர்வமுடன் காத்திருப்பதாக கோலி கூறியுள்ளார்.
    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 3 வெற்றி, 2 டிரா என 21 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் தலைவாஸ் அணி ஒரு கட்டத்தில் 14-9 என்று முன்னிலை பெற்றிருந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட டெல்லி அணி அதன்பின் புள்ளிகளை குவித்தனர். 

    டெல்லி வீரர் நவீன்குமாரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 28-20 என்று வலுவான முன்னிலைக்கு உயர்ந்தது. கடைசிக் கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பொறுப்புடன் ஆடியது.

    இறுதியில், தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி இடையிலான ஆட்டம் 30- 30 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது.

    இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 3 டை என 15 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    நேற்றிரவு நடந்த முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா, உ.பி.யோத்தா அணிகள் மோதின. கடைசி வரை திரில்லாங்காக நடைபெற்ற இந்த போட்டியும் 28-28 என்ற புள்ளி கணக்கில் டிரா ஆனது.

    அடுத்து நடந்த மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் வரிந்து கட்டிக் கொண்டு விளையாடினர். ஆனாலும் இந்த ஆட்டமும் 34-34 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற 3 போட்டிகளும் பரபரப்பான கட்டத்தில் டிராவில் முடிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
    விராட் கோலியின் முடிவு டி20 உலகக்கோப்பை அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என பிசிசிஐ கருதியதாக கூறினார்.
    புதுடெல்லி:

    டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. விராட் கோலி பதவி விலகியதாக அறிவித்தவுடன், பிசிசிஐ-ல் இருந்து தன்னை யாரும் அழைத்து பேசவில்லை என கூறினார். ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், விராட் கோலியை தொடர்பு கொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா மவுனம் கலைத்துள்ளார். விராட் கோலியின் பதவி விலகல் குறித்து அவர் பேசியதாவது:-

    டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக முடிவு எடுத்தது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேர்வு கமிட்டியினர், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அனைவரும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறினோம். 

    விராட் கோலி

    20 ஓவர் உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு அது பற்றி பேசிக்கொள்ளலாம் என்று கோலியிடம் கேட்டுக் கொண்டோம். அவரது முடிவு டி20 உலகக்கோப்பை அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதினோம். இந்திய கிரிக்கெட்டிற்காக பதவி விலகாதீர்கள் என வலியுறுத்தினோம். ஆனால் அவர் தனது திட்டத்தில் உறுதியாக இருந்தார். 

    இவ்வாறு சேத்தன் சர்மா தெரிவித்தார்.
    ×