என் மலர்
விளையாட்டு
- பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
- திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாட்டு அணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன.
ஆசிய கோப்பை போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.
பொதுவாக 15 வீரர்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். உலக கோப்பை போட்டிக்கான உத்தேச அணி அறிவிக்க வேண்டி இருப்பதால் அணி வீரர்களின் தேர்வு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்த தேர்வு மிகவும் முக்கியமானது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.தாஸ் ஆகியோர் காணொலி மூலம் தேர்வுகுழு கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முதல் முறையாக தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
காயத்துக்காக ஆபரேசன் செய்துகொண்ட லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா? என்று எதிர்பார்க்கப் படுகிறது. உடல் தகுதியை பொறுத்துதான் அவர்களது தேர்வு இருக்கும். திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.
துணை கேப்டன் பதவி ஜஸ்பிரீத் பும்ராவுக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப் பந்து வீரரான அவர் தற்போது அயர்லாந்து 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
துணை கேப்டன் பதவி தொடர்பாக பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், வீராட் கோலி, லோகோஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்-உடல் தகுதியை பொறுத்து), ஸ்ரேயாஸ் அய்யர் (உடல் தகுதியை பொறுத்து), ஹர்த்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், இஷான் கிஷன் (2-வது விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, யசுவேந்திர சாஹல் அல்லது ஆர்.அஸ்வின்.
- துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
- இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.
துபாய்:
டிம் சவுத்தி தலைமையி லான நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது.
இரு அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 19 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் துபாயில் நேற்று நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னே எடுக்க முடிந்தது. மார்க் ஷேப்மேன் அதிகபட்சமாக 46 பந்தில் 63 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்), எடுத்தார். அயன் அப்சல்கான் 3 விக்கெட்டும், முகமது ஜவாதுல்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப்கான் 29 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது.
- முதலாவது ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய அணி தீவிர முனைப்பு காட்டும்.
- இதுவரை இந்தியாவுக்கு எதிராக மோதிய 6 இருபது ஓவர் போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கும் அயர்லாந்து அணி முதல் வெற்றியை பெற கடுமையாக போராடும்.
டப்ளின்:
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியினர் மேகமூட்டமான சூழ்நிலையில் அருமையாக பந்து வீசி 139 ரன்னுக்குள் அயர்லாந்தை கட்டுப்படுத்தினர். முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் 11 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். இதேபோல் காயத்தில் இருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் 2 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் விக்கெட்டை சாய்த்தனர். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை.
இலக்கை நோக்கி பேட்டிங் செய்கையில் இந்திய அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் (24 ரன்) நல்ல தொடக்கம் அளித்து ஆட்டமிழந்தார். ஆனால் திலக் வர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். மழை காரணமாக இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை.
அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். 31 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அந்த அணியை பாரி மெக்கர்த்தி (ஆட்டமிழக்காமல் 51 ரன்), கர்டிஸ் கேம்ப்பெர் (39 ரன்) அகியோர் சிறப்பாக செயல்பட்டு சரிவில் இருந்து மீட்டு கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். அவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து கலக்கினார்.
முதலாவது ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய அணி தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இதுவரை இந்தியாவுக்கு எதிராக மோதிய 6 இருபது ஓவர் போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கும் அயர்லாந்து அணி முதல் வெற்றியை பெற கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
போட்டிக்கான இரு அணிகள் வீரர்கள் வருமாறு:-
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆன்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்ப்பெர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், பாரி மெக்கர்த்தி, கிரேக் யங், ஜோஷ் லிட்டில், பென் ஒயிட்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி போட்டிகள் நடந்தன.
- இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர் நாளையுடன் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் முதல் செட்டை 2-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7-6 (7-4), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது ஸ்பெயினா, இங்கிலாந்தா என எதிர்பார்க்கப்படுகிறது.
- இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
சிட்னி:
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன.
இந்நிலையில், மகளிர் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை. இங்கிலாந்து லீக் சுற்றில் ஹைதி (1-0), டென்மார்க் (1-0), சீனா (6-1) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் நைஜீரியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கிலும், அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. அந்த அணி 3-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். 2015-ல் அரை இறுதியில் தோற்று 3-வது இடத்தைப் பிடித்தது. முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
6-வது வரிசையில் இருக்கும் ஸ்பெயின் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் தோற்று இருந்தது. லீக் ஆட்டத்தில் 0-4 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்று, கோஸ்டாரிகாவை 3-0 என்ற கணக்கிலும், ஜாம்பியாவை 5-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை 5-1 என்ற கணக்கிலும், கால்இறுதியில் நெதர்லாந்தை 2-1 என்ற கணக்கிலும், அரை இறுதியில் சுவீடனை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.
ஸ்பெயின் அணி இதற்கு முன்பு கால் இறுதி வரையே நுழைந்து இருந்தது. தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. இதனால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது ஸ்பெயினா, இங்கிலாந்தா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் நடந்தன.
- இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டிகள் நடந்தன. இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதினார்.
முதல் செட்டை கோகோ காப் வென்றார். 2வது செட்டை ஸ்வியாடெக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை
கோகோ காப் வென்றார்.
இறுதியில், கோகோ காப் 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை சப்லென்கா 7-6 (7-4) என போராடி வென்றார். சுதாரித்துக் கொண்ட முசோவா அடுத்த இரு செட்களை கைப்பற்றினார்.
கடைசியில் முசோவா 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் முசோவா அமெரிக்க வீராங்கனை கோகோ காபுடன் மோதவுள்ளார்.
அரையிறுதிப் போட்டிகளில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீராங்கனைகள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.
- பாரீஸ் நகரில் உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன.
- இதில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தின.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உலக கோப்பை வில்வித்தை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இறுதிப்போட்டியில் திரில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளன.
இரு அணிகளும் காம்பவுண்டு வில்வித்தை குழு போட்டியில் வெற்றி பெற்றன. இந்தியாவின் ஓஜாஸ் பிரவீன் டியோடேல், பிரதமேஷ் ஜாக்கர் மற்றும் அபிசேக் வர்மா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி இறுதி போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. போட்டி முடிவில், 236-232 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதேபோன்று, அதிதி கோபிசந்த் சுவாமி, ஜோதி சுரேகா வென்னம் மற்றும் பர்நீத் கவுர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இறுதிப் போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில், 234-233 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது.
சமீபத்தில் இந்திய மகளிர் அணி ஜெர்மனியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 142 ரன்கள் எடுத்தது.
துபாய்:
நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 63 ரன்கள் எடுத்தார். பவுன்ஸ், நீஷம் ஆகியோர் தலா 21 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அயனாஷ் ஷர்மா டக் அவுட்டானார்.
கேப்டன் முகமது வசீம் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 55 ரன்கள் சேர்த்தார். ஆசிப் கான் 29 பந்தில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், யு.ஏ.இ. அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது.
3 விக்கெட் வீழ்த்திய ஆயான் அப்சல் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி போட்டிகள் நடந்தன.
- இதில் உலகின் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ், ஜோகோவிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இத்தொடர், 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் மெக்ஸ் பர்செலுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் முதல் செட்டை 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், உலகின் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-0 6-4 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்வெரேவ், ஹர்காக்ஸ் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
- ஏர் ரைஃபிள் பிரிவில் மெகுலி ஜோஷ் மூன்றாவது இடம் பிடித்தது அசத்தல்.
- முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும்.
பாரிசில் நடைபெறும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியாவை சேர்ந்த மெகுலி ஜோஷ் தகுதி பெற்று இருக்கிறார். அசர்பைஜானில் நடைபெற்ற 2023 ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக சாம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்ததை அடுத்து ஜோஷ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்று இருக்கிறார்.
மெகுலி ஜோஷ் ஒட்டுமொத்தமாக 229.8 புள்ளிகளை பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இவரை தொடர்ந்து இந்தியாவின் திலோத்தமா 208.4 புள்ளிகளுடன் நான்காவது இடம் பிடித்துள்ளார். சீனாவை சேர்ந்த ஜியாவு ஹான் மற்றும் ஜிஹ்லின் ஹாங் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கு ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற முடியும். மெகுலி ஜோஷ் தகுதி பெற்று இருக்கும் போதிலும், தேசிய ஒலிம்பிக் கமிட்டி தான் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்போருக்கு அனுமதி அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐ.எஸ்.எஸ்.எஃப். உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இரண்டு தங்கம், இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று இருக்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். போட்டிகளில் தற்போதைய உலக சாம்பியனான ருத்ரான்ஷ் பாலாசாஹெப் பாடில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவிலும், ஸ்வப்நில் குசேல் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
- பெண்கள் இறுதி போட்டியில் சாரா வகிதா முதலிடம் பிடித்தார்.
- ஆண்கள் இறுதி போட்டியில் டென்ஷி இவாமி முதலிடம் பிடித்தார்.
தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சர்வதேச லீக் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது. இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டியுடன் நிறைவடைந்தது.
ஆண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்ஷி இவாமி 16.30 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கியான் மார்ட்டின் 14.70 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பெண்கள் இறுதி போட்டியில் ஜப்பான் நாட்டு வீராங்கனை சாரா வகிதா 13.50 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஜப்பான் வீராங்கனை ஷினோ மட்சுடா 13.10 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இளைஞர் நலன் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர்-செயலர் மேகநாதன், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
- முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
- 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார்.
9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - ஸ்வீடன் அணிகள் மோதின. 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ முதல் கோலை அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணியால் கோல் அடிக்க முடியாமல் திணறினர்.
இதனால் முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து 2-வது பாதி தொடங்கியது. 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை கொசோவரே அஸ்லானி ஒரு கோலை பதிவு செய்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் ஸ்வீடன் முன்னிலையில் இருந்தது.
கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திணறினர். இதன்மூலம் ஸ்வீடன் அணி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. ஸ்வீடன் அணி 4-வது முறையாக வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.






