என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பாதகம் இல்லாத பாரம்பரிய சிறுதீனிகள்
- பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் செய்முறையால் ஆற்றல் கூட்டப்படுகிறது.
- நம்முடைய மூத்த தலைமுறையினரும் அந்நுட்பத்தை கைக்கொண்டு வருகின்றனர்.
நாம் பசிக்கும் நேரத்தில் நாலாவிதமான பட்சணங்களோடு உண்ணும் உணவைத் தவிர இடைப்பொழுதில் ஏதேனும் சிறுதீனி எடுத்துக் கொள்வது தவறென்ற கருத்து பரவலாக உண்டு. உண்மையில் நாவில் சுவைபட உண்கிற எதுவும் உணவே ஆகும். சிறுதீனியென்பது ஏதோ மனநிறைவுக்காகவும் அறிவியல் மொழியில் சொல்வதானால் மூளை நியாரன்களின் தூண்டலுக்கு உதவும் டொபமைன் (dopamine) ஆக மட்டுமே கருத முடியாது.
சிறுதீயானது உடலின் பிற பாகங்களுக்கு ஊட்டம் அளிக்கும் ஆற்றலாகவும் மாற்றமடைகிறது. ஆக சிறுதீனி உடலால் செரிக்கப்பட்டு பிற உணவுவகைகளைப் போல ஆற்றலாக மாற்றமடைவதாக இருந்தால்தான் உடலுக்கு நன்மை செய்யும். மாறாக வெறுமே மூளைக்குத் தூண்டலை அளிக்கும் சுவையை மட்டுமே கொடுத்து விட்டு சுவைப்பாகம் தவிர மற்றெல்லாம் கழிவாக மாறும் என்றால் அது உடலுக்கு, உடலின் உள்ளுறுப்புகளுக்குப் பெருஞ்சுமையாக மாறும். இச்சுமையானது நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் ஒன்றாக மாறி விடும்.
எடுத்துக்காட்டாக கண்ணுக்குக் கவர்ச்சியான நிறமும், புளிப்பும், காரமும் ஏற்றப்பட்ட பிராண்டட் (உருளைக்கிழங்கு) சிப்ஸை எடுத்துக் கொள்வோமே. இது பெயரளவில் தான் உருளைக்கிழங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் உ.கி ஐ மாவாக்கி, அந்த மாவுடன் மிகவும் மலிவான ஏதேனும் கிழங்கு அல்லது சத்தும் சாரமுமற்ற மாவினைப் பெருமளவு கலந்து கொள்வார்கள். இந்த மாவுக் கலப்பை இயந்திரத்தில் இட்டு சீரான பார்த்தால் ஈர்க்கும்படியான வடிவத்திற்கு வெட்டி இயந்திரச் சூட்டில் உலர்த்தி மொறுமொறுப்பாக்குவார்கள்.
சாலையோர சிப்ஸுக் கடையில் பெரிய வாணலியில் டின் டின்னாக எண்ணை ஊற்றி உருளைக் கிழங்கைப் பொரிப்பார்களே அதுபோல மேற்படி பிராண்டட் சிப்ஸ் பொரிக்கப்பட மாட்டாது. அப்படி எண்ணையில் பொரித்தால் எண்ணைக்குரிய விலை லாபத்தில் குறைந்து விடும். போக சிப்ஸைப் பொரித்த ஓரிரு வாரங்களுக்குள் சிப்ஸ் எண்ணைக்காரல் எடுக்க ஆரம்பித்து விடும். அந்தப் பண்டம் விரும்பத்தாகதாக மாறி விடும். எனவே தாவரக் கொழுப்பு, மிருகக் கொழுப்பு போன்ற ஏதேனும் மலிவான கொழுப்பின் வாசத்தை இயந்திரம் வாயிலாக ஏற்றி அதனோடு காரத்திற்கு ஒரு இரசாயனம், புளிப்பிற்கு ஏதேனும் ஒரு அமிலம், அப்புறம் நிறத்திற்கு ஒரு இரசாயனம், மேலும் அது கெடாதிருப்பதற்கும் வண்டு பூச்சிப் பிடிக்காமல் இருப்பதற்கு இரசாயனம் என பல கட்டங்களில் இரசாயனம் சிப்ஸில் ஏற்றப்படும்.
உணவுத் தரக்கட்டுப்பாட்டுத் துறை என்ற ஒன்று இருக்கிறதல்லவா. அது என்ன செய்யும்? இந்த சிப்ஸில் ஏற்றப்படும் இரசாயனம் உடலால் எளிதில் நீக்கப்படும் அளவு தான் என்று சான்றிதழ் வழங்கும். அதனை ஒருமுறை நீங்கள் உண்டால் அதில் சேர்க்கப்பட்ட இரசாயனம் உங்கள் உடலால் எளிதில் வெளியேற்றக் கூடியதாக இருக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உள்ளே தள்ளும்போது உள்ளுறுப்புகளில் தங்கி தேக்கமடையும் தானே. ஆனால் மேற்படித் தின்பண்டங்களை சந்தையில் இறக்குவோர்க்கு அதுபற்றி அக்கறை இல்லை.
போப்பு
ஒரு சோதனையில் உடலால் வெளியேற்ற முடியும் அளவிற்குத் தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று சான்றிதழ் பெற்று விட்டார்கள். அதாவது தரக்கட்டுப்பாட்டுத் துறையை ஏமாற்றியாகி விட்டது. மக்களின் கண்களுக்கு அப்பால் வெகுதொலைவில் உள்ள வணிகப் பெருநிறுவனங்களுக்கு தங்களது பண்டம் எந்த அளவிற்கு மக்களின் உடலுக்கு, உடலின் உள்ளுறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதைப் பற்றிக் கவலையில்லை. அவர்களுக்கு ஆண்டுதோறும் எட்டப்பட வேண்டிய வணிக இலக்கு, இலாப இலக்கு, தொழில் விஸ்தரிப்பு போன்றவற்றைப் பற்றியே மூளை முழுதும் கணக்கீடுகள் நிரம்பி இருக்கும்.
ஆனால் நம்முடைய பாரம்பரியமான சிறுதீனிகள் மிகவும் எளிமையானவை. நாம் காலங்காலமாக உணவிற்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்களையே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. இவற்றில் இரசாயனக் கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எடுத்துக்காட்டாக உப்புக் கொண்டைக் கடலையையே எடுத்துக் கொள்ளுங்களேன். தமிழகத்துத் தென்மாவட்டக் கரிசல் நிலத்தில் ஒரு எளிய விவசாயி விளைவிக்கும் கருப்புக் கொண்டைக் கடலையை உப்பு நீரில் ஊற வைப்பார்கள். முழுதாக ஊறியபின்னர் நல்ல வெயிலில் காயவைப்பார்கள். பெருநிறுவன தயாரிப்பின்போது இயந்திரத்தில் இயல்புக்கு மாறான முறையில் உணவுப்பொருள் சூடேற்றப்படுகிற பொழுது அதன் மூலாதாரச் சத்துக்கள் சிதைந்து அவ்வுணவுப் பொருள் வெறும் குப்பையாகி விடும் என்பதைக் கவனியுங்கள்.
உப்புநீரில் ஊறவைத்த கொண்டைக்கடலை சூரிய வெப்பத்தில் உலர வைக்கிற பொழுது உணவுப் பொருள் சூரிய ஆற்றலைப் பெறுகிறது. ஆக ஒரே செயல்முறை ஓரிடத்தில் உணவுப் பொருள் அதன் ஆற்றலை இழந்து குப்பையாகிறது. பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் செய்முறையால் ஆற்றல் கூட்டப்படுகிறது.
அடுத்து உலர வைத்த உப்புக் கொண்டைக் கடலையை வறுக்கிற பொழுது கனமான சூடுதாங்கும் இரும்பு வாணலியில் மணலைக் கொட்டி நெருப்பின் சூடு நேரடியாகத் தாக்காத வண்ணம் மணல் மீது ஏற்றப்பட்டு நிதானமாக சூடேற்றப்படுகிறது. அதன் வாயிலாக சூடு கெட்டியான கொண்டைக் கடலையின் நடுப்பகுதி வரைக்கும் ஏறி கடலை கொறிப்பதற்கு ஏதுவாக மொறுமொறுப்பாகிறது. இங்கே பண்டத்தில் மொறுமொறுப்புக்காக இரசாயனம் ஏதும் சேர்க்கப்படவில்லை. உப்புக்கடலையில் வாசனை மணலின் வாசமும் மித சூட்டின் வாசமும் கொ.கவின் வாசமும் மட்டுமே மிதமாக இருக்கும். உப்பும், சூடும் இதமாக நாவில் படரும். ஆனால் ஒரு பிராண்டட் சிப்ஸில் நாவின் சுவை மொட்டுக்களைச் சாட்டையடி போலச் சுளீரென்று தாக்கும் இரசாயன சுவையூட்டி சேர்க்கப்பட்டிருக்கும்.
உப்புக் கடலையின் சூடேற்றமும், உப்பும், அதன் புரதச்சத்தும் மூளையின் நியூரான்களுக்கு மட்டுமல்ல உடலின் உறுப்புகள் அனைத்திற்கு சத்துக்களை வழங்குகிறது. உடலுக்கு எவ்விதப் பாதிப்புகளையும் அளிப்பதில்லை. ஆனால் பெரும் விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தப்படும் தின்பண்டங்கள் சுளீரென்று சுவைமொட்டுக்களைத் தாக்குவதால் மீண்டும் மீண்டும் தின்னச் செய்வதற்குரிய போதையூக்கியூக்கியாகவும், அடிமைப்படுத்துவதாகவும் இருக்கிறது. போக எந்த சத்துக்களையும் வழங்காததால் அதனை எவ்வளவு தின்றாலும் நிறைவு ஏற்படுவதில்லை. அதனால் தான் பிஞ்சு நாவினைக் கொண்ட பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பிராண்டட் தின்பண்டங்களில் நாட்டம் கொள்கின்றனர்.
இதுவொரு வகையில் போதைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட உணர்வே ஆகும். உயிருடலில் ஏற்றப்பட்ட செயற்கையூக்கிகள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறுகிற பொழுது சட்டென்று சோர்வடைந்து விடும். ஏனென்றால் மிகைவூக்கம் குறையும் பொழுது இயல்பூக்கத்திற்கு உடல் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவை. ஆனால் போதையேறிய உடல் திசுக்கள் ஏறிய ஊக்கத்திலேயே தொடர்ந்து நிலைத்திருக்க விருப்பம் கொள்கிறது.
அந்த விருப்பத்தை மீண்டும் மிகைவூக்கம் மட்டுமே ஈடுசெய்ய முடியும். ஆனால் தொடர்ந்து மிகையூக்கத்திற்கு உள்ளாகும் பொழுது உடலின் திசுக்களும் மென் நரம்புகளும் தளர்ச்சி அடைந்து முற்றிலுமாகச் செயல்திறன் குறைந்து விடும். இதைத்தான் இன்றைய உணவுமுறைப் பலவற்றிலும் புதிய தலைமுறையினர் எதிர்கொண்டு வருகின்றனர். இனம் புரியாத புதிய புதிய நோய்களுக்கும் இளம் வயதிலேயே ஆட்படுகின்றனர்.
இதுவரை அடையாளம் கண்டிராத இரசாயனம் உடலில் ஏற்றப்படுகிற பொழுது அவற்றை இனம் கண்டு செரிக்கவும் நீக்க நம்முடைய நொதிப்பிகளும், சுரப்பு நீர்களும் வெவ்வேறு வகையான இயல்புக்கு மாறாக சுரக்க நேரிடுகிறது. இயல்புக்கு மாறாக ஒரு நீர் சுரக்கும் பொழுது அதனை மட்டுப்படுத்த இன்னொன்று சுரந்து அல்லது அதனை ஈடுசெய்ய மற்றது சுரந்து என உடலின் உள்ளியக்கம் குழப்பத்திற்கு உள்ளாகிறது.
ஆனால் நாம் காலங்காலமாக உண்டு வந்த உணவுப் பொருட்களை நம்முடைய உயிரணுக்கள் அடையாளம் கண்டு அவற்றை எவ்வித புதிய மெனக்கெடலும் இன்றி எளிதில் செரித்து அவற்றின் சத்துக்கூறுகளை தன் வயப்படுத்திக் கொள்ளும். நம்முடைய நல்வினை மரபார்ந்த சிறுதீனிகளும், தின்பண்டங்களும் எளிய மக்கள் தயாரித்து கைக்கெட்டும் தொலைவில் விற்பனை செய்து கொண்டுள்ளனர். நம்முடைய மூத்த தலைமுறையினரும் அந்நுட்பத்தை கைக்கொண்டு வருகின்றனர்.
அப்படியான உடலுக்குச் சத்தும் மூளையின் நியூரான்களுக்குத் தூண்டலும் வழங்கவல்ல தின்பண்டங்கள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.
செல்போன் எண்- 96293 45938






