என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
    X

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

    • உயிரோடு இருக்கும்வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
    • திருஞானசம்பந்தர் அருளிய தமிழ் மந்திரம் அது.

    நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்ளக் காரணமே வாழ்க்கை நிலையற்றது என்பதை நாள்தோறும் நாம் உணரத்தான். இறுதியில் உடல் சாம்பலாகப் போகிறது என்பதை இப்போதே உணரவே சாம்பல் திருநீறாக அணியப்படுகிறது.

    `நிலையற்ற பொருட்களைத் தேடி ஓடாதே, நல்லவற்றைச் செய்து நல்லவனாக வாழ்ந்து இறைவன் திருவடியைச் சென்று சேர்` என்பதை ஒரு சிட்டிகைத் திருநீறு ஒவ்வொரு கணமும் மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

    `நெருநல் உளனொருவன் இன்றில்லை

    என்னும்

    பெருமை உடைத்திவ் வுலகு`

    என்கிறார் வள்ளுவர். நேற்றிருந்தவர் இன்று இல்லை என்ற நிலைதான் இந்த உலகத்தின் பெருமை என்கிறார் அவர்.

    நேற்றிருந்தவர் இன்றில்லை என்பதை நாம் உணர்கிறோமா? திருநீறு இட்டுக்கொள்வது அதை உணரத்தானே? வெறும் சடங்காய்த் திருநீற்றைப் பூசி என்ன பயன்?

    அந்தச் சடங்கின் பின்னணியில் உள்ள நிலையாமைத் தத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முறை திருநீறு அணியும்போதும் சிந்தித்து நெஞ்சில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிலைநிறுத்திக் கொண்டால் கெட்ட வழிகளில் போகத் தோன்றாது.

    சமுதாய ஒழுக்கமில்லாமல் லஞ்சம் வாங்கிக் கொள்ளையடித்துக் கோடிகோடியாய்ச் சொத்து சேர்த்த மனிதர்களும் போகும்போது கையில் கொண்டு சென்றது ஒன்றுமில்லை.

    `கூடுவிட்டு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்?` என்று அன்றே அவ்வைப் பாட்டி கேட்டிருக்கும் கேள்வியை இன்று சற்றேனும் சிந்தித்தால் முதிர்ந்த ஞானம் பிறக்கும்.

    ஆனால் உயிரோடு இருக்கும்வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அந்த ஆரோக்கியத்தைப் பெறுவது எப்படி? அதற்கு ஆன்மிகத்தில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன.

    1960 ஐ ஒட்டிய காலகட்டத்தில் பாரத தேசத்தில் பல நோய்கள் தோன்றி மக்கள் அவதிப்பட்டார்கள். பக்தர்கள் காஞ்சி மகாசுவாமிகளைச் சரணடைந்து நோயிலிருந்து விடுபட ஆன்மிக ரீதியாக என்ன உபாயம் என்றும் கேட்டார்கள்.

    காஞ்சி மகாசுவாமிகள், `கிரக நிலைகளின் மாற்றம்தான் இந்த நோய்களுக்குக் காரணம், எனவே எல்லோரும் திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்யுங்கள்` என்று அறிவுறுத்தினார்.

    மகாசுவாமிகளின் அன்பர்கள் பலர் அவ்விதம் நாள்தோறும் பாராயணம் செய்தார்கள். அது மட்டுமல்ல. பள்ளிக் கூடங்களில் கோளறு திருப்பதிக இலவச வெளியீடுகளை விநியோகித்தார்கள். மாணவ மாணவியரும் கோளறு திருப்பதிகத்தை வாசிக்கலானார்கள்.

    உலகில் ஏற்பட்ட கோளாறு, கோளறு பதிகத்தால் நீங்கியது. உலகம் மீண்டும் நல்ல ஆரோக்கிய நிலையை அடைந்தது.

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஆன்மிக அன்பர்கள் `வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்` எனத் தொடங்கும் கோளறு பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்வது பெரிய பலனை அளிக்கும். திருஞானசம்பந்தர் அருளிய தமிழ் மந்திரம் அது. பக்தித் தமிழுக்கு உலகைக் காக்கும் வல்லமை உண்டு என்பதில் சந்தேகமில்லை.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு குலதெய்வ வழிபாடு மிக முக்கியம் என்பது ஆன்றோர் கருத்து. `குலதெய்வத்தை வழிபடாமல் மற்ற தெய்வங்களை வழிபடுவது, அடிப்பாகம் இல்லாத பாத்திரத்தில் தண்ணீர் பிடிப்பதற்கு ஒப்பாகும், குலதெய்வ வழிபாடே அத்தனை வழிபாடுகளுக்கும் அடிப்படையானது` என்பது மகாசுவாமிகள் வாக்கு.

    ஆனால் கோவில்களுக்குச் செல்வதே சங்கடமாக இருக்கும் இன்றைய சூழலில், குலதெய்வ வழிபாட்டை எப்படி நிகழ்த்துவது என்ற கேள்வி எழலாம். அதனால் என்ன? குலதெய்வத்தின் படம் இருந்தால் அதை வீட்டில் வைத்து நாள்தோறும் அந்தப் படத்திற்கு விளக்கேற்றி வழிபடலாம். குலதெய்வத்தை மனத்தில் நினைத்து தியானம் செய்யலாம்.

    உண்மையில் ஆலய வழிபாட்டை விடவும் உள்ளத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபடுவதே இன்னும் சிறப்பானது. ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதுகூட, அந்த ஆலய விக்கிரகத்தை நம் நெஞ்சில் நிறுத்திக் கொள்வதற்குத் தான்.

    உள்ளத்தையே மலராக்கி இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார் இலங்கையில் வாழ்ந்த ராமகிருஷ்ண மடத்துத் துறவியான சுவாமி விபுலானந்தர்.

    `வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

    வள்ளல் பிரானார்க்கு வாய்த்த மலரெதுவோ?

    வெள்ளை நிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல,

    உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!`

    திருமூலரும் உள்ளத்தைப் பெருங்கோவில் எனக் குறிப்பிடுகிறார்.

    `உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

    கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!`

    `மனமே முருகனின் மயில்வாகனம் மாந்தளிர் மேனியே குகனாலயம் குரலே செந்தூரின் கோவில்மணி!` என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.

    `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..` பாடலில், `உனக்கான மனக்கோவில் கொஞ்ச மில்லை, அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை` என்கிறார் கவிஞர் பூவை செங்குட்டுவன்.

    திருநின்றவூர் பூசலார் நாயனார் மரபில் மனக்கோவில் வழிபாடு நிகழ்த்த எக்காலத்திலும் எந்தத் தடையுமில்லை. அவ்வகையிலான வழிபாடு கூடுதல் சிறப்புடையது என்பதே உண்மை.

    உள்ள மலரை அர்ப்பணிப்பதோடு கூட, செடிகளில் உள்ள மலர்களையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம். மலர் வழிபாட்டு நெறி நம்மிடம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. மலர்களில் இறைவனையே கண்டார்கள் அடியவர்கள்.

    `மலர்களிலே பல நிறம்கண்டேன் திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்!` என்று பாடினார் கவியரசர் கண்ணதாசன்.

    `பச்சை நிறம் அவன் திருமேனி,

    பவழ நிறம் அவன் செவ்விதழே,

    மஞ்சள் முகம் அவன் தேவி முகம்,

    வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்`

    என மலர்களின் நிறங்களைப் பார்த்ததும் இறைவனை எண்ணிப் பரவசமுறுகிறது கவியரசர் இதயம்.

    மலர்களிலும் இறைவனே இருப்பதால் மலர்களை எவ்விதம் பறிப்பேன் என உருகினார் மகான் தாயுமானவர்.

    `பண்ணேன் உனக்கான பூசையொரு வடிவிலே

    பாவித் திறைஞ்ச அங்கே

    பார்க்கின்ற மலரூடும் நீயே இருத்தி அப்

    பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்`

    எனக் கூறிக் கரைந்தது அவரது தூய பக்தி உள்ளம்.

    மலர் வழிபாட்டில் ஆரோக்கியத்தைப் பெற எந்த மலர் வழிபாடு விசேஷப் பொருத்தமுடையது என்பதை பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னையின் ஆய்வு கொண்டு நாம் அறிந்துகொள்ளலாம்.

    `மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்றெல்லாம் பல மொழிகள் பயன்படுகின்றன. அதுபோல் இறைவனும் மனிதனும் பேசிக்கொள்ள உதவும் மொழிதான் மலர்கள்` என்பது அன்னையின் கண்டுபிடிப்பு.

    இன்னின்ன மலர்கள் இறைவனிடம் அடியவர்களுக்கு இன்னின்ன தேவை என்பதைச் சொல்வதாக அன்னை உணர்ந்துள்ளார். அதன்படி சாமந்தி போன்ற மஞ்சள் நிறமுடைய மலர்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்கும்போது, அடியவருக்கு ஆரோக்கியம் தேவை என அந்த மலர்கள் இறைவனிடம் எடுத்துச் சொல்லுமாம்.

    இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் ஆரோக்கியம்தான் முதல் தேவை என்பதால் இறைவனை மஞ்சள் நிற மலர்களால் வழிபடுவது சிறப்பு. பாமாலையோடு பூமாலையும் சூட்டி வழிபட்ட ஆண்டாள் மரபில், இறைவனுக்கு நாமே தொடுத்த மஞ்சள் நிற மலர்ச்சரத்தை அணிவித்து வழிபடலாம்.

    போருக்குச் செல்லும் வீரன் தன் உடலை எதிரிகளின் ஆயுதங்கள் தாக்காதவாறு கவசமணிந்து செல்கிறான். வாழ்க்கைப் போரில் ஈடுபடும் ஆன்மாவும், காமம் குரோதம் முதலிய எதிரிகள் தன் மனத்தைத் தாக்காதவாறு இறையருளைக் கவசமாய்ப் பூண வேண்டும்.

    உடலை நோய் தாக்காதிருக்க இறையருட் கவசத்தை நாட வேண்டும். ஒவ்வோர் உறுப்பையும் இறையருட் கவசத்தால் பாதுகாக்க வேண்டும்.

    அவ்வகையில் இன்றும் அடியவர்களை ரட்சித்துக் கொண்டிருப்பது கந்த சஷ்டி கவசம். உடலின் ஒவ்வோர் உறுப்பையும் கந்தனின் வேல் காக்கட்டும் எனக் கூறி வழிபட வகைசெய்கிறது அந்த அற்புத ஆன்மிகச் செய்யுள்.

    பாலன் தேவராயன் என்ற பக்திக் கவிஞர் எழுதிய உயர்நிலைத் தோத்திரம் அது. தலைமுதல் கால்வரை அனைத்து உடல் உறுப்புகளையும் முருகப் பெருமானின் வேல் காக்க வேண்டும் என உருக்கத்துடன் வேண்டுகிறார் கவிஞர்.

    சஷ்டி கவசம் முழுவதுமே மந்திர சக்தி உடையது. சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்பவர்கள் முருகனின் பேரருளைப் பெற்றுப் பூரண உடல் நலம் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

    நாம் ஆன்மீகத்தில் தன்வந்திரியை உடல் நலனைக் காக்கும் கடவுளாக வழிபடுகிறோம். குருவாயூர் அருகே தன்வந்திரிக்கென்று தனி ஆலயம் உள்ளது. தன்வந்திரியை வழிபட்டும் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

    நாராயண பட்டதிரி எழுதிய நாராயணீயம் என்ற சம்ஸ்க்ருத நூல் ஆரோக்கியக் கண்ணோட்டத்திலேயே எழுதப்பட்டது. அந்நூலை நாள்தோறும் பாராயணம் செய்வதன்மூலம் ஒருவர் தன் உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

    ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் நாராயணீயத்தைப் பிரபலப்படுத்தியதில் காலஞ்சென்ற ஸ்ரீஅனந்தராம தீட்சிதருக்குப் பெரும் பங்குண்டு. இப்போது தாமல் ராமகிருஷ்ணன் போன்றோர் நாராயணீயத்தை பக்தி மணம் கமழப் பிரசாரம் செய்துவருகிறார்கள்.

    உடல்நலக் குறைவுடையவர்கள் நாராயணீய பாராயணத்தின் மூலம் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுத் தரும் இன்னொரு சுலோகம் விஷ்ணு சகஸ்ரநாமம். திருமாலின் ஆயிரம் நாமங்களைச் சொல்வது நம் உடல் நலனை மேம்படுத்தும்.

    ஸ்ரீஅரவிந்த அன்னை மனிதர்களின் ஆரோக்கியம் குறித்துப் பல அரிய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவற்றில் மிக முக்கியமான கருத்து ஒன்று உண்டு.

    நம்மை அறியாமல், நம் ஆழ்மனத்தில் நோய் வந்துவிடுமோ என்று நாம் எண்ணுவதுதான் நமக்கு நோய்வரக் காரணம்` என்கிறார் அன்னை. நமக்கு நோய் வராது என்று நூறு சதவிகிதம் திடமாக நாம் நம்பினால் நமக்கு நோய்வரும் வாய்ப்பில்லை என்பது ஸ்ரீஅன்னை கோட்பாடு. நாம் இறையருளைச் சரணடைந்து அப்படி நம்பப் பழகுவோம். அதன்மூலம் பூரண ஆரோக்கியம் பெறுவோம்.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×