search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கு வந்த மாணவிகள்
    X
    பள்ளிக்கு வந்த மாணவிகள்

    புதுவையில் 5 மாதங்களுக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் இன்று திறப்பு

    புதுவையில் பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கவர்னர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது.

    மீண்டும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா 2-வது அலை மார்ச்சில் மீண்டும் பரவ தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

    புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 1½ ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு சில வாரங்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று கடந்த சில மாதமாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்களும், மத்திய அரசும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    இதனிடையே கடந்த ஜூன் 16-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் கொரோனா பரவல் முற்றிலும் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. மேலும் பள்ளிகள் திறப்பில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது.

    இதற்காக கடந்த 30-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது. பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர இருக்கைகள் போடப்பட்டது. மாணவர்களுக்கு வழங்க பாடபுத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    அரசு அறிவித்தபடி இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. 9, 11-ம் வகுப்புக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

    அரசு பள்ளி மாணவர்களுக்காக மாணவர் பஸ் இயக்கப்படாததால் பெற்றோர்களே மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். வருகை பதிவேடு கட்டாயம் இல்லை என கல்வித்துறை அறிவித்திருந்தது.

    இதனால் ஒருசில பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்காக பஸ்களை இயக்கியது.

    5 மாதங்களுக்கு பிறகு தங்கள் நண்பர்களை சந்தித்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி கிழமையிலும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமையிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கவர்னர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    இதுகுறித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    புதுவையில் மாணவர்கள் 1½ ஆண்டுக்கு பிறகு இப்போது பள்ளிக்கு செல்கின்றனர். பயம் இல்லாமல், மகிழ்ச்சியாக செல்ல வேண்டும். கொரோனா தாக்கிவிடுமோ? என்ற அச்சம் இன்றி, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    பள்ளிக்கு சென்றாலும், தோழர், தோழியருடன் கை குலுக்குவது, கட்டி அணைப்பது இல்லாமல் வணக்கம் தெரிவித்துக்கொள்ள வேண்டும். சரியான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    முக கவசம் அணிந்தே பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளியில் நேர் எதிராக அமர்ந்து சாப்பிடக்கூடாது. திரும்பி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் தெரிவித்து பள்ளி செல்வதை தவிர்க்க வேண்டும். எச்சரிக்கையுடன் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் கல்வி கற்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×