என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோதலில் ஈடுபட்ட 3 கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை கலைத்தனர்.

    வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்பதால் நல்லவாடு, புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த தடை உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. தடை உத்தரவு மேற்கொண்டு நீட்டிக்கப்படவில்லை. நாளை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். மோதலில் ஈடுபட்ட 3 கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
    தமிழகத்தை போல் புதுவையிலும் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை.

    தமிழகத்தில் இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பண்டிகைகளை வீடுகளில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசும் அறிவுறுத்தி உள்ளது.

    தமிழகத்தை போல் புதுவையிலும் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    இந்த நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

    புதுவையில் கொரோனா பாதிப்பு 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் பயப்பட தேவையில்லை. எச்சரிக்கையுடன் இருந்தால் போதும். அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.

    புதுவையில் விநாயகர் சிலை வைக்க எந்த தடையும் இல்லை. மக்கள் கட்டுப்பாடுகளுடன் விழாவை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


    காலாப்பட்டு சிறையில் அடிக்கடி செல்போன் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்துவதாக கூறி அங்குள்ள கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 2 பிரிவாக பிரிந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்கள் முன்பு 16 கைதிகள் சிறையில் உணவு அருந்தும் தட்டினால் கைகளை அறுத்தும், பினாயில் குடித்தும், ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விசாரணை கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் (வயது 42) காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை, சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் அசோக்குமார் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காலாப்பட்டு சிறையில் அடிக்கடி செல்போன் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்துவதாக கூறி அங்குள்ள கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அசோக்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி புதுச்சேரியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன.

    கடற்கரை சாலையில் வானில் திரண்டு வந்த கருமேக கூட்டம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதனை அங்கிருந்த மக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

    சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 9 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக புதுவையின் பிரதான சாலைகளான இந்திராகாந்தி சிக்னல், அண்ணா சாலை, புஸ்சி வீதி, கடற்கரை சாலை, கோரிமேடு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    பின்னர் இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது.

    புதுவை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
    அம்பேத்கர் மணிமண்டபத்தின் பின்புறம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் 2 நாட்கள் உறுப்பினர்கள் பேசினர்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது:-

    மத்திய அரசு பட்ஜெட்டில் 1.5 சதவீதம் கூடுதலாக நிதி அளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. மே மாதம்தான் நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். இதனால் உடனடியாக கூடுதல் நிதி தரவில்லை. இருப்பினும் மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஏற்கனவே பிரதமரிடம் கூடுதலாக ரூ.500 கோடி நிதி கேட்டுள்ளோம். இதை மீண்டும் வலியுறுத்தி பெறுவோம். அதிக நிதி பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மத்திய அரசும் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.

    மாநில அந்தஸ்து பெறுவோம் என்றுதான் கட்சியே தொடங்கினோம். எப்போதும் மாநில அந்தஸ்து கேட்போம்.

    நீண்டநாட்களாக முதல்-அமைச்சராக இருந்த அனுபவத்தில் மாநில அந்தஸ்து இல்லாமல் எவ்வளவு கஷ்டம் என எனக்கு தெரியும்.

    பிரதமர் மோடி

    இதுதொடர்பாக பிரதமரிடம் ஏற்கனவே கேட்டுள்ளேன். மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.

    இந்த கூட்டத்தொடரில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். நேரில் சென்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவேன். புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    விவசாயிகளுக்கு பாசிக், பாப்ஸ்கோ போன்ற நிறுவனங்கள் எவ்வளவு உறுதுணையாக இருந்தது? என இப்போதுதான் தெரிகிறது.

    விற்கப்பட்ட வீட்டு மனைகள், பிரிக்கப்பட்ட வீட்டு மனைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தியாகிகள் பென்‌ஷன் தற்போது ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    பாட்கோவில் கல்விக் கடனை தள்ளுபடி செய்துள்ளோம். பிற்படுத்தப்பட்டோர் கழகம் மூலம் பெற்ற கல்விக் கடனும் முற்றிலும் ரத்து செய்யப்படும். சுற்றுலாவை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

    தாழ்த்தப்பட்டோர் வீடு கட்ட இப்போது ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இது ரூ.5.50 லட்சமாக உயர்த்தப்படும். தாழ்த்தப்பட்ட முதியோர் பெறும் ஓய்வூதிய தொகையை ரூ.500 உயர்த்தப்படும். தாழ்த்தப்பட்டோர் இறுதிச்சடங்கு செலவுக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    அம்பேத்கர் மணிமண்டபத்தின் பின்புறம் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அமைக்கப்படும். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும்.

    புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே அரசு கையகப்படுத்திய நிலங்களில் மத்தியஅரசு அனுமதி பெற்று தொழிற்சாலைகளை அமைப்போம்.



    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 15-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை ஊரடங்கு தொடர்கிறது. சமூக, பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக கூடுவது தடை செய்யப்படுகிறது.

    அனைத்து துறை அதிகாரிகளும் தங்களின் கீழ் பணியாற்றும் தகுதியான ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.

    அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். தனியார் நிறுவனங்கள் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். ஓட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் 50 சதவீத அனுமதியுடன் இரவு 10 மணி வரை இயங்கலாம்.

    சில்லரை மதுபானம், சாராய கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். கலால்துறை விதிகளுக்கு உட்பட்டு வீடுகளுக்கு மதுபானங்களை விநியோகம் செய்து மதுக்கடைகளில் கூட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொது போக்குவரத்து இரவு 9 மணி வரை இயங்கலாம். கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கலாம்.

    திருமணம்

    வழிபாட்டு தலங்கள் இரவு 9 மணி வரை திறக்கலாம். கோவில் திருமண நிகழ்ச்சியில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

    இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டுள்ளார்.


    புதுவையில் பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கவர்னர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது.

    மீண்டும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா 2-வது அலை மார்ச்சில் மீண்டும் பரவ தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

    புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 1½ ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு சில வாரங்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று கடந்த சில மாதமாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்களும், மத்திய அரசும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    இதனிடையே கடந்த ஜூன் 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் கொரோனா பரவல் முற்றிலும் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. மேலும் பள்ளிகள் திறப்பில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது.

    இதற்காக கடந்த 30-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது. பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர இருக்கைகள் போடப்பட்டது. மாணவர்களுக்கு வழங்க பாடபுத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    அரசு அறிவித்தபடி இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. 9, 11-ம் வகுப்புக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

    அரசு பள்ளி மாணவர்களுக்காக மாணவர் பஸ் இயக்கப்படாததால் பெற்றோர்களே மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். வருகை பதிவேடு கட்டாயம் இல்லை என கல்வித்துறை அறிவித்திருந்தது.

    இதனால் ஒருசில பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்காக பஸ்களை இயக்கியது.

    5 மாதங்களுக்கு பிறகு தங்கள் நண்பர்களை சந்தித்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி கிழமையிலும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கவர்னர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    இதுகுறித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    புதுவையில் மாணவர்கள் 1½ ஆண்டுக்கு பிறகு இப்போது பள்ளிக்கு செல்கின்றனர். பயம் இல்லாமல், மகிழ்ச்சியாக செல்ல வேண்டும். கொரோனா தாக்கிவிடுமோ? என்ற அச்சம் இன்றி, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    பள்ளிக்கு சென்றாலும், தோழர், தோழியருடன் கை குலுக்குவது, கட்டி அணைப்பது இல்லாமல் வணக்கம் தெரிவித்துக்கொள்ள வேண்டும். சரியான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    முக கவசம் அணிந்தே பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளியில் நேர் எதிராக அமர்ந்து சாப்பிடக்கூடாது. திரும்பி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் தெரிவித்து பள்ளி செல்வதை தவிர்க்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் கல்வி கற்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    சபாநாயகர் செல்வம் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-வது நாளாக நேற்று கூட்டத்தில் கலந்து கொள்ள சபாநாயகர் செல்வம் சட்டசபைக்கு நேற்று காலை காரில் வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    உடனே அவரது பாதுகாப்பு அதிகாரி செல்வத்தை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த காரிலேயே அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவரை யாரும் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை.

    ஆஸ்பத்திரியில் சபாநாயகர் செல்வம் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், தமிழ் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் அங்கு வந்து செல்வத்தை பார்வையிட்டு உடல்நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

    இந்தநிலையில் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சபாநாயகர் செல்வம் நேற்று பகல் 11.30 மணியளவில் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபாநாயகர் செல்வத்திற்கு ஏற்கனவே ஒரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    சபாநாயருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் நேற்று சட்டசபை கூட்டத்தை துணை சபாநாயகர் ராஜவேலு நடத்தினார்.
    புதுவையில் கொரோனாவுக்கு இதுவரை 1,812 பேர் பலியாகியுள்ளனர். நேற்று உரியிழப்பு ஏதும் இல்லை.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளது.

    புதுவையில் 158 பேர் மருத்துவமனைகளிலும், 557 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 715 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 67 பேர் குணமடைந்தனர்.

    புதுவையில் கொரோனாவுக்கு இதுவரை 1,812 பேர் பலியாகியுள்ளனர். நேற்று உரியிழப்பு ஏதும் இல்லை. பலியானோர் எண்ணிக்கை 1.47 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 97.96 சதவீதமாகவும் உள்ளது.

    புதுச்சேரியில் நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 12 பேரும், முன்களப்பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 123 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 8 லட்சத்து 11 ஆயிரத்து 124 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் சராசரியாக 100-க்கும் குறைவானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று 115 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால், கொரோனாவின் 3-வது அலை பரவ தொடங்கி விட்டதோ? என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    புதுவையில் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தடுப்பூசி திருவிழா வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை புதுச்சேரி அரசு மருந்தகத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று கோரிமேட்டில் உள்ள மருந்தகத்தில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் ‘கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு. எனவே சுகாதாரத்துறையின் மூலமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் வருகிற 5-ந் தேதி காலை 8 மணி வரை தொடர்ந்து 48 மணி நேரம் தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும். புதுவையில் தற்போது 65 சதவீதம் மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
    இரண்டு ஆண்டாக பள்ளிகளுக்குச் செல்லாமல் இருப்பதால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று புதுவை வந்தார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

    புதுச்சேரியில் அற்புதமான, வித்தியாசமான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன் இருந்த முதலமைச்சரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மத்திய அரசு, கவர்னர் மீது பழிபோடுவதையே அவர் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். தற்போது ஆரோக்கியமாக ஒரு நல்லாட்சி நடக்கிறது. அதற்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. முக்கிய காரணம்.

    இதே உத்வேகத்தில் தமிழகத்திலும் பா.ஜ.க.வை வளர்க்க பாடுபடுவோம். புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சிக்கு வராது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தாமரை மலராது என்று பலர் விமர்சித்ததை இங்குள்ள தலைவர்கள் முறியடித்துள்ளனர். உழைப்புக்கு மக்கள் வெகுமதி கொடுப்பார்கள் என்று புதுச்சேரி பா.ஜ.க.வை பார்த்து கற்றுக் கொண்டுள்ளோம். தமிழகத்திலும் அடி மேல் அடி எடுத்து வைத்து நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம்.

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து விட்டது. 3-வது அலையை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். தற்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளைத் திறக்கிறார்கள். நிச்சயமாக பள்ளிகளை திறக்க வேண்டும். ஏனென்றால், அசாதாரணமான சூழலில் 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்குச் செல்லாமல் இருப்பதால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

    பெற்றோர், ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். பள்ளிகள் திறப்பை பா.ஜ.க. வரவேற்கிறது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம். ஆனால் ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காலம் காலமாக சதுர்த்தி விழா நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாகும்.

    டாஸ்மாக் கடையைத் திறந்து அதிகமான மக்களை கூட விடுகிறோம். கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு கட்டுப்பாடு விதிக்கலாம். ஆனால், நடத்தவே கூடாது என்பதை பா.ஜ.க. ஏற்காது. 

    கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கையை சமர்ப்பித்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
    மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் (தி.மு.க.) சிவா எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

    சிவா:- புதுவையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் வேளாண் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தற்போது இன்சூரன்சையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அவர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கவேண்டும்.

    செந்தில்குமார் (தி.மு.க.):- இந்த மழையினால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வேளாண்துறையில் 100 ஏக்கர் நிலம்தான் பாதிப்பு என்ற கணக்கு உள்ளது. மற்றவர்கள் நிவாரணத்துக்கு ஏன் பதியவில்லை. இது யார் தவறு?

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- இதுதொடர்பாக வேளாண்துறை இயக்குனரிடம் விவரம் கேட்டு உள்ளேன்.

    நாஜிம் (தி.மு.க.):- காரைக்கால் பகுதியையும் இதில் சேர்க்கவேண்டும்.

    துணை சபாநாயகர் ராஜவேலு:- இது விவசாயிகளின் பிரச்சினை. இதற்காக ஆட்சியை குறைகூற வேண்டாம். அனைவரது கோரிக்கையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்பதுதான்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி:- எங்கள் அரசு விவசாயிகளின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். நெல், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு பாதிப்புக்கு உரிய நிவாரணம் தர அரசு நடவடிக்கை எடுக்கும்.

    நாஜிம்:- காரைக்கால் பகுதியில் அரசு நெல் கொள்முதல் செய்யவேண்டும்.

    பி.ஆர்.சிவா (சுயே) தமிழகத்தில் நெல் கொள்முதல் சிறப்பாக செய்யப்படுகிறது. அதேபோல் நாமும் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- நெல் கொள்முதல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்திய உணவுக்கழகத்திடம் பேசி வருகிறோம்.

    செந்தில்குமார்:- நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.1,940. ஆனால் நானே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500-க்குத்தான் விற்றேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    ×