என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மறைந்திருக்கும் நோய் அனீமியா!
    X

    மறைந்திருக்கும் நோய் அனீமியா!

    • பல்வேறு விட்டமின்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள்.
    • எல்லாவிதமான கீரைகளிலும் இரும்புச்சத்தும் மற்ற விட்டமின்களும் நிறைந்திருக்கிறது.

    ஒரு பெண்மணி என்னை பார்ப்பதற்கு வந்திருந்தார். அவருக்கு வயது 40களில்.

    வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு,

    அவருடைய பிரச்சினையை கூறினார்.

    "டாக்டர்! நான் திருப்பதிக்கு நடந்து வருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன்.

    நடந்தும் சென்று விட்டேன். மேலே ஏறும்போது எனக்கு லேசாக மூச்சிரைத்தது. இறங்கும்போது மூச்சுரைப்பு அதிகமாக இருந்தது. அதனால் என்னவென்று பார்க்கலாம் என்று வந்தேன்" என்றார்.

    அவருக்கு ரத்தத்தை பரிசோதித்தோம். ஹீமோகுளோபின் அளவை பார்த்ததும்

    எனக்கு தலை சுற்றியது.சொன்னால் நம்ப மாட்டீர்கள்! பொதுவாக 12 கிராம் வரை இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அவருக்கு 3 கிராம் தான் இருந்தது.

    பிறகு அவருக்கு தேவையான சிகிச்சை கொடுத்தோம்.

    ஏன் இந்த அளவுக்கு ரத்தம் குறைவாகும் வரை நம் உடல் காட்டிக் கொடுப்பதில்லை?

    பொதுவாக நம் உடலின் மிக நல்ல குணம் அல்லது மிக கெட்ட குணம் என்னவென்றால் எந்த அளவுக்கு இருக்கக்கூடிய சத்துக்களை வைத்து சமாளிக்க முடியுமோ அந்த அளவுக்கு சமாளித்துக் கொண்டே இருக்கும்.

    முடியாது என்ற கட்டத்தை அடையும் போது , அறிகுறிகள் நம்மை கஷ்டப்படுத்தும் அளவுக்கு தோன்றும்.

    அதற்கு முன்னாலும் அறிகுறிகள் இருக்கும்.

    லேசாக இருப்பதால் பல சமயங்களில் நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம் அதை நிராகரிப்போம்.

    வித்தியாசமான அறிகுறிகள் கூட இருக்கலாம்! என்னென்ன?

    ஒரு பெண்மணி சோம்பை அதிகமாக உண்ணுவதாக கூறினார்.

    இன்னொரு பெண்மணி வெறும் அரிசியை அதிகமாக உண்பதாக அவரே வருத்தத்துடன் தெரிவித்தார்.

    மற்றும் ஒரு பெண்மணி சாம்பல் மற்றும் பெயிண்டை பார்த்தால் அதை உண்ண வேண்டும் என்ற எண்ணம் வருவதாக கூறினார்.

    நாம் கூறுவோம் அரிசி சாப்பிடாதே!, ரத்தம் சுண்டி விடும் என்று.

    மருத்துவ உண்மை என்னவென்றால் யாருக்கு வழக்கத்திற்கு மாறான பொருட்களை அதிகமாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, அவர்களுக்கு இரும்புச்சத்து அல்லது வேறு சில விட்டமின் குறைபாடுகளோ இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    அந்த குறைபாட்டை சரி செய்த பின் அதே அரிசியையும் சோம்பையும் ஒரு மூட்டை அளவு அவர்கள் முன் வைத்தால் கூட அவர்கள் சாப்பிட மாட்டார்கள்.

    ஜெயஸ்ரீ சர்மா

    பொதுவாக என்னென்ன அறிகுறிகள் தோன்றும்?

    ரத்தம் குறைவால், முதலில் தலைவலி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், கை, கால் அசதி, வலி, தலைமுடி கொட்டுதல், எதிர்ப்பு சக்தி குறைவு, செரிமான கோளாறுகள், தோல் வறட்சி போன்ற பொதுப்படையான அறிகுறிகள் தோன்றும்.

    ஹீமோகுளோபின் மிகவும் குறையும்போது நடக்கும்போது மூச்சு திணறல் மூச்சிரைப்பு மாடிப்படி ஏறும் பொழுது மூச்சிரைப்பு நெஞ்சில் வலி, மயக்கம், தலைசுற்றல் போன்றவை ஏற்படலாம்.

    ரத்தம் குறைவாக காரணங்கள் என்ன?

    ஒன்று - ரத்த உற்பத்தியில் பாதிப்பு அதுதான் மிகவும் பொதுவானது ரத்த உற்பத்தி பாதிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு விட்டமின்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள்.

    இரண்டாவது - ரத்த இழப்பு

    பெண்களுக்கு மாதாந்திர ரத்த இழப்பு மற்றவர்களுக்கு பைல்ஸ் மற்றும் குடல் பகுதியில் இரத்த கசிவு. உடலின் எந்த பகுதியிலும் ஏற்படும் ரத்த இழப்பு.

    குடல் புழு, பேன் போன்ற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் உயிரிழப்பு.

    மூன்றாவது - ரத்த செல்கள் அழிப்பு

    பொதுவாக ரத்த செல்கள் வாழக்கூடிய காலம் 120 நாட்கள். அதற்கு முன்பாகவே அழிக்கப்படுதல்.

    எடுத்துக்காட்டு

    ரத்த அணுக்களின் அமைப்பு குறைபாடுகள் (சிக்கில் செல்) அரிவாள் செல் ரத்த சோகை, தளசிமியா போன்றவை.

    ஐந்தாவது - ரத்த தேவை அதிகரிப்பு

    அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு - கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனிமியா.

    யாருக்கு பொதுவாக ரத்த குறைவு ஏற்படும்?

    சரியான உணவு உண்ணாமல் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைபாட்டினர்,

    நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

    ஆரோக்கியமான சரிவிகித உணவு மிக அவசியம். எல்லாவிதமான கீரைகளிலும் இரும்புச்சத்தும் மற்ற விட்டமின்களும் நிறைந்திருக்கிறது. அத்துடன் பருப்பு, பால் மீன் முட்டை போன்றவை புரோட்டின் சத்தை கொடுக்கும்.

    ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பேரிச்சை, முருங்கை புளிச்சக்கீரை.

    என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?

    முதலில் எதனால் இந்த ரத்த குறைபாடு ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல சிகிச்சை மாறுபடும். இரும்பு சத்து கொடுத்தால், 90% மாணவர்களுக்கும் அனிமியா குறைபாடு சரியாகிவிடும்.

    தேவைப்படுபவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் தருவோம்.

    எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரு சிலருக்கு உடலில் இரும்பு சத்து ஏறாது.

    குடலில் உள்ள ஒரு சில குறைபாடுகளால் இவ்வாறு நேரலாம்.

    அவர்களுக்கு இரும்பு சத்து ஊசி வழி ஏற்றுவோம்.

    அனைவருக்குமே குடல் புழுவை அகற்றக்கூடிய மாத்திரை கொடுப்போம்.

    மாதப் போக்கு அதிகமாக இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை கொடுப்போம்.

    சிகிச்சை எடுக்காவிட்டால் எந்த விதமான பாதிப்பு ஏற்படும்?

    குறைவான இரத்தத்தில் வேலை செய்வதால் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்புகள் முக்கியமாக இதயமும் நுரையீரலும் தான். வெகு சீக்கிரமே இதய சோர்வு, செயலிழப்பு ஏற்படும்.

    மறைந்து தாக்கும் நோய்கள் என்னென்ன?

    மறைந்து என்ற வார்த்தையை கேட்டாலே" மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?" என்ற தில்லானா மோகனாம்பாள் பாடல் தான் நமக்கு நினைவுக்கு வரும்.

    அதுபோல நம் உடலில் மறைந்திருந்து தாக்கும் சில நோய்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது இந்த ரத்த சோகை எனப்படும் அனீமியா.

    வலி என்ற உணர்வு தான் அல்லது வீக்கம் என்கிற ஒரு அறிகுறி தான் நமக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளை காட்டிக் கொடுக்கிறது.

    வலியோ வீக்கமோ இல்லாத எல்லா நோய்களும் மறைந்தே தான் இருக்கும்.

    முக்கியமானவை:

    அனிமியா, சர்க்கரை நோய், கேன்சர் கல்லீரல் பாதிப்பு, கிட்னி பாதிப்புகள். ஒரு அடிப்படை சுகாதாரமான சூழல் உள்ள எந்த சமூகத்திலும் அனீமியா இருக்கவே கூடாது.

    பன்னிரண்டாவது படிக்கும் பெண் குழந்தைக்கு அதிக நேரம் படிக்க முடியவில்லை. கவனத்தை குவிக்க முடியவில்லை.

    ரத்தத்தை சோதித்த போது 7 கிராம் மட்டுமே ஹீமோகுளோபின் இருந்தது.

    அதை சரி செய்ததும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம். எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய 12 ஆம் வகுப்பில் எவ்வளவு பெரிய நஷ்டமாயிருக்கும்?

    யோசித்துப் பாருங்கள்!

    பொதுப்படையான அறிகுறிகள் இருப்பின் ரத்தத்தை சோதித்துக் கொள்ளுங்கள். அனீமியாவை உடனே சரி செய்து கொள்ளுங்கள்.

    வாட்ஸ்அப்: 8925764148

    Next Story
    ×