என் மலர்

  விளையாட்டு

  யுவராஜ்சிங் - விராட் கோலி
  X
  யுவராஜ்சிங் - விராட் கோலி

  கேப்டனில் நீ ஒரு ஜாம்பவான்- விராட்கோலிக்கு கடிதம் எழுதி யுவராஜ்சிங் புகழாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விராட் கோலிக்கு ஆதரவுகரம் நீட்டும் வகையில் அவருக்கு கடிதம் எழுதி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் வெளியிட்டுள்ளார்.
  புதுடெல்லி:

  இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட் கோலி கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அதிரடியாக ஒரு நாள் போட்டி கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்திக்குள்ளான கோலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு எதிராக சில கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். கடந்த மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் ஒதுங்கி ஒரு வீரராக அணியில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சதம் அடித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் அவரது பேட்டிங்கும் விமர்சிக்கப்படுகிறது.

  இந்த நிலையில் விராட் கோலிக்கு ஆதரவுகரம் நீட்டும் வகையில் அவருக்கு கடிதம் எழுதி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் வெளியிட்டுள்ளார். உணர்வுபூர்வமான அந்த கடிதத்தில் யுவராஜ் கூறியிருப்பதாவது:-

  விராட்....ஒரு கிரிக்கெட் வீரராக நீ எப்படி வளர்ந்து வந்தாய் என்பதை நான் அருகில் இருந்து பார்த்துள்ளேன். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் இணைந்து பயணித்த அந்த இளம் புயல் கோலி இன்று புதிய தலைமுறையினரையே வழிநடத்தும் ஜாம்பவானாக உருவெடுத்து இருக்கிறாய். வலை பயிற்சியில் உன்னுடைய ஒழுக்கமும், களத்தில் உன்னுடைய ஆர்வமும், விளையாட்டு மீதான அர்ப்பணிப்பும், இந்த தேசத்தில் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்து, என்றாவது ஒரு நாள் இந்திய அணியின் சீருடையை அணிய வேண்டும் என்ற உத்வேகத்தை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் கொடுக்கிறது.

  ஒவ்வொரு ஆண்டும் உனது கிரிக்கெட்டை நீ மேம்படுத்திக் கொண்டே வருகிறாய். இந்த அழகான விளையாட்டில் நீ ஏற்கனவே நிறைய சாதித்து இருக்கிறாய். கேப்டனில் நீ ஒரு ஜாம்பவான். அற்புதமான ஒரு தலைவர். இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடிப்பதை (சேசிங்) இனி உன்னிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன்.

  அணியின் சக வீரராகவும், அதைவிட ஒரு நண்பராகவும் நமக்குள் மறக்க முடியாத நினைவுகள் உண்டு. ரன் எடுப்பது, கேலி கிண்டல், சாப்பிடும் போது ஜாலி, பஞ்சாபி பாடலுக்கு நடனம் மற்றும் வெற்றி கோப்பைகள் என்று நிறையவற்றை ஒன்றாக செய்திருக்கிறோம். எனக்கு நீ எப்போதுமே ‘சீக்கு’வாக (செல்லப்பெயர்) இருப்பாய். உலக கிரிக்கெட்டில் ‘கிங்’ கோலியாக இருப்பாய்.

  உனக்குள் இருக்கும் கிரிக்கெட் வேட்கை தொடர வேண்டும். நீ ஒரு சூப்பர் ஸ்டார். தொடர்ந்து தேசத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாட வேண்டும்.

  இவ்வாறு அதில் யுவராஜ் கூறியுள்ளார். மேலும் ஒரு ஜோடி ஷூ ஒன்றையும் அதில் இணைத்துள்ளார். டெல்லியில் இருந்து வந்த அந்த குட்டிப் பையனுக்காக இதை சமர்ப்பிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×