என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஒரு நாள் போட்டியில் 13 முறை இரட்டை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளார்.
    • 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கோலி பந்து வீசினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வருபவர் விராட் கோலி. தொடர்ச்சியான ரன் குவிப்பால் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2008-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி நேற்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 15-வது ஆண்டை நிறைவு செய்தார். அவருக்கு கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    34 வயதான கோலி இதுவரை 111 டெஸ்டில் விளையாடி 29 சதம் உள்பட 8,676 ரன், 275 ஒரு நாள் போட்டிகளில் 46 சதத்துடன் 12,898 ரன், 115 இருபது ஓவர் போட்டிகளில் ஒரு சதம், 37 அரைசதத்துடன் 4,008 ரன் என்று ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 25,582 ரன்கள் குவித்துள்ளார்.

    கோலியின் 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் சுவாரஸ்மான அம்சங்களை கிரிக்கெட் இணையதளம் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில வருமாறு:-

    * கிரிக்கெட் களத்தில் இரு முனை ஸ்டம்புக்கு இடைப்பட்ட தூரம் 20.12 மீட்டர். இவற்றில் கோலி சர்வதேச போட்டியில் ஒன்று, இரண்டு, மூன்று வீதம் ரன்னுக்காக (பவுண்டரி ஷாட் கிடையாது) ஓடிய தூரம் 277 கிலோமீட்டர். இதே போல் தனது பார்ட்னரின் ரன்னுக்காக ஓடிய தூரம் 233 கிலோமீட்டர். மொத்தத்தில் அவர் 510 கிலோமீட்டர் தூரம் ஓட்டம் பிடித்திருப்பது புள்ளி விவரங்களின் வாயிலாக அறிய முடிகிறது. கோலியின் ஓட்டத்தை கணக்கிட்டால் அவர் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கோவை வரை சென்றிருக்க முடியும்.

    * கோலி இதுவரை 83 மைதானங்களில் விளையாடி இருக்கிறார். அவற்றில் 46 மைதானங்கள் (மொத்தம் 76 சர்வதேச சதம்) சதத்தை கண்டுள்ளன. இதில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் தனித்துவமானது. இங்கு அதிகபட்சமாக 5 சதங்கள் எடுத்துள்ளார். சச்சின் தெண்டுல்கருக்கு (53 இடத்தில் 100 சதம்) அடுத்தபடியாக அதிக மைதானங்களில் ஹெல்மெட்டை கழற்றி உயர்த்தி பிடித்தது கோலி தான்.

    * 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது அறிமுக ஆட்டத்திலேயே (2011-ம் ஆண்டு வங்காளதேசத்தக்கு எதிராக) சதம் அடித்த கோலி 2012-ம் 20 ஓவர் உலகக் கோப்பையின் தனது முதல் ஆட்டத்தில் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) அரைசதம் அடித்திருந்தார். இரு உலகக் கோப்பையில் அறிமுக ஆட்டங்களில் சதம், அரைசதம் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

    * ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 9 நாடுகளிலும் சதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள 8 நாடுகளில் 7-ல் அவரது பேட் சதத்தை ருசித்துள்ளது. வங்காளதேச மண்ணில் மட்டும் இன்னும் 100-ஐ தொடவில்லை.

    * 2013-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சேசிங்கின் போது 27-வது ஓவரில் களம் இறங்கிய கோலி 52 பந்துகளில் சதத்தை எட்டி வியப்பூட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியரின் மின்னல்வேக சதம் இதுவாகும். அதே தொடரில் நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் 30-வது ஓவரில் களம் புகுந்து 61 பந்துகளில் மூன்று இலக்கத்தை தொட்டார். ஒரு நாள் போட்டியில் இலக்கை விரட்டும் போது (சேசிங்) 25-வது ஓவருக்கு பிறகு களம் கண்டு ஒன்றுக்கு மேல் சதம் அடித்த ஒரே வீரர் நம்ம கோலி தான்.

    * விராட் கோலியின் 46 ஒரு நாள் போட்டி சதங்களில் 26 சதம் 2-வது பேட்டிங்கின் போது எடுத்தவை. சேசிங்கில் அதிக சதங்கள் நொறுக்கிய சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் இருந்து (17 சதம்) பறித்தது குறிப்பிடத்தக்கது.

    * ஒரு நாள் போட்டியில் 13 முறை இரட்டை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளார். இதில் ரோகித் சர்மாவுடன் இணைந்து எடுத்த 5 இரட்டை சத பார்ட்னர்ஷிப்பும் அடங்கும்.

    * 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கோலி பந்து வீசினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் அவரது முதல் பந்து வீச்சு இது தான். ஆனால் தனது முதல் பந்தை வைடாக வீச அதில் கெவின் பீட்டர்சன் விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டாார். ஆக, தனது முதலாவது பந்தை வீசும் முன்பே விக்கெட்டை சாய்த்த ஒரே வீரர் கோலி தான்.

    * இந்த ஆண்டு தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 390 ரன் திரட்டியது. விராட் கோலி 166 ரன்கள் சேர்த்தார். இலங்கை 22 ஓவர்களில் வெறும் 73 ரன்னில் சுருண்டது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் இமாலய வெற்றியாக அமைந்தது. கோலியின் ஸ்கோர் எதிரணியின் ஒட்டுமொத்த ஸ்கோரை விட 93 ரன் அதிகமாகும். அதாவது ஒரு நாள் போட்டியில் ஒரு வீரரின் ரன்னுக்கும், எதிரணியின் ஒட்டுமொத்த ரன்னுக்கும் இடையிலான 2-வது அதிகபட்ச வித்தியாசமாக இது பதிவானது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் வென்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வாண்ட்ருசோவாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் 3வது சுற்று போட்டிகள் நடந்தன.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நபர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-6 (8-6), 6-7 (0-7), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்வெரேவ், ஜோகோவிச், ஹர்காக்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    • முதலில் ஆடிய அயர்லாந்து 139 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    டப்ளின்:

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 139 ரன்களை சேர்த்தது. பாரி மெக்கார்தி அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். கேம்பர் 39 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். திலக் வர்மா டக் அவுட்டானார். ருதுராஜ் 19 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்திய அணி 6.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    • அயர்லாந்து அணிக்கு பேரி மெக்கார்தி 33 பந்துகளில் 51 ரன்களை விளாசினார்.
    • இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர ரிங்கு சிங் மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகி உள்ளனர்.

     

    முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆன்டி பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் முறையே 4 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய லோர்கன் டக்கர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹாரி டெக்டர் 9 ரன்களில் அவுட் ஆக, கர்டிஸ் கேம்ஃபர் மட்டும் 33 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் அவுட் ஆக, பேரி மெக்கார்தி 33 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இவரது அதிரடி காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்களை இழந்து 139 ரன்களை சேர்த்தது.

    இந்திய சார்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போன்று ப்ரஷித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். அர்தீப் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    • அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
    • இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியில் ரிங்கு மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகினர்.

    இந்நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.

    இதையடுத்து அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
    • பிரியா மாலிக்குக்கு இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டது.

    20 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

    பிரியா மாலிக்குக்கு இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த போதிலும் அவர் வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். கடந்த ஆண்டு ஆன்டிம் பங்கல் தங்கம் வென்று இருந்தார். தற்போதைய போட்டித் தொடரில் ஆன்டிம் பங்கல், 53 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருகிற 20-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.
    • நாங்கள் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு உதவுகிறது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது.

    6 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற செப்டம்பர் 2-ந் தேதி நடக்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருகிற 20-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

    இதில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபீக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்களது பந்தவீச்சு மிகவும் நன்றாக உள்ளது. உண்மையில் உலகின் சிறந்த பந்து வீச்சாக உள்ளது. வலைப்பயிற்சியில் நாங்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோரை எதிர்கொள்கிறோம். அவர்கள் அளிக்கும் சவால்களை பார்த்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. நாங்கள் போட் டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு உதவுகிறது. பயிற்சியில் இந்த 3 பேருக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். இந்தியா உள்பட எந்த அணி பந்துவீச்சாளர்களையும் சந்திக்க பயமில்லை என்றார்.

    • முதுகில் ஏற்பட்ட காயத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட பும்ரா 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.
    • நான் நிறைய பங்களிக்க வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று நினைக்கவில்லை.

    டப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். முதுகில் ஏற்பட்ட காயத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட பும்ரா 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செயல்பாடு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரது பந்துவீச்சை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் பும்ரா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் மிகவும் கடினமாக உழைத்தேன். தற்போது உடல் அளவில் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். அதை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சியின் போது உலக கோப்பை போட்டியை மனதில் வைத்தே தயாராகி வந்தேன். 15 ஓவர்கள் வரை கூட இப்போது பந்து வீசுகிறேன். என் மீது எதிர்பார்ப்புகள் உள்ளது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவிப்பவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் அந்த கருத்துகள் நல்லது அல்லது கெட்டது என்பதை பொருட்படுத்தமாட்டேன். யாருடைய கருத்தையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    நான் என்னை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. என்மீது தேவையற்ற எதிர்பார்ப்புகளை நான் வைப்பதில்லை. நான் நிறைய பங்களிக்க வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று நினைக்கவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் வருகிறேன். மற்றவர்கள் எதிர் பார்க்கிறார்கள் என்றால் அது அவர்களின் பிரச்சினை, என்னுடையதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊக்க மருந்து விவகாரத்தில் டூட்டி சந்த்துக்கு போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய டூட்டி சந்த்துக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த். 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையாளரான அவர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். கடந்தஆண்டு டிசம்பர் 5-ந்தேதி அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

    இந்த நிலையில் ஊக்க மருந்து விவகாரத்தில் டூட்டி சந்த்துக்கு போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை கடந்த ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    மாதிரி சேகரிப்பு தேதியில் இருந்து அவர் பெற்ற அனைத்து போட்டி முடிவுகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் விதி மீறலை வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை நிரூபிக்க தவறிவிட்டதாக தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஒழுங்கு முறை குழு தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய டூட்டி சந்த்துக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    • 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் மான்பில்சை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் வாவ் ரிங்கா தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் மான்பில்சை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் வாவ் ரிங்கா தோல்வி அடைந்தார். அவரை மேக்ஸ் பர்செல் (ஆஸ்திரேலியா) 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    அதே போல் நம்பர் ஒன் வீரர் அல்கராஸ் (ஸ்பெயின்), அட்ரியன் மன்னா ரினோ (பிரான்ஸ்), ஸ்வெ ரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலாந்து), அலெக்சி பாபிரின் (ஆஸ்திரேலியா)ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக் (போலாந்து) 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜெங்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

    • பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
    • அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

    உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அடுத்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

    இந்நிலையில், உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜூன் எரிகைசியும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

    ×