என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பித்ருக்கள் வழிபாடு"

    • உலகில் ஏழு வகை பிறப்புகள் உள்ளன என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
    • மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும்.

    சந்திர கிரகணம் முடிந்து மகாளய பட்சம் ஆரம்பித்து விட்டது. சாதாரண மனிதன் முதல் சாதனையாளர்கள் வரை பலரும் அஞ்சக்கூடிய ஒரே தோஷம் பித்ருக்கள் தோஷம். இந்த பித்ருக்கள் தோஷம் ஏழைகளுக்கு மட்டுமே உண்டு பணக்காரர்களுக்கு இது செயல்படாத தோஷம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

    அதாவது பொருளாதாரரீதியாக எவர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்களோ எந்த வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கவில்லையோ யாருக்கு தடை தாமதங்கள் அதிகம் உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே பித்ரு தோஷம் உண்டு என்ற நம்பிக்கையும் உள்ளது.

    உண்மையில் இது தவறான நம்பிக்கை. உலகில் ஏழு வகை பிறப்புகள் உள்ளன என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏழு பிறவிகளும் அவர் அவர்களின் பாவ புண்ணியங்களை பொருத்து அமையும்.

    அதாவது ஒரு ஆன்மாவின் நல்வினை, தீவினை முடியும் வரை அவர்களின் வினைக்கேற்ப தேவர்களாக, மனிதர்களாக, மிருகங்களாக, பறவைகளாக, நீரில் வாழ்வனவாக, ஊர்வனவாக, தாவரங்களாகப் பிறப்பு எடுப்பார்கள்.

    அவரவர்களின் ஊழ்வினைக்கு ஏற்ப எந்த பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். எந்தப் பிறவி எடுத்தாலும் அது முன் வினைப்பயனின் தொடர்ச்சியாக தான் அமையும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தேவர்கள் மனிதராக பிறக்கலாம், மனிதன் மிருகமாக பிறக்கலாம். மிருகம் பறவையாக பிறப்பு எடுக்கலாம். பறவையாக பிறந்தவர் ஊர்வனவாக பிறக்கலாம். நீர்வாழ் உயிராக பிறக்கலாம் அல்லது தாவரமாக பிறக்கலாம்.

    ஆக பிறவிப் பிணி உள்ளவர்களுக்கு மறு பிறவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அந்த ஆன்மா எடுக்கும் உடல் வடிவம் வேறுவேறாக இருக்குமே தவிர ஆன்மாவில் பதிந்து கிடக்கும் நல்ல, தீய வினைகள் மாறாது. மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும். அதாவது அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற் போன்று உடல் வடிவம் உண்டாகும்.

    மனித உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றலானது தசா புத்திக்கு ஏற்ப சில நேரங்களில் வலிமையாகவும், சில நேரங்களில் வலுவற்றும் இயங்கும். தசாபுத்திக்கு ஏற்ப மனநிலையில் மாற்றம் உண்டாகி அவரவரின் வினைப் பயன்களை அனுபவிப்பார்கள்.

    ஒரு ஆன்மாவில் நல்வினைகள் அதிகமாக இருந்தால் அடுத்தடுத்து எடுக்கக்கூடிய பிறவிகளில் அவர்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் லெளகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் விதத்தில் இருக்கும். தீய கர்மாக்கள் அதிகம் இருந்தால் வரக்கூடிய பிறவிகள் ஜாதகருக்கு மறுபிறவியே இருக்கக் கூடாது என்ற மனநிலையை ஏற்படுத்தும்.

    ஒரு உயிர் பூமியில் பிறப்பெடுக்க அதற்கு ஒரு தாய் தந்தையர் வேண்டும். அந்தத் தாய் தந்தையருக்கு ஒரு பெற்றவர்கள் இருக்க வேண்டும். ஒரு தாய் தந்தையர் தங்கள் பூர்வ ஜென்ம வினைக்கு ஏற்ற குழந்தைகளையே பெற்றெடுப்பார்கள். பிறப்பெடுக்கும் ஒரு உயிர் அனுபவிக்கும் நல்ல தீய கர்மாக்கள் பெற்றோர்களின் கர்மாவுடன் முன்னோர்களின் கர்மாவுடன் சம்பந்தப்பட்ட வையாகவே இருக்கும்.

    ஆக ஒருவன் பிறப்பெடுக்க கர்மா என்ற ஒன்று உண்டு என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். சென்ற பிறவியின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டன், பாட்டி அத்தை, மாமா, மச்சான், பிள்ளைகள், நண்பர்கள் இவர்களுடன் ஏற்பட்ட உறவின் தொடர்ச்சியை முழுமை செய்ய கூடிய உருவ அமைப்பு உள்ள இடத்தில் ஆன்மா பிறப்பெடுக்கும்.

    ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகள் அவரின் முன்வினையின் தொடர்ச்சியையும், அதனால் வரும் நன்மைகள் அல்லது தீமைகளையும் பிரதிபலிக்கும். ஒருவர் வாழும் பிறவியில் நல்லதைச் செய்தால் துன்பப்படுவதும், கெடுதல் செய்து சிறப்பாக வாழ்வதற்கும் முன்வினைத் தொடர்ச்சியே காரணமாக அமைகிறது.

     

    ஐ.ஆனந்தி

    சுருக்கமாக ஒரு ஆன்மாவின் செயல்களின் அடிப்படையில் அடுத்த பிறவி அமையும். பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதே மோட்சமாகும். ஆக இந்தப் பிறவியில் செய்யக்கூடிய நன்மை தீமைக்கு உள்ள பிரதிபலன் அடுத்த பிறவியிலேயே கிடைக்கும். அதைத்தான் நமது முன்னோர்கள் போகும் வழிக்கு புண்ணியம் சேர்த்து வைத்து விட்டு செல் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ஒருவருக்கு வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்ம வினையோ எதுவாக இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும்.

    ஒருவரின் பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையை ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி நின்ற நட்சத்திர சாரம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சுய ஜாதகத்தில் 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால் அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் சுப வலிமை பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்னாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால் அவர் பூர்வ ஜென்மத்தில் மிகுதியாக புண்ணிய காரியங்கள் செய்தவர் என்று கூறலாம்.

    இந்த அமைப்பு பெற்றவர்களின் ஜாதகத்தில் எந்தவித தோஷங்கள் இருந்தாலும் ஜாதகருக்கு பாதிப்பை கொடுக்காது. முன்வினையில் நல்ல கர்மாக்கள் இருப்பவர்களுக்கு இந்த பிறவியில் நல்ல பெற்றோர்கள் கிடைப்பார்கள். நல்ல குடும்பத்தில் பிறப்பார்கள்.

    உரிய வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் இன்பங்கள் உண்டாகும். குல கவுரவத்தைக் காப்பாற்றக்கூடிய நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் இருக்கும். ஸ்திர சொத்துக்கள் சேரும். குலதெய்வத்தின் அருள் கடாட்சம் கிடைக்கும். பூர்வீகத்தால் பயன் உண்டு. கெட்ட நோய்த் தாக்கங்கள் வராது. தேவைக்கு நல்ல பண வசதிகள் இருக்கும்.

    ஆயுள் சார்ந்த பயம் இருக்காது. பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் இருக்கும். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் இடமே ஒருவரின் முன்வினை தொடர்ச்சியை சொல்லக்கூடிய ஸ்தானமாகும்.

    ஜோதிட ரீதியாக லக்னம் ( ஜாதகர்) பூர்வ புண்ணிய ஸ்தானம் (ஐந்தாமிடம்) பாக்கிய ஸ்தானம் (ஒன்பதாமிடம்) போன்ற இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்தும் பித்ரு தோஷத்தை தெளிவாக உணர முடியும். குறிப்பாக சூரியன், ராகு/ கேது, மாந்தி சம்பந்தம், 9-ம் அதிபதி ராகு/கேது, மாந்தி சம்பந்தம், சூரிய, சந்திர கிரகணத்திற்கு 7 நாட்களுக்கு முன், பின் பிறக்கும் குழந்தைகளுக்கு கடுமையான பித்ரு தாக்கம் உண்டு.

    சூரியன் ராகு சேர்க்கை தந்தை வழி பித்ரு தோஷத்தாலும், சூரியன் கேது சேர்க்கை தாய் வழி பித்ரு தோஷத்தாலும் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேதுக்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும்.

    பித்ருக்கள் தோஷம் வெளிப்படும் காலம்

    ஜனன கால ஜாதகத்தில் உள்ள சூரியன், சந்திரன், சனி பகவானை கோட்ச்சார ராகு, கேது சந்திக்கும் காலத்திலும் ஜனன கால ராகு மற்றும் கேதுவை கோட்ச்சார சூரியன், சந்திரன், சனி சம்பந்தம் பெறும் காலங்களில்பித்ரு தோஷம் மிகுதியாக வெளிப்படும். மேலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களிலும், கீழ்கண்ட தசா புத்திகளிலும் பாதிப்பு வெளிப்படும்.

    சூரிய தசை ராகு புத்தி

    ராகு தசை சூரிய புத்தி

    சனி திசை ராகு புத்தி

    ராகு தசை சனி புத்தி

    சனி தசை கேது புத்தி

    கேது தசை சனி புத்தி

    கேது தசை ராகு புத்தி

    சந்திர தசை ராகு புத்தி

    ராகு தசை சந்திர புத்தி

    சந்திர தசை கேது புக்தி

    கேது தசை சந்திர புத்தி

    ஒருவருக்கு பித்ருக்களிடமிருந்து கிடைப்பது நல்லாசியா அல்லது கர்மவினை சார்ந்த பாதிப்பா என்பதை நிர்ணயிப்பது திதிசூனிய பாதிப்பு. தோஷம் தொடர்பான பாகங்கள்.

    திதி சூனிய பாதிப்பு இருந்தால் நிச்சயமாக அது தோஷமாக செயல்பட்டு ஜாதகருக்கு கர்ம வினை சார்ந்த பாதிப்புகளை தரும். அதே போல் தோஷம் தொடர்பான பாவங்களுக்கு சுபர்களின் சம்பந்தம் இருந்தால் அது ஜாதகருக்கு சுப பலன்களை வழங்கும்.

    ஒரு ஜாதகத்தில் உள்ள எத்தகைய தோஷமாக இருந்தாலும் அது எல்லா காலத்திலும் வேலை செய்யாது. குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே வேலை செய்யும். அதனால் எந்த காலத்தில் எந்த தோஷம் பாதிக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால் அந்த பாதிப்புகளில் இருந்து மீளக்கூடிய வழிபாடுகளை கடைபிடிக்க முடியும். ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த தோஷமாக இருந்தாலும் லக்னம் லக்னாதிபதியுடன் சம்பந்தப்படாத எந்த தோஷமும் ஜாதகரை தாக்காது பாதிக்காது.

    கிரக தோஷங்களை வெளிப்படுத்தக்கூடிய தசா புத்தி வராத காலங்களிலும் பாதிப்பு வராது.

    ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிக்கக் கூடிய தோஷங்கள் அனைத்திற்கும் இதே முறையில் பலன் எடுக்க வேண்டும். தசா நாதன் அல்லது புத்திநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் சுபத்துவ நிலையில் இருந்தாலும் தோஷங்களால் பாதிப்பு வராது.

    அதே போல் தசை வராவிட்டால் என்ன புத்தி வரும் .அதிக வருடங்கள் கொண்ட தசாவின் புத்திகள் நடப்பில் வரும் காலங்களில் கோட்சார கிரகங்கள் சாதகமாக இருந்தாலும் புத்தி நாதனுக்கு சுப கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறலாம். சிறிய தசைகளின் புத்தியாக இருந்தால் குறுகிய காலம் கண்ணிமைக்கும் முன் கடந்து விடும்.

    ஒருவருக்கு பித்ரு தோஷம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனது முன்னோர்களுக்கு பிதுர் கடன் செய்வது மானிடராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். அந்த வகையில் தற்போது சந்திர கிரகணம் முடிந்து மகாளய பட்சம் ஆரம்பித்துவிட்டது. இந்த காலகட்டங்களில் முழுமையாக முறையாக பித்ருக்களை வழிபட்டால் இந்தப் பிறவியிலும் வரக்கூடிய பிறவியிலும் புண்ணிய பலன்கள் அதிகமாகும். பித்ரு தோஷம் பாதிப்பு வராது.

    மறைந்த முன்னோர்கள் மொத்தமாக கூடும் காலமான 15 நாளே மகாளய பட்சம். முன்னோர்கள் அனைவரும் கூட்டமாக வந்து தங்கும் இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். மகாளய பட்ச காலத்தில் பிரதமையில் துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். 3 தலை முறை தந்தை வழி, தாய் வழி முன்னோர்களை நினைத்து தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி முன்னோர் ஆத்மசாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவலாம்.

    மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்தினால் புண்ணிய பலன்கள் உங்கள் தலைமுறைக்கு வந்து சேரும்.

    செல்: 98652 20406

    • அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    அமாவாசையன்று எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால், அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துன்பங்களில் இருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலச் சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் முன்னோர்களான பித்ருக்கள் தங்களது உறவுகளைப் பார்ப்பதற்காக இந்த பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை.

    அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பது போலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். அன்றும் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ரு லோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    தை அமாவாசை, இந்த வருடம் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் காலபுருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகர ராசியில், கர்ம காரகன் சனியின் வீட்டில் சந்திரனு டன் சூரியன் சேரும் நாள் மிகவும் விசேஷமான தை அமாவாசையாகும். அதிலும் உத்திராண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பாகும்.

    தற்போதைய கோட்சாரத்தில் மகர ராசியில் கர்மகாரகன் சனி பகவான் ஆட்சிபலம் பெற்று, தர்மாதிபதி குருவுடன் இணைந்து, தர்ம கர்மாதிபதி யோகத்தை உலகிற்கு குருவும் சனியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் சூரியனும், சந்திரனும் இணையும் போது உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தில் உரு வாகும் தை அமாவாசை மிகமிக சிறப்பான- உன்னதமான பலன்களை வழங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

    சூரியோதயத்திற்கு முன்பாக கடற்கரை, மகாநதிகள், ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.

    • தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள்.
    • சிரார்த்தம் செய்யும் முன்பாக மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

    2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

    3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

    4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

    5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

    6. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீர் தரப்பட வில்லை என்றால் அவர்கள் ஏமாற்ற மடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    7. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

    9. பெற்றோர்களின் வருட சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருட சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

    10. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

    11. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.

    12. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    13. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அது தான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

    14. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

    15. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திரு வண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

    16. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×