என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- லேசான மூட்டு வலி கால் வலி பிரச்சனை இருப்பவர்களும் செய்ய முடியும்.
- நம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பிபி இல்ல! சுகர் இல்ல! கொலஸ்ட்ரால் இல்லை! சிகரெட் பிடிக்கிறதில்லை! ஆனா ஏன் ஹார்ட் அட்டாக் வந்திச்சு!
ஏன் டாக்டர்???? என்று நீங்களும் விடை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?
மேலே படியுங்கள்!
இருதய மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?. நீங்கள் 6-8 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கற வேலை செய்கிறீர்களா? நீங்கள் வீட்டில் எப்பொழுதும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறீர்களா? உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகம். அது மட்டுமல்ல நீரிழிவு (சர்க்கரை) நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம்.
இது அறிவியல் ஆய்வுகள் கூறும் உண்மை.
அப்ப உட்காரவே கூடாதா?
30லிருந்து 60 நிமிடங்கள் வரை தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். முடிந்தவரை ஒரு மணிக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் நடந்து அல்லது எழுந்து நின்று பிறகு மீண்டும் அமரலாம்.
நடைப்பயிற்சி. ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிற மிக எளிதான உடற்பயிற்சி.
நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன?
துவங்குவதற்கு எளிதானது தொடர்வதற்கும் இலகுவானது
செலவில்லாத ஒரு எளிதான உடற்பயிற்சி.
லேசான மூட்டு வலி கால் வலி பிரச்சனை இருப்பவர்களும் செய்ய முடியும்.
நல்ல ஒரு பசுமையான சூழ்நிலையில் இயற்கை சூழ்நிலையில் நடக்கும்போது அது நம்முடைய மன அழுத்தத்தையும் படபடப்பையும் குறைக்கிறது.
அத்துடன் குதூகல ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவுகிறது.
இவை நம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இரவு தூங்குவதற்கு முன்பு நடந்தால் நல்ல ஆழமான தூக்கம் கிடைக்கும்.
இதயத்தினுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக ரத்த கொதிப்பு இருப்பவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடை கூடாது. உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை நோய், பக்கவாதம், இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.
மூட்டுகளில் இறுக்கத்தை குறைத்து இலகுவாக்க உதவுகிறது.
உடலில் உள்ள தசைகள் வலுவாகும். தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு கீழே விழுவதற்கான வாய்ப்பு குறைவு.
எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். எலும்பு மெலிவு நோய், ஆஸ்டியோபோராசஸ் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
குழுவாக நடைபயிற்சி செய்வது, மிக நல்ல பொழுது போக்கு. மற்றவர்களோடு கலந்துரையாடும் பொழுது மகிழ்ச்சியைத் தரும்.
எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் கட்டாயம் வாழ்நாளை அதிகரிக்கும்.
நடைப்பயிற்சியில் எவ்வளவு கலோரி செலவாகிறது?
சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு 50லிருந்து 60 கலோரிகள் எரிக்கப்படும்.
அதாவது ஒரு கப் அரிசி சாதம் உண்ணும் பொழுது 200 கலோரிகள் வரை நாம் பெறுகிறோம். ஒரு கப் அரிசி சாதம் (150-160 கிராம்)சாப்பிட்டால் 4-5 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
ஒரு கப் காபி குடித்தால். 80-100 கலோரிகள் - 2 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.
இரண்டு இட்லி சட்னி சாம்பார் - 200 கலோரிகள்.
யப்பாடி! இரண்டு இட்லி சாப்பிட்டாலே அஞ்சு கிலோ மீட்டர் நடக்கணுமா?
இதை புரிந்து கொள்ளவும்.
நான் ஏன் வெயிட் போட்டேன் ஒன்னுமே சாப்பிடுவதில்லை என்று புலம்புபவர்களுக்காக தான் இந்த கணக்கு.
எனவே ஒரு நாளைக்கு 10,000 அடிகள் அல்லது 5-8 கிலோமீட்டர் நடைபயிற்சி அனைவருக்கும் கட்டாயம்.
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?

காலை நேரம் மிகச்சிறந்ததாகும்.
உண்மையில் எந்த நேரத்தில் உங்களால் தினமும் நடைபயிற்சி செய்ய முடியுமோ அதுதான் உங்களுக்கு சிறந்த நேரம்.
மெஷினில் நடப்பது நல்லதா? அல்லது வெளியே நடப்பது நல்லதா?
இரண்டும் ஒன்றுதான். மழை வெயில் குளிர் என்று வெளியில் எப்படி இருந்தாலும் ட்ரெட் மில்லில் நாம் நடந்து கொண்டிருக்கலாம்.
வெளியே நடக்கும் போது அதிகமான தசைகள் வலுப்பெறும்.
ஒருமுறை எவ்வளவு நேரம் எப்படி துவங்கலாம்?
10-15 நிமிடங்கள் ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் என்று துவங்கலாம்.
சாப்பிட்டு விட்டு நடக்கலாமா?
சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து நடக்கலாம்.
எட்டில் நடப்பது, ஆறில் நடப்பது நல்லதா?
சிறு இடத்திலும் இது போன்ற வடிவங்களில் நடப்பது சத்தியமாகும். மற்றும் மூளையை தூண்டக்கூடிய உடற்பயிற்சியாக அமையும். குறிப்பிட்ட வடிவத்தில் நடக்கும் பொழுது நம்முடைய கவனம் நடையில் இருக்கும்.
மிகவும் நடந்தால் எலும்பு தேய்ந்துவிடும் என்கிறார்களே உண்மையா?
மிகவும் குறைவான தேய்மானம் நடை பயிற்சியில் தான்.
நடக்கும் பொழுது எப்படி பாதுகாப்பாக நடக்க வேண்டும்?
முடிந்தவரை கைகளை வீசிக்கொண்டு நடங்கள். தடுமாறினால் பிடித்துக் கொள்வதற்கு ஏதுவாக கைகளில் எதுவும் வைத்துக் கொள்ளாதீர்கள்.
காலில் சரியான அளவு நல்ல தரமான ஷூக்களை அணிந்து கொண்டு நடைபயிற்சி செய்யுங்கள்.
அதுபோல உடையும் சவுகரியமாக இருக்கட்டும். முடிந்தவரை பருத்தியாலான உடைகளை அணியுங்கள்.
நடக்கும்போது போனில் பேசிக் கொண்டே செல்லாதீர்கள். கவனம் நடைபயிற்சியில் இருக்கட்டும்.
எங்கே! நடைபயிற்சிக்கு தானே கிளம்பி விட்டீர்கள்?!
அப்படி என்றால், ஆரோக்கியத்தில் முதல்படியில் ஏறி விட்டீர்கள்!
வாட்ஸ்அப்: 8925764148
- ஒவ்வொரு வாய் அவுலை நீங்கள் மென்று தின்னத் தின்ன உங்கள் உடலில் ஆரோக்கிய வளம் பெருகும்.
- அவுல் அப்படியல்ல. அவுலும் மாவுச்சத்து உடைய சிறுதீனிதான்.
பொரியைப் போலவே நம்முடைய பாரம்பரியத்தில் அவுலும் ஒரு முக்கியமான உண்பொருள். அவுல் இன்று பரவலாகக் கிடைப்பதில்லை. ஆனால் பொரியைக் காட்டிலும் அவுல் சத்தான உண்பொருளாகும்.
கிருஷ்ணன் –குசேலன் கதையைக் கேட்டிருப்போம். அதாவது தனது சிறுவயது நண்பன் குசேலனைக் காண கிருஷ்ணன் வருகிறான். முன்னரே நிறைய குழந்தைகளுடன் வறிய நிலையில் இருக்கும் குசேலன், தனது பால்ய நண்பன் கிருஷ்ணனை விருந்துபச்சாரம் செய்வதற்கு ஏதுமற்ற நிலையில் சிறு முடிச்சாகக் கட்டி வைத்திருந்த அவுலை எடுத்துக் கிருஷ்ணனிடம் தருகிறான். சிறுதுணி மூட்டையை அவிழ்த்து ஒவ்வொரு பிடி அவுலாகக் கிருஷ்ணன் வாயிலிட்டு மெள்ள மெள்ள குசேலனின் வீட்டில் செல்வவளம் பெருகியதாகச் சொல்லப்படுகிறது. இது புனைகதையாக இருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு வாய் அவுலை நீங்கள் மென்று தின்னத் தின்ன உங்கள் உடலில் ஆரோக்கிய வளம் பெருகும். இது கதையல்ல, மெய்யாகவே உணரக்கூடியதாகும். ஏனென்றால் அவுலானது குறிப்பிட்ட தானியத்தில் இருந்து மேலுமியை மட்டும் நீக்கி அதன் சத்துக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் நம்முடலினுள் சேருகிறது.

உண்பதற்கென்று விளைவிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தமக்குரிய சத்துக்கள் சிதைக்கப்படாமல் நமக்கு முழுமையான நிலையில் கிடைக்கின்றன. அவற்றை நாம் வினைமாற்றம் செய்கிற பொழுது ஒவ்வொரு படிநிலையிலும் சத்துக்கள் குறைந்து கொண்டே வருகின்றன. எடுத்துக்காட்டாக நாம் சமைத்த கீரையை சுமார் நூறுகிராம் அளவிற்கு உண்ணலாம். அதையும் வெங்காயம், பருப்பு, தேங்காய், காரம் போன்றவற்றை உடன் சேர்த்து தான் சமைக்க வேண்டும்.
அந்தக் கீரையை சோற்றுடன் பிசைந்து உண்டால் நமக்குச் செரிப்பதற்கு ஏதுவான அளவில் இருக்கும். கீரையில் நுண் சத்துக்கள் எனப்படும் உயிர்ச் சத்துக்களும் (விட்டமின்) தாதுச் சத்துக்களும் அதிகம். அதனை நேரடியாக உண்டால் நம்மால் சத்துக்களைச் செரிக்க முடியாத அளவிற்கு அதாவது உடலால் ஈர்க்க முடியாத அளவிற்கு மிகையாக இருக்கும். உப பொருட்கள் சேர்த்து, சமையல் செயல்பாட்டால் வெப்பத்தை ஏற்றி கீரையின் மிகைக்கூறுகளை மட்டுப்படுத்துகிறோம். துணைப்பொருட்களைச் சேர்ப்பதாலும் செரிக்க ஏற்றதாக மாற்றுகிறோம். அதற்குப் பின்னரே நம்மால் கீரையை உண்ண முடியும்.
அதேபோல் உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்களேன். அதில் நுண்சத்துக்கள், தாதுச்சத்துக்கள் குறைவு. எனவே வெறும் கிழங்கைக் கூட உப்புப் போட்டு அவித்து உண்டு விடலாம். கிழங்கின் சத்துக்களை மட்டுப்படுத்த வேண்டியதில்லை. ஏனென்றால் அதில் மாவுச்சத்துதான் மிகுந்துள்ளது. அப்படித்தான் பொரித்த உ.கி சிப்ஸை டிவியைப் பார்த்தபடியே 200 கிராம் பாக்கெட்டைக் கூட அப்படியே கொறித்து முடித்து விடுகிறோம். ஆனால் அதில் மாவுச்சத்து மிகுந்துள்ளதால் உடலுக்கு எந்த ஆற்றலையும், அதாவது நுண்சத்து – தாதுச்சத்து எதையும் தராமல் மாவுச்சத்தினை மட்டுமே தருவதால் உடலில் சதை பெருகத் தொடங்கி விடுகிறது.
இன்றைய நொறுவிகள் பெரும்பாலானவை மாவுச் சத்துக்கள் மிகுந்தவையே. சுவையில், இனிப்பு, காரம், புளிப்புடன் கூடிய இனிப்பு, மிளகுகாரம், பட்டை, கிராம்பின் செயற்கை வாசத்துடன் கூடிய காரம், மிளகாய்த்தூள் காரம் என்று விதவிதமாக இருக்கலாம். ஆனால் எல்லாமே சதையைப் பெருக்க வைக்கும் மாவுப் பொருட்களை ஆதாரமாகக் கொண்டவையே. அதனால் தான் இன்றைய தலைமுறையினர், பாதிக்கும் மேற்பட்டோர் இருபது வயதிற்குள்ளேயே ஒபிசிடி என்று சொல்லக்கூடிய சதைப் பொருக்கத்துடன் காணப்படுகின்றனர்.
ஏதாவது ஒருவகையில் சதைப் பெருக்கம் ஏற்பட்டு விட்டால் அதனைக் குறைப்பதோ, உடலை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதோ அத்தனை எளிதல்ல. சதைப் பெருக்கம் ஒருசில மாதங்கள் நிலைபெற்று விட்டாலும் உடலின் வளர்சிதை மாற்றம், சுரப்பிகள் சுரக்கும் தன்மை என உட்செயற்பாடுகள் அத்தனையும் மாற்றங்கொள்ளத் தொடங்கி விடும்.
அதற்குப் பின்னர் ப்ரொக்கிராமிங் செய்யப்பட்ட எந்திரனைப் போல அவனைக் கட்டுக்குள் வைக்க முடியாது. நல்ல பழக்கமோ, தீய பழக்கமோ அதனை உருவாக்கும் வரை மட்டுமே நம்முடைய செயல்பாட்டில் இருக்கும். பல்லாயிரம் டன் எடைகொண்ட டைனோசர் கூட அப்படித்தான். அது பேருயிராய் உருக்கொள்ளத் தொடங்கிய பிறகு சதா உண்டு உண்டு தன்னை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
தான் வாழும் பகுதியில் அனைத்தையும் உண்டு தீர்த்த பிறகு தன் வாலையே கூட அது உண்ணத் தொடங்கியதாகவும் மிகைக் கூற்று உண்டு. ஒரு கட்டத்தில் உண்பதற்கு எதுவுமே அற்ற நிலையில் அந்த உயிரினம் அழிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. நம்மில் பலரும் அப்படித்தான் சத்துக்குறைவான உணவை உண்பதால் சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிக அளவிற்கு உண்கிறோம். உண்டு பழகி விட்டதால் மீண்டும், மீண்டும் உண்டு பருத்த உடலைத் தக்க வைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம்.

உடல் வெறுமே பருமனாக இருந்து விட்டால் தேவலாம். பருத்த உடலினுள் பயன்படுத்தப்படாத சதையும், கொழுப்பும், மிகைச் சத்துக்களும் வெவ்வேறு விதமான வினையூக்கத்தினுள் உந்தப்படுகிறது. சதையின் அளவு கூடிக்கூடி சுவாத்திற்குரிய உறுப்புகளின் செயல்பாடுகளில் தடையேற்படுகிறது. வீட்டைக் கட்டுவோர் தெருவில் ஒருபகுதியையும் சேர்த்துக் கட்டி தெருவின் அகலத்தைச் சுருக்குகிறார்கள். வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இறுதியில் என்னவாகிறது. அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி, ட்ராபிக் ஜாம். சின்னச் சின்ன நகரங்கள் கூட போக்குவரத்துச் சிக்கலில் சிக்கித் திணறி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
அதுபோலவே உடலெங்கும் ரத்தவோட்டத்தைக் கொண்டு செல்லும் தமனிகள் சதைப் பிதுக்கத்தால் திக்கித் திணறுகின்றன. நுரையீரல் சுவாசிப்பதற்குப் போதுமான வெளி இல்லாததால் ரத்தவோட்டத்தில் உயிர்க் காற்றினை ஏற்றிச் செல்ல முடிவதில்லை. எனவே உடலினுள் ட்ராபிக் ஜாம், அதாவது கார்டியாடிக் அரஸ்ட் ஏற்படுகிறது. ஆக வாயில் இட்டு மெள்ளத் தேவையற்ற மாவுப் பொருட்களை நாம் உள்ளே தள்ளத் தள்ள சொந்த செலவில் சூன்யம் வைத்த கதையாக நம்முடலுக்கு நாமே கெடுவினை செய்கிறோம்.
அவுல் அப்படியல்ல. அவுலும் மாவுச்சத்து உடைய சிறுதீனிதான். ஆனால் அதில் மாவுச் சத்துடன் நார்ச்சத்துக்களும், நுண் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. நாம் நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும் போது உமியுடன் அரிசியின் மேலேடான தவிட்டையும் பிரித்து விடுகிறோம். தவிடு அரிசியுடன் ஒட்டியுள்ள பகுதி மிகுந்த சத்தான பகுதியாகும். நீங்கள் கைக்குத்தல் அரிசிச் சோற்றைச் சாப்பிட்டுப் பாருங்கள், தீட்டப்பட்ட அரிசிச் சோற்றைச் சாப்பிடும் அளவிற்கு சாப்பிட முடியாது. காரணம் கைக்குத்தல் அரிசியில் மிகுந்த சத்துக்கள் தீட்டல் (பாலிஷ்) செயல்பாட்டினால் நீக்கப்படாமல் அப்படியே கிடைக்கிறது.
அதுபோலவே நெல்லை ஊற வைத்துப் பிதுக்கி எடுத்தல் செயல்பாட்டின் வழியாக அவுல் தயாரிக்கப்படுவதால் அரிசியில் உள்ள சத்துக்கள் சிதைக்கப்படாமல் முழுமையாக அப்படியே கிடைக்கிறது. அதனால்தான் இந்தப் பகுதியின் துவக்கத்தில் சொன்னபடி அவுலைச் சாப்பிடச் சாப்பிட நம்முடைய உடல் வளம் பெருகிக் கொண்டே இருக்கும், குசேலர் வீட்டில் செல்வம் பெருகியது போல.
அவுலை எப்படி உண்பது என்பது குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.
செல்-96293 45938
- உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பாதிப்பு ஏற்படும்.
- சில பெண்கள் உடற்பயிற்சி செய்வது தவறு என்று நினைக்கிறார்கள்.
இன்றைய உணவுப் பழக்க வழக்கங்களாலும், வேலை சூழ்நிலை காரணமாகவும், உடற்பயிற்சி இல்லாத தன்மையாலும் உடல் பருமன் என்பது பலருக்கும் ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகிய முக்கிய உடல்நல பிரச்சினைகளுக்கு உடல் பருமனே காரணமாக அமைகிறது.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உடல் பருமன் என்பது பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. முக்கியமாக பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை ஏற்படுவதற்கு பெரும்பாலும் உடல் பருமனே காரணமாக அமைகிறது.
குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கேட்கும் கேள்விகள்:-
கருத்தரிப்பு, குழந்தைபேறு விஷயங்களில் உடல் பருமன் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி பலரது மனதிலும் உள்ளது. இதுபற்றிய சந்தேகங்களும் பெண்களுக்கு ஏற்படுகிறது. குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்கள் பலரும் சந்தேகங்களை எழுப்பி பல்வேறு கேள்விகளை கேட்கிறார்கள்.
டாக்டர், உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு கருத்தரிப்பதால் சிக்கல்கள் ஏற்படுமா? உடல் பருமனை குறைப்பதற்கான உடற்பயிற்சி எந்த வகையில் பாதுகாப்பானது? உடற்பயிற்சி அதிகமாக செய்தால் கருத்தரிக்க வாய்ப்பு குறைவு என்று சொல்கிறார்களே... இது சரியா? உடல் பருமன் அதிகமாவதால் ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வருமா?
இதுபோன்ற கேள்விகளை சிகிச்சைக்கு வரும் பெண்கள் கேட்கிறார்கள். இது பொது வாகவே எல்லா பெண்களின் மனதிலும் எழக்கூடிய கேள்விதான். எனவே இந்த கேள்விகளுக்கான சந்தேகங்களை பெண்கள் அறிந்து அதனை தீர்த்துக்கொள்வது நல்லது.
இந்த சந்தேகங்கள் உடல் பருமன், கருத்தரிப்பு, மாதவிலக்கு பற்றிய சில விஷயங்கள் தான். அதிலும் குறிப்பாக கருத்தரிக்க முயலும் பெண்கள் தான் இதுபோன்ற கேள்விகளை அதிகம் கேட்கிறார்கள். இதற்கான பதிலை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்கள், கருத்தரிக்கும்போது கண்டிப்பாக சிக்கல்கள் ஏற்படும்.
இதில் 2 விஷயங்கள் உள்ளன. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சினை வரும், கர்ப்ப காலத்திலும் பிரச்சினை வரும். முதலில் அவர்களுக்கு கருத்தரிப்பதில் என்ன பிரச்சினை வரும் என்று பார்ப்போம்.
கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஹார்மோன் மாற்றங்கள்:
உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பாதிப்பு ஏற்படும். இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் கொழுப்பில் இருந்து வருகிற சில ஹார்மோன்கள் கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஈஸ்ட்ராடியோல், கொழுப்பில் இருந்து வருகிற மற்றொரு ஹார்மோன் ஆன்ட்ரோஜன் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்துமே கருமுட்டைகளின் வளர்ச்சியை பாதிக்கும் தன்மை கொண்டது.
எனவே இந்த ஹார்மோன்களின் சமநிலையின்மை மாற்றங்கள் காரணமாக பல பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்படும். அதன் மூலம் நாளமில்லா சுரப்பிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு, ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வரலாம். மேலும் பி.சி.ஓ.டி. எனப்படும் பாலிசிஸ்டிக் கருப்பை பாதிப்பும் வரலாம். இதனால் கருமுட்டைகளின் தரம் குறைவாகலாம்.
எனவே உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக ஹார்மோன் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். முக்கியமாக தைராய்டு பாதிப்பு இருக்கலாம். புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாக இருக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாயும் ஏற்படலாம். இதனால் தான் அந்த பெண்கள் உடல் எடையை குறைக்கும்போது அவர்களுக்கு மாதவிலக்கு சரியாக வரும்.
என்னிடம் சிகிச்சைக்கு வரும் நிறைய பெண்கள் சொல்வார்கள், 'டாக்டர் எனக்கு திடீரென்று உடல் எடை அதிகரித்தது. அதன் பிறகு மாதவிலக்கு சீராக வருவதில்லை. பின்னர் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தேன். அதன்பிறகு மாதவிலக்கு சீராக வருகிறது என்பார்கள்.
எனவே பெண்களின் உடல் எடை கூடுவது கண்டிப்பாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். அதனால் தான் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள் என்று சொல்கிறோம்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பெண்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்:
சில பெண்கள் உடற்பயிற்சி செய்வது தவறு என்று நினைக்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் கண்டிப்பாக எந்தவித பிரச்சினையும் வராது. ஏனென்றால் சில பெண்களிடம் ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. இது பொதுவாகவே குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு ஏற்படும் தவறான கருத்தாகும். அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது கருத்தரித்தால் கருச்சிதைவு ஏற்படும், கருத்தரிப்பதை அது தடுத்து விடும், கர்ப்பப்பையையும் அது பலகீனப்படுத்திவிடும், கரு உருவாகி கர்ப்பப்பையை ஒட்டி வளராது என்கிற தவறான கருத்துக்கள் இருக்கிறது.
இதில் முக்கியமாக பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும்போது ஹார்மோன் சமநிலையின்மை சீராக்கப்படுகிறது. ஹார்மோன் சமநிலையின்மை சீரானால் கருமுட்டை வளர்ச்சி சரியாகிறது. கருமுட்டை வளர்ச்சி சரியாகும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.
எனவே உடற்பயிற்சி என்பது பெண்களுக்கு கண்டிப்பாக தேவை. இதில் ஒரே ஒரு விஷயம்தான், அதி தீவிரமாக உடற்பயிற்சி செய்யாதீர்கள். பாடி பில்டிங், ஸ்பிரிண்டிங், அத்லெடிக் உடற்பயிற்சி என்பது போன்ற தீவிர உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. மிதமான வகையில் உடற்பயிற்சி செய்யலாம்.
ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி செய்யலாம். நல்ல வகையான யோகாசனம் செய்யலாம். பல நேரங்களில் எச்ஐஐடி என்று சொல்கிற ஹை&இன்டன்சிட்டி இன்டர்வல் டிரெய்னிங்கில் சில நிலை பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இதெல்லாம் மிதமான உடற்பயிற்சிகள் தான். இவை உடல் எடையை குறைப்பதற்கு கண்டிப்பாக நேர்மறையாக பயன்படுகிறது.
இதில் நேர்மறை எப்படி ஏற்படுகிறது என்று பார்த்தால் உடல் எடை குறையும்போது ஹார்மோன் சமநிலையின்மை சரியாகிறது. கொழுப்பு குறையும்போது ஹார்மோன் மாறுபாடுகள் சீராகிறது. ஹார்மோன் சீராகும்போது முட்டை வளர்ச்சியும் சீராகும். இதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மிதமான உடற்பயிற்சியானது அந்த பெண்ணுக்கு ஒருவிதமான மன உற்சாகத்தையும் கொடுக்கிறது. உடல் பருமனாக இருக்கும் நிறைய பெண்கள் மனதளவில் சந்தோசமாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துகொண்டே இருக்கும். உடல் பருமனாக இருப்பதால் இவர்களுக்கு பாலியல் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. பாலியல் செயலிழப்பும் அதிகமாகிறது.
உடல் பருமனால் பாலியல் உறவில் தாழ்வு மனப்பான்மை:
உடல் பருமனாக இருக்கும் பெண்கள் நிறைய பேருக்கு, பாலியல் உறவின்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையால் அதிகமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். கருத்தரிப்பதற்கு தாம்பத்திய உறவு சரியாக இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் ஏற்படும்.
அவர்களுக்கு உடல் பருமனை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அவர்களுக்குள் ஒரு எதிர்மறை உணர்வு உருவாகும் நிலையில், கண்டிப்பாக தாம்பத்திய உறவில் பிரச்சினை வரும். அப்படி இருக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். மேலும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துதல், மன அழுத்தத்தை உருவாக்குதல் ஆகியவையும் கருத்தரிப்பதை பாதிக்கும்.
இவை தவிர உடல் பருமனால் பல பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பாதிப்பு சர்க்கரை வியாதி. ஏனென்றால் கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு குளுக்கோஸ் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதால், பல நேரங்களில் இந்த பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சினை வரும், ஒருவேளை கருத்தரித்தால்கூட, கரு வளரும்போதும் பிரச்சினை வரும்.
மேலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இந்த பெண்களுக்கு முட்டைகளின் தரம் குறைவாகும். ஏனென்றால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகமாகும்போது, அதில் இருந்து வருகிற சில ரசாயனங்களால் கரு முட்டைகளுக்கான குரோமோசோம்களில் உள்ள இணைப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு, அதனால் கரு முட்டைகளின் தரம் பாதிக்கப்படும்.
சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சிலருக்கு இருதய நோய் ஏற்படலாம். மேலும் சில பெண்களுக்கு உடல் பருமன் அதிகமானால் மன அழுத்தம் ஏற்படும். இதுவும் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.
பெண்கள் கருத்தரிப்பதற்கு இவை எல்லாமே எதிர்மறையாக அமைகிறது. இந்த வகையில் உடற்பயிற்சி செய்வது கண்டிப்பாக கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகமாக்கும். முட்டைகளின் வளர்ச்சியை தூண்டும். உடல், மனதில் நல்ல ஒரு நம்பிக்கையை கொடுக்கும். உடல் எடை குறைவாகும்போது அவர்களுக்குள் ஒரு நேர்மறை சிந்தனை வரும். அவர்களின் தாம்பத்திய உறவில் முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலமாக கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் அதிகமாகும்.
அடுத்ததாக உடல் பருமன் காரணமாக கர்ப்ப காலத்தின்போது கருவில் வளரும் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது என்னென்ன பாதிப்புகள்? உடல் எடை குறைப்பு மூலம் அதற்கு தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- ஒவ்வொரு நாளும் முருகவேளை வழிபட்டு வந்தவர்.
- பாடல்களையும் வாக்குகளையும் மக்கள் தெய்வ வாக்காக கருதி வரவேற்றனர்.
திருச்செந்தூர் முருகன் தன்னை புகழ்ந்து பாட புலவரை வரவழைக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. எத்தனையோ புலவர்கள் திருச்செந்தூர் தலத்துக்கு வந்து கருவறை முருகனை பார்த்து, வியந்து, மனம் குளிர்ந்து தங்களையே மறந்து பாடி உள்ளனர். அவையெல்லாம் வரலாற்று குறிப்புகளாக உள்ளன.
அப்படி திருச்செந்தூர் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட புலவர்களில் ஒருவர் படிக்காசுப் புலவர். ஆதிகாலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் வட பகுதியில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் என்ற ஊரில் பிறந்தார். ஆதிகாலத்தில் இந்த ஊர் பொற்களந்தை என்று அழைக்கப்பட்டது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியம் கற்று தமிழில் மிகச்சிறந்த புலமை மிக்கவராக மாறினார். அவர் இயற்றிய "தொண்டை மண்டல சதகம்" மற்றும் "தண்டலையார் சதகம்" ஆகிய நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இளம் வயதில் இவர் ஊர் ஊராக போய் ஆலயங்களை தொழுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதோடு கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். சிலர் ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் அவரை கிண்டல் செய்தனர். என்றாலும் படிக்காசுப் புலவர் மனம் தளர்ந்தது இல்லை.
"ஒளி வீசும் விளக்கை அணைத்து விட்டு இவர்கள் வெளிச்சத்தை தேடி அலைகிறார்கள்" என்று பதில் அளித்து விட்டு அடுத்த ஊருக்கு சென்று விடுவார். அப்படி ஊர் ஊராக சென்ற அவர் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றார். அங்கு தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.
அப்போது அருகில் இருந்த அன்னை சிவகாம சுந்தரியிடமும் தனது ஏழ்மை நிலையை சொல்லி வருந்தி வேண்டுகோள் விடுத்தார். முருகருக்கு வேல் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தாய். மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். ஆனால் எனக்கு மட்டும் எதுவும் தரவில்லையே ஏன்? என்று உரிமையோடு அன்னையிடம் பாடல்களில் கேள்வி கேட்டார்.

அவர் பாடி முடித்த அடுத்த நிமிடம் சிதம்பரம் பஞ்சாட்சரப் படிகளில் 5 தங்க காசுகளை அன்னை சிவகாம சுந்தரி எடுத்து போட்டாள். இதை கண்டதும் புலவர் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகுதான் அவருக்கு படிகாசுப் புலவர் என்ற பெயர் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தில் உள்ள மற்ற தலங்களுக்கும் யாத்திரை சென்றார். அங்குள்ள மக்களுக்கு தனது அருட்கவியால் மகிழ்ச்சி அடைய செய்தார். அவரது பாடல்களையும் வாக்குகளையும் மக்கள் தெய்வ வாக்காக கருதி வரவேற்றனர்.
இவரது சிறப்பை உணர்ந்த சீதக்காதி வள்ளல் இவருக்கு பொன்னும், பொருளும் கொடுத்து ஆதரித்தார் என்று வரலாற்று நூல்களில் குறிப்புகள் உள்ளன. ராமநாதபுரம் ரகுநாத சேதுபதி மன்னரும் படிக்காசுப் புலவரை சிறிது நாட்கள் தனது பராமரிப்பில் வைத்திருந்தார்.
அதன் பிறகு அங்கிருந்து விடைபெற்று திருச்செந்தூருக்கு சென்றார். திருச்செந்தூர் ஆலயத்தில் முருகப்பெருமான் கருவறை முன்பு நின்று மனமுருக பாடினார். அந்த பாடல்கள் மிகவும் பிரபலமானவையாக மாறின. முருகப்பெருமான் மீது அவர் வைத்திருந்த பக்தியை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல்கள் அமைந்தன.
அது மட்டுமின்றி திருச்செந்தூர் முருகனின் சிறப்பையும் திருச்செந்தூர் தலத்தின் பெருமையையும் பிரதிபலிக்கும் வகையில் படிக்காசுப் புலவரின் பாடல்கள் அமைந்தன. அந்த பாடல்கள் விவரம் வருமாறு:-
இன்னமும் சின்னவனா?
முன்ன நின் அன்னை முலை ஊட்டி இமை இட்டு மூக்குச் சிந்திக்
கன்னமும் கிள்ளிய நாள் அல்லவே என்னைக் காப்பதற்கே
அன்னையும் அஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ
இன்னமும் சின்னவன் தானோ செந்தூரில் இருப்பவனே - 12
திருச்செந்தூர் முருகா! தாய் முலைப்பால் ஊட்டி, கண்ணுக்கு மை இட்டு, மூக்கில் ஒழுகும் சளியைச் சிந்தி, கன்னத்தைக் கிள்ளி, அந்த நாளில் உன்னை வளர்த்தாளே அந்த நாளிலா நீ இன்னும் இருக்கிறாய்? தாய் போலவும் மனைவி போலவும் இரண்டு பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் ஆண்பிள்ளை அல்லவா நீ. என்னைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன். என்னோடு விளையாடுவதற்கு இன்னமும் நீ சின்னப்பிள்ளை தானா?
செந்தூர் தானத்திலே
முற்கரை அப்பரை ஏற விட்டு ஆட்கொள் முதல்வர் உள்ளக்
கற் கரைக்கும்படி போதித்திடும் கருணைக் கடலைச்
சிற்பரைக் குட்டியை எங்கெங்கும் தித்திக்கும் செங்கரும்பின்
சர்க்கரைக் கட்டியைக் கண்டேன் செந்தூர் எனும் தானத்திலே - 13
கல்லைக் கட்டிக் கடலில் போட்ட அப்பரைக் கரையேற்றி ஆட்கொண்ட முதல்வன் சிவனுக்குக் கல்லைக் கரைக்கும்படி பாடம் போதிக்கும் கருணைக்கடலை, சிதம்பரச் செல்வியின் குட்டியை, எந்த இடத்தில் சுவைத்தாலும் தித்திக்கும் செங்கரும்பின் சர்க்கரைக் கட்டியை, திருச்செந்தூர் தலத்தில் கண்டேன்.
குறத்திக்கு மாப்பிள்ளை
சின்னஞ்சிறு பிள்ளை செங்கோட்டுப் பிள்ளை சிவந்த பிள்ளை
பொன்னன் மணிப்பிள்ளை பூலோகம் எங்கும் புகழும் பிள்ளை
சொல் நெஞ்சு சுழல்கின்ற சூரனை வென்ற சொக்கேசர் பிள்ளை
வன்னக் கிளிப்பிள்ளை செந்தில் குறத்திக்கு மாப்பிள்ளையே - 14
செந்தில் முருகன் இன்னும் சின்னஞ்சிறு பிள்ளை. திருச்செங்கோட்டுப் பிள்ளை. சிவந்த நிறம் கொண்ட பிள்ளை. பொன் நிறம் கொண்ட சிவனின் பிள்ளை. நிலவுலகம் எல்லாம் புகழும் பிள்ளை. சூரனை வென்ற பிள்ளை. மதுரைச் சொக்கேசர் பிள்ளை. வன்னக்கிளி போன்ற பிள்ளை. குறமகள் வள்ளிக்கு மாப்பிள்ளை.
செந்திலானோ 19
கல்லடிக்கும் முனி இரண்டு காதடிக்குள் அடிப்பதெனக் கவிதை கேட்டுப்
பல்லடிக்கக் கிடுகிடென பறையடிக்கும் நெஞ்சர் தமைப் பாடுவேனோ
வில்லடிக்கும் பிரம்படிக்கும் கல்லடிக்கும் விரும்பி நின்ற மெய்யன் ஈன்ற
செல்லடிக்கும் தடவரையில் சேறடிக்க வலை அடிக்கும் செந்திலானே-19
அருச்சுனன் வில்லடியையும், பாண்டியன் பிரம்படியையும், சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததையும் விரும்பித் தன் உடம்பில் வாங்கிக் கொண்டு நின்ற சிவனின் செல்லூர் மலையில் கடலலையின் சேறு படும்படி அலை வீசும் செந்தில் நகர் முருகனே! கல்லால் அடிக்கும் இரண்டு முனிகள் காதுக்குள் அடிப்பது போல் பாடும் கவிதையைக் கேட்டுக் கிடு கிடு என்று பல் அடிக்கும்படி நடுங்கி, பறையொலி போல் பட படக்கும் நெஞ்சத்தவரைப் பாடுவேனோ? (என் கவிதையைக் கேட்கவே நடுங்குவோரை நான் பாடுவேனா?)
இவ்வாறு பாடிய படிக் காசுப் புலவர் மேலும் சில பாடல்களை திருச்செந்தூர் முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். அவர் திருச்செந்தூர் முருகனை கண் கண்ட தெய்வமாகவும் கலியுக வரதனாகவும் போற்றினார்.
ஒவ்வொரு நாளும் முருகவேளை வழிபட்டு வந்தவர். வறுமை போக்கி வாழ்வளிக்க வேணும் ; துயரம் துடைத்து தூய உள்ளம் அருள வேணும்' என்றெல்லாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்; அதே நிலையில் முருக வேளைச் சின்னஞ் சிறு பிள்ளையாகவும் கருதி வழிபட்டிருக்கிறார்.
திருச்செந்தூர்க் கோவிலுக்கு வந்து, ஆறுமுகப் பெருமான் வேல் கொண்ட கையும், வீரம் செறிந்த தோளுமாய்க் காட்சியளிப்பதைக் கண்ணுற்றதும், 'நீயா சின்னப் பிள்ளை? இன்னமுமா சிறு பிள்ளை? வீரத்திருக்கோலத்துடன் மணவாளக் கோலமும் வாய்த்திருக்கிறதே ! என்னைக் காப்பாற்றக் கூடாதா? என் துயரங்களை ஏற்கெனவே போக்கி இருக்கக் கூடாதா?' என்றெல்லாம் உணர்ச்சிப் பிரளயமாய் இருக்கும் தம் நெஞ்சப் பளிங்கில் வைத்துக் காட்டுவது போல் பாட்டில் புலப்படுத்துகிறார்.
இத்தகைய புலவர்களின் தொடர்ச்சியான பரம்பரை திருச்செந்தூரைச் 'செந்தமிழ் மணக்கும் செந்தில்' ஆகப் பாதுகாத்து வந்திருக்கிறது.
திருச்செந்தூரில் முருகனை மனம் குளிர தரிசித்த பிறகு அவர் தருமபுரம் ஆதீனத்துக்கு சென்றார். அங்கு சில காலம் தங்கி இருந்தார். அப்போது வெள்ளை உடை அணிந்து தருமபுரம் ஆதீனத்திடம் ஞான உபதேசம் பெற்றார். இதனால் அன்று முதல் படிக்காசுப் புலவர் பெயர் மாறி படிக்காசு தம்பிரான் என்று அழைக்கப் பட்டார்.
அவர் சன்னியாசம் பெற்றதால் அவரது வாழ்க்கை முறையும் மாறியது. அவரை தருமபுரம் ஆதீனம் மட தலைவர் புள்ளிருக்குவேளூர் என்று பெயர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார். அதன் பேரில் அங்கு சென்று தருமபுரம் ஆதீன பணிகளை செய்து வந்தார்.
அப்போது 'வேளூர்க்கலம்பகம்' எனும் கலம்பகம் நூலை இயற்றினார். அதை அந்த ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார். சிறிது நாட்கள் கழித்து அவருக்கு சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்து அங்கு இறுதி காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் பணிகளை ஒப்படைத்து விட்டு சிதம்பரத்துக்கு பயணம் ஆனார். அங்கு தங்கி இருந்து நடராஜரை தினமும் வழிபட்டு வந்தார். இறுதி நாள் வரை அங்கேயே வாழ்ந்தார். சிதம்பரத்தில் அவர் முக்தி பெற்றதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.
தொண்டை மண்டலத்தில் பிறந்த படிக்காசுப் புலவரை திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆட்கொண்டு தனது சன்னதிக்கு அழைத்து பாட வைத்து சிறப்பித்தது இன்றும் வரலாற்று குறிப்புகளில் பெருமையாக இடம் பிடித்துள்ளது. இதே போன்று எத்தனையோ புலவர்களை திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆட்கொண்டுள்ளார். அத்தகைய அற்புதம் ஒன்றை அடுத்த வாரமும் காணலாம்.
- இறைவன் மீது அதிக நாட்டம் உள்ள மனிதர்கள் இருந்த காலம்.
- முனிவர் சிறந்த பைரவ வழிபாட்டாளர்.
சில சமயங்களில் நாம் ஒன்று எழுதலாம் என்று நினைப்போம். ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட விதமாக வேறொரு தலைப்பு கருத்தின் கீழ் அமையும். அவ்வாறு அமைந்ததுதான் இன்று எழுதப்படும் கட்டுரையாகும்.
கால பைரவரைப் பற்றிய இந்த கட்டுரையினை ஆன்மீக நாட்டம் உடைய ஒரு தெரிந்தவர் அனுப்பி இருந்தார். அதனைப் படித்தவுடன் எனக்கு இக்கட்டுரையினை பகிர வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. அதன் வெளிப்பாடே இக்கட்டுரை அப்படியே எழுதப்பட்டுள்ளது.
கால பைரவர்
* சிவனின் ஒரு உக்கிரமான சொரூபம். * சக்தி மிகுந்த தெய்வம் * தீயதை அழிப்பவர், நல்லதை காப்பவர், காலத்தோடு இணைத்தவர். * பயத்தினை போக்குபவர் * அழிவுப் பூர்வங்களை அகற்றுபவர். * வாரணாசியினை இவரது தலைமை பீடம் எனலாம்.
இப்படி நிறைய சொல்லலாம். இதனை மேலும் காக்கை சித்தர் வாக்கில் இருந்து அறிவோமா?
அய்யனே. நாம் கடவுளை சிறந்தவர் என்கின்றோம். ஆன்மாவை மேன்மை படுத்த சிவத்தினை அடைய வேண்டும் என்கின்றோம். ஆனாலும் மனிதர்கள் மகா கால பைரவரையே வணங்கி வாருங்கள் என பைரவருக்கு முன்னுரிமை அளிப்பதன் காரணம் என்ன? தவறாக கேட்டிருந்தால் எங்களை மன்னிக்கவும் என்றனர்.
அவர்களை அமைதியாய் நோக்கிய காக்கை சித்தர் ஒரு நிகழ்வினைப் பற்றிக் கூறினார்.
இறைவன் மீது அதிக நாட்டம் உள்ள மனிதர்கள் இருந்த காலம். மனித நேயம் இருந்த காலம். எங்கும் தர்மம் தழைத்த காலம். அச்சமயம் ஜனார்த்தனன் என்ற ஒரு வியாபாரிக்கு ஒரு மகன் பிறந்தான். ஜனார்த்தனன் மிகுந்த இறை பக்தி கொண்டவர்.
எழை, எளியவர்களுக்கு அதிக தானம், தர்மம் செய்து வந்தார். தனது மகனுக்கு குமணன் என்று பெயர் சூட்டினார். தன் மகனின் ஜாதகத்தினை கணித்து அவனது எதிர்காலத்தினைப் பற்றி அறிய ஜனார்த்தனன் விரும்பினார். தனது குருமாரை அணுகி குமணனின் ஜாதகத்தினை எழுதி அதன் பலனையும் கூறுமாறு வேண்டினார். குருமாரும் குமணனின் ஜாதகத்தினை ஆராய்ந்து பலனைக் கூறினர். அப்போது குமணன் வயது 12.
குமணனின் ஜாதகம் தரித்திர ஜாதகம். பிறப்பிலேயே குமணன் ஒரு தரித்திரன். அவனும் கெடுவான், அவனோடு சேருபவனும் கெடுவான். அவனுக்கு உதவுபவனும் கெடுவான். உணவளிப்பவனும் கெடுவான் என்றார். கேட்கும் நமக்கே சங்கடம் ஏற்படுகின்றதே? ஜனார்த்தனன் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
இப்படியெல்லாம் ஒரு குருமார் சொல்லலாமா? போன்ற தர்க்கங்களை இங்கு ஒதுக்கி விடுவோம். இங்கு நாம் பேசப் போவது கால பைரவரை பற்றி மட்டுமே.
ஜனார்த்தனன் கதறி அழுதார். இறைவனிடம் தவம் இருந்து பெற்ற என் பிள்ளையின் நிலை இதுதானா? இதற்கு பரிகாரம் எதுவும் இல்லையா?- ஜனார்த்தனன். பரிகாரம் இதற்கு இல்லை. பிறப்பின் பயனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும். மேலும் இதன் பின் அவன் உங்களுடன் வசிப்பான் என்றால் பெற்றோரில் ஒருவரை அவன் இழக்க நேரிடும் என்று கூறி விட்டு குருமார் அங்கிருந்து சென்றார்.
குமணன் தன் தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவன். தந்தை மீது கொண்ட பக்தியால் உடனே தந்தையை விட்டு விலக முடிவு செய்தான். தந்தையின் அனுமதியோடு வெளியூர் பயணம் மேற்கொண்டான்.

கமலி ஸ்ரீபால்
குமணன் செல்லும் இடம், செய்யும் வேலை, பழகும் நண்பர்கள் எல்லாம் ஆறு மாத காலமே நீடித்தன. இவ்வாறே ஊர் ஊராக அலைந்து குமணனுக்கும் 25 வயது ஆகி விட்டது.
ஒரு கால கட்டத்தில் மனம் நொந்த குமணன் இனிதான் வாழ்வது வீண் என்று முடிவு செய்து மலை சிகர உச்சிக்கு சென்று உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தான். ஜனார்த்தனனும் தொழிலில் நலிவு பெற்று மிகவும் கஷ்டப்பட்டான். இருப்பினும் இறை பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். குமணன் காடுகளைக் கடந்து மலை உச்சிக்கு செல்லும் வேளையில் அவனுக்கு மிகுந்த தாகம் எடுத்தது. அவ்விடத்தின் அருகில் ஆசிரமம் இருந்தது.
தாகத்துக்கு நீர் கேட்போம் என்று எண்ணி ஆசிரமத்திற்குச் சென்றான். அந்த ஆசிரமம் ஒளியாய் தெரிந்தது. அந்த ஆசிரமத்தில் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் குமணனை அன்போடு உபசரித்தார். பின்னர் என்ன குமணா, உயிரை மாய்த்துக் கொள்வதற்காக இங்கு வந்தாயோ என்றார் முனிவர்.
தன் நிலையினை சொல்லலாமா? வேண்டாமா? என்று நினைத்த குமணனுக்கு முனிவரே எல்லாம் சொல்லி விட்டாரே என்ற ஆச்சர்யம்.
முனிவர் மேலும் தொடர்ந்தார். நான் ஒரு உபாயம் சொல்கிறேன். என்னோடு நீ வந்து செய்தால் உன் துயரம் தீரும் என எண்ணுகிறேன் என்றார். குமணனுக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் வார்த்தைகளை உறுதியாய் நம்பினான். ஐயா, நீங்கள் சொல்வது போல் நான் கண்டிப்பாய் நடக்கின்றேன். "எப்படியோ என் கவலைகள் தீர்தால் சரி" என்றான்.
முனிவர் சிறந்த பைரவ வழிபாட்டாளர். பைரவரே அவரது குரு. அவர் பைரவரிடம் வேண்டும் அனைத்தும் நடந்தது. முனிவர் குமணனை அழைத்துக் கொண்டு எட்டு பைரவ ஆலயங்கள் சென்றார். அங்கு ஜம், பூஜைகளைச் செய்தார். பின்னர் குமணனைப் பார்த்து, "குமணா இனி நீ உன் வாழ்க்கை பயணத்தினை தொடரலாம். அது வெற்றியாகவே அமையும்" என்றார்.
குமணனும் முனிவரின் ஆசி பெற்று வாழ்க்கை பயணத்தினை மேற்கொண்டான். அனைத்தும் வெற்றியாக அமைந்தது. செல்வந்தன் ஆனான். தாய், தந்தையரைச் சேர்ந்தான், தர்ம காரியங்களை செய்து வந்தான்.
ஜனார்த்தனன் குமணனை அழைத்துக் கொண்டு தன் குருமாரை சந்தித்து ஆசி பெற சென்றார். குமணன் வாழ்வில் நடந்த அனைத்தினையும் கூறினார்.
குருமார் சிந்தித்தார். ஜோதிடத்தில் குமணனின் வாழ்க்கை மாற வாய்ப்பே இல்லை. பரிகாரமும் இல்லை. தான் சொன்ன ஜோதிடமும் தவறில்லை. பின் இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? குருமாரும் ஜனார்தனன், குமணன் இவர்களுடன் முனிவர் ஆசிரமம் சென்றார்.
முனிவர் கூறியது குருமாரே. நீங்கள் ஜாதக ரீதியாக கூறிய அனைத்தும் உண்மைதான். ஆனால் எவன் ஒருவன் பைரவரை வணங்குகின்றானோ அவன் எத்தனை அசுபங்களால் ஆட்பட்டிருந்தாலும், அதில் இருந்து மீண்டு உயர்ந்த வாழ்க்கையை வாழ்வான் என்றார். இது தேவ ரகசியம்.
கால பைரவர், காலத்தினையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவர் என போற்றப்படுபவர். இந்து, சைன, புத்த பிரிவுகளில் இவரை வணங்கும் முறை பற்றி குறிப்புகள் உள்ளன என்று கூறப்படுகின்றது. வணங்குபவரின் ஆணவம், மூர்க்கத் தனமும் அழியும். உண்மையில் இத்தகு குணங்களே மனிதனின் எதிரிகள்.
பிரம்மனின் 5 தலைகளில் ஒன்றினை கொய்தவர். கறுத்த உக்கிர தோற்றமும், நாய் வாகனமும் கொண்டவர். தன்னை வணங்குபவர்களின் வெளியுலக எதிரிகள், அவருள் இருக்கும் மாயை, ஆசை, ஆணவம் என்ற உள் எதிரிகள் இரண்டனையும் நீக்குபவர். 64 வகைகளாக அறியப்படும் பைரவர் 8 பிரிவுகளில் தொகுத்து 'அஷ்ட பைரவர்' என வணங்கப்படுகின்றார். தேய்பிறை அஷ்டமி இவருக்கு உகந்த நாள். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
உப்பில்லா தயிர் சாதம், உப்பில்லா உளுந்து வடை இவற்றினை இவருக்காக செய்வர். செவ்வரளி, சிகப்பு மலர்கள் இவருக்கு உகந்தது.
* ஆன்மீக முன்னேற்றம் வேண்டுபவர்கள்.
* பயம், அழிவுப் பூர்வ சிந்தனை நீங்க
* தெளிவான மன நிலை, கூரிய கவனம் பெற
* படபடப்பு, கவலை, ஸ்ட்ரெஸ் நீங்க
* ஒழுக்கமான நெறியினை கடை பிடிக்க
* பணப் பிரச்சினை, கடன், வம்பு, வழக்கு நீங்க
* தடைகள் உடைபட வேண்டி வழிபடுவர்கள் கால பைரவரை தொடர்ந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
நம் நாட்டில் பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது என்பதால் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதனை நம்பித்தான் ஆக வேண்டும் என்றோ? கடை பிடித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. அவரவர் உன் மனமே அவருக்கு சிறந்த வழிகாட்டி.
'கடவுளை கண்ணால் பார்க்க முடியுமா?'- இது மகான் கிருபானந்த வாரியார் அவர்களிடம் ஒருவர் கேட்ட கேள்வி.
'தம்பி, உன் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி. நீ உன் உடம்பை கண்ணால் பார்க்கின்றாயா?
'என்ன ஐயா! இந்த உடம்பை நான் எத்தனை காலமாக பார்த்து வருகின்றேன்' எனக்கு கண் இல்லையா என்ன?
'தம்பி- நீங்கள் படித்த அறிஞன்தான். கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதாது, காது ஒலி கேட்பதாக அமைந்திருக்க வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும், திட்பமும் இருக்க வேண்டும்.
மகான் மேலும் கூறினார், 'உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?"
'ஆம் நன்றாகத் தெரிகின்றது'.
' அப்பா அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'
'என்ன ஐயா தெரிகின்றது. தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுகின்றேன்.
'தம்பி, எல்லா அங்கங்களும் தெரிகின்றதா?'
'ஆம் முழுவதும் தெரிகின்றது. பதில் எரிச்சலுடன் இருந்தது.
'அப்படியா, தம்பி உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'
'ஐயா, பின்புறம் தெரியவில்லை? குரல் கம்மியது.
'தெரிகின்றது, தெரிகின்றது என்று பலமுறை சொன்னாயே,. இப்போது தெரியவில்லை என்கின்றாயே. சரி போகட்டும். முன்புறம் முழுவதும் தெரிகின்றதா?'-மகான் கேள்வி
'ஆம் முன்புறம் எல்லாம் தெரிகின்றதே?-அவசர பதில்.
'தம்பி அவசரம் கூடாது. முன்புறம் எல்லா பகுதிகளையும் பார்க்க முடிகின்றதா?' வாரியாரின் அமைதியான கேள்வி.
'ஆம், எல்லா பகுதிகளையும் காண்கின்றேன்'
'தம்பி, முன்புறம் உன் முகத்தினை உங்களால் பார்க்க முடிகின்றதா?'
கேள்வி கேட்டவர்க்கு நெருப்பை மிதித்தது போல் இருந்தது. தன் அறியாமையை எண்ணி வருந்தினார்.
தம்பி இந்த உடம்பிலேயே நீங்கள் சிறிது தான் கண்டு இருக்கின்றீர்கள். இந்த உடம்பு முழுவதும் தெரிய பெரிய இரு நிலை கண்ணாடி வேண்டும். அது போல இறைவனைத் தேடவும் இரு கண்ணாடி வேண்டும்.
'அவை என்ன ஐயா?'
'ஒன்று திருவருள். மற்றொன்று குருவருள். திருவருளைக் காண குரு அருள் அவசியம். இவை இரண்டும் இருந்தால் நீங்கள் இறைவனை காண முடியும்' என்றார் வாரியார் மகான்.
- கடனாளியாகச் சந்தோஷமாய் வாழ்வதைவிட கடனின்றி சிக்கணமாக வாழ்வது நிம்மதியான செயல்.
- நிராகரிப்பதற்கும் நிராகரிக்கப்படுவதற்கும் எப்போதும் தயாராக இருப்பவர்களே துயரமற்ற மனிதர்களாக உலகில் வலம்வர முடியும்.
ஏற்றுக்கொள்வதைப் போலவே நிராகரித்தலும் ஓர் நேர்முறையான செயலே! என்பதை அறிந்து கொள்ளக் காத்திருக்கும் அருமை வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
பெரும்பாலும் நாம் நல்லவற்றை ஏற்றுக்கொள்ளவும் தீயவற்றை வேண்டாமென்று நிராகரிக்கவும் தயங்கக்கூடாது என்று கேள்விப்பட்டிருப்போம். 'கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி!' வாழ்வை நடத்துவதே எல்லா நிலைகளிலும் ஏற்புடைய செயலாகும். ஆனால் நாகரிகம் கருதியும், முகத் தாட்சண்யம் கருதியும் சிலவற்றை 'முடியாது!' என நிராகரிப்பதற்குத் தயங்குகிறோம்.
எல்லாவற்றிற்கும் 'ஆமாம் சாமி!' போடுவதும், எல்லாவற்றையும் 'சரி' எனச் சொல்லி ஏற்றுக்கொள்வதும் பல வேளைகளில் தீராத துன்பத்திலேயே கொண்டுபோய் விட்டுவிடும். "அது எப்படி முகத்திலடித்தது போல 'வேண்டாம்!' என்று கூறுவது?; 'முடியாது!' என்று கருணையில்லாமல் மறுத்துப் பேசுவது?" என்று சிலர் யோசிக்கலாம்.
திருவள்ளுவர் சொல்கிறார், "வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை!" என்று. பொதுவாகச் 'செல்வம்' என்பது 'வேண்டும்! வேண்டும்!' என்று தேடிச்சென்று ஈட்டுவது ஆகும்; விரும்பி முயற்சியுடன் செய்யப்படுவதுதான் 'செல்வம்'. ஆனால் 'விழுச்செல்வம்' எனப்படும் நிலைத்த செல்வம் எது என்றால், எதற்குமே ஆசைப்படாமல் 'வேண்டாம்! வேண்டாம்!' என்று நிராகரித்தலே ஆகும் என்கிறார். உண்ணுகிற உணவைக்கூட(அது நம் உடம்புக்கு ஒத்துக் கொள்கிற உணவாயினும்) 'வேண்டாம்! வேண்டாம்!' என்று நிராகரித்து உண்ண வேண்டும்: அதுவே ஊறு விளைவிக்காத உயிர் வளர்க்கும் உணவுமுறை! என்கிறார்.
"மாறுபாடு இல்லாத உண்டி
மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு"
'நிராகரித்தல்' என்றால் எதனையும் கண்ணை மூடிக்கொண்டு வேண்டாம் என்று நிராகரிப்பது இல்லை. அறிவுக்கண்களை அகலத் திறந்து வைத்துக்கொண்டு, ஆராய்ச்சி செய்வது; பிறகு, சொல்பவர் எவ்வளவு உயரிய தன்மையர் ஆனாலும் பொருந்தாதவை என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்து விட வேண்டும். மனிதர்களைப் பொறுத்து மட்டுமல்ல; பொருள்களின் தன்மையைப் பொறுத்தும் உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கூறுவதோ, தரம் பார்க்காமல், பளபளப்பானதா? பளபளப்பற்றதா? என்றும் மயங்கி நிற்பதோ கூடாது. 'பயனுள்ளதா?' என்கிற பொருள்களின் உண்மைத்தன்மை அடிப்படையில் மெய்ப்பொருள் காண வேண்டும். சொந்த அறிவின் துணைகொண்டு மெய்ப்பொருள் கண்டபிறகு நிராகரித்தலுக்கும் ஏற்றுக்கொள்ளுதலுக்கும் ஆட்பட வேண்டும்.
திருவள்ளுவர் இரண்டு திருக்குறள்களில் மெய்ப்பொருள் காணும் அறிவின் திறத்தை வலியுறுத்திக் கூறுகிறார்:
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
வெளிப்படையாகவும் நடுநிலையாகவும் உள்ளவர்களால் மட்டுமே நேர்மையான முறையில் நிராகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அவ்வளவு பெரிய மனிதர் கூறுகிறாரே! அதை எப்படி நிராகரிப்பது?. அளவில் எவ்வளவு பெரியதாகவும், நிறையில் எவ்வளவு கனமானதாகவும் இருக்கிறது!; அந்தப்பொருளை எப்படி நிராகரிப்பது? என்றெல்லாம் தயங்கி நிற்பவர்கள் வாழ்வில் தோல்வியை மட்டுமே தழுவக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த மாதிரி தருணங்களில், ஒருவருக்குச் சொந்தமாக நிறைந்திருக்கும் அறிவே அவருக்குத் துணிச்சலைத் தந்து, ஊக்கமான முடிவை எடுக்க உதவி, வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.
கௌதம புத்தர் தனது சீடர்களோடு ஒரு கிராமத்துக்குப் போனார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் எவருக்குமே புத்தரைப் பிடிக்கவில்லை; எனவே கண்ணா பிண்ணாவென்று வாய்க்கு வந்தபடித் திட்டி, அவரை அவமானப் படுத்தத் தொடங்கினார்கள். காலை தொடங்கி மாலை வரை ஏச்சும் பேச்சும் கூடிக்கொண்டே இருந்தது; குறையவில்லை. புத்தர் சாந்தம் தவழும் புன்னகையோடு அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தார்.

சுந்தர ஆவுடையப்பன்
மாலைநேரம் வந்தது; "இன்னமும் என்னிடம் சொல்ல வேண்டியதும் பேச வேண்டியதும் ஏதாவது இருக்கிறதா?. எனக்கு அடுத்த கிராமத்துக்குப் போகவேண்டிய நேரம் வந்து விட்டது. இன்னமும் என்னிடத்தில் ஏச வேண்டிய பாக்கி இருந்தால் சொல்லுங்கள்; நாளை இந்தப்பக்கமாக வந்து நேரம் ஒதுக்கித் தருகிறேன்!" என்று புன்னகை குறையாத சாந்தத்துடன் புத்தர் கேட்டார்.
"ஏங்க! நாங்க உங்களை இவ்வளவு நேரமாத் திட்டி அவமானப் படுத்துகிறோமே! உங்களுக்குக் கோபமே வரவில்லையா?" ஊர் மக்கள் புத்தரைப் பார்த்துக் கேட்டனர். புத்தர் சொன்னார், " திட்டுவதும் அவமானப் படுத்துவதும் உங்களுடைய சுதந்திரம்!; அவற்றை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பதும் என்னோட சுதந்திரம். நேற்றுக்கூட ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன்; அங்குள்ள மக்கள் எனக்கு நிறைய இனிப்புகளைக் கொடுத்து மகிழ்ச்சியோடு கொண்டாட வந்தார்கள். நான் எந்த இனிப்பையும் எடுக்காமல் இனிப்பை நிராகரித்து விட்டேன். ஏனெனில் இனிப்பு எனது உடல்நிலைக்கு ஒத்துப்போகாது.
அவர்கள் தட்டுத் தட்டாய்க் கொண்டுவந்த இனிப்பை நான் நிராகரித்து விட்டதால் அங்கு என்ன நடந்தது தெரியுமா?" என்று கேட்டுவிட்டுப், புத்தர் அமைதியாக அந்த ஊர்மக்களைப் பார்த்தார். பிறகு பேசினார். "எனக்குத் தருவதற்காக அவர்கள் கொண்டு வந்திருந்த இனிப்பை நான் நிராகரித்துவிட்டதால், அதை அவர்களே பகிர்ந்து அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். இப்போது இன்று காலை முதல் என்னைநோக்கி நீங்கள் வழங்கிய வசவுகளையும், படுத்திய அவமானங்களையும் நான் நிராகரிக்கிறேன்!. அப்படியானால், நான் நிராகரித்ததனால், அவற்றை நீங்களே பகிர்ந்து உங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிவரும். அதனால் வரப்போகிற துன்பங்களும் துயரங்களும் என்னைப் பாதிக்கப் போவதில்லை; மாறாக உங்களுக்கே வந்து, உங்களையே பாதிக்கும். வாழ்க்கையில் நிராகரிக்கக் கற்றுக்கொண்டால், துயரமே இல்லை!" என்று பேச்சை முடித்தார் புத்தர்.
நம்மிடம் ஒரு குணம் இருக்கிறது. மற்றவர் பாராட்டினால் அதை வெகுமானமாகக் கருதி மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறோம்; நமக்கு அந்தப் பாராட்டிற்கான முழுத்தகுதி இருக்கிறதா? என்பது பற்றித் துளியளவும் ஐயப்படுவதே இல்லை. அடுத்தவர்கள் நம்மைப்பற்றி விமரிசனம் செய்து அவமானப் படுத்தினால் மட்டும், நாம் அந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் துளியளவும் பொருத்தமில்லாதவர்கள் என்றாலும் அதனை ஒரு பொருட்டாகக் கருதி வருத்தப்படுகிறோம்; துயரில் ஆழ்கிறோம். வெகுமானமோ அவமானமோ அவற்றிற்கு நமக்கு முழுத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, அவை இரண்டையுமே கண்ணை மூடிக்கொண்டு நிராகரிக்கக் கற்றுக்கொண்டால் அவை தொடர்பான துன்பங்கள் நம்மைத் தொடர்வது இல்லை.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்"
துறவோ விருப்பமோ எந்தெந்தப் பொருள்களில் நமக்குப் பற்றின்றிப் போகிறதோ அந்தந்தப் பொருண்மைகளால் நமக்குத் துயரங்கள் இல்லை! என்கிறார் திருவள்ளுவர். இது துறவுநிலையின் உச்சத் தன்மை. புத்தருக்கு இது வசப்படலாம்; ஆனால் குடும்பம் கணவன் மனைவி பிள்ளைகள் நண்பர்கள் என வாழும் குடும்பஸ்தர்களுக்கு எல்லாவற்றையும் சமமாகப் பாவித்து நிராகரித்துவிடும் தன்மை சாத்தியமா?. சிந்திக்க வேண்டிய கேள்வி.
சுமை ஏற்றப்படுகிற வண்டிக்கும், சுமைவண்டியை இழுக்கிற மாடுகளுக்கும் இவ்வளவு சுமையைத்தான் சுமக்க முடியும்; இதற்குமேல் ஏற்றினால் சுமக்க முடியாது! என்று தனது வலிமையளவைக் கூறிக், கூடுதல் சுமையேற்றாதீர்கள் என்று நிராகரிக்கிற உரிமை கிடையாது. விளைவு, கூடுதலான வலிகளோடு அந்தச் சுமையை இழுத்துத்தான் ஆகவேண்டும்; அல்லது அச்சுமுறிந்து, மாடும் வண்டியும் பரிதாபமாகச் சாலை நடுவே கிடக்க வேண்டியதுதான். மனிதர்கள் மாடுகள் அல்லவே!. அவர்களுக்கு சிந்திக்கும் அறிவும், எடுத்துரைக்கும் ஆற்றலும் நிறையவே உண்டுதானே!. பின் ஏன் எல்லாவற்றையும் 'சரி! சரி!' என மாடுபோலத் தலையாட்டிக் கொண்டே செய்ய வேண்டும்?; மன அழுத்தத்திற்கும் உளைச்சலுக்கும் ஆளாக வேண்டும்?.
அலுவலகத்திலும் பணியிடத்திலும் மேலிடத்தில் இருப்பவர்கள், எப்படியாவது தங்களுக்கு வேலை முடிந்தாக வேண்டும் என்பதற்காக சில அப்பாவிகளது தலையில் சுமக்க முடியாத சுமைகளை ஏற்றி வைத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அப்பாவிப் பணியாளர்களும் மேலிடத்தை மறுத்துப்பேச முடியாமல், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தீராத துன்பங்களுக்கு ஆளாகி, இல்லாத நோய்களையெல்லாம் இழுத்து வைத்துக்கொண்டு திரிவார்கள்; இவர்கள் இயலாமையில் வருந்துபவர்கள். இன்னும் சிலபேர் இருக்கிறார்கள்; அவர்கள் வெற்றுப் பாராட்டுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டுக் கொடுக்கிற எல்லா வேலைகளையும் மொத்தமாய் வாங்கிக் குவித்துப் போட்டுக்கொண்டு எந்த வேலையிலிருந்து தொடங்குவது என்று தெரியாமல் குழம்பிப் போய்க் கிடப்பார்கள்.
இம்மாதிரியான குழப்பமும் வருத்தமும் இல்லாமல் இருப்பதற்கு ஒரே வழி, முடிகிற வேலைகளை மட்டுமே ஒத்துக்கொள்வது; மிகையான வேலைகளை, 'முடியாது!' என ஒரே வரியில் நிராகரித்து விடுவது ஆகும். இப்படிச் சட்டென நிராகரித்து விடும்போது அந்த நேரத்திற்கு மட்டும் கொஞ்சம் வருத்தமான சூழல் உருவாகும்; ஆனால் அதன் பிறகு தொடரப்போகும் துயரங்களுக்கான முற்றுப்புள்ளி அப்போதே வைக்கப்பட்டு விடும்.
அலுவலகம் போலக் குடும்பங்களிலும் கணவன் மனைவி பிள்ளைகள் அனைவருமே விரலுக்கு மீறிய செலவினங்களாக நிதிசார் சுமைகள் ஏற்படும்போது, எளிதாக நிராகரித்துவிடுவது தேவையான நன்மைகள் தரும்.
வீடுகட்டப்போகிறோம் என்று தொடங்கிவிட்டால், வெறுங்கை கொண்டு முழம்போடவும் முடியாது; செலவுகள் திட்டமிடவும் முடியாது. கையிருப்பு எவ்வளவு? கடன்தொகை எவ்வளவு? மாதவருமானத்தில் கட்ட வேண்டிய மாதத்தவணை எவ்வளவு? எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுவந்து கூடுதலாக ஒருரூபாய் தேவைப்பட்டாலும் அந்தச் செலவைக் கண்ணை மூடிக்கொண்டு நிராகரித்து விடுவதே புத்திசாலித்தனம். கடனாளியாகச் சந்தோஷமாய் வாழ்வதைவிட கடனின்றி சிக்கணமாக வாழ்வது நிம்மதியான செயல்.
வாழ்வில் சில விஷயங்களை நாம் நிராகரிப்பது ஒருபுறமிருக்க, நாம் பலரால், பல தருணங்களில் நிராகரிக்கப்படும் நேரங்களிலும் உறுதியாக இருக்க வேண்டும். நினைக்கும் படிப்பு, நினைக்கும் மதிப்பெண், நினைக்கும் வேலை, நினைக்கும் சம்பளம், நினைக்கும் குடும்பம் இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நாம் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகக் கூடும். அந்த மாதிரியான தருணங்களில் இது இப்போதைக்கு நிராகரிக்கப்படுகிறது; இருந்தாலும் இதைவிடச் சிறந்த ஒன்று அமையப்போகிறது என்பதற்காகவே இது நழுவிப்போகிறது என்று மன உறுதியோடு நம்பிக்கைகொள்ள வேண்டும். நிராகரிப்பதற்கும் நிராகரிக்கப்படுவதற்கும் எப்போதும் தயாராக இருப்பவர்களே துயரமற்ற மனிதர்களாக உலகில் வலம்வர முடியும்.
தொடர்புக்கு 943190098
- ராகு/ கேது மேடுகளில் புள்ளி காணப்பட்டால் எப்போதுமே வெற்றி அடைய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
- மத்தியில் பிரம்மன் வாசம் செய்வதாக ஐதீகம்.
புதன், சூரியன், சனி, குரு ஆகிய மேடுகளின் கீழ்... மற்றும் கீழ் செவ்வாய் - மேல் செவ்வாய் மேட்டிற்கு இடையே...சந்திர மேட்டிற்கும், சுக்கிர மேட்டிற்கும் மேலே அதாவது உள்ளங்கையின் மத்தியை இரு சிறு பகுதிகளாகப் பிரித்து மேற்பகுதியை கேது மேடாகவும், கீழ் பகுதியை ராகு மேடாகவும் கொடுத்து உள்ளனர். மத்தியில் பிரம்மன் வாசம் செய்வதாக ஐதீகம். இதுவே ராகு/ கேது மேடுகள் ஆகும். இதில் எந்தெந்த குறியீடுகள் இருந்தால் எந்தெந்த விதமான பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.
ராகு/ கேது மேடுகளில் ஒரே ஒரு கோடு மட்டும் காணப்பட்டால் அவர்கள் வீரம், சாகஸம் போன்ற இயல்புகளைக் கொண்டு இருப்பார்கள். எதிர்பாராத வகையில் பொருள் ஈட்டி வாழ்வில் வளர்ச்சி பெறுவீர்கள். வாழ்வின் பிற்பகுதியில் நிலம், வீடு என அனைத்து வித சொத்துக்களுடன் இருப்பீர்கள். சொந்தங்களுடன் கூடி வாழும் பாக்கியம் உண்டு.
அதுவே பல கோடுகள் காணப்படுமாயின் அவர்களுக்கு கலைகளில் அதீத ஈடுபாடு இருக்கும். அதிக கோப குணம் கொண்டவர்கள். கோபத்தை மட்டும் நீங்கள் குறைத்துக் கொண்டால் உங்களை போல நல்லவர்கள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை எனலாம். மற்றபடி, உங்கள் வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள் பலவற்றை சந்தித்தாலும் இறுதியில் ஒரு நல்ல நிலையை அடைவீர்கள்.
ராகு/ கேது மேடுகளில் புள்ளி காணப்பட்டால் எப்போதுமே வெற்றி அடைய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். கூர்மையான புத்தியையும், தரும சிந்தனையையும் கொண்டு இருப்பீர்கள். சொத்துக்களை விருத்தி செய்யும் குணத்துடன் இருப்பீர்கள். உங்கள் காலத்திற்குப் பிறகு கூட உங்கள் சந்ததியால் நீங்கள் அதிகம் நினைக்கப்படுவீர்கள்.
ராகு/ கேது மேடுகளில் நட்சத்திரம் காணப்பட்டால் சாதனைகள் பல செய்து பெயர் எடுப்பார்கள். எதிர்காலத்தில் எண்ணற்ற சாதனைகளை படைப்பீர்கள். எனினும் உங்கள் வாழ்நாளில் வருமானத்தை விட செலவு அதிகம் இருக்கும். எதிர்காலத்தில் உங்களுக்கு ஞாபக சக்தி குறைய வாய்ப்பு உண்டு.
ராகு/ கேது மேடுகளில் சதுரம் காணப்பட்டால் ஆபத்துக்களை கூட எளிதாக சமாளித்து வெற்றி பெறும் இயல்பு ஏற்படும். விபத்துக்களையும், ஆபத்துக்களையும் சமாளிக்கும் இயல்பு உங்களிடம் அடிப்படையிலேயே இருக்கும். உங்களது சொந்தங்கள் நண்பர்கள் கூட அடிக்கடி அவிப்பிராய பேதத்துடன் நடந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் சொந்தங்களை விட்டு நீங்கள் தனித்துத் தான் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் நிறைய வேலை மாற்றங்களை சந்திக்க நேரிடலாம். ஜீவனத்தை சமாளித்து நடத்துவீர்கள். எனினும் பிற்பகுதியில் யோகமுடன் திகழ்வீர்கள்

ராகு/ கேது மேடுகளில் முக்கோணம் காணப்பட்டால் பல்வேறு வகைகளில் பொருள் ஈட்டுவார்கள். சமூகத்தில் கூட அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். பிறரை வசீகரிக்கும் குணம் உங்களிடம் காணப்படலாம். உங்களுக்கு, மனைவி அல்லது பெண் வழியில் சொத்துக்கள் கிடைக்கப்பெறலாம்.புண்ணிய காரியங்களில் உங்களுக்கு பற்றுதல் இருக்கும். அயர்ச்சியை பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள் நீங்கள். அதனால் பிற்காலத்தில் நிறைய தனம் சம்பாதிப்பீர்கள்.
ராகு/ கேது மேடுகளில் வட்டம் காணப்பட்டால் பாதுகாப்பு சார்ந்த துறைகள் அல்லது காவல் துறையில் உயர் பதவி கிடைக்கப்பெறும்.நீங்கள் எதிர்காலத்தில் புகழுடன் இருப்பீர்கள், மேலும், நீங்கள் வாழ்வில் பல நல்ல திட்டங்களை வகுத்து அவற்றை பின்பற்றி நல்ல படியாக வெற்றி அடைவீர்கள்.முற்பகுதியை விட பிற்பகுதியில் நீங்கள் அதிக முன்னேற்றத்தை அடைவீர்கள்.
ராகு/ கேது மேடுகளில் வலை காணப்பட்டால் கோபத்திலும், அவசரத்திலும் தவறுகள் செய்யும் குணம் காணப்படும். மேலும், உங்களிடம் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்கும். அவற்றை விட்டொழித்தால் நீங்கள் வாழ்வில் சகல முன்னேற்றங்களையும் அடைவீர்கள். கலைகளில் ஊக்கம் இருக்கும். உங்கள் பேச்சினால் உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ள இடம் உண்டு. அதனால் கவனமாகப் பேசவும்.
ராகு/ கேது மேடுகளில் பெருக்கல் குறி காணப்பட்டால் வாழ்வில் நிறைய ஏமாற்றமும், அவமானங்களும் ஏற்பட இடம் உண்டு. உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கலாம். நீங்கள் தாராள மனது உடையவர்களாக இருப்பீர்கள், பேச்சில் மட்டும் நிதானத்துடன் இருங்கள். அவ்வாறு இருந்தீர்கள் என்றால் உங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்வில் வரவும், செலவும் உடனுக்குடன் நேரிட்டாலும் கூட பிற்காலத்தில் நீங்கள் யோகமுடன் இருப்பீர்கள்.
ராகு/ கேது மேடுகளில் சூரியனின் சின்னம் காணப்பட்டால் அதிக பலவீனத்துடன் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கும். எல்லோரும் ஒரு வழியில் சென்றால் நீங்கள் உங்களுக்கு என்று ஒரு தனி வழியை வகுத்து செல்வீர்கள். எனினும், உங்கள் முயற்சியால் எதிர்காலத்தில் செல்வம், செல்வாக்குடன் இருப்பீர்கள்.
ராகு/ கேது மேடுகளில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால் அசையா சொத்துக்கள் சேர்ப்பதில் அதிக ஈடுபாடு இருக்கும்.. புண்ணிய காரியங்களில் உங்களுக்கு பற்றுதல் இருக்கும். அயர்ச்சியை பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள் நீங்கள். எதிர்காலத்தில் மாளிகை போன்ற வீட்டில் நீங்கள் வாசம் செய்யும் பாக்கியம் கிடைக்கப்பெறும்.
ராகு/ கேது மேடுகளில் புதனின் சின்னம் காணப்பட்டால் எதிலும் போதும் என்ற மனம் இருக்காது.. சுக வாழ்வில் இவர்களுக்கு நாட்டம் அதிகமாக இருக்கும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் இருக்கும். எனினும் நீங்கள் கொஞ்சம் குழப்பவாதிகள் தான். ஆனாலும் கூட வாழ்வின் முற்பகுதியை காட்டிலும் பிற்பகுதியில் செல்வ செழிப்புடன் நீங்கள் இருப்பீர்கள்.

அ.ச.இராமராஜன்
ராகு/ கேது மேடுகளில் குரு பகவானின் சின்னம் காணப்பட்டால் இறை நம்பிக்கை இருந்தாலும் கூட எதையும் பகுத்தறியும் குணம் இருக்கும். வீடு, நிலம், புலம் வாங்கும் பாக்கியம் உண்டு. புத்திர வழியில் ஆதரவு உண்டு. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். மற்றவர்களின் மனதை கவரும் குணங்களுடன் இருப்பீர்கள். மனைவி அல்லது பெண் வழியில் சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறலாம்..
ராகு/ கேது மேடுகளில் சுக்கிரனின் சின்னம் காணப்பட்டால் சரீர சுகங்களில் அளவு கடந்த ஈடுபாடு இருக்கும்.பெண்கள் விஷயங்களில் சற்று கவனம் தேவை.
ராகு/ கேது மேடுகளில் சனியின் சின்னம் காணப்பட்டால் பிறரை ஏமாற்றும் தன்மை இருக்கும். குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் இயல்பும் கூட காணப்படும்.தந்திர சிந்தனைகளை கொண்டு இருப்பீர்கள், பண விஷயத்தில் அதிக சுயநலத்துடன் இருக்க வாய்ப்பு உண்டு. மற்றபடி பிற்காலத்தில் நீங்கள் செல்வ செழிப்புடன் இருப்பீர்கள்.
ராகு/ கேது மேடுகளில் ராகுவின் சின்னம் காணப்பட்டால். நீங்கள் அதிகம் உழைக்கக் கூடியவர்கள். நேரத்திற்கு உண்டு உறங்க முடியாத நிலையை வாழ்க்கையில் அடிக்கடி சந்திப்பீர்கள். உங்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட இடம் உண்டு. அதனால் உடல் நலத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்துங்கள்.சில சருமப் பிரச்சனைகளை எதிர்காலத்தில் நீங்கள் சந்திக்க நேரிடலாம். என்றாலும் கூட எதிர்காலத்தில் நல்ல செல்வத்துடன் நீங்கள் இருப்பீர்கள்.
ராகு/ கேது மேடுகளில் கேதுவின் சின்னம் காணப்பட்டால் தவறான சிந்தனையும் அதனால் ஏமாற்றங்களும் காணப்படும். அடிக்கடி உங்கள் மனம் தேவை இல்லாமல் குழப்பம் அடைய இடம் உண்டு. குறிப்பாக ஆரோக்கிய ரீதியாக நீங்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்காலத்தில் சமூகத்தினரால் மதிக்கப்பட்டு செல்வத்துடன் இருப்பீர்கள். ராகு மேட்டுக்கும் கேது மேட்டுக்கும் ஓரே மாதிரியான சின்னத்திற்கு பலன்கள் தான் ராகு மேட்டில் சூரியன் இருந்தால் என்ன பலன்களோ அதேதான் கேது மேட்டில் இருந்தாலும்.
செல்பேசி 9965799409
- எல்லாவிதமான புற்றுநோயை தடுக்கக்கூடிய ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது.
- நார்ச்சத்து செரிமான சக்தியை அதிகப்படுத்தி ஜீரணக் கோளாறுகள் வருவதை தடுக்கிறது.
"உனக்கு வந்தா ரத்தம்! எனக்கு வந்தா தக்காளி சட்னியா!"
தக்காளி என்றவுடன் நமக்கு உணவு பொருள் எல்லாம் ஞாபகம் வராது.
இந்த வசனம் தான் ஞாபகம் வரும்.
ரத்த நிறத்தில் இருக்கும் தக்காளி என்னென்ன நன்மைகளை தருகிறது? பார்ப்போமா?
லைகோபின் எனப்படும் முக்கியமான சத்து தான் இதன் நிறத்திற்கும் இதன் பல மருத்துவ குணங்களுக்கும் காரணமாக அமைகிறது. இதைத்தவிர விட்டமின் சி, கே, போலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் உள்ளன. வீக்கத்தை குறைக்கும் தன்மை மற்றும் ஆக்சிஜன் காரணிகளால் ஏற்படும் காயங்களை குறைக்கும் தன்மையும் உள்ளது. இதன் மூலம் எல்லாவிதமான புற்றுநோயை தடுக்கக்கூடிய ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது.
அதுபோலவே நெஞ்சு வலி மற்றும் கைகால் செயல் இழப்பு போன்ற பெரும் பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்பையும் தக்காளி தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான சக்தியை அதிகப்படுத்தி ஜீரணக் கோளாறுகள் வருவதை தடுக்கிறது. அதுபோலவே விட்டமின் சி எதிர்ப்பு சக்தியை கொடுத்து அடிக்கடி சளி காய்ச்சல் வருவதிலிருந்து காப்பாற்றுகிறது.
இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் இருக்கும் லைக்கோபின் சத்து விந்தணுக்களுடைய கரு உருவாக்கக்கூடிய தன்மையை எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பெண்களுக்கும் ஹார்மோன்களை சீரமைத்து ஆரோக்கியமான கருமுட்டை உருவாவதில் உதவுகிறது. கண்களில் வயதில் மூப்பின் காரணமாக ஏற்படும் மாற்றங்களை குறைத்து கண்ணை பாதுகாக்கிறது.
இந்த பண்புகள் தான் மிகச்சிறந்த உணவு பொருள் பட்டியலில் தக்காளியை மேலே கொண்டு போய் வைக்கிறது.
எவ்வளவு சாப்பிடலாம்?
தக்காளியை சமைக்காமல் சாறை பருகி ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று நடுத்தர அளவு தக்காளியை உண்ணலாம். தக்காளியை சமைத்து சாப்பிட்டாலும் ஒரு சில நீரில் கரையும் விட்டமின்கள் தவிர மற்றவை எல்லாம் கிடைக்கும். மேலும் தக்காளி சாஸ், தக்காளியிலிருந்து தக்காளியின் சத்துகள் கிடைத்தாலும் அதிக அளவு உப்பும் சர்க்கரையும் சேர்க்கும் பொழுது அதனுடைய இயல்பான நற்குணங்கள் குறையும்.
தக்காளி அலர்ஜி ஆகுமா? தக்காளி சாப்பிட்டால் சைனஸ் வருமா? தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வருமா? ஒரு சிலருக்கு தக்காளி ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம் ஒவ்வாமை ஏற்படலாம்.

ஜெயஸ்ரீ சர்மா
அதுபோலவே ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தக்காளி சாப்பிட்டால் சைனஸ் தொந்தரவு அதிகமாகலாம். அவர்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றவும்.
பொதுவாக தக்காளியில் ஆக்சலேட் சத்து அதிகமாக இருப்பதால் கற்கள் உருவாகலாம். அவரவர் உடல் வாகை பொறுத்துதான் சிறுநீரக கற்கள் உண்டாகும். எனவே ஏற்கனவே சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மற்றவர்கள் தக்காளி எடுத்துக் கொண்டால் நிறைய தண்ணீர் குடித்தால் கற்கள் உருவாகாது. அதுபோலவே சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களும் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
தக்காளி எப்படி வளர்கிறது?
தக்காளி எளிதாக வீட்டில் வளரும் செடி. எந்த போஷாக்கும் கேட்காது. விதையையோ, அழுகிப்போன தக்காளியையோ நீர் வரும் இடங்களில் தூக்கி எறிந்தாலே அழகாக வளர்ந்து கிலோ கணக்கில் தக்காளியாய் காய்த்து தள்ளிவிடும். ஒரு செடி வளர்ந்து காய்ப்பதற்கு இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் ஆகும்.
எப்படி சாப்பிடலாம்?
தக்காளியின் இனிப்பும் புளிப்பும் சாறும் பல்வேறு விதமான உணவு பண்டங்களிலும் அதை ஒரு முக்கியமான கூட்டுபொருளாக்குகிறது. ரசம் என்றால் தக்காளி ரசம் தான். அதுபோலவே சூப் என்றால் தக்காளி சூப் தான். சாம்பார், பச்சடி, சோறு, ஊறுகாய், கூட்டு, தக்காளி சட்னி, இது தவிர பலவிதமான உணவுகளிலும் புளிப்புக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது.
இது மட்டுமா? இன்றைய ஜென்சி குழந்தைகளின் விருப்பமாக இருக்கும் பாஸ்தா பீட்சா டொமேட்டோ சாஸ் சாலட் சாண்ட்விச் என்று எதுவும் தக்காளி இல்லாமல் முடியாது.
இறுதியாக அழகிற்கு...
தக்காளி சாற்றை முகத்தில் நன்றாக தடவி, முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். இது ஒரு எளிதான அழகு குறிப்பு ஆகும்.
தக்காளியை அரைத்து வடிகட்டி தினமும் குடித்தால் தோல் மினுமினுப்பு ஏறும்... தங்கம் போல தோல் தகதகவென்று இருக்கும். முகச்சுருக்கங்கள் மறையும். இளமைப் பொலிவோடு வலம் வரலாம்.
குறைந்தபட்சம் வீட்டில் செய்யும் தக்காளி ரசத்தையாவது வீணாக்காமல் சாப்பிடுவோம்.
வாட்ஸ்அப்: 8925764148
- சூர்தாஸ், ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது.
- திரையைத் திறக்காமலேயே சூர்தாஸைப் பாடச் சொன்னார்கள்.
சூர்தாஸைக் கண்ணில்லாதவர் என்பது சரியா? அவருக்குப் புறக் கண்கள் தான் இருக்கவில்லை. ஆனால் அகக் கண்கள் பல மடங்கு ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தன.
கிருஷ்ண பக்திக் கவிஞரான சூர்தாஸ் 104 வயது வாழ்ந்தார். (1479 முதல் 1583 வரை.). அவரின் இயற்பெயர் தெரியவில்லை. `ஸ்வரங்களின் அடிமை` என்ற வகையில் மக்கள் அவருக்கு இட்டு வழங்கிய செல்லப் பெயரே ஸ்வர தாசர் எனப் பொருள் தரும் `சூர்தாஸ்`.
சூர்தாஸ், ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. இப்போது கிடைப்பவை எட்டாயிரம் பாடல்கள் மட்டுமே. `சூர் சாராவளி, சாகித்ய லகரி, சூர் சாகர்` எனப் பற்பல தொகுப்புகள் வெளிவந்துள்ளன. `ஹே தீன்தயாள் கோபால் ஹரி` என்ற சூர்தாஸ் பாடல் எம்.எஸ். சுப்புலட்சுமியின் தேனினும் இனிய குரலில் இன்றும் கேட்பவர்களை உருக்குகிறது.
குழந்தைக் கண்ணனைப் பற்றிய சூர்தாசின் கவிதைகள் நெஞ்சை அள்ளுபவை. கண்ணனுக்கு முதல் பல் விழுவது, கண்ணன் தவழ்ந்தே வாயில்படி தாண்டியது என்றிப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை அவரது கவிதைகள் பேசுகின்றன.
சூர்தாஸ் பெரும்பாலும் யசோதை, நந்தகோபர் மனநிலையில் இருந்து கண்ணனைக் குழந்தையாகவே கண்டார். சூர்தாசின் திருச்சரிதம் நெஞ்சை உருக்குவது....
சூர்தாஸ் மதுரா அருகே பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கண்ணில்லாத அவர் சிறுவயதில் பெரும் துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்தார். மூன்று சகோதரர்களும் கிண்டலும் கேலியும் செய்வார்கள். பெற்றோரே அவரைப் புறக்கணித்தனர்.
அற்புதமான குரல் அவருக்கு. திண்ணையில் அமர்ந்து சன்னமாகப் பாடிக் கொண்டே இருப்பார். வீட்டின் வெளியே தெருவில், அதிகாலையில் பக்தர்கள் கிருஷ்ண பஜனை செய்தவாறே போவதுண்டு.
அந்தப் பாடல்களைக் கூர்ந்து கேட்பார். அவற்றைப் பாடுவார். மெல்ல மெல்லத் தானே பாடல் இயற்றிப் பாடவும் தொடங்கினார்.
அவரின் ஆசை வெளியுலகத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பது. ஆனால் பெற்றோர்தான் வெளியே செல்லவே அனுமதிப்பதில்லையே? ஒருநாள் அதிகாலை எழுந்த சிறுவன் சூர்தாஸ் மனச் சோர்வோடு இல்லத்தின் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார். வீட்டின் உள்ளே எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
அவர் செவிகளில் கிருஷ்ண பஜனை ஒலி கேட்டது. வெளியூர் பக்தர்கள் அதிகாலை வேளையில் கிருஷ்ண பக்தி கானங்களைப் பாடிக் கொண்டு மதுரா ஆலயத்திற்கு அவர் வீடிருந்த வீதி வழியே சென்று கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு முடிவெடுத்தார் சூர்தாஸ். பாட்டுப் பாடிக் கொண்டு சென்ற குழுவினருடன் இணைந்து வெளியே நடந்தார்.
மதுரா சென்றுகொண்டிருநத அவர்கள் ஒரு நாள் முழுவதும் நடந்துசென்று அன்றிரவு ஓர் ஆல மரத்தடியில் தங்கினார்கள். தங்களுடன் தானாய் வந்திணைந்து கொண்ட கண்ணில்லாத சிறுவனை என்ன செய்வது?

திருப்பூர் கிருஷ்ணன்
செல்லும் வழியில் அவன் ஒரு பெரிய சுமை அல்லவா? அவனைக் கவனித்துக் கொள்வது யார்? அந்த மரத்தடியிலேயே அன்று அனைவரும் உறங்கினார்கள்.
மறுநாள் அதிகாலை. சிறுவன் சூர்தாஸ் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பாமலே அந்த பக்தர் கூட்டம் சத்தமில்லாமல் விலகிச் சென்றது. சிறுவன் துயில் கலைந்தபோது அருகே யாருமில்லை.
இப்போது என்ன செய்வது? சூர்தாஸ் கல்லும் கனிந்துருகும் குரலில் கண்ணனைக் குறித்துத் தாமே இயற்றிய பக்திப் பாடல்களைப் பாடலானார். அவரது மதுரக் குரல் காற்று வெளியில் கலந்தது.
அருகேயிருந்த கிராமத்திலிருந்து சில பெண்மணிகள் அந்த மரத்தடியில் பல்தேய்க்க வந்தார்கள். சூர்தாசின் பாடல்களைக் கேட்டு அவர்கள் மனம் கரைந்தது. அவர்கள் அந்தச் சிறுவனின் பார்வையற்ற கண்ணில் பெருகிய கண்ணீரைத் தங்கள் விரல்களால் துடைத்தார்கள்.
ஒருத்தி அவரைக் குளத்திற்கு அழைத்துச் சென்று பல்தேய்த்து விட்டாள். இன்னொருத்தி பரிவோடு அவரை நீராட்டினாள். ஒரு பெண்மணி ஓடோடிப் போய் சப்பாத்தி கொண்டுவந்து ஊட்டினாள்.
அந்தச் சிறுவனின் குரலினிமையில் மனம் பறிகொடுத்த அவர்கள், அந்தக் குரலிலும் பக்தியிலும் மெய்ம்மறந்தார்கள்.
ஒரு தாயால் புறக்கணிக்கப்பட்ட சூர்தாசுக்கு எண்ணற்ற தாய்கள் கிடைத்தார்கள். அந்த மரத்தடியிலேயே சூர்தாஸ் வாழலானார். அவ்வழியே வந்த வழிப் போக்கர்கள் அவர் பாடலில் சொக்கினார்கள். அவருக்குக் காசு தந்தார்கள்...
அப்போதுதான் அந்த விந்தையான சம்பவம் நடந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு செல்வந்தரின் மகன் காணாமல் போனான். அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருக்கிறானா, இல்லை ஆற்றில் குளத்தில் எங்காவது தவறி விழுந்து இறந்து விட்டானா?
செல்வந்தரின் மனைவி, சூர்தாஸ் தங்கியிருந்த மரத்தடியில் வந்து, ஆற்ற மாட்டாமல் அருகேயிருந்த பெண்ணிடம் அழுது புலம்பினாள். அவளைத் தன் அருகே அழைத்தார் சூர்தாஸ். கண்ணனைத் தியானித்தார். அவர் மனத்தில் ஒரு காட்சி விரிந்தது.
சவுக்குத் தோப்புக்கள் நிறைந்த கானகத்தில் ஒரு பாழும் மண்டபத்தில் வழிதெரியாமல் அழுது அழுது அவன் மயங்கிக் கிடக்கிறானே! அவன் எங்கே இருக்கிறான் என்று ஞானக் கண்ணால் கண்டு சொன்னார் சூர்தாஸ். அவனைக் கண்டுபிடிக்கச் செல்ல வேண்டிய திசை, அதற்கான வழி, மண்டபத்தின் அடையாளம் அனைத்தையும் விவரித்தார்.
அவள் கணவரைத் தேடி ஓடினாள். சூர்தாஸ் சொன்ன தகவல்களைச் சொன்னாள். திகைத்த செல்வந்தர் ஆட்களோடு அந்தக் கானகத்திற்கு விரைந்தார். விந்தையிலும் விந்தை. சூர்தாஸ் குறிப்பிட்ட அதே இடத்தில் செல்வந்தரின் மகன் மயங்கிக் கிடந்தான்!
மகனை அள்ளி அணைத்துக் கொண்ட செல்வந்தர் யோசித்தார். ஏறக்குறைய அவர் மகன் வயதேயான சூர்தாஸால் அல்லவா அவருக்கு மகன் மறுபடி கிடைத்தான்? தன் நன்றியைக் காட்ட முடிவுசெய்தார்.
சூர்தாஸ் வாழ்ந்த மரத்தடியிலேயே அவருக்கு வசிக்க ஒரு குடில் கட்டித் தந்தார். இப்போது மழையாலும் வெய்யிலாலும் பாதிக்கப் படாமல் குடிலில் வசிக்கலானார் சூர்தாஸ்.
கண்ணில்லாத ஒரு மகான் கண்ணன்மேல் தாமே பாடல்கள் இயற்றி அற்புதமாகப் பாடுகிறாராமே! விஷயம் பரவியதால் அவரது தெய்வீககானத்தைக் கேட்க மக்கள் பல்வேறிடங்களில் இருந்து திரண்டார்கள்.
வருபவர்களெல்லாம் அந்த தெய்வீகக் கவிஞருக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார்கள். சூர்தாஸ் தமக்குக் கிடைத்த செல்வத்தையெல்லாம் தம்மை ஆதரித்த அந்த கிராமத்துத் தாய்மார்களுக்கே வழங்கிவிட்டார்.
அவரது பெரும்புகழ் அவர் பிறந்த கிராமத்தை எட்டாதிருக்குமா? அவரது சகோதரர்களும் தாயும் தந்தையும் இணைந்து வந்தார்கள். குடும்பம் அவரைப் புறக்கணித்ததற்காக மன்னிப்பு வேண்டினார்கள். மீண்டும் குடும்பத்தோடு அவர் வந்து இணைய வேண்டும் எனவும் வேண்டினார்கள். இப்போது உலகம் முழுவதுமே என் குடும்பம்` என்று சொல்லி அவர்கள் வேண்டுகோளை கனிவாக மறுத்துவிட்டார் சூர்தாஸ்...
சூர்தாசின் சம காலத்தில் வல்லபாச்சாரியார் என்ற ஒரு மகான் வாழ்ந்து வந்தார். சம்ஸ்க்ருத பக்திக் கவிஞர். மதுரமான மதுராஷ்டகத்தை எழுதியவர். வல்லபாச்சாரியாருக்குச் சிஷ்யராக வேண்டும் என்ற தாளாத வேட்கை சூர்தாசுக்கு இருந்தது. யமுனை நதிக் கரைக்கு அதிகாலையில் அவர் நீராட வருவார் என்றறிந்து படித்துறைக்குச் சென்றார். தாம் எழுதிய பாடல்களை உருக்கமாகப் பாடியவாறே அவரது வருகைக்காகக் காத்திருந்தார்.
வல்லபாசார்யர் அந்த மதுரக் குரலைக் கேட்டு அவரைத் தேடி வந்தார். அவர் பாதங்களில் விழுந்து பணிந்தார் சூர்தாஸ். அவரை அள்ளி அணைத்துக் கொண்ட வல்லபாச்சாரியார் அவரைச் சீடராக ஏற்றார். வல்லபாச்சாரியார், சூர்தாசுக்கு பாகவதம் முழுவதும் கற்றுத்தந்தார். வல்லபாச்சாரியாரின் முக்கியமான எட்டுச் சீடர்களில் ஒருவராகப் பிறகு அறியப்பட்டார் அவர்...
தம் குரு வல்லபாச்சாரியாரின் உதவியால் மதுரா கோயிலில் ஆஸ்தான பாடகராகச் சேர்ந்தார் சூர்தாஸ். ஒவ்வொரு நாளும் கண்ணனுக்கு விதவித அலங்காரங்கள் செய்வார்கள் அர்ச்சகர்கள். கண்ணில்லாத சூர்தாஸ் அன்றன்று என்ன நிறப் பட்டுப் பீதாம்பரத்தைக் கண்ணன் அணிந்திருக்கிறான் என்பதைத் தம் பாடலில் சொல்லிப் பாடுவார்.
கண்ணில்லாத சூர்தாஸ் எப்படி ஒவ்வொருநாளும் கண்ணன் அணிந்த உடையின் நிறத்தைச் சரியாகத் தன் பாடலில் இணைத்துச் சொல்கிறார்? அர்ச்சகர்களுக்கு ஆச்சரியம். ஒருநாள் திரைச் சீலையால் கிருஷ்ண விக்கிரகத்தை மறைத்து கண்ணனுக்கு உடையே அணிவிக்காமல் முத்து மாலைகளையே உடைபோல அணிவித்து அலங்கரித்தார்கள்.
திரையைத் திறக்காமலேயே சூர்தாஸைப் பாடச் சொன்னார்கள். `கண்ணா! உன் முத்துப் பல் வரிசைக்குப் பொருத்தமாக இருக்கட்டும் என்று ஆடையில்லாமல் இன்று முத்தாலேயே உடை அணிந்தாயா நீ?` என அன்று சூர்தாஸ் பாடியதும் அர்ச்சகர்கள் ஓடோடி வந்து சூர்தாசின் பாதங்களில் விழுந்து பணிந்தார்கள்.
நூற்று நான்கு வயதான தருணத்தில் கண்ணன் சூர்தாஸை வைகுந்தத்திற்கு அழைத்துக் கொள்ள விரும்பினான். ஓர் அடியவர் சூர்தாசிடம் `நீங்கள் கண்ணனைப் பற்றி எண்ணற்ற பாடல்களைப் பாடினீர்கள், உங்கள் குரு வல்லபாச்சாரியாரைப் பற்றி ஒரு பாடல் கூடப் பாடவில்லையே?` எனக் கேட்டார்.
சூர்தாஸ் அந்த அடியவரின் வேண்டு கோளை ஏற்றார். தம் குரு வல்ல பாச்சாரியார் பற்றி உள்ளம் உருக ஒரு
பாடலைப் பாடியவாறே மண்ணில் சரிந்தார். அவர் ஆன்மா விண்ணில் பறந்து கண்ணனுடன் கலந்தது.
சூர்தாசின் சில பாடல்கள் இந்தித் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன. சூர்தாஸருக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com
- பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அவர்கள் பிரசவத்துக்கு பிந்தைய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- இன்றைய காலத்தில் நவீன சிகிச்சை முறைகளில் இடுப்புத்தள தசை மீளுருவாக்கம் எனப்படும் சிகிச்சை இருக்கிறது.
பெண்களை பாதிக்கின்ற கர்ப்பப்பை குடலிறக்கம் பற்றி பார்த்து வருகிறோம். இது வயதான பெண்களை மட்டுமல்ல, இளம் வயது பெண்களையும் பாதிக்கிறது. பெண்களின் இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள இடுப்புத்தள தசை தளர்வு அடைவதே இதற்கு முக்கிய காரணமாகும். இளம் வயது பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால் இதற்கு எளிமையான நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. இதனை தடுப்பதற்கான வழிமுறை என்பது முறையான பிரசவ முறையாகும். எனவே பிரசவத்தை முறையாக பார்க்க வேண்டும்.
சில பெண்களுக்கு பிரசவம் சரியான முறையில் நடந்தால் கூட அவர்களுக்கு இடுப்புத்தள தசை தளர்வு ஏற்படும். பிரசவத்துக்கு பிறகு இடுப்புத்தள தசையில் இருக்கும் காயம் குணம் அடைந்தாலும், தசைகள் பழைய வலிமையுடன் மீண்டும் வராத நிலை ஏற்படுகிறது. ஒருவர் குழந்தை பெற்றதும் அடிவயிறு தளர்வான பிறகு, கண்டிப்பாக அதில் சுருக்கங்கள், தளர்வுகள் ஏற்படும். இதனை சீராக்கி மீளுருவாக்கம் செய்வதற்கு என்னென்ன முறைகள் செய்ய வேண்டும், கருப்பை இறக்கத்துக்கு சிகிச்சை மூலம் முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
பெண்கள் பிரசவத்துக்கு பிந்தைய உடற்பயிற்சி செய்ய வேண்டும்:
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அவர்கள் பிரசவத்துக்கு பிந்தைய உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது குழந்தை பெற்றெடுத்த பெண்களின் உடல் வலிமையையும், ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க செய்யப்படும் உடற்பயிற்சிகள் ஆகும். இந்த உடற்பயிற்சியானது இடுப்புத்தள தசையை வலுப்படுத்துவதற்கும், உறுதியாக வைத்திருப்பதற்கும் செய்கின்ற முக்கியமான விஷயம் ஆகும்.
இந்த இடுப்புத்தள தசையை சீர்படுத்துவதற்கு சில பயிற்சி முறைகளும் உள்ளன. முக்கியமாக கெகல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது ஓரளவு இந்த வலிமையை அதிகரிக்க முடியும். இது தவிர வேறு சிகிச்சை முறைகளில் இடுப்புத்தள தசை தளர்வான பெண்கள், கெகல் உடற்பயிற்சி செய்தால் கூட இந்த பகுதி தளர்வு சரியாகும். சிறுநீர் கசிவு குறைவாகும்.
இதற்கான முக்கியமான விஷயம், இந்த இடுப்புத்தள தசைகளின் வலிமையை அறிந்து கொள்வதற்கு பெல்விக் புளோர் கிளிதிஸ்கிராபி என்ற ஒரு பரிசோதனையை செய்கிறோம். இது இடுப்புத்தள தசைகளின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான ஒரு மருத்துவ பரிசோதனை ஆகும். இதை இடுப்புத்தள தசை வலிமை பரிசோதனை என்றும் கூறலாம்.
இந்த பரிசோதனை முறையில் இடுப்புத்தள தசை எவ்வளவு தளர்வாகி இருக்கிறது என்பதை கவனித்து பார்த்து, அதற்கான சில முறைகள், குறிப்பாக யூரோடைனமிக் சோதனை செய்வோம். ஏனென்றால் சிறுநீர் குழாய் எவ்வளவு தூரம் இறங்கி இருக்கிறது, எவ்வளவு தூரம் அதனுடைய சிறுநீர்ப்பை தசைநாண் கசிவு இருக்கிறது என்பதை பரிசோதிக்க வேண்டும்.
அதற்கு அடுத்து இடுப்புத்தள தசை வலிமையை அறிவதற்கான பரிசோதனை முறைகள் இருக்கிறது. இந்த பரிசோதனை முறைகள் மூலமாக இதனை அறிந்து, இது எந்த அளவுக்கு தளர்வாகி இருக்கிறதோ, அதற்கு சில எளிமையான பயிற்சிகள் முறைகள் இருக்கிறது. அதன் மூலம் அது சரியாகும்.
இடுப்புத்தள தசை தளர்வை சரி செய்யும் லேசர் தெரபி:
சிலருக்கு இன்றைய நவீன சிகிச்சை முறைகளில் முக்கியமான சில விஷயங்களை செய்ய முடியும். இந்த இடுப்புத்தள தசை தளர்வாகி யோனி தளர்ச்சி ஆவதை நல்ல வகையில் சரி செய்வதற்கு முக்கியமான தெரபி லேசர் தெரபியாகும்.
இன்றைக்கு நாம் ஒருதடவை அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம், தையல் போட்டு இருக்கிறோம், அது சரியாக குணமடையாத போது பலநேரங்களில் வலிகளும் ஏற்படும். அந்த திசுக்களை ஒன்றாக இணைக்கும் புரதமானது சீராக இல்லாமல் பல நேரங்களில் ஒழுங்கற்ற முறையில் இருக்கும். இதனால் தான் நிறைய பெண்களுக்கு வலிகள் ஏற்படும். பாலியல் உறவின்போது திருப்தி இருக்காது. இதனை சரி செய்வதற்கு எளி மையான, உடலுக்கு காயம் ஏற்படுத்தாத முறை தான் லேசர்.
இந்த லேசர் முறையானது இந்த திசுக்களை ஒன்றாக இணைக்கும் புரதத்தை உருவாக்குவதை முக்கியமாக சீர்படுத்துகிறது. ஏனென்றால் இந்த புரதம் உருவாகுதல் சீராக இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் இருப்பதால் தான் இந்த தசைகளின் அமைப்பு மற்றும் வலிமை குறைவாகிறது.
எனவே இதனை சரி செய்வதற்கு இந்த லேசர் முறையின் மூலமாக, எளிமையான லேசர் தெரபி கொடுக்கும் போது இடுப்புத்தள தசையின் வலிமையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனுடைய சுருங்கும் ஆற்றல் மீண்டும் கிடைக்கிறது. அந்த தசைகளின் வடிவமைப்பானது சீராகிறது. திசுக்களை இணைக்கும் புரதம் உருவாவதில் முன்னேற்றம் ஏற்படும்போது அதனுடைய திறனும், அதனுடைய நார்த்திசுவும் சீராகி பிரச்சினை சீராக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை இல்லாத, உடலில் காயம் ஏற்படுத்தாத முறை:
இன்றைக்கும் நிறைய நோயாளிகள் பிரசவம் ஆன பிறகு ஏற்படுகிற பாலியல் பிரச்சினைக்கு தான் எங்களிடம் சிகிச்சை பெற வருகிறார்கள். இவர்களுக்கு இந்த பிரச்சினையை எளிமையான முறையில் மிகவும் அருமையாக சரி செய்ய முடியும். இது அறுவை சிகிச்சை இல்லாத, உடலில் காயம் ஏற்படுத்தாத முறை ஆகும். இதற்கு மயக்க மருந்து தேவையில்லை, உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனைக்கு வந்து 45 நிமிடத்தில் இதை செய்து விட்டு வீட்டுக்கு போய்விடலாம். தங்களுடைய வேலைகளை பார்க்கலாம். இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது. இதற்கு பிறகு எந்த பிரச்சினையும் வருவதற்கு வாய்ப்பே இல்லை. இதனால் வருகின்ற சிக்கல்கள் ரொம்ப ரொம்ப குறைவு.
இயற்கையாக அந்த லேசர் பழுதான தசைகள் மற்றும் தசைநார்களை சரி செய்து அதனை முன்னேற்றம் அடைய செய்யும் போது தசைகளின் வலிமை சரியாகிறது. அதனால் இடுப்புத்தள தசை பிரச்சினைகளுக்கான அறிகுறிகளும் குறைவாகி நல்ல ஒரு செயல்பாடு மீண்டும் கிடைக்கிறது.
எனவே கெகல் பயிற்சி, பிசியோதெரபி, அதற்கு அடுத்ததாக முக்கியமாக ஒரு லேசர், இதற்கு அடுத்த இப்போதைய காலத்தில் இருக்கின்ற நவீன முறைகளில் ஒரு இடுப்புத்தள தசை தெரபி ஆகியவை ஆகும். ஒரு இருக்கை மூலமாக அந்த தசைகளை வைப்ரேஷன் கொடுப்பது ஒரு முக்கியமான தெரபி. நமது முகத்தில் உள்ள தசைகள் சாதாரணமாக தளர்வாகிறது என்றால் என்ன செய்கிறோம்? அதை வலுவாக்கு வதற்கான தெரபி கொடுக்கிறோம், மசாஜ் செய்கிறோம், அதற்கான தூண்டுதல் கொடுக்கிறோம். இதே மாதிரி பெண் உறுப்புகளில் இருக்கிற தசைகளை வலுவாக்குவதற்கு சில தூண்டுதல் புள்ளிகளில் அதனுடைய தசைகளுக்கு தூண்டுதல் கொடுக்கவேண்டும்.
இந்த தூண்டுதல் முறையின் மூலமாக தசைகளின் வலிமை முன்னேற்றம் அடைகிறது. சில பெண்களுக்கு குணமடையும் தன்மை இல்லாமல் இருக்கும். இதற்கு லேசர் நன்கு உறுதுணை புரியும். தசைகளின் செயல்பாடு, தசைகளின் ஆற்றல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக, தசை தளர்வான பெண்களுக்கு இடுப்புத்தள தசை தூண்டுதல் முறை மூலமாக, தசைகளை தூண்டிவிட்டு சிகிச்சை அளிக்கும்போது அதனுடைய வலிமை சீராகி தளர்வான விஷயங்களுக்கு தடுப்பு முறையாக அமையும்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பெண்கள் குழப்பம் அடைய தேவையில்லை:
இன்றைய காலத்தில் நவீன சிகிச்சை முறைகளில் இடுப்புத்தள தசை மீளுருவாக்கம் எனப்படும் சிகிச்சை இருக்கிறது. இந்த சிகிச்சையை முறையாக செய்தால் அருமையாக இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும். மாதம் ஒரு முறை என 3 அமர்வில் சிகிச்சை எடுத்தால் பிரச்சினை முழுவதுமாக சரியாகும்.
ஏனென்றால் பலரும் வயதானால்தான் இடுப்புத்தள தசை தளர்வு வரும். நமக்கு வேறு ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறார்கள். பிரசவமான பிறகு பெண்கள் இடுப்புத்தள தசையை மீளுரு வாக்கம் செய்ய வேண்டும். இது அவர்களின் பாலியல் உறவு பிரச்சினைகளுக்கு முக்கியமான தீர்வாக அமைகிறது.
இன்றைக்கும் இதை பற்றிய ஆய்வில் சொல்லியிருக்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஒரு எளிமையான சிகிச்சை முறை. இதன் மூலமாக பிற்காலத்தில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு முன்னரே தீர்வு கிடைக்கிறது.
ஆனால் இதை சிலர் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். இப்போதைக்கு எனக்கு பாலியல் உறவு பிரச்சினை இருக்கிறது, ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சிறுநீர் கசிவு ஏற்படுகிறது, அதை நான் கட்டுப்படுத்தி சரி செய்து கொள்கிறேன் என்று சொல்கின்ற பெண்களுக்கு, பிற்காலத்தில் முழுமையாக கருப்பை குடலிறக்கம், சிறுநீர் முற்றிலும் கட்டுப்பாடே இல்லாத நிலை, எழுந்து நின்றாலே சிறுநீர் கசிவு ஏற்படுகிற நிலை ஆகிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே இதை தடுப்பதற்கான எளிதான வழிமுறைகள் இருக்கிறது. இவற்றினை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் பலரும் அமைதியாக இருந்து, இதைப்பற்றி கவலைப்பட்டு யாரிடம் கேட்பது, என்ன செய்வது என்று குழப்பம் அடைய தேவையில்லை. இந்த முறையான சிகிச்சைகள் பெண்களுக்கு சரியான தீர்வை கொடுக்கும். இடுப்புத்தள தசைக்கான உடற்பயிற்சி, லேசர் சிகிச்சை மற்றும் இடுப்புத்தள தசை தூண்டுதல் ஆகியவற்றை நீங்கள் முறையாக செய்தால் இடுப்புத்தள தசை தளர்வு சரிசெய்யப்படும். அதனால் கருப்பை குடலிறக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். இடுப்புத்தள தசை தளர்வால் ஏற்படும் சிறுநீர் கசிவு பிரச்சினைகள், பாலியல் உறவு பிரச்சினைகள் ஆகிய வற்றுக்கும் முழுமையான தீர்வு கிடைக்கும்.
- ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது ஜாதகரின் விதிப்பயனை கூறும் இடமாகும்.
- லக்ன பாவத்திற்கு அடுத்தபடியாக தன ஸ்தானம் மிக முக்கியம்.
ஒரு காலத்தில் காலனா சம்பாதித்து குடும்பமே நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கை முறையை தாத்தா, பாட்டி மூலம் அறிந்திருப்போம். தற்போது ஒரு லட்சம் சம்பாதித்தால் கூட கடன், இ.எம்.ஐ. என்று அடிப்படைத் தேவை கூட நிறைவு செய்ய முடியாத வாழ்க்கையை பலர் வாழ்கிறார்கள். படித்து முடித்தவுடன் சுயதொழிலோ உத்தியோகமோ என்னோட குறைந்தபட்ச வருமானம் ஒரு லட்சம் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இளைஞர்களும் இளம் பெண்களும் முனைப்புடன் செயல்படுகிறார்கள்.
இன்றைய கலாச்சாரத்திற்கு லட்ச ரூபாய் மிகக் குறைந்த சம்பளமாக உள்ளது. திருமணத்திற்கு வரன் தேடும் பெண் வீட்டார் குறைந்தது ஒரு லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளை வரனாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மகனுக்கு வரன் தேடும் பெற்றோர்கள் மருமகளாக வரப்போகும் பெண் லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அத்துடன் சீதனமாக பொன், பொருள் கொண்டு வர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இன்று சமுதாயத்தில் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது ஒரு கவுரவ பிரச்சினையாக உள்ளது. வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உயர்த்த பலர் வெளியூர் வெளிநாட்டிற்கு அதிகமாக செல்கிறார்கள். வெளியூர் வெளிநாட்டிற்கு சென்றால் மட்டுமே வாழ்வாதாரம் உயரும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.
ஒருவருக்கு சமுதாய அங்கீகாரத்தை வழங்குவதில் பணம் முன்னிலை வகிக்கிறது. சமுதாயத்தில் பணப்பற்றாக்குறை காரணமாக நிதி நெருக்கடி அதிகம் காணப்படுகிறது. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். பணம் எப்படி வாழ்க்கையை உருவாக்குகிறதோ, அதேபோல் பணம் மனிதனை எல்லாவற்றையும் இழக்கத் தூண்டுகிறது. இதை தான் நமது முன்னோர்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை சொல்லி வைத்தார்கள். ஒருவர் குறைந்த பட்சம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டும் எனில் அவருடைய ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
லக்னம்: ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது ஜாதகரின் விதிப்பயனை கூறும் இடமாகும். ஒருவருக்கு லட்சங்களில் சம்பாதிக்கும் யோகம் இருக்கிறதா என்பதை அறிய, சில கிரக நிலைகள் முக்கியமாகும். லக்னம் லக்னாதிபதி வலுவாக இருந்தால் ஜாதகரின் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும். தன்னுடைய திறமையான செயல் பாட்டால் தனது வாழ்வாதாரத்தை அதிகரிக்கக் கூடிய மனோபலன் உருவாகும். ஒருவரின் விதியில் அவரின் வாழ்வாதாரம் எதைச் சார்ந்து இருக்கும் அவர் என்ன சம்பாதிப்பார் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும். லக்னம் லக்னாதிபதி வலிமை படைத்தவர்கள் விதியை மதியால் வெல்லக்கூடிய வல்லமை படைத்தவர்கள். லக்னம் லக்னா திபதி சுப வலிமை பெற்றவர்கள் விதியை தங்கள் வசப்படுத்தி வருமானத்தை உயர்த்துவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
தன ஸ்தானம்
லக்ன பாவத்திற்கு அடுத்தபடியாக தன ஸ்தானம் மிக முக்கியம். ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடமான தன ஸ்தானமே ஒருவரின் தனவரவை நிர்ணயிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் தன ஸ்தானஅதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் பணமழை பொழிந்து கொண்டே இருக்கும். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். பேச்சுத் திறமையால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள். பேச்சுத் தொழிலை மூலதனமாக கொண்டவர்கள். பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள்.
இரண்டாம் இடத்துடன் சந்திரன் சம்பந்தம் பெற்றால் அன்றாடம் பணம் கொழிக்கக்கூடிய தொழிலில், உத்தியோகத்தில் இருப்பார்கள். தன ஸ்தானத்திற்கு சூரியன், சுக்ரன் செவ்வாய், புதன் எனப்படும் மாத கிரகங்கள் சம்பந்தம் இருந்தால் மாதம் ஒரு முறை வருமானம் தரக்கூடிய தொழில். உத்தியோகம் மூலம் சம்பாதிப்பார்கள். இந்த ஸ்தானத்திற்கு குரு சனி போன்ற வருட கிரகங்கள் தொடர்பு பெற்றால் வரக்கூடிய வருமானம் குறைந்தது லட்சத்திலும் அதிகபட்சம் கோடியிலும் இருக்கும். அவரவரின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொறுத்து லட்சம் அல்லது கோடியை தொடக்கூடிய வகையில் வருமானம் குவியும். இந்த பாவகத்தில் இயற்கை வக்ர கிரகங்களான ராகு கேதுவோ அல்லது வக்ர, நீச்ச கிரகங்களோ நின்றால் வருமானம் ஏற்ற இறக்கமாக இருக்கும். அவர்களின் வருமானத்தை உறுதி செய்ய முடியாது. இந்த இடம் வலிமையாக இருந்தால், ஒருவருக்கு லட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகம். பூர்வ புண்ணிய ஸ்தானம்.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. ஒருவர் குறிப்பிட்ட வருமானம் பெற வேண்டும் என்று விதி அவருடைய ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். இதை மேலும் புரியும் படி கூறினால் ஒரு நாளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனனம் நிகழ்கிறது. ஒரே நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருக்காது. இது அவரவரின்
தாத்தா பாட்டி முன்னோர்கள் பெற்றோர்கள், ஜாதகர் செய்த பாவ புண்ணிய செயல்களுக்கு ஏற்பவே இருக்கும். கடந்து வந்த ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மம் இருக்கும். ஒருவர் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறந்து அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற அமைப்பு இருந்தால் அதை கடவுளே நினைத்தால் கூட மாற்றி அமைக்க முடியாது.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவாகாத ஒரு சம்பவம் இந்த ஜென்மத்தில் நடக்காது. கடந்த ஜென்மத்தில் ஒருவர் புண்ணிய பலன்கள் அதிகம் சேர்த்து வைத்திருந்தால் இந்த ஜென்மத்தில் பொருளாதார சிரமம் கடன், வறுமை இருக்காது. நல்ல வீடு வாகன யோகம் உண்டு. பெற்றோர்களின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்பி இருக்கும். எத்தகைய சூழ்நிலையிலும் பிறரை எதிர்பாராமல் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் தேவையை நிறைவு செய்யும் வலிமை பெற்றவர்கள். நிலையான நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் உத்தியோகம் உண்டு. தொட்டது துலங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகரைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.
குல தெய்வ அருள் கடாட்சம், தெய்வ அனுகிரகம் நிரம்ப பெற்றவர்கள். கவுரவப் பதவி, பூர்வீகச் சொத்தால் ஆதாயம், நிச்சயம் உண்டு. ஜாதகர் புத்திசாதுர்யம் நிரம்பியவராக இருப்பார். மேலே கூறிய இவற்றில் சில குறைபாடு வரும் போது வாழ்க்கை பாதையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதிர்ஷ்டம் மற்றும் புண்ணிய பலம் குறைந்து பொருள் வரவில் தடை ஏற்படுகிறது.
11-ம் பாவகம்
பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5ம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப் பெரிய பணத்தை வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள். பணம் யாருக்கெல்லாம் வேலை செய்கிறதோ அவர்கள் ஜாதகத்தில் 11-ம் அதிபதி மிகச் சுபத்துவத்துடன் இயங்கும். உலகில் உள்ள அனைத்து விதமான தொழிலையும் முயற்சி செய்வார்கள். புதிய புதிய தொழிலை, தொழில் யுக்தியை கண்டுபிடிப்பார்கள். பல தொழில் வித்தகர்கள். குறைந்தது 100 பேரை வைத்து வேலை செய்பவர்களுக்கு ஜாதகத்தில் 11-ம்மிடம் சாதகமாக இருக்கும்.
உப ஜெய ஸ்தானமான 11-ம் பாவகத்தின் முலம் பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவை ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11-ம் மிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒரு சிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து பெறுவது 11-ம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
பதினொன்றாம் அதிபதி மற்றும் 11-ல் நின்ற கிரகம் பலம் பெற்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள். அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கவுரவம் உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும். கூட்டுத் தொழிலில் வெற்றி தரும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். குடும்பம் அமைந்த பிறகு பண வரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். சுருக்கமாக கவுரவத் தொழில் உண்டு. இந்த ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்களால் தீமைகள் ஏற்படாது.
10-ம்மிடமான தொழில் ஸ்தானத்திற்கு 2-ம்மிடம் 11-ம்மிடமான லாப ஸ்தானம். 2-ம் பாவத்திற்கு 10-ம் பாவகமே 11-ம்மிடமான லாப ஸ்தானம். 5-ம் பாவகத்திற்கு 7-ம்மிடமே 11-ம்மிடமான லாப ஸ்தானம். 5-க்கு சம சப்தமம் 11-ம்மிடமான லாப ஸ்தானம். 5-ல் நிற்கும் அனைத்து கிரகங்களுமே 11-ம்மிடமான லாப ஸ்தானத்தை பார்க்கும். 11-ல் நிற்கும் கிரகம் 5-ம்மிடத்துடன் சம்பந்தம் பெறும். இதை மேலும் உங்களுக்கு புரியும்படி கூறினால் ஒருவர் அதிர்ஷ்டம் மற்றும் தொழிலில் அதிகம் சம்பாதித்தால் 5,11-பாவக சம்பந்தம் உள்ளது எனப் பொருள்.
சனிபகவான்
ஒரு ஜாதகத்தில் எத்தனையோ யோகமான அமைப்புகள் இருந்தாலும் சனி பகவானின் தயவு ஜாதகருக்கு வேண்டும். ஒருவரின் தொழில் உத்தியோகத்தை நிர்ணயம் செய்யும் சனி பகவான் கொடுக்கும் இடத்தில் இருந்தால் ஜாதகம் வாழ்வாதாரம் உயரும். குறைந்தபட்ச மாத வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்கும். சனி பகவானின் நிலைப்பாடு சரியாக இல்லை என்றால் ஜாதகரால் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது. ஒருவரின் தகுதி தராதரத்தை நிர்ணயம் செய்பவர் சனி பகவானே. தகுதி வாய்ந்த ஒருவரின் வாழ்க்கையை குன்றின் மேல் ஏற்றிய விளக்கமாக பிரகாசிக்கச் செய்வார். தகுதி இல்லாதவரின் வாழ்க்கை குடத்திற்குள் எரியும் விளக்கமாக இருக்கும்.
ஒருவரின் வளமான வாழ்க்கைக்கு பணம் மிக முக்கிய காரணியாகும். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள மனிதனால் படைக்கப்பட்ட பணம் தற்போது மனிதனை ஆள்கிறது. உளவியல் ரீதியாக லட்சத்தில் வருமானம் என்ற விசயத்தை உற்று நோக்கினால் ஒரு உண்மை அனைவருக்கும் புலப்படும். யாரெல்லாம் பணத்திற்காக வேலை செய்கிறார்களோ அவர்கள் வாழ்நாள் முழுவதும் பணத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். யாருக்கெல்லாம் பணம் வேலை செய்கிறதோ அவர்கள் பணத்தை எளிமையாக ஏவல் செய்யும் சூட்சும வலிமை படைத்தவர்கள். அதாவது ஒருவருக்கு பணம் வேலை செய்தால் அவருக்கு பணம் அடிமை. ஒருவர் பணம் சம்பாதிக்க வேலை செய்தால் பணத்திற்கு அவர் அடிமை. பணத்தை அடிமையாக்க தெரியாதவர்களுக்கு லட்ச ரூபாய் சம்பாதிப்பது சாத்தியமல்ல. பணத்தை ஆளத் தெரிந்தவர்கள் நிச்சயம் லட்சத்தில் சம்பாதிப்பார்கள்.
செல்: 98652 20406
- யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும்.
- ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும்.
யானைகள்...
குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான விலங்கினம்.
உருவத்தில் மிகப்பெரியதாக இருந்தாலும், பொதுவாக அவைகள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. ஆனால் அதனிடம் வம்பிழுத்தால்... அது மிரண்டால்.... தாங்காது. துவம்சம் செய்துவிடும்.
யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகள் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
உலக அளவில் 2 வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆப்பிரிக்க யானை மற்றொன்று ஆசிய யானை. இந்த 2 வகையான யானைகளுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.
குறிப்பாக ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் இரண்டுக்குமே தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உள்ளன. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் காணப்படுகின்றன அவைகள் 'மக்னா' என்று அழைக்கப்படுகின்றன.
ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு மேலாக நீண்டு இருக்கும். ஆசிய யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு கீழே இருக்கும். கால்விரல்களை பொறுத்தவரை ஆப்பிரிக்க யானைகளுக்கு முன்னங்காலில் 4 அல்லது 5 விரல்களும், பின்னங்கால்களில் 3 அல்லது 4 விரல்களும் இருக்கும். ஆசிய யானைகள் முன்னங்கால்களில் 5 விரல்களும், பின்னங்கால்களில் 4 விரல்களும் இருக்கும். முதுகு பகுதியானது ஆப்பிரிக்க யானைகளுக்கு குழிவிழுந்து காணப்படும். ஆசிய யானைகளின் முதுகு பகுதி வளைந்து காணப்படும்.
ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், சீனா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகளில் காணப்படுகின்றன.
ஆண் யானை 14 முதல் 15 வருடத்திலும், பெண் யானை 12 முதல் 13 வருடத்திலும் பருவமடையும். யானையின் கர்ப்பகாலம் 21 முதல் 22 மாதங்கள் ஆகும். யானைகளுக்கு கண்பார்வை மனிதனைவிட சற்று குறைவாக காணப்பட்டாலும் நுகரும் தன்மை அதிகம். யானைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம்.

யானைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்றவற்றை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவையாகும். யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும். யானைகள் அதன் வழித்தடங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும். ஓராண்டில் சுமார் 500 முதல் 750 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி செய்யும்.
யானைகளின் சானத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகளை காடுகளில் பரப்புகின்றன. சானத்தில் உள்ள பலவகை பூச்சியினங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. கரையான்களுக்கு உகந்த உணவாக யானை சானம் உள்ளது. யானைகள் செல்லும் பாதைகளை பயன்படுத்திதான் புலி, சிறுத்தைப்புலி, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் ஓர் இடம் விட்டு இடம் நகருகின்றன.
யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. இவற்றின் செரிமானத்திறன் மிகவும் மந்தமானது. எனவே, யானைகள் உண்ணும் உணவில் 40 சதவீதமே செரிமானம் ஆகும். நன்கு வளர்ந்த யானைகள், நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானைகளின் சராசரி ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அத்தனை ஆண்டுகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் யானைகள் வாழ்வது மிகக் கடினமாக உள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. எனவே இந்த மலையில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, மேகமலை, களக்காடு-முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.
எந்த ஒரு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அந்த வனப்பகுதி வளமான வனப்பகுதியாக இருக்கும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் மிக வளமான வனப்பகுதிகளான முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை ஆகிய இடங்களில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன.






