என் மலர்
புதுச்சேரி
புதுவையின் நெற்களஞ்சியமாக பாகூர் விளங்குகிறது. பாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அவை நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகளும் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் புதுவை, பாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பாகூர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். எனவே சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த கிருஷ்ண பகவான் மக்களை காப்பதற்காக அசுரர்களை அழித்ததை போலவே தடுப்பூசி மூலம் கொரோனா எனும் நோயை அழிக்க அனைவரும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் உறுதி ஏற்போம். இந்த நாள் நம் அனைவரின் வாழ்விலும் ஒளிக்கூட்டும் நாளாக மட்டுமல்லாது, வழிகாட்டும் நாளாகவும் அமைய வேண்டும் எனக்கூறி அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி அருகே வி.நெற்குணம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது57).
சம்பவத் தன்று இவர் புதுவையில் நடந்த தனது மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முற்றாம்பட்டை சேர்ந்த நண்பர் குப்புசாமி (57) என்பவருடன் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்தது இருவரும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நடராஜன் ஓட்டி சென்றார். பின்னால் குப்புசாமி அமர்ந்து வந்தார்.
குமாரப்பாளையம் சாலையில் சென்ற போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப நடராஜன் மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நடராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜனும், குப்புசாமியும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஒரு கார் மூலம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் குப்புசாமி வீடு திரும்பினார். நடராஜன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நடராஜனின் மகன் முரளிராஜன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியில் சுருக்குவலையை பயன்படுத்தி மீன் பிடித்ததில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு கிராம மீனவர்களையும் கலைந்துபோக சொன்ன போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, மீனவர்களை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, "ஆசாதிகா அம்ரித் உத்சவின்" ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் புதுச்சேரி களவிளம்பரம் மற்றும் செய்திப் பிரிவு சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு காணொலி வாகன பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடக்க விழா கவர்னர் மாளிகை முன்பு நேற்று காலை நடந்தது. கொடியசைத்து விழிப்புணர்வு வாகனங்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் (தெற்கு) தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர், புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் அருண், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சென்னை மண்டல கள விளம்பர பிரிவின் இயக்குனர் காமராஜ், சென்னை மண்டல செய்தி மற்றும் கள விளம்பர பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, புதுச்சேரி சுகாதாரத் துறையின் இயக்குனர் ஸ்ரீராமுலு, கள விளம்பர பிரிவின் துணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனாவை எதிர்கொள்வதில் தடுப்பூசி முக்கியமான ஒன்றாகும். அதனை மக்களிடம் சேர்க்க அரசு சார்பில் தடுப்பூசி திருவிழாக்கள், பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக 41 கிராமங்களில் முழுமையான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். சிலர் தடுப்பூசி போட தயங்குகின்றனர்.
100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக புதுச்சேரி மாற இந்த விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் உறுதுணையாக இருக்கும். பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் யாராவது ஒருவர் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் மூலம் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கவும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், கொரோனாவை எதிர்கொள்ளவும் சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். மத்திய அரசு புதுவைக்கு சுமார் ரூ.700 கோடிக்கு அதிகமாக சலுகைகள் வழங்கியுள்ளது.
பட்ஜெட் எல்லாவிதத்திலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டங்கள் அனைத்தும் செம்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வளர்ச்சி கண்ட புதுவையாக மாறும். அதற்கு அனைத்து வகையிலும் அரசுக்கு கவர்னர் என்ற முறையில் நான் உறுதியாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
கூட்டத்தொடரின் முதல்நாள் என்பதால் கவர்னர் தமிழிசை உரையாற்றினர். இதற்காக காலை 9.25 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கார் மூலம் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.
பின்னர் கவர்னரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர் வரவேற்று மைய மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. சபாநாயகர் இருக்கையில் இருந்து கவர்னர் தமிழிசை தமிழில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் மூலம் மேன்மை மிகு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் நான் முதலில் வாழ்த்துகிறேன். 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தொடக்க உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுவை ஆட்சிப்பரப்பு மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக, சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு ஒவ்வொருவரும் கடினமாக பாடுபடுவீர்கள் என நம்புகிறேன். சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 2021 சுதந்திரமாகவும், நியாயமான முறையில் நடத்தப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள்.
தேர்தல் அமைதியாக நடந்திட அரசு எந்திரத்துக்கு ஒத்துழைப்பு அளித்த புதுவை மக்கள், அரசியல் கட்சியினர் பாராட்டுக்குரியவர்கள்.
புதுவை மக்கள் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கு முன்னர் அவரின் தலைமையில் இயங்கிய அரசு செயல்படுத்திய மக்கள் நல கொள்கை, திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
புதிய அரசு வளர்ச்சி, வளம், மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்க பாடுபடும் என உளமார நம்புகிறேன். இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை கொரோனா பரவல் காரணமாக, 2-வது அலையின்போது பெருமளவு உயிர் சேதம் ஏற்பட்டது. இது புதுவையிலும் எதிரொலித்தது. அரசு துரிதமாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது.
தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதற்காக செயலாற்றிய மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் நன்றி, பாராட்டுக்கள்.
மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்தால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடமாட்ட தடைகளும், உடனடி நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கவை. சமூக இடைவெளி, முக கவசம், கைகளை கழுவுதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பொதுமக்கள் பின்பற்றுவது நலனை உறுதிப்படுத்தும். உடனடியாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
நிதிநிலையை பொறுத்தவரை 2020-21-ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கான ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.8 ஆயிரத்து 419 கோடி கிடைத்துள்ளது. இது 94 சதவீதமாகும். மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.8 ஆயிரத்து 342 கோடியை அரசு செலவு செய்துள்ளது. இது 93 சதவீதமாகும்.

மக்களின் விருப்பங்களை நிச்சயம் கருத்தில்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வருவாயை பெருக்கி அவற்றுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி சிறந்த நிதிநிலை அறிக்கையை முதல்-அமைச்சர் சமர்பிப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
2020-21-ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய திட்டங்கள், சாதனைகளை கூறியுள்ளேன். இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கோவிட் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து அத்தியாவசிய தேவைகளான திரவ ஆக்சிஜன் சேமிப்பு திறனை அதிகரித்து கூடுதலாக 10 கிலோ கலன் நிறுவப்பட்டு ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கை 100-ல் இருந்து 235 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் 200 படுக்கை ஏற்படுத்தும் பணி செயல்பாட்டில் உள்ளது. காவல்துறையை பலப்படுத்த புதிய காவலர்களை தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த அரசை தேர்வு செய்துள்ளனர். மேன்மையான அவையின் உறுப்பினர்கள் அனைவரும் முதல்-அமைச்சரின் திறமையான வழிகாட்டுதலின்படி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக பாடுபடுவீர்கள் என்றும், எதிர்வரும் காலங்களில் வறுமை, வேலையின்மை இல்லாத வளமையான பிரதேசமாக புதுவையை உருவாக்குவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. மக்கள், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்போடு விரைவில் கொரோனா பரவலில் இருந்து புதுவை விடுபடும் என நம்புகிறேன்.
நோயின்மை, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, காவல் என்ற ஐந்தினையும் பெறுவது மாநிலத்துக்கு அழகு என்ற வகையில் சீரிய முயற்சியில் புதிய உச்சத்தை அடைய உங்களின் ஒத்துழைப்பு வேண்டி உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரை கவர்னர் தமிழிசை தமிழில் உரையாற்றினார். இதன்பின் உறுப்பினர்களிடம் விடைபெற்றுச்சென்றார்.
புதுச்சேரியில் என்.ஆர்.-காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
முதல்-அமைச்சராக பதவி வகித்து வரும் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளில் கடந்த சில நாட்களாக மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.
இதற்காக அரசு சார்பில் ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு திட்ட வரையறை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (வியாழக் கிழமை) காலை தொடங்குகிறது. புதிய அரசின் முதல் கூட்டம் இது என்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார்.
அதன்பின் காலை 11.30 மணியளவில் துணை சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் சபை நடவடிக்கைகள் முடிவடைகிறது.
அதன்பின் மாலை 4.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. அப்போது 2021-22-ம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
ரூ.10 ஆயிரத்து 100 கோடியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். அதில் மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 900 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னரே இந்த ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள், நலத்திட்டங்கள், சலுகைகள் உள்ளிட் அம்சங்கள் பற்றி தீவிரமாக ஆலோசித்து சேர்க்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மேலும் பல முக்கிய திட்டங்கள் சேர்க்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தைப்போல் புதுவையிலும் பெண்களுக்கு இலவச பஸ் வசதி, விவசாயிகள், சுய உதவி குழுவினருக்கு சலுகைகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுவையில் தொழில்கள் நசிந்துள்ளன. எனவே அவற்றை சரிசெய்ய தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுவை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் காபினெட் அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன் குமார், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
சட்டசபை கூட்டத்தை யொட்டி பாதுகாப்பு ஏற் பாடுகள் தொடர்பாக சபாநாயகர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரக்சனாசிங், முருகவேல், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்டசபை அலுவல்கள் முடியும் வரை கூடுதல் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே வாரிய தலைவர்கள் பதவியை பெறுவதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் வாரியம் கேட்டு வலியுறுத்தி வருகின்றன. மொத்தத்தில் முக்கிய வாரியங்களை பெற்று விட வேண்டும் என்பதில் இந்த கட்சிகளிடையே போட்டாபோட்டி காணப்படுகிறது.
சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு பெற்றதும் வாரிய தலைவர் பதவி நியமனம் தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவித் தொகையை அதிகரிப்பதற்காக, மாற்றுத்திறனாளிகள் நிதியுதவிக்கான விதிகளில் திருத்தம் செய்யும் சமூகநலத்துறையின் வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 86 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,500 ஆகவும், 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
40 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 வயதுக்கு மேல் 79 வயது வரை உள்ள நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,200-ல் இருந்து ரூ.2,700 ஆகவும் உயர்த்தப்படடுள்ளது. 80 வயதை கடந்த நிரந்தர ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,300-ல் இருந்து ரூ.3,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நுகர்வோர் பாதுகாப்பு (மாநில மற்றும் மாவட்ட ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் நிபந்தனைகள்) விதிகள், 2021 அறிவிப்பு வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு, தலைமைச் செயலரைத் தலைவராகவும், கல்வித்துறைச் செயலர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அட்டவணை இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க, அட்டவணை இனத்தவர் சிறப்புக்கூறு நிதியின் கீழ் ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 573 அட்டவணை இனப் பயனாளிகள் வீடுகள் கட்ட (திருத்தப்பட்ட இலக்கு 530 வீடுகள்) இரண்டாவது தவணையாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 80 ஆயிரம் மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோப்புகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.






