என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இலங்கை அணி 60 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், போராடிய அசலங்கா அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார்.
    லக்னோ:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல்  20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 44 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் சேர்த்தனர்.

    இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலேயே தடுமாறியது. துவக்க வீரர் நிசங்கா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. 

    60 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில், போராடிய அசலங்கா அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார். எனினும் இலங்கை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.

    20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களே சேர்த்தது. அசலங்கா 53 ரன்களுடனும், சமீரா 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், ஸ்ரேயாஸ் அய்யர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
     
    இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 26ம் தேதி தரம்சாலாவில் நடக்கிறது.
    இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்த இஷான் கிஷன், 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்தார்.
    லக்னோ:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல்  20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் மீண்டும் இடம்பிடித்தனர். துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் களமிறங்கி அதிரயாக ஆடி ரன் குவித்தனர். இஷான் கிஷன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி 30 பந்துகளில் அரை சதம் கடந்ததுடன் சதத்தை நோக்கி பயணித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர்.

    111 ரன்கள் குவித்த நிலையில் துவக்க ஜோடியை பிரித்தார் லகிரு குமார. இவரது பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். ரோகித் மொத்தம் 32 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 44 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து இஷானுடன் இணைந்த ஸ்ரேயாஸ் அய்யரும் அதிரடியில் மிரட்ட, இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

    இதற்கிடையே இஷான் கிஷன் விக்கெட்டை தசுன் சனகா கைப்பற்றினார். இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 3 ரன்களும் எடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இலங்கை களமிறங்குகிறது.
    நீங்கள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்காக மிகவும் தாராளமாகவும், அக்கறையுடனும் இருப்பீர்கள் என யுவராஜ் சிங் கடிதத்துக்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் வீரரான யுவராஜ்சிங் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலிக்கு கடிதத்துடன் பரிசு ஒன்றையும் அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதத்தில், ‘மிகப்பெரிய கேப்டனாகவும், தலைவனாகவும் இருக்கிறாய். தற்போது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை நீங்கள் தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. இனி உங்களிடம் இருந்து வழக்கமான ரன் சேசை எதிர்பார்க்கிறேன்.

    நீ ஒரு சூப்பர் ஸ்டார். உனக்குள் இருக்கும் நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கட்டும். நாட்டை தொடர்ந்து பெருமைப்படுத்து’ என்று உருக்கமாக கூறி இருந்தார். மேலும் கோல்டன் ‘ஷூ’ ஒன்றையும் பரிசாக அனுப்பி இருந்தார்.

    யுவராஜ் சிங் அனுப்பி உருக்கமான கடிதத்துக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    உங்களின் இந்த அற்புதமான கடிதத்துக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தில் முதல் நாளில் இருந்து பார்த்த ஒருவரிடம் இருந்து இந்த கடிதம் வந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையும், நீங்கள் புற்று நோயில் இருந்து மீண்டு வந்ததும், கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் உத்வேகமாக இருந்தது.

    நீங்கள் யார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்காக மிகவும் தாராளமாகவும், அக்கறையுடனும் இருப்பீர்கள். இப்போது நாம் இருவரும் பெற்றோர்கள். அது என்ன ஒரு ஆசீர்வாதம் என்பதை அறிவோம். இந்த புதிய பயணத்தில் அனைத்து மகிழ்ச்சி, அழகான நினைவுகள் மற்றும் ஆசீர்வாதங்களை விரும்புகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது. மிதாலி ராஜ் 57 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 4 ஆட்டங்களில் இந்தியா தோற்று தொடரை இழந்தது. இரு அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை குயின்ஸ்டவுனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்தது. அமெலிகெர் 66 ரன்னும், சோபியா, தேவினே 34 ரன்னும், லூரன் டவுன், ஜென்சென் தலா 30 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் தீப்தி சர்மா, கெய்க்வாட், ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தொடக்க வீராங்கனை ‌ஷபெலி வர்மா 9 ரன்னிலும், தீப்தி சர்மா 21 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பின்னர் மந்தனா, ஹர்மன் ப்ரீத் கவுர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இதனால் இந்திய அணி இலக்கை நோக்கி சென்றது. மந்தானா 71 ரன்னிலும், ஹர்மன் ப்ரீத் கவுர் 63 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கேப்டன் மிதாலி ராஜ் அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றார்.

    இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது. மிதாலி ராஜ் 57 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் ஒரே இடத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெயின்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன.

    10 அணிகள் பங்கேற்பதால், ஐ.பி.எல். போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடந்த போது சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது.

    கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் ஒரே இடத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி மராட்டிய மாநிலத்தில் ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் நடக்கிறது. போட்டிகளை மும்பை, புனேயில் உள்ள மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், புனேயில் உள்ள எம்.சி.ஏ. மைதானம் ஆகிய 4 இடங்களில் லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதில் மும்பையில் 55 ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. 15 ஆட்டங்கள் புனேவில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இறுதி போட்டி மே 29-ந் தேதி நடத்தப்படுகிறது. பிளே- ஆப் ஆட்டங்கள் மற்றும் இறுதிபோட்டி நடைபெறும் இடங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    ஐ.பி.எல். போட்டி அட்டவணையை இறுதி செய்வதற்கான ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து விரைவில் போட்டி அட்டவணை குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
    2011-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் அறிமுகமான மயங்க் அகர்வால் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பஞ்சாப் அணிக்கு கடந்த சீசன்களில் லோகேஷ் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் புதிய வரவாக வந்துள்ள லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் சென்று விட்டார். அவர் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதில் அந்த அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    பஞ்சாப் அணி நிர்வாகம் மயங்க் அகர்வாலை தக்க வைத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி கேப்டனாக மயங்க் அகர்வால் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், ரபடா உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். இதில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியில் கடந்த சீசன்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் அறிமுகமான மயங்க் அகர்வால் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    ஐ.பி.எல். மற்றும் வேறு வகையிலான போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாடும் போதெல்லாம், எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய பேட்டிங்கை அவர் வெளிப்படுத்துவதை பார்த்து இருக்கிறோம் என ரோகித் கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் தொடர்ந்து ரன் குவியுங்கள். வாய்ப்பு தானாகவே வரும். ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் போன்ற வீரர்கள் அதில் சிறப்பாக விளையாடி தான் இப்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் வகிக்கிறார்கள். எனவே தேசிய அணிக்கான வாய்ப்பு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து ரன் வேட்டை நடத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

    சஞ்சு சாம்சன் மிகவும் திறமைசாலி. ஐ.பி.எல். மற்றும் வேறு வகையிலான போட்டிகளில் அவர் விளையாடும் போதெல்லாம், எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய பேட்டிங்கை அவர் வெளிப்படுத்துவதை பார்த்து இருக்கிறோம். அவரது ‘பேக்புட்’ பேட்டிங் ஸ்டைல் சூப்பராக இருக்கும். நிறைய வீரர்களுக்கு திறமை இருக்கிறது. ஆனால் அந்த திறமையை சிக்கலான கட்டத்தில் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம். 

    சஞ்சு சாம்சனை பொறுத்தவரை தனது அதிகபட்ச திறமையை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். எங்களுடன் இணைந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்கு நாங்கள் நம்பிக்கையை அளிக்கிறோம். நிச்சயம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணித் தேர்வுக்கு அவரது பெயரை பரிசீலிப்போம். அதனால் தான் அவர் இப்போது அணியில் இருக்கிறார்.மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். தற்சமயம் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

    பணிச்சுமை என்பது எப்போதும் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்தது. தினசரி அடிப்படையில் இதை பார்க்க வேண்டும். ஒரு வேளை ஓய்வு தேவைப்பட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக இன்னொரு வீரர் வருவார். பும்ரா, லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட் ஆகியோரை பற்றி பேச வேண்டும் என்றால் அவர்கள் இந்திய அணியின் வெற்றிகளில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறார்கள். அதே நேரத்தில் அவர்களை வருங்கால கேப்டன்களாகவும் பார்க்கிறோம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    டெல்லி அணியின் மற்றொரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான 40 வயதான ஷேன் வாட்சனை நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அஜித் அகர்கர் நேற்று நியமிக்கப்பட்டார். 44 வயதான அகர்கர் இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக விளையாடி இருக்கும் அகர்கர் தற்போது டெலிவிஷன் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அவர் பயிற்சியாளர் பொறுப்பில் கால்பதிக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். இன்று தொடங்கும் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரில் தனது வர்ணனையாளர் பணி நிறைவடைந்ததும் டெல்லி அணியினருடன் இணைகிறார்.

    இது குறித்து அகர்கர் கூறுகையில் ‘இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வீரராக இருந்துள்ள நான் ஒரு வித்தியாசமான பொறுப்புக்காக அணிக்கு திரும்பும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளேன். உலகின் மிகச்சிறந்த திறமையை கொண்ட வீரர்களில் ஒருவரான ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் அற்புதமான இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் ஜாம்பவான். அவருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார்.

    இதற்கிடையே, டெல்லி அணியின் மற்றொரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான 40 வயதான ஷேன் வாட்சனை நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா அணி ஒரு போதும் இழந்ததில்லை. அந்த பெருமையை தக்கவைக்க வேண்டும் என்றால் நாளை நடக்கவுள்ள கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
    கிறைஸ்ட்சர்ச்:

    டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    தொடக்க டெஸ்டில் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 95 மற்றும் 111 ரன்களில் சுருண்ட தென்ஆப்பிரிக்கா சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. அந்த அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒரு போதும் இழந்ததில்லை. அந்த பெருமையை தக்கவைக்க வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இதற்கு டீன் எல்கர், பவுமா, மார்க்ராம், வான்டெர் துஸ்சென் போன்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமாகும்.

    ஆனால் உள்ளூர் சூழல் நியூசிலாந்துக்கே சாதகமாக உள்ளது. தொடக்க டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி முதல் இன்னிங்சிலும் (7 விக்கெட்), டிம் சவுதி 2-வது இன்னிங்சிலும் (5 விக்கெட்) தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை அலற வைத்தனர். இந்த டெஸ்டில் ‘டிரா’ செய்தாலே போதும் நியூசிலாந்து தொடரை வசப்படுத்திவிடலாம். நியூசிலாந்து அணி தங்களது கிரிக்கெட் பயணத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. முந்தைய 16 முயற்சியும் ஏமாற்றத்திலேயே முடிந்திருக்கிறது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்க டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்துக்கு தற்போது அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. அத்துடன் இந்த டெஸ்டிலும் வெற்றி கண்டால் டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு நியூசிலாந்து ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி ஜெர்மனியின் மெலிசா ஜெமினியையும், 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன், கஜகஸ்தானின் அய்டா அலிகெயேவாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
    புதுடெல்லி:

    73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 81 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை நந்தினி, கஜகஸ்தானின் வாலெரியா ஆக்ஸ்னோவாவை சந்தித்தார். 

    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நந்தினியின் சரமாரியான குத்துகளை சமாளிக்க முடியாமல் வாலெரியா திணறினார். இதையடுத்து 3-வது ரவுண்டில் போட்டியை நிறுத்திய நடுவர் நந்தினி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் அரைஇறுதிக்கு முன்னேறிய நந்தினி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார். 

    அவர் அரைஇறுதியில் தோற்றாலும் வெண்கலப்பதக்கம் கிடைக்கும். 70 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி ஜெர்மனியின் மெலிசா ஜெமினியையும், 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன், கஜகஸ்தானின் அய்டா அலிகெயேவாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். இந்திய வீராங்கனைகள் மீனா ராணி (60 கிலோ), அஞ்சலி துஷிர் (66 கிலோ), சவீட்டி (75 கிலோ) ஆகியோர் தங்கள் பந்தயங்களில் தோல்வியை தழுவினர்.
    இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீசை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்ததும் அடங்கும்.
    லக்னோ:

    மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்றிரவு (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

    ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அணியை தயார்படுத்தும் வகையில் இந்தியா பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த தொடரிலும் அது தொடரும். விராட் கோலி, ரிஷாப் பண்ட் ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர், லோகேஷ் ராகுல் காயத்தால் இடம் பெறவில்லை. இதனால் இந்த 20 ஓவர் தொடரில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிட்டும். சஞ்சு சாம்சனை நடுவரிசையில் பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பியுள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் வருகை அணியின் சரியான கலவைக்கு உதவிகரமாக இருக்கும். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே இப்போது அனுபவசாலிகள். இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வதில் கவனமுடன் இருப்பார்கள். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீசை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்ததும் அடங்கும். உள்ளூரில் களம் இறங்குவதால் இந்தியாவின் கை ஓங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    ஆஸ்திரேலியாவில், 20 ஓவர் தொடரை 1-4 என்ற கணக்கில் பறிகொடுத்த கையோடு இலங்கை அணி இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது. இருப்பினும் கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றி அவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளித்திருக்கும். குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா, கேப்டன் தசுன் ஷனகா ஆகியோர் பேட்டிங்கில் பார்மில் உள்ளனர். ஆனால் சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் ஹசரங்கா இல்லாதது சற்று பலவீனமாகும். கொரோனா தொற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடாத ஹசரங்கா தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் தனிமைப்படுத்துதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே தங்கியிருக்கும் அவர் இந்திய 20 ஓவர் தொடரில் விளையாட வாய்ப்பில்லை. அதே சமயம் 21 வயதான தீக்‌ஷனாவின் சுழல் தாக்குதல் இந்திய பே்டஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும்.

    இலங்கை கேப்டன் ஷனகா நேற்று அளித்த பேட்டியில், ‘டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டும். தொடக்க வீரர்கள் ரன்கள் குவிக்கும் போது, நாங்கள் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உண்டு. ஹசரங்கா இல்லாதது பின்னடைவு தான். ஆனாலும் நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். இளம் வீரர்களிடம் மிகச்சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 22 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இரவில் பனிப்பொழிவு காரணமாக பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். இதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார் அல்லது அவேஷ்கான்.

    இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், கமில் மிஷாரா அல்லது சன்டிமால், சாரித் அசலன்கா, ஜனித் லியானாஜ், தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, மகீஷ் தீக்‌ஷனா, லாகிரு குமாரா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மெக்சிகோ :

    ஜெர்மனியை சேர்ந்தவரும், தரவரிசையில் நம்பர் 3 இடத்தைப் பிடித்தவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மெக்சிகோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்வெரேவ் பிரேசிலின் மார்சிலோ மெலோவுடன் இணைந்து விளையாடினார். அதில் ஸ்வெரேவ் ஜோடி தோல்வி அடைந்தது.

    டைபிரேக்கரின் போது ஸ்வெரேவ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஸ்வெரேவ் நடுவர் காலை தாக்குவது போல் அவர் அமர்ந்திருந்த நாற்காலி மீது டென்னிஸ் பேட்டால் ஓங்கி அடித்தார். அவரது செயல் டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

    ×