search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    9 மாதங்களுக்குப் பிறகு புதுவையில் நாளை பள்ளிகள் திறப்பு

    9 மாதங்களுக்குப் பிறகு புதுவையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 வரை வகுப்புகள் இயங்க உள்ளன.
    புதுச்சேரி:

    உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து உள்ளிட்ட மாமூல் வாழ்க்கை அனைத்தும் முடங்கின. இதையடுத்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பியது.

    இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கடந்த (டிசம்பர்) மாதம் 17-ந் தேதி முதல் இளங்கலை, முதுகலை படித்து வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    இந்தநிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதையொட்டி பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என்று புதுவை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதாவது, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும். அரசு விதிகளின்படி அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும்.

    1, 3, 5, 7-ம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் நடைபெறும். இந்த நாட்களில் மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. ஏற்கனவே 9 முதல் 12 வரை வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்று பாடங்களில் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஆசிரியர்கள் முழுவதும் பணியில் இருப்பார்கள்.

    வருகிற 18-ந் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட உள்ளதையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதுடன் பள்ளி வளாகம், வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து, சமூக இடைவெளியுடன் மாணவர்களை வகுப்பறையில் அமர வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
    Next Story
    ×