என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், புதிய நீதிக்கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி கவர்னர் மாளிகை, சட்டமன்ற வளாகம், தலைமை செயலகம், ஜிப்மர், அரசு மருத்துவமனை பகுதியை சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பளவில் அதிகமானவர்கள் கூடக் கூடாது.
அனுமதியின்றி ஊர் வலம், போராட்டம் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் பூர்வா கார்க் அரசியல்கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
காங்கிரஸ் கூட்டணியினர் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். ஆனால், கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த கலெக்டர் அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அனுமதி கோரி உள்ளார். அரசு மருத்துவமனைக்கு அருகில் இருப்பதால் அங்கும் போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போராட்டம் நடத்த இடம் தேர்வுக்காக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதனிடையே புதுவை காவல்துறை வேண்டு கோளின்பேரில் கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 350 பேர் கொண்ட 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் புதுவைக்கு வந்துள்ளனர்.
மத்திய பாதுகாப்பு படையினர் கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம், முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்பு படைக்கு உறுதுணையாக புதுவை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கவர்னர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்கா பூட்டப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புக் கட்டைகள், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. கவர்னர் மாளிகை அருகில் தடையை மீறி போராட்டம் நடத்தினால் பேரிடர் தடுப்பு சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர், டி.ஜி.பி., ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறை சார்பில் அண்ணாசிலை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கும், அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும், கொரோனா கட்டுப்பாடுகளை கடை பிடித்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனிடையே அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவின் வெள்ளி விழாவிற்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இன்று பிற்பகலில் புதுவைக்கு திரும்புகின்றனர்.
போராட்டம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளரும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கூறியதாவது:-
நாளை காலை 9 மணிக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும். அறவழியில்தான் போராட்டம் நடத்த உள்ளோம். தேவையற்ற வகையில் மத்திய பாது காப்பு படைகளை அழைத்து ஒரு பதட்டத்தை கவர்னர் கிரண்பேடி உருவாக்கி உள்ளார். போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. மக்களின் எழுச்சி போராட்டங்களை யாரும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதிகள், சட்டமன்ற அறிவிப்புகளை நிறைவேற்றாத முதல்- அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜனதா போட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு இதுவரை பா.ஜனதா அனுமதி பெறவில்லை. தடையை மீறி பா.ஜனதா போராட்டம் நடத்துமா? என்பது நாளை தெரியவரும்.
புதுச்சேரி பிராந்திய பகுதியான ஏனாமில் 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மல்லாடி கிருஷ்ணாராவ். இதையொட்டி அவரை பாராட்டும் விதமாக ஏனாமில் நேற்று வெள்ளிவிழா நடைபெற்றது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சாபநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். இதன்பின் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஏற்புரையாற்றினார்.
விழாவையொட்டி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் வாழ்க்கை வரலாறு குறித்து வீடியோ படம் வெளியிடப்பட்டது. அதில் அவரது வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம், ஏனாம் தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட சாதனைகளை விளக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
இதையடுத்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசும் வீடியோ திரையிடப்பட்டது. அதில் அவர் பேசுகையில், ‘நான் புதுவை மற்றும் ஏனாம் தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். இனி நானோ, எனது குடும்ப உறுப்பினர்களோ யாரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம்’ என கூறினார். ஏனாமில் நடைபெற்ற வெள்ளிவிழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 11.40 மணிக்கு முடிவடைந்தது.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் 3 நாட்களுக்கு (வியாழன், வெள்ளி, சனி) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 4-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.
போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு தற்போது கடுமையாக்கியுள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் செல்வது, ஒருவழிப்பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்றால் ரூ.1000 அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன ஓட்டுனர் உரிமம் 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக புதுவை போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தினர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டி வந்த 50 பேரை பிடித்து தலா ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என போக்குவரத்து துறைக்கு பரிந்துரைத்தனர்.
இதனை தொடர்ந்து புதுவை போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் உங்களது ஓட்டுனர் உரிமத்தை 3 மாதத்திற்கு ஏன் சஸ்பெண்ட் (ரத்து) செய்யக்கூடாது. எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் துறைக்கு உரிய விளக்கம் தர வேண்டும். இல்லையென்றால் மோட்டார் வாகன சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பினை தொடர்ந்து அவசரகால பயன்பாட்டிற்கு 2 மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட மருந்துகள் தயாராக உள்ளன. புதுவையில் தடுப்பூசி போடுவது தொடர்பான ஒத்திகை வெற்றிகரமாக நடந்துள்ளது.
இதையடுத்து தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அதில் 13 ஆயிரம் பேர் பதிவு செய்து உள்ளனர்.
தடுப்பூசி போடுவதற்காக புதுவையில் 29 மையங்களும், காரைக்காலில் 8 மையங்களும், மாகியில் 3-ம், ஏனாமில் ஒரு மையமும் தயார் நிலையில் உள்ளது. ஒரு மையத்தில் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போடலாம். 41 இடங்களில் ஊசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2-வது கட்டமாக தடுப்பூசி காவல், வருவாய், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுப்பணித்துறையினர், துப்புரவு பணியாளர் என கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு போடப்பட உள்ளது. இன்னும் 10 நாட்களில் மருந்து வந்துவிடும் நிலை உள்ளது.
புதுவைக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன்ரெட்டி வந்தபோது கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக தருவோம் என்றார். இலவசமாக கிடைக்காவிட்டாலும் மாநில நிதியில் இருந்து தடுப்பூசி போட தயாராக உள்ளோம். 3-வது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு வியாதி உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். ஆனால் இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை.
புதுவை மாநிலத்தில் 33 சதவீதம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்துள்ளோம். இப்போது நாள் ஒன்றுக்கு 0.8 சதவீதம்தான் பாதிப்பு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகளை புதுவையில் 36 இடங்களிலும், காரைக்காலில் 13 இடங்களிலும், மாகியில் 3 இடத்திலும், ஏனாமில் ஓரிடத்திலும் சேமித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தின் விலை ரூ.1000 என்று கூறப்படுகிறது. இதை குறைத்தால் நன்றாக இருக்கும். தேவைப்படுபவர்கள் அதை வாங்கி பயன்படுத்திக்கொள்வார்கள்.
இந்தியாவிலேயே புதுவையில்தான் அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். அதேபோல் குணமடைவதும் இங்குதான் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக கொரோனா போர் அறையின் மூலம் செயல் திட்டங்கள் தீட்டப்பட்டது. இந்த செயல் திட்டங்களை தற்போது காரைக்காலில் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை செயலர் அன்பரசு தலைமையிலான அதிகாரிகள் காரைக்காலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது..
இந்த கூட்டத்தின் விவாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் காரைக்கால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், நோய் தொற்று குறைந்த பகுதியாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா பரிசோதனையை 500-ல் இருந்து 1000 ஆக உயர்த்திடவும், அதனை தனியார் மருத்துவக்கல்லூரி ஒத்துழைப்புடன் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது.
அங்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கொரோனா கட்டுப்பாட்டு அறை நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தை குறைத்திட 7 அம்சங்கள் கொண்ட செயல்திட்டங்களை 7 அதிகாரிகள் மூலம் அமல்படுத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
திருநள்ளாறு கோவிலில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக அதிகாரிகள் நடவடிக்கையின் மூலம் அறியப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக காரைக்கால் விளங்கிட முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு வகுப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் கடந்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கின.
இந்தநிலையில் தற்போது 9 மாதங்களுக்கு பிறகு அனைத்துக் கல்லூரிகளையும் திறந்து வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இயக்குனர் யாசம் லஷ்மி நாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவின் படி புதுவையில் நாளை (புதன்கிழமை) முதல் அனைத்து உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும்.
இதைத்தொடர்ந்து கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவது அவசியம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கல்லூரி வகுப்புகள் 6 நாட்கள் நடத்தப்படும்.
ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்க வேண்டும். மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒரு நாள் விட்டு, ஒருநாள் கல்லூரிக்கு வர அனுமதிக்க வேண்டும். கல்லூரிக்கு வரும் போது மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும். அடிக்கடி கல்லூரிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் கடந்த மார்ச் மாத இறுதியில் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறையத்தொடங்கியதும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வந்தன. பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் எப்போது செயல்படும் என எதிர்பார்த்து வந்தநிலையில் பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிக்கூட வளாகங்களில் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ததுடன் கிருமி நாசினி வழங்கப்பட்டது. வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மாணவர்களை கட்டாயம் முககவசம் அணியவும் தொடர்ந்து அறிவுறுத்தினர். பெரும்பாலான பள்ளிகளில் 50 முதல் 80 சதவீதம் வரை மாணவர்கள் வருகை தந்தனர்.






