என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சச்சின் டெண்டுல்கர் 6 உலக கோப்பைகளில் விளையாடி ஒரே ஒரு உலக கோப்பையை மட்டுமே வென்றுள்ளார் என ரவி சாஸ்திரி கூறினார்.
    மஸ்கட்:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டி20 உலக கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    அதன்பின் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இந்தியா இழந்தது. டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். அதன்பின் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். ஆனால் 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றது.

    இதையடுத்து இந்திய அணி நிர்வாகம் மீதும், இந்திய வீரர்கள் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய வீரர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததும், சரியான தலைமை இல்லாததுமே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்நிலையில் இந்திய அணி குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    இந்திய அணி நீண்ட காலமாகவே கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியர்களின் முன்னாள் நட்சத்திரமாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். ஆனால் அவர் 6 உலக கோப்பைகளில் விளையாடி ஒரே ஒரு உலக கோப்பையை மட்டுமே வென்றுள்ளார். 

    சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லஷ்மண் ஆகிய வீரர்கள் உலக கோப்பையை வென்றதில்லை. அதற்காக அவர்கள் மோசமான வீரர்கள் என்று அர்த்தம் இல்லை. நம்மிடம் உலக கோப்பை வென்ற கேப்டன்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். அதற்காக இந்திய வீரர்கள் யாரும் சிறந்தவர்கள் இல்லை என கூற முடியாது. இந்திய அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.
    லக்னோ அணி ஏலத்திற்கு முன் கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் ஆகிய வீரர்களை தேர்வு செய்துள்ளது.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது.

    இந்த தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு 'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

    லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் ஏலத்துக்கு முன்பாக இரு அணிகளும் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலும் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.  

    லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா

    இதில் லக்னோ அணி கே.எல் ராகுலை ரூ. 17 கோடிக்கு தேர்வு செய்துள்ளது. இவர் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ரூ. 9.2 கோடி) மற்றும் ரவி பிஷ்னாய் (ரூ. 4 கோடி) ஆகியோரும் அந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஏற்கெனவே,  2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றபோது புனே அணியை பெற்றிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது லக்னோ அணியை பெற்றுள்ள கோயங்கா, இதற்கும் சூப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் விளையாட எஸ்தோனியா வீராங்கனை கையா கனேபி தகுதி பெற்றுள்ளார்
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  மெல்போர்னில் நடைபெற்ற  மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் எஸ்தோனியா வீராங்கனை கையா கனேபி மற்றும் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா ஆகியோர் மோதினர்.

    இந்த போட்டியில், 5-7, 6-2, 7-6(7) என்ற செட் கணக்கில் டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான  சபலென்காவை, கனேபி வீழ்த்தினார்.  இதனை தொடர்ந்து காலிறுதி போட்டிக்கு கனேபி முன்னேறியுள்ளார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால், டேனிஸ் ஷபவாலோவ் ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவின் மெத்வதேவ், அமெரிக்காவின் மேக்சிம் கிரெசி ஆகியோர் மோதினர். இதில் மெத்வதேவ்
    6-2, 7-6, 6-7, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 
     
    இதேபோல், மற்றொரு போட்டியில் இத்தாலி வீரர் ஜேனிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் சின்னர் 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
    கேமரா எங்களை படம் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என விராட் கோலி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார். அப்போது மைதானத்தில் குழந்தையுடன் இருந்த மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார்.

    அப்போது கேமரா அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பியது. அவரது கையில் இருந்த குழந்தையை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். காரணம் இதுவரை தனது மகளின் புகைப்படத்தை கோலி வெளியிட்டது இல்லை.

    வாமிகாவின் முகம் தெரியாதவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மட்டுமே இருவரும் வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர். தற்போது கோலியின் மகள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து உள்ளனர்.

    இந்தநிலையில் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்களுடைய மகளின் புகைப்படம் நேற்று மைதானத்தில் எடுக்கப்பட்டு பலராலும் பகிரப்பட்டதை உணர்ந்துள்ளோம். கேமரா எங்களை படம் பிடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை தெரியப்படுத்துகிறோம். இதுதொடர்பான எங்களுடைய நிலைப்பாடும், கோரிக்கையும் அப்படியேதான் உள்ளன. வாமிகாவை யாரும் படம் பிடிக்க வேண்டாம். அவருடைய படங்களை வெளியிட வேண்டாம் என முன்பு என்ன காரணங்களுக்காக கோரிக்கை விடுத்தேனோ அதையே மீண்டும் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு கோலி கூறி உள்ளார்.
    ஐசிசி, இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவை 2021-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்துள்ளது.
    ஐ.சி.சி. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சிறந்த வீராங்கனை விருதுக்கான கடைசி நான்கு பேர் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்திருந்தார்.

    இந்நிலையில், 2021-ம் ஆண்டின் பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    இங்கிலாந்தின் டேமி பியுமோன்ட், தென் ஆப்பிரிக்காவின் லிஜேல் லீ, அயர்லாந்தின் கோபி லீவிஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

    25 வயதான ஸ்மிரிதி மந்தனா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 22 போட்டிகளில் விளையாடி 855 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 38.86 ஆகும். ஒரு சதம், ஐந்து அரைசதம் அடித்துள்ளார்.
    சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    லக்னோவில் நடை பெற்ற சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கும் மற்றும் சிறப்பான விளையாட்டு திறனை வெளிப்படுத்தி இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ். ஆர்.எம். பல்கலைக்கழக மாணவி மாளவிகா பன்சோட்வுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நட்சத்திர வீராங்கனை ஹாலெப் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த 4-வது சுற்று ஒன்றில் 27-வது வரிசையில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோலின்ஸ் 4-6, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் 19-வது இடத்தில் இருக்கும் மெர்டன்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    கோலின்ஸ்

    14-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹாலெப் (ருமேனியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அலிசிகோர்னெட் (பிரான்ஸ்) 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் கோலின்சை எதிர்கொள்கிறார்.
    ஐசிசி, பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை 2021-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவிக்கும்.

    கடந்த சில தினங்களுக்கு முன் டி20 கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை தேர்வு செய்தது.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 2021-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன், தென் ஆப்பிரிக்காவின் ஜேனிமேன் மலான் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகினர்.

    பாபர் அசாம் கடந்த ஆண்டில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3-0 என பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. ஆனாலும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் 158 ரன்கள் அடித்து அசத்தினார் பாபர் அசாம். 

    ஏற்கனவே, ஐ.சி.சி.யின் ஒருநாள் கேப்டன் மற்றும் டி20 அணி ஆகியவற்றுக்காக பாபர் அசாமை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    விராட் கோலி ஒரு சிறந்த மனிதர், சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் உலகில் மற்றவர்களைவிட அவர் நிறைய சாதித்துள்ளார் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.

    இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி விலகினார். அவரது 7 ஆண்டுகால கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு விராட் கோலி கட்டாயப் படுத்தப்பட்டார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து தானாக விட்டு செல்லவில்லை. அவர் அவ்வாறு செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். கேப்டன்ஷிப்பை அவர் துறப்பதற்கான சரியான நேரம் இது இல்லை.

    விராட் கோலி ஒரு சிறந்த மனிதர், சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் உலகில் மற்றவர்களைவிட அவர் நிறைய சாதித்துள்ளார். அவர் அவரது பாணியில் இயல்பாக இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும்.

    விராட் கோலி எல்லா கசப்புணர்வுகளையும் மறந்துவிட்டு, அனைவரையும் மன்னித்து விட்டு முன்னேறி சென்று விளையாட வேண்டும். அவர் இரும்பால் ஆனவர் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணமாகும்.

    இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே டெஸ்ட் கேப்டன் பதவியில் விராட் கோலி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    விராட் கோலி வேறு எவரையும் விட அதிகமாக சாதித்துள்ளார் என சோயிப் அக்தர் கூறினார்.
    இஸ்லாமாபாத்:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து அவரை சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன. விராட் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடு தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. அதேசமயம் விராட் கோலி 2 வருடங்களாக சதம் அடிக்காததும், சொற்ப ரன்களில் அவுட் ஆனதும் கூட அவர் பதவி விலகியதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு அவராக வெளியேறவில்லை.  ஆனால் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  

    அவர் இரும்பினால் செய்யப்பட்டவர் அல்ல. அவரும் சாதாரண மனிதர் தான். விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் உலகில் வேறு எவரையும் விட அதிகமாக சாதித்துள்ளார். 

    அவர் இந்த குழப்பங்களில் இருந்து வெளியே வருவார் என்று நினைக்கிறேன். இதிலிருந்து அவர் முன்னோக்கிச் செல்ல வேண்டும். யார் மீதும் எந்தக் கசப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அனைவரையும் மன்னித்துவிட்டு நகர்ந்து கொண்டே இருங்கள்.

    விராட் கோலி சதம் அடித்து  2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் மேல் உள்ள அழுத்தமே அவரது ஆற்றல் குறைவதற்கு காரணம். அவர் 120 சதங்கள் அடித்தபின்னர் தான் திருமணம் செய்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். நான் அவர் இடத்தில் இருந்திருந்தால் திருமணம் செய்திருக்க மாட்டேன். அவரது முடிவை நாம் குறை சொல்ல முடியாது. திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம்.

    இவ்வாறு சோயிப் அக்தர் கூறினார்.
    நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று தெளிவாக தெரிகிறது. ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் போட்டியில் வெற்றிபெற கூடிய வாய்ப்பை அளித்தார் என கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று ‘ஒயிட் வாஷ்’ ஆனது. கேப்டவுனில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 288 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான குயிண்டன் டி காக் 130 பந்துகளில் 124 ரன்னும் (12 பவுண்டரி, 2 சிக்சர்), வான் டெர் டஸ்சன் 52 ரன்னும் எடுத்தனர். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், பும்ரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி கடுமையாக போராடி 4 ரன்னில் தோல்வியை தழுவியது. 49.2 ஓவர்களில் 283 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 65 ரன்னும், தவான் 61 ரன்னும் எடுத்தனர். 7-வது வீரராக களம் இறங்கிய தீபக் சாஹர் 34 பந்தில் 54 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அவரால்தான் இந்திய அணி நல்ல நிலைக்கு வந்தது. 48-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தது பாதிப்பை ஏற்படுத்தியது.

    ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், லோகேஷ் ராகுல் அணிக்கு தலைமை தாங்கினார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் 3 போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது. ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

    தீபக் சாஹர் அவுட்

    நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று தெளிவாக தெரிகிறது. ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் போட்டியில் வெற்றிபெற கூடிய வாய்ப்பை அளித்தார். கடுமையாக போராடியும் ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

    தீபக் சாஹரின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. எங்கள் வீரர்களின் ஷாட் மோசமாக இருந்தது. சரியான திசையை நோக்கி நாங்கள் அடிக்கவில்லை.

    இவ்வாறு லோகேஷ் ராகுல் கூறினார்.

    இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் ஆடுகிறது. 
    ×