என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் பங்கேற்றனர்.

    போட்டியின் 8-வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார்.

    உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனைத் தோற்கடித்ததால் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

    இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிரான பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது. திறமை மிகுந்த பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

    புரோ கபடி லீக் போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    பெங்களூர்:

    12 அணிகள் பங்கேற்ற புரோ கபடி லீக் போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ந் தேதி முடிவடைந்தன.

    இதன் முடிவில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகிய 6 அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அரியானா, ஜெய்ப்பூர், பெங்கால், மும்பை, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. எலிமினேட்டர்-1 ஆட்டத்தில் உ.பி.யோதா 42-31 என்ற கணக்கில் புனேயையும், பெங்களூர் 49-29 என்ற கணக்கில் குஜராத்தையும் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதிபெற்றன.

    முதல் 2 இடங்களை பிடித்ததால் பாட்னாவும், டெல்லியும் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறின.

    நேற்றைய ஓய்வுக்கு பிறகு 2 அரை இறுதி ஆட்டங்களும் இன்று நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.

    3 முறை சாம்பியன் ஆன பாட்னா அணி லீக் சுற்றில் 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தது. 5 ஆட்டங்களில் தோற்றது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. பாட்னா அணி லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் 35-36 என்ற கணக்கில் உ.பி.யிடம் தோற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் 37-35 என்ற கணக்கில் வென்று இருந்தது.

    புரோ கபடி லீக் தொடர்களில் இரு அணிகளும் இதுவரை 10 முறை மோதியுள்ளன. இதில் பாட்னா 5-4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி லீக் சுற்றில் 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 6 போட்டியில் தோற்றது. 4 ஆட்டம் டையில் முடிந்தது.

    பெங்களூர் அணி லீக் சுற்றில் 11-ல் வெற்றி பெற்றது. 9 போட்டிகளில் தோற்றது. 2 போட்டி டையானது.

    புரோ கபடி லீக் தொடரில் 2 அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. இதில் டெல்லி 8-ல், பெங்களூர் 6-ல் வெற்றிபெற்றுள்ளன. 2 ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் பெங்களூர் வெற்றிபெற்றது. 2-வது ஆட்டம் 36-36 என்ற கணக்கில் டையில் முடிந்தது.
    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    லக்னோ:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

    இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை (24-ந் தேதி) நடக்கிறது.

    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதே திறமையை இலங்கைக்கு எதிரான தொடரிலும் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த தொடரில் விளையாடாத வேகப்பந்து வீரர் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல காயத்தில் இருந்து குணமடைந்த ரவீந்திர ஜடேஜாவும் அணிக்கு திரும்பியுள்ளார். அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சஞ்சு சாம்சனும் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    காயம் காரணமாக தீபக் சாஹர் விலகியுள்ளார். முன்னாள் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்ட் ஆகியோருக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், இஷான் கி‌ஷன், ஹர்‌ஷல் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

    இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடியது. 5 போட்டிக்கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.

    அந்த அணி இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட முயற்சிக்கும். அதே நேரத்தில் இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது இலங்கை அணிக்கு கடும் சவாலானதே.

    இரு அணிகளும் நாளை மோதுவது 23-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 22 ஆட்டத்தில் இந்தியா 14-ல், இலங்கை 7-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவில்லை.

    இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த 20 ஓவர் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி வி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), இஷான் கி‌ஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஸ்கான், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல்.

    இலங்கை: தசுன் ‌ஷனகா (கேப்டன்), குஷால் மெண்டிஸ், பதும் நி‌ஷன்கா, அஸ்லங்கா, சண்டிமால், குணதிலகா, கமில் மிஸ்ரா, லியானகே, ஹசரங்கா, கருணாரத்னே, சமீரா, லஹிருகுமாரா, பினுரா பெர்ணான்டோ, ஷிரன் பெர்ணான்டோ, மகீஷ் தீக்சனா, வாண்டர்சே, ஜெயவிக்ரமா, அஷின் டேனியல்.

    20 ஓவர் உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
    அல்அமரத்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் விளையாடும்.

    முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் -12 சுற்றுக்கு தகுதிபெறும். இந்த சுற்றில் விளையாடும் 12 அணிகளும், 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் அக்டோபர் 23-ந் தேதி மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியன்களான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நமீபியா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் முதல் சுற்றில் விளையாடும். 4 நாடுகள் தகுதி சுற்று மூலம் தகுதி பெறும்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஓமன் நாட்டில் உள்ள அல்அமரத் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்த தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி அரை இறுதியில் நேபாளத்தை 68 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நேபாளம் 18.4 ஓவர்களில் 107 ரன்னில் சுருண்டது.

    அயர்லாந்து அணி அரை இறுதியில் 56 ரன் வித்தியாசத்தில் ஓமனை தோற்கடித்தது. முதலில் ஆடிய அயர்லாந்து 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய ஓமன் அணி 18.3 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டது.

    இன்னும் 2 நாடுகள் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெற வேண்டியுள்ளது.
    டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோருக்கு குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விரைவில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. 

    ஒரு நாள் போட்டிகள் மார்ச் 29, 31 மற்றும் ஏப்ரல் 2-ந்தேதியும், 20 ஓவர் போட்டி ஏப்ரல் 5-ந்தேதியும் நடக்கிறது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோருக்கு குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

    இவர்கள் ஒரு நாள் போட்டிகளில் ஆடாவிட்டாலும் தங்களது ஒப்பந்த வீரர்கள் என்பதால் பாகிஸ்தான் தொடர் நிறைவடையும் ஏப்ரல்5-ந்தேதி வரை ஐ.பி.எல்.போட்டியில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படாது என்பதை ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெளிவுப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 6-ந்தேதியில் இருந்து ஐ.பி.எல். அணித்தேர்வுக்கு தயாராக இருப்பார்கள்.

    பாகிஸ்தான் ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அப்போட், ஆஷ்டன் அகர், ஜாசன் பெரேன்டோர்ப், அலெக்ஸ் கேரி, நாதன் எலிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், இங்லிஸ், லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மெக்டெர்மோட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம்ஜம்பா.
    பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தனது முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை நித்து 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் சும்காலாகோவா இலியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
    புதுடெல்லி:

    73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தனது முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை நித்து 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் சும்காலாகோவா இலியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 

    இதேபோல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனாமிகா 4-1 என்ற கணக்கில் பல்கேரியாவின் சுகனோவா ஸ்லாடிஸ்லாவாவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஷிக்‌ஷா 0-5 என்ற கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான கஜகஸ்தானின் டினா ஜோல்மனிடம் வீழ்ந்தார். 

    67 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆகாஷ் 0-5 என்ற கணக்கில் ஜெர்மனியின் டேனியல் கிரோட்டரிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
    மன்பிரீத் சிங் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியில் புதுமுக வீரராக பஞ்சாப்பை சேர்ந்த 25 வயது முன்கள வீரர் சுக்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 5-வது இடம் வகிக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 2 முறை மோதுகிறது. இந்த போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் ஆடும் இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மன்பிரீத் சிங் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியில் புதுமுக வீரராக பஞ்சாப்பை சேர்ந்த 25 வயது முன்கள வீரர் சுக்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி வருமாறு:-

    கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், சுராஜ் கார்கெரா, பின்களம்: ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), மன்தீப் மோர், சுரேந்தர் குமார், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங், திப்சன் திர்கே, நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், ஹர்திக் சிங், ஜஸ்கரன் சிங், ஷாம்ஷெர் சிங், நீலகண்ட ஷர்மா, ஆகாஷ்தீப் சிங், முன்களம்: மன்தீப் சிங், லலித்குமார் உபாத்யாய், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், அபிஷேக்.
    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி சென்ற போது கொரோனா தடுப்பூசி செலுத்தாத 7 வீரர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்த விவகாரம் இப்போது தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்ெகட் போட்டியில் யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து 5-வது முறையாக மகுடம் சூடியது. இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி சென்ற போது கொரோனா தடுப்பூசி செலுத்தாத 7 வீரர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அங்குள்ள அதிகாரிகள் மறுத்த விவகாரம் இப்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய ஜூனியர் அணியின் மேலாளர் லோப்ஜாங் ஜி.டென்சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீண்ட நேர விமான பயணமாக துபாயில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வழியாக வெஸ்ட் இண்டீசில் உள்ள போர்ட்ஆப் ஸ்பெயின் நகரை சென்றடைந்தோம். அங்கிருந்து கயானா கிளம்ப வேண்டி இருந்தது. ஆனால் விமான நிலையத்தில் சோதனை நடத்திய குடியேற்ற அதிகாரிகள் அணியில் கொரோனா தடுப்பூசி போடாத வேகப்பந்து வீச்சாளர் ரவிகுமார், பேட்ஸ்மேன் ரகுவன்ஷி உள்பட 7 வீரர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது, அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி அறிவுறுத்தினர். அவர்களது வயது பிரிவினருக்கு இந்தியாவில் இன்னும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. அதனால் தான் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் கேட்கவில்லை. திரும்பி செல்வதற்கு உடனடியாக விமானம் இல்லாததால் உள்ளூர் அதிகாரிகளுடன் பேசுவதற்கு எங்களுக்கு வசதியாக அமைந்தது. இதையடுத்து வீரர்களுடனே தங்குவது என்று முடிவு செய்தேன். விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் நாங்கள் தங்கினோம். இந்த விவகாரத்தால் 24 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே பரிதவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிறகு இந்திய அரசாங்கமும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தலையிட்ட பிறகுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. வீரர்களுக்கு இது ஒரு மோசமான அனுபவமாக அமைந்தது.

    உலக கோப்பை போட்டி தொடங்கிய போது இந்திய அணியில் பலர் கொரோனாவில் சிக்கினர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ உதவி கிடைக்கவில்லை. உரிய டாக்டரும் இல்லை. எங்களது பிசியோதெரபிஸ்ட் தான் எங்களை பாதிப்பில் இருந்து மீள உதவினார். இதற்கான நடைமுறைகள் எதுவும் சரியில்லை. அத்துடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையமும் (பயோபபுள்) திருப்திகரமாக இல்லை. ஓட்டலில் எங்களுக்கு என்று தனியாக ஒரு தளம் ஒதுக்கப்படவில்லை. வீரர்கள் தங்கியிருந்த அதே தளத்தில் வேறு சிலரும் இருந்தனா். அறையில் தண்ணீர் சீராக கிடைக்கவில்லை. இதே போல் சில வீரர்களுக்கு உணவு பிரச்சினையும் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு சில இந்தியர்கள் நடத்தும் ஓட்டல் இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உலக கோப்பை நெருங்கும் இந்த சமயத்தில் பந்து வீச்சு நிலையானதாக இல்லாதது கவலை அளிக்கிறது என இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
    குயின்ஸ்டவுன்:

    இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் துணைகேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி உள்பட 5 வீராங்கனைகள் நீக்கப்பட்டனர். நீண்ட தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்ட ஸ்மிர்தி மந்தனா திரும்பினார். போட்டி தொடங்கும் முன்பே பலத்த மழை கொட்டியதால் சுமார் 5 மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. இதனால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகளாக களம் புகுந்த கேப்டன் சோபி டிவைன், சுசி பேட்ஸ் ஆகியோர் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்து நல்ல தொடக்கம் கண்டனர். 6 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 53 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. சோபி 32 ரன்னிலும் (24 பந்து, 6 பவுண்டரி), சுசி பேட்ஸ் 41 ரன்னிலும் (26 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து அமி சட்டர்த்வெய்ட், அமெலி கெர்ருடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக மட்டையை சுழற்றி அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்கள். சட்டர்த்வெய்ட் 32 ரன்னில் (16 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆனார்.

    20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. அமெலி கெர் 33 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 68 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் ரேணுகா சிங் 2 விக்கெட்டும், மேக்னா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (4.4 ஓவரில்) பறிகொடுத்து தள்ளாடியது. ஷபாலி வர்மா (0), யாஸ்திகா பாட்டியா (0) பூஜா வஸ்த்ராகர் (4 ரன்) ஸ்மிர்தி மந்தனா (13 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், கேப்டன் மிதாலி ராஜூடன் கைகோர்த்தார். இந்த இணை அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டது. ஸ்கோர் 96 ரன்களாக உயர்ந்த போது, ரிச்சா கோஷ் 52 ரன்னில் (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அத்துடன் இந்திய அணியின் நம்பிக்கை பொசுங்கியது. முன்னதாக 26 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ரிச்சா கோஷ் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை சொந்தமாக்கினார். அடுத்த ஓவரில் மிதாலி ராஜூம் (30 ரன்கள், 28 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்ந்தார்.

    17.5 ஓவர்களில் இந்திய அணி 128 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அமெலி கெர், ஹாய்லி ஜென்சன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அரைசதம், 3 விக்கெட், 2 கேட்ச் என்று ஆல்-ரவுண்டராக கலக்கிய நியூசிலாந்து வீராங்கனை அமெலி கெர் ஆட்டநாயகி விருது பெற்றார். நியூசிலாந்து தொடரில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணி இதுவரை வெற்றி கணக்கை தொடங்கவில்லை.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

    தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ‘உலக கோப்பை நெருங்கும் இந்த சமயத்தில் பந்து வீச்சு நிலையானதாக இல்லாதது கவலை அளிக்கிறது. பந்து வீச்சு கூட்டணியில் மாற்றங்கள் செய்ய முயற்சித்து வருகிறோம். ரிச்சா கோஷ் அடித்த ஷாட்கள் அருமையாக இருந்தது. அவர் வருங்காலத்தில் இந்தியாவின் சிறப்பான வீராங்கனையாக விளங்குவார்’ என்றார்.
    விராட் கோலிக்கு ஆதரவுகரம் நீட்டும் வகையில் அவருக்கு கடிதம் எழுதி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் வெளியிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட் கோலி கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அதிரடியாக ஒரு நாள் போட்டி கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்திக்குள்ளான கோலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு எதிராக சில கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். கடந்த மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் ஒதுங்கி ஒரு வீரராக அணியில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சதம் அடித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் அவரது பேட்டிங்கும் விமர்சிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் விராட் கோலிக்கு ஆதரவுகரம் நீட்டும் வகையில் அவருக்கு கடிதம் எழுதி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் வெளியிட்டுள்ளார். உணர்வுபூர்வமான அந்த கடிதத்தில் யுவராஜ் கூறியிருப்பதாவது:-

    விராட்....ஒரு கிரிக்கெட் வீரராக நீ எப்படி வளர்ந்து வந்தாய் என்பதை நான் அருகில் இருந்து பார்த்துள்ளேன். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் இணைந்து பயணித்த அந்த இளம் புயல் கோலி இன்று புதிய தலைமுறையினரையே வழிநடத்தும் ஜாம்பவானாக உருவெடுத்து இருக்கிறாய். வலை பயிற்சியில் உன்னுடைய ஒழுக்கமும், களத்தில் உன்னுடைய ஆர்வமும், விளையாட்டு மீதான அர்ப்பணிப்பும், இந்த தேசத்தில் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்து, என்றாவது ஒரு நாள் இந்திய அணியின் சீருடையை அணிய வேண்டும் என்ற உத்வேகத்தை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் கொடுக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் உனது கிரிக்கெட்டை நீ மேம்படுத்திக் கொண்டே வருகிறாய். இந்த அழகான விளையாட்டில் நீ ஏற்கனவே நிறைய சாதித்து இருக்கிறாய். கேப்டனில் நீ ஒரு ஜாம்பவான். அற்புதமான ஒரு தலைவர். இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடிப்பதை (சேசிங்) இனி உன்னிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன்.

    அணியின் சக வீரராகவும், அதைவிட ஒரு நண்பராகவும் நமக்குள் மறக்க முடியாத நினைவுகள் உண்டு. ரன் எடுப்பது, கேலி கிண்டல், சாப்பிடும் போது ஜாலி, பஞ்சாபி பாடலுக்கு நடனம் மற்றும் வெற்றி கோப்பைகள் என்று நிறையவற்றை ஒன்றாக செய்திருக்கிறோம். எனக்கு நீ எப்போதுமே ‘சீக்கு’வாக (செல்லப்பெயர்) இருப்பாய். உலக கிரிக்கெட்டில் ‘கிங்’ கோலியாக இருப்பாய்.

    உனக்குள் இருக்கும் கிரிக்கெட் வேட்கை தொடர வேண்டும். நீ ஒரு சூப்பர் ஸ்டார். தொடர்ந்து தேசத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாட வேண்டும்.

    இவ்வாறு அதில் யுவராஜ் கூறியுள்ளார். மேலும் ஒரு ஜோடி ஷூ ஒன்றையும் அதில் இணைத்துள்ளார். டெல்லியில் இருந்து வந்த அந்த குட்டிப் பையனுக்காக இதை சமர்ப்பிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா ஒருநாள் தொடரி 3-0 எனவும், டி20 தொடரை 3-0 எனவும் முழுமையாக கைப்பற்றியது.

    இதற்கிடையே, இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார் எனப்து நினைவிருக்கலாம்.

    ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான தொடரில் சொந்த மண்ணில் விளையாடியது. இதன் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

    இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. இலங்கை அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. 20 ஓவர் தொடர் வருகிற 24-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    டெஸ்ட் தொடர் மார்ச் 4-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவார்கள்.

    ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- தென் ஆப்பி ரிக்கா அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டிக்கான இடங்கள், தேதியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.

    அதன்படி முதல் 20 ஓவர் போட்டி ஜூன் 9-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. பெங்களூர், நாக்பூர், ராஜ்கோட், டெல்லி ஆகிய இடங்களில் முறையே ஜூன் 12, 14, 17 மற்றும் 19-ந் தேதிகளில் மற்ற 20 ஓவர் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் போட்டிக்கான இடங்கள் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. கொரோனா மற்றும் பருவநிலை காரணமாக இந்த போட்டிக்கான இடங்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் 5 ஆட்டங்களை நடத்தலாமா என்று கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

    இதுதொடர்பாக வருகிற 2-ந்தேதி நடைபெறும் கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. மேலும் சி.கே.நாயுடு டிராபி, பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் லீக் ஆகியவை குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட்டில் விளையாட்டு மேம்பாட்டின் பொது மேலாளராக முன்னாள் வேகப்பந்து வீரரும், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான அபய் குருவில்லா நியமிக்கப்படுகிறார். இது குறித்தும் 2-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
    ×