என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் கிரண்பேடி புதுவையை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கனகசெட்டிக் குளத்தில் ‘புதுச்சேரியை காப்போம் மீட்போம், மோடியே திரும்பப்பெறு கிரண்பேடியை, சர்வாதிகாரி கிரண்பேடியே திரும்பி போ’ ஆகிய கோ‌‌ஷத்துடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பிரசார பயண கூட்டம் நடைபெற்றது.

    பிரசாரத்துக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரசார கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் அமைச்சர்கள் கந்தசாமி, ‌ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், ரா‌‌ஷ்டீரிய ஜனதா தளம் சஞ்சீவி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    கவர்னர் கிரண்பேடி மாநில மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார். மாநில வளர்ச்சி மீது அவருக்கு அக்கறை கிடையாது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடுகிறார். கவர்னரின் தடைகள், முட்டுக்கட்டைகளையும் எதிர்த்து ஆட்சியாளர்கள் மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். பிரதமரும், கவர்னருக்கு ஆதரவாக செயல்படுகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரை கவர்னர் மதிப்பதில்லை. அப்படிப்பட்ட கவர்னர் புதுவை மாநிலத்திற்கு தேவையா? கிரண்பேடி மக்களுக்கு வெகுஜன விரோதியாக உள்ளார்.

    கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி ஆகிய விழாக்களை நடத்தக்கூடாது என கவர்னர் உத்தரவிட்டார். சனிப்பெயர்ச்சி விழா நடத்த நீதிமன்றத்தை நாடினோம்.

    புதுவை மாநில மக்களுக்கு துரோகியாகவும், விரோதியாகவும் செயல்படும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து வருகிற 8-ந் தேதி காலை 9 மணி முதல் கவர்னர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும்.

    புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லை என மத்திய மந்திரி கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. மின்துறை தனியார் மயம், மில்கள், அரசு அச்சகங்கள் மூடப்பட்டுள்ளன.

    புதுச்சேரியை, தமிழகத்துடன் பிரதமர் நரேந்திரமோடி எந்த நேரத்திலும் இணைத்து விடுவார். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் உரிமையை காப்பாற்ற அனைவரும் ஒரே அணியில் இணைந்து போராட வேண்டும். கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று நடிகை கு‌‌ஷ்பு கூறினார்.
    புதுச்சேரி:

    பா.ஜ.க. சார்பில் நடந்த தாமரை எழுச்சி யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் நடிகை கு‌‌ஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கு கூடியிருக்கும் மக்களின் எழுச்சியை பார்க்கும் போது புதுவையில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்களை உங்களுக்கு எடுத்து கூறுவதற்கு தான் நான் இங்கு வந்துள்ளேன். தமிழகம், புதுவையில் பா.ஜ.க. வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.விற்கு வந்துவிட்டது. நான் புதுவைக்கு எத்தனையோ முறை வந்துள்ளேன். அப்போது புதுவை அழகாக இருந்தது. மக்கள் சந்தோ‌‌ஷமாக இருந்தனர். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது மக்கள் வேதனையாக இருப்பது தெரிகிறது. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் புதுவை சீரழிந்துள்ளது.

    மக்கள் வேதனையில் உள்ளனர். இதற்கு காரணம் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளது. புதுவை மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ரே‌‌ஷன்கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வெளியே சென்றால் அவர்கள் எப்போது வீட்டிற்கு வருவார்கள் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போதைப்பொருட்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக புதுவை உள்ளது.

    ஒரே நாடு ஒரே ரே‌‌ஷன்கார்டு திட்டத்தின் மூலம் சாதி, மத, பாகுபாடு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் அரிசி, கோதுமை போன்ற ரே‌‌ஷன் பொருட்களை பெற முடியும். ஆனால் புதுவையில் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. காங்கிரஸ், தி.மு.க.வினர் பா.ஜ.க. மீது தவறான பிரசாரம் செய்கின்றனர். பா.ஜ.க. மேல்சாதி காரர்களுக்கு சொந்தம் என்று. ஆனால் பா.ஜ.க.வில் சிறுபான்மையினர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாகவும், பல முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர். நான் கூட சிறுபான்மையினர் தான்.

    விவசாயிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் தானாக கொண்டு வரப்படவில்லை. 1½ லட்சம் விவசாயிகளிடம் கலந்து பேசி ஆலோசனை நடத்திய பின்னர் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ், தி.மு.க.வும் எதிர்க்கட்சிகள் என்பதற்காக இதனை எதிர்க்கின்றனர். 1970-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவில் இல்லையா?

    திட்டங்களை செயல்படுத்தாத முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னரை குற்றம் சாட்டி வருகிறார். மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் வங்கி கணக்கில் நிதி செலுத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வாழும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

    எனது அரசியல் பயணம் தி.மு.க.வில் தான் தொடங்கியது. அப்போது தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி எதிர்க்கட்சி தலைவர்களை மரியாதையுடன் பேச வேண்டும் என்பார். ஆனால் தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எடுபிடி முதல்-அமைச்சர் என்று மரியாதை குறைவாக பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு அனுமதியில்லை என்று போலீசார் தடுத்தபோது, அவர் அங்கு இருந்த போலீசாரிடம், உங்கள் பெயர் எனக்கும் தெரியும், இன்னும் 5 மாதத்தில் எங்கள் ஆட்சி தான். அப்போது நான் உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று மிரட்டியுள்ளார். தாத்தா எங்கே? பேரன் எங்கே?

    கொரோனா காலத்தில் உலக அளவில் சிறப்பாக செயல்பட்ட தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டில் ஊழல், முறைகேடு குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காங்கிரஸ், தி.மு.க.விற்கு அதனை பற்றி பேச அருகதையில்லை. ஊழல் என்றால் என்ன என்று நாட்டிற்கு எடுத்து காட்டியது காங்கிரஸ், தி.மு.க. தான்.

    காங்கிரஸ், தி.மு.க.வின் காலம் முடிந்து விட்டது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. தாமரை மலர்ந்தே தீரும். இனியும் நாம் அடிமைகள் இல்லை. மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. பெண்களை பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ வைப்பது பா.ஜ.க. தான். எனவே மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். நான் தேர்தல் பிரசாரத்திற்கும் புதுவைக்கு வருவேன். வெற்றிக்கூட்டத்திற்கும் வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாகூர் அருகே மெக்கானிக்கை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    பாகூர்:

    பாகூர் கம்பன் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சதீஷ் குமார் வேலைக்கு செல்வதற்காக பாகூர் அருகே பரிக்கல்பட்டு ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டார். அப்போது அளவு குறைந்து இருப்பதாக பங்க் ஊழியரிடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நேரத்தில் அங்கு பெட்ரோல் போட வந்த ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவர், பங்க் ஊழியருக்கு ஆதரவாக பேசியதால், சதீஷ்குமாருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவரும், பங்க் ஊழியரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் தாமரை எழுச்சி யாத்திரையின் நிறைவு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதுச்சேரி சிறந்த ஆன்மிக பூமி. கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. புதுவையில் உள்ள காங்கிரஸ் அரசு மத்திய அரசின் திட்டங்கள் எதையும் இங்கு நிறைவேற்றவில்லை.

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தான் புதுவையில் அமையும். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவை மக்களுக்கு கிடைக்கும். மத்திய அரசின் சிறப்பான திட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பதால் மக்கள் காங்கிரஸ் கட்சியை வெறுக்க தொடங்கி விட்டனர். அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஒரே பொய்யை கூறி வருகிறார். யூனியன் பிரதேசமான புதுவையை அண்டை மாநிலத்துடன் இணைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று கூறி வருகிறார்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும். தொடர்ந்து பொய்களை கூறி வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு புதுவை மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புதுவை மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் உறுதுணையாக இருந்த சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் ஸ்ரீராமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் உறுதுணையாக இருந்த சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் ஸ்ரீராமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர் சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்டார். இதனையடுத்து அவரை பரிசோதனை செய்ததில் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அலுவலகம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

    அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர்.
    மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசிக்கான பணத்தை வழங்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 3 மாதங்களுக்கான இலவச அரிசிக்கான பணத்தை வழங்க கவர்னர் கிரண்பேடி அனுமதி அளித்திருந்தார். அதன்படி சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரத்து 200 செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களில் அரசு ஊழியர், மத்திய அரசு ஊழியர், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோரை தவிர்த்து மற்றவர்களுக்கு வழங்க மட்டும் கவர்னர் ஒப்புதல் அளித்து இருந்தார்.

    ஆனால் மத்திய அரசு ஊழியர், வரிசெலுத்துவோர் விவரம் கிடைக்காததால் மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கான பணம் தலா ஆயிரம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து 8 வாரங்களுக்குள் விவரங்களை பெற்று பணத்தை செலுத்துமாறு தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். தாமதிக்காமல் தற்போதுள்ள விவரங்களின்படி மற்றவர்களுக்கு பணத்தை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டமிட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு்ள்ளது.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது இலவச அரிசிக்கான பணம் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் அவர்களது வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

    அதன்படி சிவப்பு நிற ரே‌‌ஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை 5 மாதத்திற்கான அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கார்டு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பிப்ரவரி மாத நிலுவை தொகையான ரூ.400 ஆகியவற்றை சேர்த்து தலா ரூ.3 ஆயிரத்து 400 வழங்கவும், மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் நவம்பர் வரை 4 மாதத்திற்கு கார்டு ஒன்றுக்கு ரூ.1,200, மே மாத நிலுவைத் தொகை ரூ.100 சேர்த்து கார்டு ஒன்றுக்கு ரூ.1,300 வழங்குவதற்கு மொத்தம் ரூ.79 கோடியே 46 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்து கவர்னர் கிரண்பேடிக்கு டிசம்பர் 2-ந் தேதி அனுப்பப்பட்டது.

    இதில் சிவப்பு நிற கார்டு தாரர்களுக்கு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம், மஞ்சள் நிற கார்டு தாரர்களுக்கு ரூ.ஆயிரமும் வழங்க ரூ.53 கோடியே 88 லட்சத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

    மஞ்சள் நிற கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.ஆயிரம் வழங்குவதற்கான ஒப்புதலின் போது கவர்னர் விதித்த சில தேவையற்ற நிபந்தனைகள் காரணமாக அரிசிக்கான பணம் பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையால் இதுவரை வழங்கப்பட இயலவில்லை.

    எனவே மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.ஆயிரம் உடனடியாக வழங்கவேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு துறை அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார்.

    அதன்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே புதுச்சேரி மாநில அரசின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டும், கவர்னரின் நடவடிக்கைகளையும் பரிசீலித்து ரேஷன்கார்டுக்கு தலா ரூ.1,000 வீதம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று கோப்பு தயார் செய்து துறையின் அமைச்சர் கந்தசாமி பரிந்துரையின் பேரில் தலைமை செயலர் அஸ்வனிகுமார் சார்பில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புத்தாண்டு கொண்டாட கணவர் விடுமுறை எடுக்க மறுத்த விரக்தியில் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே வம்பு பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். தனியார் நிறுவன கார் டிரைவர். இவரது மனைவி ஜெயபிரதா (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    மணிவண்ணன் டிரைவர் வேலை பார்த்து வந்ததால் முக்கிய தேவைகளுக்கு கூட விடுமுறை எடுக்க அவரால் இயலவில்லை. இதனால் ஜெயப்பிரதா அவ்வப்போது மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தனது கணவரிடம் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு நாள் விடுமுறை எடுக்குமாறு ஜெயப்பிரதா வற்புறுத்தினார். அதற்கு மணிவண்ணன் நிறுவனத்தில் அழைத்தால் வேலைக்கு செல்ல நேரிடும். ஆனாலும் விடுமுறை எடுக்க முயற்சிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    பின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்டு வராண்டாவில் மணிவண்ணன் தூங்கினார். கணவரின் சமாதானத்தை ஏற்க முடியாமல் விரக்தி அடைந்த ஜெயப்பிரதா வீட்டின் அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்றபோது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு மணிவண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயப்பிரதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மனைவியை இழந்து கணவரும் அவரது குழந்தைகளும் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொழில்நுட்ப படிப்புகள் வரை படிப்பதற்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற உத்தரவுக்கு நன்றி தெரிவித்தார்.

    இதன்பின் நிருபர்களிடம் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியதாவது:-

    புதுவையில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க இலவச கல்வி என்று மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்தியாலேயே முன்னோடி திட்டம் இது. இதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் சனாதன சக்திகளை கால் ஊன்ற விடாமல் இருக்க உறுதியேற்போம். இந்த ஆண்டு அதற்கான ஆண்டாக மலரும்.

    தி.மு.க. கூட்டணி மீது குற்றம் சுமத்த முடியாதவர்கள் வாரிசு அரசியல் என்று பேசிவருகிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    9 மாதங்களுக்குப் பிறகு புதுவையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 வரை வகுப்புகள் இயங்க உள்ளன.
    புதுச்சேரி:

    உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து உள்ளிட்ட மாமூல் வாழ்க்கை அனைத்தும் முடங்கின. இதையடுத்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பியது.

    இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கடந்த (டிசம்பர்) மாதம் 17-ந் தேதி முதல் இளங்கலை, முதுகலை படித்து வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இந்தநிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதையொட்டி பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என்று புதுவை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதாவது, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும். அரசு விதிகளின்படி அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும்.

    1, 3, 5, 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் நடைபெறும். இந்த நாட்களில் மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. ஏற்கனவே 9 முதல் 12 வரை வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்று பாடங்களில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஆசிரியர்கள் முழுவதும் பணியில் இருப்பார்கள்.

    வருகிற 18-ந் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட உள்ளதையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதுடன் பள்ளி வளாகம், வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சமூக இடைவெளியுடன் மாணவர்களை வகுப்பறையில் அமர வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
    மே மாதம் வரை பதவிக்காலம் உள்ள நிலையில் கவர்னர் கிரண்பேடி மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் கவர்னராக கிரண்பேடி கடந்த 29.5.2016-ம் ஆண்டு பதவியேற்றார். யூனியன் பிரதேச கவர்னர்களின் பதவிகாலம் 5 ஆண்டுகள் தான். அதன்படி புதுவையின் கவர்னராக கவர்னர் கிரண்பேடி பொறுப்பு ஏற்று வருகிற மே மாதத்துடன் 5 ஆண்டு பதவி காலம் முடிவடைகிறது.

    இதற்கிடையே மத்திய அரசு புதுவைக்கு புதிய கவர்னரை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே விரைவில் புதிய கவர்னர் நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை வட்டாரத்தில் கேட்டபோது, ‘கவர்னர் கிரண்பேடி பதவி காலம் முடிவதற்கு மே மாதம் இறுதி வரை உள்ளது. எனவே கவர்னர் மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை’ என கூறினர்.
    குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ‌ஷீலா பேபி (வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ‌ஷீலா பேபி வீட்டில் உள்ள ஒரு அறையில் கதவை மூடிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×