என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- சென்னை வரவேற்றது!
- சிறு வயது சம்பவங்களை அடுத்தடுத்து நினைத்துக் கொண்டே இருந்தார்.
- ஒரு நிமிடம் இதையெல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் சிவாஜி ராவுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. கையில் கிடைத்த அரசு கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வருகிறோமே என்ற ஒருவித பயம் அவரது மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் மனதில் மற்றொரு புறத்தில் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் இருந்தது. நிச்சயமாக சினிமாவில் சாதிக்க முடியும் என்ற வெறி அவருக்குள் உருவாகி இருந்தது. அந்த அடக்க முடியாத வெறியால் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே சிறு வயது சம்பவங்களை அடுத்தடுத்து நினைத்துக் கொண்டே இருந்தார்.
குறிப்பாக பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில் தனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நினைத்துப் பார்த்தார். ஆன்மீகத்தில் மனதை பக்குவமாக மாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். அதே சமயத்தில் பள்ளியில் தனக்கு நண்பர்கள் மூலம் ஏற்பட்ட சில கெட்ட பழக்கங்களையும் நினைத்துப் பார்த்தார்.
ராமகிருஷ்ணா மடம் நடத்திய பள்ளியில் படித்த காலத்தில் அவருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அதாவது பள்ளியில் வாரம் தோறும் மற்ற மாணவர்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு ஆகும். இதற்காகவே சிவாஜி ராவ் அந்த இளம் வயதில் நிறைய கதை புத்தகங்களை தேடி தேடி படித்தார்.
கன்னட முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை உன்னிப்பாக படித்து சேர்த்து வைத்துக் கொண்டார். அந்த கதைகளை அவர் பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு சொல்லி வந்தார். அந்த கதையுடன் அவரது சில கருத்துக்களையும் சேர்த்து மசாலா போட்டு ரசனையாக கதை சொல்வார்.
இதனால் பள்ளி மாணவர்களிடம் கதை சொல்வதில் சிவாஜி ராவ் கில்லாடி என்று பெயர் பெற்று இருந்தார். ஆசிரியர்கள் அவரை பாராட்டினார்கள். அதே சமயத்தில் சில மாணவர்களுடன் ஏற்பட்ட சேர்க்கையால் சிவாஜி ராவ் தவறான பழக்கங்களிலும் அடிமையாக நேரிட்டது.
எந்தெந்த பழக்கங்கள் எல்லாம் தன்னை திசை மாற்றின என்று சிவாஜி ராவ் ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு ேயாசித்து பார்த்தார். மது குடிப்பது, புகை பிடிப்பது ஆகிய இரண்டு பழக்கங்களும் பள்ளியில் படிக்கும் போதே தனக்கு வந்து விட்டதை உணர்ந்து வருந்தினார்.
ஒரு சமயம் அவரது நண்பர்கள் காட்டுப் பகுதியில் மறைந்து இருந்து திருட்டுத்தனமாக புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற சிவாஜி ராவை மூத்த மாணவர்கள் இங்கெல்லாம் வரக்கூடாது போ என்று விரட்டினார்கள். ஆனால் சிவாஜி ராவ் அதை ஏற்கவில்லை.
அவர்களுக்கு போட்டியாக வித்தியாசமாக புகைப்பிடித்து காட்டுவதாக சவால் விட்டார். உடனே நண்பர்கள் அவருக்கு ஒரு பீடியை எடுத்துக் கொடுத்தனர். பீடியை பற்ற வைத்த சிவாஜி ராவ் அதை ஸ்டைலாக மேலே தூக்கி போட்டார். அது கீழே வந்ததும் வாயில் கவ்விப் பிடித்து ஸ்டைலாக புகையை வெளியிட்டார்.
சிவாஜி ராவ் நண்பர்களும், மூத்த மாணவர்களும் இதை கண்டு ஒரு நிமிடம் பிரமித்துப் போனார்கள். ஆனால் சிவாஜி ராவுக்கு அதுதான் புகை பிடிக்கும் போது கிடைத்த முதல் ஸ்டைல் ஆகும். நண்பர்களிடம் சவால் விட்டதால் அவரையும் அறியாமல் இந்த ஸ்டைல் அவருக்குள் உருவாகி இருந்தது.
ஒரு நிமிடம் இதையெல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டார். பிற்காலத்தில் இந்த ஸ்டைல்தான் அவரை தமிழக மக்கள் மனதில் வித்தியாசப்படுத்தி காட்டி புகழ் பெற வைக்கப் போகிறது என்பது அப்போது சிவாஜி ராவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுபோலதான் சிவாஜி ராவுக்கு இருந்த மது குடிக்கும் பழக்கமும். அதையும் சிவாஜி ராவ் அந்த ரெயில் பயணத்தில் நினைத்துப் பார்த்தார். பெங்களூரில் கங்கேரி என்ற ஒரு பகுதி உண்டு. அந்த காலத்தில் அந்த இடத்தில் நிறைய சாராயக் கடைகள் இருந்தன.
சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் அடிக்கடி கங்கேரிக்கு சென்று சாராயம் குடிப்பதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். சாராய வாடை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக வெங்காயம் உள்பட பல பொருட்களை பயன்படுத்தியதை சிவாஜி ராவ் நினைத்து... நினைத்து... சிரித்தார்.
மது போதையில் பலரிடம் சண்டை போட்ட நாட்களும் சிவாஜி ராவுக்கு நினைவுக்கு வந்தது. கங்கேரியில் ஒரு தடவை மது குடித்துக் கொண்டிருந்த போது எதிரே இருந்த ஒரு நபரை சிவாஜி ராவ் அடித்து துவைத்தார். பதிலுக்கு அந்த நபரும் சிவாஜி ராவை கடுமையாக தாக்கினார்.
இந்த சண்டையில் சிவாஜி ராவ் சட்டைக் கிழிந்தது. அவர் உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அந்த கிழிந்த சட்டையோடு வீட்டுக்கு போனால் தெரிந்து விடுமே என்ற பயத்தில் நண்பர்கள் வீட்டுக்கு சென்று சட்டையை மாற்றிக் கொண்டு சென்ற நாட்களை எல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்தார்.
நாம் இப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறோமே என்று அவருக்குள் அடக்க முடியாத ஆச்சரியம் ஏற்பட்டது. அதே சமயத்தில் அவரோடு பழகிய சில நல்ல நண்பர்களும் அவரது நினைவுக்கு வந்தார்கள். நண்பர் ராமண்ணாவை நினைத்துப் பார்த்தார். அவரோடுதான் சிவாஜிராவ் தட்டச்சுப் பயிற்சிப் பெற டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அப்போது செய்த பல குறும்புகள் அவரது நினைவுக்கு வந்தன.
குறிப்பாக டைப்ரைட்டிங் வகுப்பு முடிந்து ஒருநாள் வெளியில் வந்தபோது இளம்பெண் ஒருவரிடம் தகராறு செய்து சிக்கி போலீஸ் நிலையத்துக்கு சென்றதை நினைத்துப் பார்த்தார். போலீசார் விசாரணை நடத்திய போது நான் போலீஸ்காரர் மகன் என்று ஆணவமாக சொன்னதையும் நினைத்துப் பார்த்தார்.
அப்படி சொன்னால் தன்னை போலீஸ்காரர்கள் விட்டுவிடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக சப்-இன்ஸ்பெக்டர் பளார் அறை கொடுத்து இரவு முழுக்க சிவாஜிராவையும் அவர் நண்பர்களையும் ஸ்டேசனில் வைத்து விட்டார். மறுநாள் காலை புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.
இதை நினைத்துப் பார்த்தபோது எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறோம் என்று சிவாஜி ராவுக்கு உறைத்தது. அதுபோல சந்திரசேகரன் என்ற நண்பருடன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்த நாட்களையும் நினைத்துப் பார்த்தார்.
ஜிம்மில் செய்த உடற்பயிற்சிகள் காரணமாக தனக்கு கட்டு மஸ்தான உடல் வந்து விட்டதாக நெஞ்சை நிமிர்த்து நடந்த நாட்களும் அவரது நினைவுக்கு வந்து சென்றன. அந்த நாட்களில் அவரது கண்களை யாராவது கூர்மையாக பார்த்தாலே அவருக்கு கோபம் வந்து விடும். அடிதடியாகி கைகலப்பு வரை சென்று விடும் என்று சிவாஜி ராவே பல தடவை சொல்லி இருக்கிறார்.
அந்த அடிதடி நாட்களின் நினைவுகளும் சிவாஜி ராவின் ரெயில் பயணத்தில் அவருடன் வந்து கொண்டே இருந்தது. இப்படி தாய்-தந்தை பாசத்தில் தொடங்கி நண்பர்களுடன் சேர்ந்து செய்த முரட்டு தனங்கள் வரை அனைத்தையும் அசைப்போட்ட சிவாஜி ராவுக்கு தனது வாழ்க்கை பயணம் அடுத்து எப்படி இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு மனதுக்குள் தோன்றியது.
அவரால் எந்த இறுதியான முடிவுக்கும் வர இயலவில்லை. மனம் முழுக்க குழப்பம், வேதனை, எதிர்பார்ப்பு நிறைந்து இருந்தது. நள்ளிரவுக்கு பிறகு சிவாஜி ராவ் கண் அயர்ந்தார். அப்படியே தூங்கிப் போனார்.
அதிகாலை நேரத்தில் புரண்டு படுத்த சிவாஜி ராவுக்கு கனவு ஒன்று வந்தது....
இருட்டான காட்டுப்பகுதி. அங்கு ஒரு சுரங்கப் பாதை. அதற்குள் சிவாஜி ராவ் மெல்ல மெல்ல நடந்து செல்கிறார். கரடு–முரடான சுரங்கப் பாதைக்குள் கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் திடீரென மெல்லிய வெளிச்சம் தோன்றியது.
வெளிச்சம் வந்த திசையை நோக்கி சிவாஜி ராவ் திரும்பிப் பார்த்தார். அங்கு அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு ஒரு சன்னியாசி கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்தார். அவரது முகம் ஒருவித அமைதியுடன் காணப்பட்டது. அவரை பார்க்க... பார்க்க சிவாஜி ராவ் மனதுக்குள் ஆனந்தம் ஏற்பட்டது.
சிவாஜி ராவ் அந்த பகுதியை சுற்றிப் பார்த்தார். அழகான நதி ஒன்று காணப்பட்டது. அதில் தெளிந்த நீரோடையாக கண்ணாடி போன்று தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சற்று தலையை உயர்த்திப் பார்த்த போது பெரிய மலை காணப்பட்டது. இமயமலை போன்று காட்சி அளித்த அந்த மலைக்குள் சுரங்கப் பாதையில் நாம் இருக்கிறோம் என்று சிவாஜி ராவ் நினைத்தார்.
இந்த காட்சியுடன் அவரது கனவு கலைந்துப் போனது. திடுக்கிட்டு எழுந்தார். என்ன கனவு இது? ஒன்றும் புரியவில்லையே? என்று சிவாஜி ராவுக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அடுத்த வினாடியே ரெயில் சென்னை வந்து விட்டதா? என்று ஆர்வமுடன் வெளியே எட்டிப் பார்த்தார்.
அடுத்த சில நிமிட நேரங்களில் பிருந்தா–வனம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்குள் வந்தது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்ததும் பயணிகள் மளமளவென இறங்கி நடக்க தொடங்கினார்கள். சிவாஜிராவும் அந்த அழகான ஆன்மிக கனவை அப்படியே சுத்தமாக மறந்து விட்டு தனது ஒரே ஒரு பையை எடுத்துக் கொண்டு ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கினார்.
கூட்டத்தோடு கூட்டமாக நடந்து வெளியில் வந்தார். தமிழ்நாட்டின் அரசியல், சினிமா, ஆன்மீக கலாச்சாரத்தை மாற்றப் போகும் ஒரு நிகரற்ற சக்தி கூட்டத்தோடு கூட்டமாக தங்களுடன் வருகிறது என்பதை அந்த சமயத்தில் யாரும் நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.
சிவாஜி ராவ் தன்னம்பிக்கையின் உச்சத்துடன் சென்னை மண்ணில் தனது காலை பதித்தார். சென்னை அவரை வரவேற்றது. திரைப்படக் கல்லூரியை நோக்கி நடக்க தொடங்கினார். அவரது அந்த முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நாளை பார்க்கலாம்.






