என் மலர்
விளையாட்டு
- முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
- 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார்.
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - ஸ்வீடன் அணிகள் மோதின. 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.
இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 2-வது பாதி தொடங்கியது. 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது.
கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர். இதன்மூலம் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. ஸ்வீடன் அணி 4-வது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
- விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் அவ்வப்போது தடுமாறுகிறார்.
- அவரால் பாபர் அசாம் போல தொடர்ந்து அசத்த முடிவதில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் விராட் கோலியை விட பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பேட்ஸ்மேனாக இருப்பதால் இம்முறை 2023 உலக கோப்பையில் இந்தியாவை நிச்சயம் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல நேரங்களில் சில நட்சத்திர வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையும் கேரியரின் கடைசி சில வருடங்களாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் வருவீர்கள். இம்முறை அது இந்தியாவுக்கு நடக்கிறது என்று உணர்கிறேன்.
குறிப்பாக நட்சத்திர வீரர்கள் அணியை விட பெரியவர்களாக உருவெடுக்கும் போது முக்கிய தருணங்களில் அணி நிர்வாகத்துக்கு சரியான முடிவை எடுப்பதில் கடினம் ஏற்படுகிறது. அந்த வகையில் அனைத்து துறைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் பாகிஸ்தானுக்கு இந்த முறை நல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் ரோகித் சர்மாவால் எவ்வளவு நாட்கள் விளையாடி விட முடியும்? அதே போல விராட் கோலி பற்றிய கருத்துக்கள் என்ன? ஒருவேளை நீங்கள் விராட் கோலியை பாபர் அசாமுடன் ஒப்பிட்டால் ஒரு சீசனில் அபாரமாக செயல்படும் அவர் மற்றொரு சீசனில் திண்டாடுகிறார்.
அதாவது விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் அவ்வப்போது தடுமாறுகிறார். அவரால் பாபர் அசாம் போல தொடர்ந்து அசத்த முடிவதில்லை. அதனால் தான் இம்முறை நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியாவை மீண்டும் தோற்கடிப்பதற்கு பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று நான் சொல்கிறேன்.
என அவர் கூறினார்.
- இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது.
- டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.
இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மூலம் ரிங்கு சிங் மற்றும் பிரதிஷ் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள்.
ஐபிஎல் தொடர் மூலம் ரிங்கு சிங் இந்திய அணிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக பினிஷிங் ரோல் செய்தார். ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 5 பந்துகளை சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாக காணப்பட்டார்.
இந்நிலையில் டோனி மற்றும் யுவராஜ் இடத்தை ரிங்கு சிங் பூர்த்தி செய்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். அவர் 5 அல்லது 6-வது இடத்தில் சிறப்பாக செயல்படுவார். ஒரு சிறந்த ஃபினிஷராகவும் அவரால் இருக்க முடியும். டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.
நாங்கள் அத்தகைய வீரர்களை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அது இதுவரை வேலை செய்யவில்லை. ரிங்கு ஒரு சிறந்த பீல்டரும் கூட. உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் நிறைய மேம்பட்டு இருக்கிறார் என்று நான் உணர்கிறேன்.
ஹர்திக் பாண்டியா ஒரு பேட்டராக மாறி, 3 அல்லது 4-வது வரிசையில் விளையாடுவதால், ஆட்டத்தை முடித்துக்கொடுக்கக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை. உங்களிடம் அக்சர் படேல் போன்ற ஒருவர் இருக்கிறார், ஆனால் ரிங்கு சிங்தான் அந்த இடத்துக்கு பொறுத்தமானவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன் பட்டம் வென்றார்.
- பெண்கள் பிரிவில் சாரா வகிடா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் ஜப்பானின் டென்ஷி இவாமி சாம்பியன் பட்டம் வென்றார். 2-வது இடத்தை கியான் மார்டின் பிடித்தார். இதேபோல பெண்கள் பிரிவில் சாரா வகிடா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2-வது இடத்தை ஷினோ மட்சுடா பிடித்தார்.
- இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
- தர வரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
சிட்னி:
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நாளை (20-ந் தேதி) நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. இதனால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது ஸ்பெயினா? இங்கிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
தர வரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
இங்கிலாந்து லீக் சுற்றில் ஹைதி (1-0), டென்மார்க் (1-0), சீனா (6-1) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் நைஜீரியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கிலும், அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
அந்த அணி 3-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். 2015-ல் அரை இறுதியில் தோற்று 3-வது இடத்தை பிடித்தது. முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
6-வது வரிசையில் இருக்கும் ஸ்பெயின் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் தோற்று இருந்தது. லீக் ஆட்டத்தில் 0-4 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்று, கோஸ்டாரிகாவை 3-0 என்ற கணக்கிலும், ஜாம்பியாவை 5-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது.
2-வது சுற்றில் சுவிட்சர் லாந்தை 5-1 என்ற கணக்கிலும், கால்இறுதியில் நெதர்லாந்தை 2-1 என்ற கணக்கிலும், அரை இறுதியில் சுவீடனை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.
ஸ்பெயின் அணி இதற்கு முன்பு கால் இறுதி வரையே நுழைந்து இருந்தது. தற்போது முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
- வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயிம் தீ மிதித்து வேண்டிக் கொண்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான ஆசிய அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் உலக கோப்பை போட்டிகளுக்கு அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சி பெற்று வரும் நிலையில் வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயிம் தனது பயிற்சியை வேறு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் வங்காளதேச அணி வெற்றி பெற தீ மிதித்து வேண்டி கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது.
- என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.
உலக கோப்பையையொட்டி எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்று முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் உலக கோப்பை போட்டியின் அரை இறுதிக்கு நுழையும் 4 அணிகள் எவை என்று கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நிச்சயமாக இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான உலக கோப்பையாக இருக்கும்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 பெரிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 4-வது அணியாக தென்ஆப் பிரிக்கா இணைய வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானும் முன்னேற்றலாம்.
ஆனால் நான் தென்ஆபிரிக்கா நுழையும் என நம்புகிறேன். திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
ஆசிய கண்டத்தை சாராத 3 அணிகளை நான் தேர்வு செய்துள்ளேன். இது கொஞ்சம் கடினமானதுதான். ஆனாலும் எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்.
இந்தியா ஆடுகளங்கள் நன்றாக இருக்கும். மோசமான ஆடுகளத்தை உலக கோப்பை தொடரில் பார்க்க முடியாது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
- டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் டி20 போட்டி நேற்று இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி முதலில் சொதப்பினாலும் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கெளரவமான ரன்களை எடுத்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் கேப்டன் பும்ரா, பிரதிஷ் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் இந்திய அணி எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில்இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே, ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக சேவாக், டோனி, ரெய்னா, ரகானே, விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், பாண்ட்யா ஆகியோர் செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த சாதனையை பும்ரா மட்டுமே நிகழ்த்தியுள்ளார்.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
- 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.
சிட்னி:
இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22-ந் தேதி மொகாலியில் நடக்கிறது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், 20 ஓவர் மற்றும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருந்த ஸ்டீவன் சுமித் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அணியில் இருந்து விலகி இருக்கின்றனர்.
இதேபோல் ஒருநாள் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் ஒதுங்கி இருக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை மிட்செல் மார்ஷ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆஷ்டன் டர்னர், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் கூடுதலாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு வரும் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்திய தொடருக்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டம் நாளை இரவு அரங்கேறுகிறது.
- முதல் நாளான இன்று 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் நடக்கிறது.
புடாபெஸ்ட்:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 27-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2,100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தின் உச்சக்கட்ட போட்டி என்பதால் இதில் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதல்ல.
40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை 2 பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீஸ் உலக தடகளத்தில் நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கலமும், கடந்த ஆண்டு போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த முறை இந்திய தரப்பில் 27 வீரர், வீராங்கனைகள் சென்றிருந்தாலும் ஒரே எதிர்பார்ப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மீதே உள்ளது. அவர் தங்கப்பதக்கம் வென்றால் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியில் மகுடம் சூடிய 2-வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.
25 வயதான நீரஜ் சோப்ராவுக்கு செக்குடியரசின் ஜாகுப் வாட்லெஜ், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர், நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள்.
கடந்த ஆண்டு உலக தடகளத்தில் 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சுவீடனில் நடந்த டைமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரம் வரை ஈட்டி வீசினார். 90 மீட்டர் இலக்கை அடைய தீவிரம் காட்டுகிறார். அதை அவர் அடைந்தால் நிச்சயம் பதக்கமேடையில் ஏறுவார் என்பதில் சந்தேகமில்லை. '90 மீட்டர் இலக்கை எட்டுவதற்கு எனக்கு அற்புதமான ஒரு நாளுடன் சாதகமான சீதோஷ்ண நிலை அமைந்தால் போதும். நிச்சயம் அதை என்னால் எட்ட முடியும் என்று நம்புகிறேன்' என்று நீரஜ் குறிப்பிட்டார். ஈட்டி எறிதலில் 25-ந்தேதி தகுதி சுற்றும், 27-ந்தேதி இரவு பதக்கத்துக்கான இறுதி சுற்றும் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் மற்றொரு எதிர்பார்ப்பு நிறைந்த பந்தயமான உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டம் நாளை இரவு அரங்கேறுகிறது. நடப்பு சாம்பியன் பிரெட் கெர்லி (அமெரிக்கா), இங்கிலாந்தின் ஜார்னெல் ஹூயூக்ஸ், கென்யாவின் பெர்டினன்ட் ஒமன்யாலா ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலக தடகளத்தில் 13 தங்கம் உள்பட 33 பதக்கங்களை அள்ளி முதலிடம் பிடித்த அமெரிக்கா இந்த தடவையும் வெகுவாக ஆதிக்கம் செலுத்தும் என்று தெரிகிறது. அமெரிக்கா அதிகபட்சமாக 138 வீரர், வீராங்கனைகளை களம் இறக்குகிறது.
முதல் நாளான இன்று 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் நடக்கிறது. மற்றபடி நீளம் தாண்டுதல், 1,500 மீட்டர் ஓட்டம், டிரிபிள் ஜம்ப் ஆகியவற்றில் தகுதி சுற்று நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு:-
பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்).
ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீ. ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீ. ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீ. தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் குமார் (3 பேரும் ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் ( 6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).
- ஒரு நாள் போட்டியில் 13 முறை இரட்டை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளார்.
- 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கோலி பந்து வீசினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வருபவர் விராட் கோலி. தொடர்ச்சியான ரன் குவிப்பால் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2008-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி நேற்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 15-வது ஆண்டை நிறைவு செய்தார். அவருக்கு கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
34 வயதான கோலி இதுவரை 111 டெஸ்டில் விளையாடி 29 சதம் உள்பட 8,676 ரன், 275 ஒரு நாள் போட்டிகளில் 46 சதத்துடன் 12,898 ரன், 115 இருபது ஓவர் போட்டிகளில் ஒரு சதம், 37 அரைசதத்துடன் 4,008 ரன் என்று ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 25,582 ரன்கள் குவித்துள்ளார்.
கோலியின் 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் சுவாரஸ்மான அம்சங்களை கிரிக்கெட் இணையதளம் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு:-
* கிரிக்கெட் களத்தில் இரு முனை ஸ்டம்புக்கு இடைப்பட்ட தூரம் 20.12 மீட்டர். இவற்றில் கோலி சர்வதேச போட்டியில் ஒன்று, இரண்டு, மூன்று வீதம் ரன்னுக்காக (பவுண்டரி ஷாட் கிடையாது) ஓடிய தூரம் 277 கிலோமீட்டர். இதே போல் தனது பார்ட்னரின் ரன்னுக்காக ஓடிய தூரம் 233 கிலோமீட்டர். மொத்தத்தில் அவர் 510 கிலோமீட்டர் தூரம் ஓட்டம் பிடித்திருப்பது புள்ளி விவரங்களின் வாயிலாக அறிய முடிகிறது. கோலியின் ஓட்டத்தை கணக்கிட்டால் அவர் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கோவை வரை சென்றிருக்க முடியும்.
* கோலி இதுவரை 83 மைதானங்களில் விளையாடி இருக்கிறார். அவற்றில் 46 மைதானங்கள் (மொத்தம் 76 சர்வதேச சதம்) சதத்தை கண்டுள்ளன. இதில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் தனித்துவமானது. இங்கு அதிகபட்சமாக 5 சதங்கள் எடுத்துள்ளார். சச்சின் தெண்டுல்கருக்கு (53 இடத்தில் 100 சதம்) அடுத்தபடியாக அதிக மைதானங்களில் ஹெல்மெட்டை கழற்றி உயர்த்தி பிடித்தது கோலி தான்.
* 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது அறிமுக ஆட்டத்திலேயே (2011-ம் ஆண்டு வங்காளதேசத்தக்கு எதிராக) சதம் அடித்த கோலி 2012-ம் 20 ஓவர் உலகக் கோப்பையின் தனது முதல் ஆட்டத்தில் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) அரைசதம் அடித்திருந்தார். இரு உலகக் கோப்பையில் அறிமுக ஆட்டங்களில் சதம், அரைசதம் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
* ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 9 நாடுகளிலும் சதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள 8 நாடுகளில் 7-ல் அவரது பேட் சதத்தை ருசித்துள்ளது. வங்காளதேச மண்ணில் மட்டும் இன்னும் 100-ஐ தொடவில்லை.
* 2013-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சேசிங்கின் போது 27-வது ஓவரில் களம் இறங்கிய கோலி 52 பந்துகளில் சதத்தை எட்டி வியப்பூட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியரின் மின்னல்வேக சதம் இதுவாகும். அதே தொடரில் நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் 30-வது ஓவரில் களம் புகுந்து 61 பந்துகளில் மூன்று இலக்கத்தை தொட்டார். ஒரு நாள் போட்டியில் இலக்கை விரட்டும் போது (சேசிங்) 25-வது ஓவருக்கு பிறகு களம் கண்டு ஒன்றுக்கு மேல் சதம் அடித்த ஒரே வீரர் நம்ம கோலி தான்.
* விராட் கோலியின் 46 ஒரு நாள் போட்டி சதங்களில் 26 சதம் 2-வது பேட்டிங்கின் போது எடுத்தவை. சேசிங்கில் அதிக சதங்கள் நொறுக்கிய சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து (17 சதம்) பறித்தது குறிப்பிடத்தக்கது.
* ஒரு நாள் போட்டியில் 13 முறை இரட்டை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளார். இதில் ரோகித் சர்மாவுடன் இணைந்து எடுத்த 5 இரட்டை சத பார்ட்னர்ஷிப்பும் அடங்கும்.
* 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கோலி பந்து வீசினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவரது முதல் பந்து வீச்சு இது தான். ஆனால் தனது முதல் பந்தை வைடாக வீச அதில் கெவின் பீட்டர்சன் விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டாார். ஆக, தனது முதலாவது பந்தை வீசும் முன்பே விக்கெட்டை சாய்த்த ஒரே வீரர் கோலி தான்.
* இந்த ஆண்டு தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 390 ரன் திரட்டியது. விராட் கோலி 166 ரன்கள் சேர்த்தார். இலங்கை 22 ஓவர்களில் வெறும் 73 ரன்னில் சுருண்டது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் இமாலய வெற்றியாக அமைந்தது. கோலியின் ஸ்கோர் எதிரணியின் ஒட்டுமொத்த ஸ்கோரை விட 93 ரன் அதிகமாகும். அதாவது ஒரு நாள் போட்டியில் ஒரு வீரரின் ரன்னுக்கும், எதிரணியின் ஒட்டுமொத்த ரன்னுக்கும் இடையிலான 2-வது அதிகபட்ச வித்தியாசமாக இது பதிவானது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
- இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் வென்றார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வாண்ட்ருசோவாவுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.






