என் மலர்
விளையாட்டு
- கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுவார்கள்
- கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.
புதுடெல்லி:
இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளனர்.
இருவரும் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலையில், கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதேசமயம் காயமடைந்த கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து தேர்வுக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
- டி.என்.பி.எல். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
- ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சென்னை:
2022ம் ஆண்டுக்கான டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ரசிகர்கள் போட்டிகளை காண முடியாத நிலையில், இந்த ஆண்டு பல்வேறு ஏற்பாடுகளுடன் பிரமாண்டமான நெல்லை கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பட்டியல் டி.என்.பி.எல் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கெளசிக் காந்தி கேப்டனாக செயல்படவுள்ளார். மேலும் அந்த அணியில் அலெக்சாண்டர், அருண், அருண் குமார், ஹரிஷ் குமார், ஜெகதீசன், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ், கவுசிக் காந்தி, நிலேஷ் சுப்பிரமணியம், பிரசித் ஆகாஷ்,ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜய் குமார், கார்த்திக், மதன் குமார் ஆகிய 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரின் இறுதிப் போட்டி கோவையில் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
- 20 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
- 20 கோடி ஃபாலோயர்களை கடந்த விளையாட்டு வீரர்களில் விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 20 கோடி ஃபாலோயர்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர், இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இதற்கு முன் விளையாட்டு வீரர்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட வீரர்களாக கால்பந்து சூப்பர் ஸ்டார்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். ரொனால்டோ 451 மில்லியன் ஃபாலோயர்களையும், மெஸ்ஸி 334 மில்லியன் ஃபாலோயர்களையும் பெற்று முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் கோலி தற்போது 3-வது வீரராக இணைந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் திணறி வரும் கோலியை ஓய்வு எடுக்கக்கோரி மூத்த வீரர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான டி20 போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது.
- மித்தாலி ராஜ் இந்திய அணிக்காக 232 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7805 ரன்களும், 50.68 சராசரியும் வைத்துள்ளார்.
- பெண்கள் கிரிக்கெட்டிற்கு வேறு வகையில் பங்களிப்பு செலுத்துவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-
ஒவ்வொரு பயணத்தையும் போல இந்த பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. நான் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்.
இந்திய அணியை பல வருடங்களாக சிறப்பாக வழி நடத்தியதற்கு பெருமைப்படுகிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை இந்திய பெண்கள் அணியையும், என்னையும் சிறந்த வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளது.
போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், பெண்கள் கிரிக்கெட்டிற்கு வேறு வகையில் பங்களிப்பு செலுத்துவேன். என்னுடைய ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய 2வது இன்னிஸை உங்களுடைய ஆதரவுடன் ஆரம்பிக்கிறேன்.
இவ்வாறு மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து வந்த மித்தாலி ராஜ் இதுவரை இந்திய அணிக்காக 232 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7805 ரன்களும், 50.68 சராசரியும் வைத்துள்ளார்.
- தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.
- இந்த போட்டியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை நடைபெறும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.
இந்நிலையில் இந்த உலக சாதனை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நாங்கள் உலக சாதனை படைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை சாதனைகளையும், எண்களையும் பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விரும்புகிறோம். நாங்கள் களம் இறங்குவதற்கு முன் எங்களை தயார் செய்துகொண்டு, பயிற்சி செய்துகொண்டு அவற்றை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம்.
வலுவான தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும்போது நம்முடைய பலமும் தெரியவரும். மேலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
நாங்கள் வெற்றி பெறுவது போல விளையாடினால் வெற்றி பெறுவோம், இல்லையென்றாலும் கற்றுக்கொண்டு அடுத்த விளையாட்டை விளையாடுவோம்.
இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார்.
- பாதத்தில் ஏற்பட்ட காயத்துடன் தான் பிரெஞ்சு ஒபன் போட்டியில் நடால் ஆடினார். இந்த காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளார்.
- ஊசி போட்டுக் கொண்டு தன்னால் விம்பிள்டனில் விளையாட இயலாது என்று நடால் தெரிவித்து இருக்கிறார்.
லண்டன்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறும்.
டென்னிஸ் போட்டிகளில் இதுதான் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஒபனிலும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஒபனிலும் ரபெல் நடால் (ஸ்பெயின்) சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் அவர் 22 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அடுத்து நடைபெற இருக்கும் விம்பிள்டன் போட்டியிலும் நடால் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிசில் நடால் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
பாதத்தில் ஏற்பட்ட காயத்துடன் தான் பிரெஞ்சு ஒபன் போட்டியில் நடால் ஆடினார். இந்த காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஊசி போட்டுக் கொண்டு தன்னால் விம்பிள்டனில் விளையாட இயலாது என்று நடால் தெரிவித்து இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் விம்பிள்டனில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விம்பிள்டன் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது.
- விராட்கோலி, ஸ்டீவ் சுமித், வில்லியம்சன் ஆகியோரை விட ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினரான சபாகரீம் தெரிவித்துள்ளார்.
- எந்த ஆடுகளத்தில் விளையாடினாலும் ஜோரூட் தனித்துவம் பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜோரூட். டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் முதல் போட்டியில் அவர் சதம் அடித்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற முடிந்தது.
31 வயதான ஜோரூட் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் டெஸ்டில் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார்.
ஜோரூட் 118 டெஸ்டில் 10,015 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.57 ஆகும். 26 சதமும், 53 அரை சதமும் அடித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தை வெற்றி பெற ஜோரூட்டின் ஆட்டத்தை கங்குலி, மார்க்டெய்லர் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் பாராட்டி இருந்தனர். டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று டெய்லர் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விராட்கோலி, ஸ்டீவ் சுமித், வில்லியம்சன் ஆகியோரை விட ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தேர்வு குழு உறுப்பினரான சபாகரீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜோரூட் வெகுதூரம் முன்னேறி சென்று இருக்கிறார். இங்கிலாந்தின் பேட்டிங்கை பார்த்தால் அவரது பெயர் மட்டுமே மீண்டும் மீண்டும் வருகிறது. ஜோரூட்டுக்கு மறுமுனையில் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை.
இந்திய அணியை சொல்ல வேண்டுமானால் விராட்கோலியுடன் லோகேஷ், ராகுல், ரோகித் சர்மா, ரிஷப்பண்ட் போன்றோரில் அவருக்கு இணையாக ஆடி ஆதரவு கொடுத்துள்ளார்கள். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இதே நிலைமையில்தான் இருக்கிறது.
எந்த ஆடுகளத்தில் விளையாடினாலும் ஜோரூட் தனித்துவம் பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற 3 பேட்ஸ்மேன்களை (விராட்கோலி, ஸ்டீவ்சுமித், வில்லியம்சன்) விட அவர் பின்தங்கி இருந்தார். தற்போது அவர்கள் அனை வருக்கும் மேல் இருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக ஜோரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
4-வது இன்னிங்சில் ஜோரூட் சதம் அடித்தார். இது எளிதல்ல. போல்ட், ஜேமிசன் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் வலிமையானவர் என்பதை இந்த ஆட்டம் மூலம் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு சபாகரீம் கூறியுள்ளார்.
- இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
கொழும்பு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா 38 ரன்னும், பதும் நிசங்கா 36 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். அந்த அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 70 ரன்னும், ஆரோன் பின்ச் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்
- 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம், ஆனந்த் தோல்வி அடைந்தார்
ஒஸ்லோ:
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னஸ் கார்ல்செனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த 5-வது சுற்றின் 50வது நகரில் கார்ல் சென்னை விழ்த்தி ஆனந்த் வெற்றி பெற்றார். இதன்மூலம், நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து அவர் முதலிடத்தில் உள்ளார்.
கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வெஸ்லி சோ மற்றும் ஷக்ரியார் மமேத்யரோவ் ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்த தொடரின் முதல் 3 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட ஆனந்த், 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் தோல்வி அடைந்தார்.
- தெண்டுல்கரின் சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும்.
மெல்போர்ன்:
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜோரூட் முதல் போட்டியில் சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கிடைத்தது. அதோடு ஜோரூட் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார்.
இந்த நிலையில் டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் (15,921) சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜோரூட் மிகவும் பிரமாதமாக ஆடி வருகிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும். உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவரால் 15,000 ரன்னுக்கு மேல் எடுக்க இயலும்.
இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார்.
- 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- இதற்கு முன் 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது.
கார்டிப்:
உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வர ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடுகிறது. மற்ற நாடுகள் தகுதி சுற்று மூலமே முன்னேறி இருந்தன.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 3 நாடுகள் தகுதி பெற வேண்டி இருந்தது.
இந்த நிலையில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வேல்ஸ் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கார்டிப் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது.
மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் காரெத் பாலே இந்த கோலை அடித்தார்.
64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது.
வேல்ஸ் அணி 'பி' பிரிவில் இருக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் 2 நாடுகள் தகுதி பெற வேண்டி உள்ளது.
- ஜோ ரூட் சதம் அடித்ததால், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
- சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
லண்டன்:
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 141 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.
9 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 285 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்தார். இதனைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் சதம் அடித்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி கேப்டனாக இருந்த அலஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆவார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த ஜோ ரூட்டிற்கு, இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






