search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    கிரண்பேடியை கண்டித்து நாளை முதல் காங். கூட்டணி தொடர் போராட்டம்

    மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து நாளை முதல் காங். கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.

    புதுச்சேரி:

    மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம், புதிய நீதிக்கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி கவர்னர் மாளிகை, சட்டமன்ற வளாகம், தலைமை செயலகம், ஜிப்மர், அரசு மருத்துவமனை பகுதியை சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பளவில் அதிகமானவர்கள் கூடக் கூடாது.

    அனுமதியின்றி ஊர் வலம், போராட்டம் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் பூர்வா கார்க் அரசியல்கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

    காங்கிரஸ் கூட்டணியினர் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். ஆனால், கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த கலெக்டர் அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஆம்பூர் சாலையில் போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அனுமதி கோரி உள்ளார். அரசு மருத்துவமனைக்கு அருகில் இருப்பதால் அங்கும் போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போராட்டம் நடத்த இடம் தேர்வுக்காக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    இதனிடையே புதுவை காவல்துறை வேண்டு கோளின்பேரில் கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 350 பேர் கொண்ட 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் புதுவைக்கு வந்துள்ளனர்.

    மத்திய பாதுகாப்பு படையினர் கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம், முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்திய பாதுகாப்பு படைக்கு உறுதுணையாக புதுவை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கவர்னர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்கா பூட்டப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புக் கட்டைகள், பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. கவர்னர் மாளிகை அருகில் தடையை மீறி போராட்டம் நடத்தினால் பேரிடர் தடுப்பு சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர், டி.ஜி.பி., ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் காவல்துறை சார்பில் அண்ணாசிலை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கும், அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும், கொரோனா கட்டுப்பாடுகளை கடை பிடித்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனிடையே அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவின் வெள்ளி விழாவிற்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இன்று பிற்பகலில் புதுவைக்கு திரும்புகின்றனர்.

    போராட்டம் தொடர்பாக ஒருங்கிணைப்பாளரும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கூறியதாவது:-

    நாளை காலை 9 மணிக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும். அறவழியில்தான் போராட்டம் நடத்த உள்ளோம். தேவையற்ற வகையில் மத்திய பாது காப்பு படைகளை அழைத்து ஒரு பதட்டத்தை கவர்னர் கிரண்பேடி உருவாக்கி உள்ளார். போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. மக்களின் எழுச்சி போராட்டங்களை யாரும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதிகள், சட்டமன்ற அறிவிப்புகளை நிறைவேற்றாத முதல்- அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என பா.ஜனதா போட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு இதுவரை பா.ஜனதா அனுமதி பெறவில்லை. தடையை மீறி பா.ஜனதா போராட்டம் நடத்துமா? என்பது நாளை தெரியவரும்.

    Next Story
    ×